ஸ்ரீமந் நடனகோபால சுவாமிகள் மிகப்பெரிய தவராஜ யோகி. மதுரையில் அவதரித்தவர். அவருடைய அதிஷ்டானம் அழகர்கோயில் போகும் பாதையில் காதக்கிணறு என்ற இடத்தில் இருக்கிறது. அவர் தமிழிலும் சௌராஷ்டிர மொழியிலும் அருமையான கீர்த்தனைகளைப் பாடி இருக்கிறார். அக்கீர்த் தனைகள் மனதை உருக்கும்.
அவர் கவிதைகள் பட்டினத்தடிகள் போல வாழ்வின் விரக்தியை வெளிப்படுத்தி வைராக்யத்தைக் கொடுக்கும். ஆழ்வார்கள் பலரின் பாடல்களின் தாக்கம் அவர் கீர்த்தனைகளில் உண்டு.
வைணவ நெறியும் தத்துவங்களும் அவர் கீர்த்தனையில் எதிரொலிக்கும் .அவருடைய அற்புதமான வாக்குகளின் சிலவற்றைப் பார்க்கலாம்.
1.பகவான் நாமத்தை என்றும் சொல்லுங்கள். அது ஒன்றே உங்களைக் காக்கும். கண்ணன் காட்டிய வழியே நாம் செல்ல வேண்டிய வழி என்பதை உணருங்கள்.
- எந்த வேளை , எந்த இடத்தில், எந்த ஊரில், இந்த உயிர் போய்விடும் என்று நமக்குத் தெரிவதில்லை. அப்படிப் போன உயிர் அடுத்து ஒரு ஜன்மம் எடுத்தால் எப்படிப் பிறக்குமோ அதுவும் புரியவில்லை. அதனால் தலையைத் தலையை ஆட்டாமல் காது கொடுத்து இப்போதாவது நான் சொல்வதைக் கேளுங்கள். ஹரியை தியானம் செய்வது ஒன்றே நீங்கள் உஜ்ஜீவிக்க ஒரே வழி .
3.உண்டு என்று சொல்பவர்களுக்குத் தான் இறைவன். இல்லை என்பாருக்கு இல்லை. உண்டு என்று சொன்ன பிரகலாதன் வாழ்ந்தான். இல்லை என்று சொன்ன இரணியன் அழிந்தான் . அகம்பாவத்தின் விளைவையும் நாம றிவோம். அப்படியானால் நமக்கு எது சரியானது என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.
- நான் சதா சர்வ காலமும் இறைவன் ஞாபகமாகவே இருப்பதால் என்னை பித்தன் என்று நினைக்காதீர்கள் .நீங்கள் தான் பித்தராக வாழ்ந்து கொண்டிருக் கிறீர்கள். கேசவா மாதவா என்று அழையுங்கள். உங்கள் பித்தம் தணியும்.
- நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இன்று, நாளை, நாளை மறுநாள் என்று நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், நாட்கள் என்னவோ நகர்ந்து போய் விடும். அதற்குள் இறைவனை எண்ணுங்கள். எந்த துயரங்களும் உங்களை அண்டாது .நம்புங்கள்.
6.ஹரி நாமஸ்மரணமும் ஹரி பஜனையும் செய்யாத நாட்கள் நீங்கள் வாழாத நாட்கள்.
7.அவனுக்குக் படைக்காது உண்ணப்படும் உணவு உணவே அல்ல .
8.வெண்ணை திருடி உண்டவன். மண்ணை உண்ட பெருவாயன். அந்தப் பெருமானின் நாபிக்கமலத்தில் இருந்து பிரம்மனைப் படைத்தார் பெருமாள்.
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான்முகனாய் சங்கரனைத் தான் படைத்தான் என்று திருமழிசை ஆழ்வார் சொன்னது உங்கள் நினைவுக்கு வரும்.
- இதோ இருக்கிறான் என் கண்ணன்..நீங்கள் அவரை நம்புங்கள். வாருங்கள் எல்லோரும் வாருங்கள். கண்ணனை நாம் தரிசிக்கலாம்.
ஒரு அருமையான கீர்த்தனைகளை நடனகோபால நாயகி சொல்லுகின்றார். அதில் அவர் தவிப்பு வெளிப்படும். அந்தக் கண்ணனை நம்புங்கள்
“இதோ கண்ணன். இங்கேதானே இருந்தான் எங்கேயோ மறைந்தானே . அலகிலா விளையாட்டுடையான் ல்லவா…அவன் என்னை தவிக்க விட்டு விட்டு வேடிக்கை பார்க்கிறான். நான்அவனை காதலித்தேன்..
எங்கே என் கண்ணன் எங்கே என் கண்ணன் என்ற இந்த தவிப்பு அவருடைய பாடல்களில் எதிரொலிக்கிறது.
– ஆலய தரிசனம் ஜூலை 1995 ல் இருந்து
