இன்று தை மாதத்தின் முதல் நாள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள் .அந்த வழியில் நம் செயல்களைத் தொடங்கும் இனிய நாள். தை மாதத்தின் முதல் நாள். இன்று அஷ்டகா, காலாஷ்டமி, தேவ தேவாஷ்டமி, உத்திராயண புண்ணிய காலம் என்று பல சிறப்புக்கள் உண்டு.
. சூரியன் இல்லாவிட்டால் உலகம் இல்லை.உலக உயிர்கள் இல்லை. அதனால் சூரிய பகவானுக்கும் குலதெய்வத்துக்கும் இஷ்ட தெய்வத்துக்கும் பொங்கல் வைத்துப் படைக்கும் நாள். இன்று இயன்ற அளவு முற்றத்தில் பொங்கல் வைத்து சூரியனை வழிபட வேண்டும். அதன் மூலமாக நமக்கு ஆத்ம பலம் கிடைக்கும். கிரகங்களுக்குத் தலையாய கிரகமான சூரியனை வழிபடுவதன் மூலமாக, நம்முடைய ஜாதகத்தில் உள்ள நவக்கிரக தோஷங்கள் நீங்கும். நம் வீட்டில் மங்கலங்கள் பெருகும்..
தை மதத்தின் முதல் நாள்.சூரியன் தன் வடதிசைப் பயணமான உத்தராயணப் பயணத்தை தொடங்கும் புனிதமான நன்னாள். “மகரசங்கராந்தி” என்று இந்த நாளைக் கொண்டாடுவார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கேற்ப இந்த நாளை நாம் அனைவரும் மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.
பொங்கல் பண்டிகை அன்று, அறுத்த நெற் கதிர்களை வீட்டுக்கு எடுத்து வருவர். அக் கதிர்களை பகவானுக்குப் படைத்து, வீட்டின் வாயில் நிலைப் படியில் மேல், பசுஞ்சாணம் கொண்டு ஒட்டி வைப்பர். அதில் மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு, பூஜை செய்வர். அதைப்போலவே அதை அழகான வளையமாகக் கட்டி,தூக்கு கூடு போல வீட்டில் தொங்க விடு வதும் உண்டு. இன்றும் கிராமத்து பழைய வீடுகளில் மரத்தூண்களின் மேல் நெல்மணிகதிர்களால் கட்டப்பட்ட பிரிமணை வளையங்களை பார்க்கலாம். அதிலே இருக்கிற தானியங்களை பறவைகள் சிட்டுக்குரு விகள் வந்து உண்டு மகிழும். அந்தப் பறவைகள் சத்தம் வீடுகளில் கேட்கும் பொழுது மங்களங்கள் பெருகும்.அதுவும் இன்று சூரியனுக்குரிய ஞாயிற்றுக்கிழமை. பொங்கலோ பொங்கல் என்று குவலையிட்டு முற்றத்தில் ஒரு தூய்மையான இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கே ஒரு அடுப்பை வைத்து, கோலம் போட்டு,பானையில் மஞ்சள் கட்டி, இருபுறமும் கரும்பு வைத்து, பாலில் புது அரிசியும் வெல்லமும் சேர்த்து பொங்கல் வைக்க வேண்டும் பொங்கல் எந்தப் பானையில் பொங்கல் எந்தப் பக்கம் வழிகிறது, எது முதலில் பொங்குகிறது என்பதை வைத்துக்கொண்டே அந்தக் காலத்தில் குறி சொல்பவர்கள் உண்டு. எது எப்படியாயினும் குடும்பத்தோடு குதூகலமாக இப்படிப் பொங்கல் பொங்குவது நம்முடைய வாழ்க்கை நன்றாக வளர்வதைக் காட்டுகிறது.
பொங்கல் வைக்கும் நேரம் காலை 8.00 மணி முதல் 10,00 மணிவரை.பகல் மணி 11.00 முதல் 12.மணிக்குள்.
