நம்மாழ்வார் அவதாரத்திற்கு முன்னால் வைகுந்தம் புகுவதற்கு ஆளே இல்லை. அதனால் வைகுந்தக் கதவு அடைந்தே கிடந்தது. நம்மாழ்வார் அவதரித்து, தான் பாடிய திருவாய் மொழியின் மூலமாக, மக்களுக்கு ஞானத்தை ஊட்டிய பிறகு, வைகுந்தக் கதவு திறந்தது. நம்மாழ்வார் தானே வைகுந்ததுக்குச் செல்வதாகவும், அப்படிச் செல்லும் வழியில், தனக்குக் கிடைக்க கூடிய அத்தனை வரவேற்பையும், ஒரு பதிகத்தில் பாடி இருக்கின்றார்,
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ் கடல் அலை திரை கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என்னப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –10-9-1
நாரணன் தாமரைக் கண்டு உகந்து நல் நீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்று ஆர்த்தன நெடு வரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே –10-9-2
மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமதிடம் புகுதுக வென்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே –10-9-5
வேள்வியில் மடுத்தலும் விரை கமழ நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே –10-9-6
குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடி வுடை மாதவன் வைகுந்தம் புகவே –10-9-8
இப்படி பலப் பாசுரங்களில் ஆழ்வார் அர்ச்சிராதி மார்க்கத்தில் தான் வைகுந்தம் சென்ற விதத்தைப் பாடுகின்றார். நாராயணனின் அடியார்களைக் கண்டவுடன் வைகுந்தத்தில் இருந்தவர்கள் எல்லாம் நமக்கு ஒரு அன்பன் கிடைத்தான் என்று எதிர் கொண்டு அழைத்தனர்.
ஏன் பகவானே வந்து அழைத்து, அணைத்துச் செல்கின்றார் என்றெல்லாம் ஆழ்வார்கள் பாடுகிறார்கள்.
அது மட்டும் இல்லை. இது தேவர்களுக்கும் கிடைக்காத ஒரு அற்புதம். தேவலோகத்தில் இருந்தோ சத்தியலோகத்தில் இருந்தோ மற்ற உலகங்களில் இருந்தோ வைகுந்தம் புக முடியாது. தேவர்கள் கூட ஒரு மனிதனாக இந்த மண்ணுலகத்தில் பிறந்து எம்பெருமானுடைய திருவருளைப் பெற்று பரிபூரணமாக வாழ்ந்தால் தான் வைகுந்தம் போக முடியும். அதை மிக அழுத்தமாக வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே என்று பாடுகின்றார்.
ஆழ்வாரின் வாக்கை மெய்ப்பிப்பதற்காகவே நடைபெறும் ஒரு உற்சவம் தான் நம்மாழ்வார் மோட்சம். வைகுந்த ஏகாதசி ராப்பத்து திருநாளின் ஒரு பகுதியாக இந்த உற்சவம், எல்லாத் திருமால் ஆலயங்களிலும் நடைபெறுகிறது. ஸ்ரீரங்கத்தில் வெகு சிறப்பாக நடைபெறுகிறது
வைகுண்ட ஏகாதசி இராப்பத்து திருநாள் பத்தாம் நாள் தீர்த்தவாரி நடைபெறும். இதற்கு அடுத்த நாள் நம்மாழ்வார் மோட்சம். வைகுண் டத்திற்குச் செல்ல விரும்பிய நம்மாழ்வாரை அர்ச்சிராதி மார்க்கத்தில் அழைத்துச் செல்லும் நிகழ்வு இது. வைகுண்டம் செல்லும் ஜீவாத்மா பெறும் சிறப்பினை சாந்தோக்ய உபநிஷத்தில் சொல்லிய முறையில் இந்த உற்சவம் நடக்கும் .நம்மாழ்வாரை அர்ச்சகர் சுவாமிகள் கையில் எழுந் தருளப் பண்ணிக்கொண்டு பெருமாளிடம் போவார்கள். நம்மாழ்வாரை பெருமாள் திருவடியில் கொண்டுபோய் வைப்பார்கள் . திருத்துழாயால் ஆழ்வார் திருமேனியை மூடி விடுவர் அப்பொழுது திருவாய்மொழி சாற்றுப் பாசுரங்கள் சேவிக்கப்படும். பிறகு திருவாராதனம் நடக்கும். நம்மாழ்வாருக்கு மாலை பரிவட்டம் முதலிய உபசாரங்கள் நடக்கும். பின்பு நம்மாழ்வாரை மறுபடியும் கையில் எழுந்தருளச் செய்து அவருடைய சன்னதிக்கு செல்வார்கள். இதற்குப் பிறகு இயல்பா சாற்றுமுறை இருக்கிறது..இதோடு வைகுண்ட ஏகாதசி உற்சவம் நிறைவு பெறும்.
