நெல்லிக்காய் உடம்புக்கு நல்லது. நெல்லி மரம் மிகச்சிறந்த மரம். நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பதில் நெல்லிக்காயை மிஞ்சக்கூடிய ஒரு பொருள் இல்லை. நெல்லிக்காயை அமிர்தம் என்று சொல்வார்கள். நெல்லிக்காய் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும். உடம்பில் காயங்கள் இருந்தாலும் அதனைச் சீக்கிரம் ஆற்றி விடும். அல்சர் எனச் சொல்லப்படும் வயிற்றுப் புண்ணைக் குணமாக்கும். இதய இயக்கத்துக்கும் நெல்லிக்காய் நல்லது.

நோய் தொற்றுகள் பாக்டீரியாக்கள் உள்ளே போகாமல் காக்கும்.
சாதாரணமாக நாம் குடிக்கின்ற நீரில் ஒரு நெல்லிக்காயை வெட்டிப் போட்டு அந்த நீரை பருகலாம் அது நமக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்
இப்படி பல வகையிலும் அமிர்தம் போன்ற உயிர்காக்கக்கூடிய இந்த நெல்லிக்காயின் பெருமையை சொல்லிக் கொண்டே போகலாம் .ஆயுர்வேத சாஸ்திரம் முதல் சங்ககால செய்யுள்கள் வரையிலும் நெல்லிக்காயைப் பற்றிச் சொல்லாத இடங்களே இல்லை.அந்த அளவிற்கு நெல்லிக்காயின் பயன்கள் அளவில்லாதது.
ஆயுள் வளர்த்து அகால மரணத்தைத் தவிர்க்கும் சிரஞ்ஜீவி நெல்லிக்காய்.
தொண்டரடிப்பொடியாழ்வார் ஒரு அருமையான பாசுரம் பாடி இருக்கிறார் .
வேதநூல் பிராயம் நூறு மனுசர் தான் புகுவரேலும்
பாதியுள் உறங்கிப் போகும் நின்றவை பதினை ஆண்டு
பேதை பாலகன் அது ஆகும் பிணி பசி மூப்பு துன்பம்
ஆதலால் பிறவி வேண்டாம் அரங்கமா நகருளானே
இதில் மனிதனுடைய வயது நூறு வரை என்று வேத சாஸ்திரங்கள் சொல்லுகின்றன .(சதமானம் பவதி)அப்படித்தான் வாழ்ந்திருக்கிறார்கள்
அதனால் தான் அதிக நாள் வாழ வேண்டும் என்பதற்காக தனக்குத் தரப்பட்ட நெல்லிக்கனியை அதியமான் அவ்வை பிராட்டிக்குத் தந்ததாக ஒரு வரலாறு உண்டு.
மகாபாரதத்தில் அமிர்த்த முனிவர் என்ற ஒரு முனிவர் இருந்தார். அவர் ஒரு வருடத்திற்கு ஒரே ஒரு நெல்லிக்காயைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தார் என்று வருகிறது.
இந்தக் கதை என்ன செய்தியை நமக்குத் தெரியப்படுத்தப்படுகிறது என்று சொன்னால், ஒரு நெல்லிக்கனியில் ஒரு ஆண்டு முழுவதும், உயிர் வாழக்கூடிய அளவுக்கு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
அது சற்று மிகைப்படுத்தப்பட்ட விஷயமாக இருந்தாலும் கூட நெல்லிக்காய் எவ்வளவு உயர்வானது என்பதற்கு ஒரு சான்றுதான் அந்தக் கதை. .
ஆனால், இதை மிக அதிகமாகச் சாப்பிடக்கூடாது .அப்படி சாப்பிட்டால் வாந்தி போன்ற சில பக்க விளைவுகள் ஏற்படும் .
நெல்லிக்காய், வேம்பு, வாழை பனைமரம், துளசி,வில்வம் முதலிய பல்வேறு விதமான இயற்கையில் விளையக்கூடிய விஷயங்களை ஆன்மீகத்துடன் தொடர்பு படுத்தி நம்முடைய உடல் நலத்துக்கும், உள்ள நலத்துக்கும் பயன்படுத்த வேண்டும் என்று கதையாகச் சொல்லி இருக்கிறார்கள்.
இந்த மாசி மாத ஏகாதசி என்பது நெல்லிக்காயோடு தொடர்பு உடையது. அதுவும் இந்த மாசி ஏகாதசி புனர்பூச நட்சத்திரத்தில் வருகின்றது. மகாலட்சுமியின் அம்சம் நெல்லிக்காய். நெல்லிக்காய் மரத்தை பூஜை செய்தால் மகாலட்சுமியை பூஜை செய்வது போல ஆகும். மகாலட்சுமிக்குரிய வெள்ளிக்கிழமையில் இந்த ஏகாதசி வருகின்றது .இராமரின் புனர்பூச நட்சத்திரத்திற்கு பின்னாலே பூச நட்சத்திரம் வந்துவிடுகிறது.பூசம்
சனியின் நட்ஷத்திரம்.
அது மட்டும் இல்லை. இந்த மாசி புனர்பூச நட்சத்திரம்,12 ஆழ்வார்களில் ஒரு ஆழ்வாரான குலசேகர ஆழ்வாரின் அவதார தினம்.
எல்லா வைணவ திருமாளிகைகளிலும் கொண்டாடுவார்கள். குலசேகர ஆழ்வாருக்கு பெருமாள் என்று பெயர். பெருமாளை அறியாதவர்கள் பெருமாளை அறிய மாட்டார்கள் என்று ஒரு பழமொழி உண்டு. அந்தப் பெருமாளைத் தெரிந்து கொள்.ள வேண்டும் என்று சொன்னால் அவருடைய அடியாரான குலசேகர பெருமாளைப் தெரிந்து கொள்ள வேண்டும்
எல்லா திவ்ய தேசங்களிலும் உள்ள வைணவர்கள் தங்கள் இல்லங்களில் இருக்கக்கூடிய பூஜை அறையிலும் இன்றைய தினம் குலசேகர ஆழ்வாரின் பாசுரங்களைப் பாடி அவருடைய அவதார ஜெயந்தி உற்சவத்தைக் கொண்டாடுவார்கள். குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரத்திலே புனர்பூச நட்சத்திரத்தில் வெள்ளிக்கிழமையிலே வருகின்ற இந்த ஏகாதசிக்கு ஆமலகி ஏகாதேசி என்று பெயர்
ஆம்லா என்றால் நெல்லி என்று பொருள். நெல்லியை பிரதானமான பூஜைப் பொருளாகக் கொண்ட ஏகாதசி ஆமலகி ஏகாதசி.துவாதசி பாரணையில் நெல்லிக்காயைப் பயன்படுத்த வேண்டும். ஏகாதசி பூஜையில் நெல்லி மரத்தை வணங்க வேண்டும் என்பது இந்த ஏகாதசியின் சிறப்பு .
இதற்கு என்ன காரணம் என்று சொன்னால், நெல்லி மரம் என்பது மகாலட்சுமியினுடைய அம்சம். நெல்லி மரத்தை நாம் பூஜை செய்வதன் மூலமாக மகாலட்சுமியின் பேரருள் கிடைக்கும். வறுமை அகலும். சகல ஐஸ்வரியங்களும் பெருகும். இந்த ஏகாதசியில் வழக்கம்போல் உபவாசம் இருந்து, பெருமாளுடைய தோத்திரங்களைப் பாடி ,மாலையில் பெருமாள் கோயிலுக்குச் சென்று, நெல்லிக் காய் இருந்தால்,மகாலட்சுமியின் படத்தின் முன் வைத்து நிவேதனம் காட்டி வணங்க வேண்டும். விஷ்ணு சஹஸ்ர நாமத்தையும் மகாலட்சுமி ஸ்தோத்திரங்களையும் சொல்ல வேண்டும்.இன்றைய தினம் இந்த திருமங்கையாழ்வார் பாசுரத்தை பூஜை வேளை யில் சேவிக்க நற்பலன்கள் விளையும்.
மின்னுமா மழை தவழும் மேகவண்ணா
விண்ணவர்தம் பெருமானே அருளாய் என்று
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த
அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்
மானவேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார்
தொல்லைப் பழ வினையை முதலரிய வல்லார் தாமே
