கேள்வி: ஒருவர் ஜாதகத்தில் திருமணம் பற்றித் தீர்மானிக்கின்ற இடம் எது?
பதில்: ஏழாமிடம்.சப்தம ஸ்தானம்.களஸ்திர ஸ்தானம் என்பார்கள்.
கேள்வி: ஏழாமிடம் மட்டும் பார்த்து தீர்மானித்து விட முடியுமா?
பதில்: முடியாது. 7-ஆம் இடம் என்பது கணவன் அல்லது மனைவியை மட்டும் குறிப்பிடுகின்ற இடம் அல்ல. நட்பையும் குறிப்பிடுகிறது .தொழிலையும் குறிப்பிடுகிறது.வேறு சில விஷயங்களையும் அதிலிருந்து நாம் தெரிந்து கொள்கின்றோம்.ஏன், மாரக ஸ்தானமாகவும் இருக்கிறது.
கேள்வி :இவ்வளவும் ஒரே இடத்திலிருந்தா ?
பதில்:ஆமாம்.ஒரு சுவாரஸ்யம் பாருங்கள். நட்பு என்பது சமமானவர் களுக்குள் நிகழ்வது. அந்த நட்பு ஸ்தானத்தைத் தான் கணவன் அல்லது மனைவி என்கிற இடத்துக்கு நம்முடைய பெரியவர்கள் கொடுத்து இருக் கிறார்கள். அதில் தெரிகின்ற இரண்டு விஷயங்கள்.
“கணவன், மனைவி இருவருமே ஒருவருக்கு ஒருவர் சமமானவர்கள் . ஒருவருக்கொருவர் சமமான அமைப்பில் இருந்தால்தான், அந்த குடும்ப வண்டி நல்லபடியாக ஓடும். இதை கவியரசு கண்ணதாசன் ஒரு அழகான பாடலில் சொல்லியிருப்பார்.
“வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்?”
இதை புரிந்து கொள்ள வேண்டும்.கல்யாணம் மந்திரத்திலும் இது சொல்லப்படுகிறது.
கேள்வி:கல்யாண மந்திரத்தில் இது சொல்லப்படுகிறதா?
பதில்:கன்னியாதானம் ஆனவுடன் சொல்லப்படுகின்ற சில மந்திரங்களில் இந்த விஷயம் வருகிறது.
“நாம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் நண்பர்களாக இருந்து, விட்டுக் கொடுத்து, ஆலோசனை செய்து, இல்லறத்தை தர்மமாக நடத்திச் செல்ல இன்று உறுதி எடுப்போம்” என்று கல்யாண மந்திரத்தில் வருகிறது. ஆனால், அந்த மந்திரத்தை நாம் காது கொடுத்துக் கேட்பதில்லை. கல்யாணம் செய்து கொள்பவர்களே கேட்பது இல்லை. அது வேறு விஷயம். ஆனால், அந்த மந்திரத்தில் அப்படிதான் சொல்லப்பட்டிருக்கிறது அது கல்யாணத்திற்குப் பின் ஒருவரை ஒருவர் எப்படி புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை கோடிட்டுக் காட்டுகிறது. ராமாயணத்திலும் இந்த விஷயம் வருகிறது.
கேள்வி:இராமாயணத்தில் எங்கு வருகிறது?
பதில்:ராமாயணத்தில் சீதையை இராமருக்கு திருமணம் செய்து வைக் கின்ற பொழுது ஜனகர் ஒரு சுலோகத்தைச் சொல்கிறார். அந்தச் சுலோ கத்தை இப்பொழுதும் திருமண மந்திரத்தில் இணைத்துச் சிலர் சொல் கின்றனர் .
“இயம் ஸீதா மம ஸுதா ஸஹதர்ம சரீதவ
ப்ரதீச்ச சைநாம் பத்ரம்தே பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா: ( ஸர்க்கம்-73; சுலோகம்-27)
“இந்த சீதையானவள் என் பெண். உனக்கு சக தர்மம் செய்பவள். “சக” என்கின்ற வார்த்தைக்கு நட்பு என்று அர்த்தம்.நட்பாக, சமமாக, துணையாக என்று பல பொருள்கள். அதனால் தான் ஏழாம் இடத்தை, நட்பு ஸ்தானம் ஆகவும் மனைவி அல்லது கணவனுக்குரிய ஸ்தானமாகவும் ,களத்திர ஸ்தானமாகவும் சொன்னார்கள்.
கேள்வி:இது நேர் எதிர் அல்லவா ?
பதில்:நிச்சயமாக. வேடிக்கைப் பாருங்கள். எல்லா கிரகங்களுக்கும் அடிப் படையான நேர் பார்வை ஏழாம் பார்வை தான். மற்ற பார்வைகள் எல்லாம் சிறப்புப் பார்வைகள். ஒரு சில கிரகங்களுக்கு மட்டும் இந்த சிறப்புப் பார்வை கொடுக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக குருவுக்கு ஏழாம் பார்வையோடு, 5 9-ஆம் பார்வையும் உண்டு. ஆனால் எல்லா கிரகங்க ளுக்கும் ஏழாம் பார்வை வலிமையானது. அந்த அடிப்படையில் லக்னம், 7ஆம் இடம் ஆகிய இடங்கள் பார்த்துக் கொண்டே இருக்கும். அதைப்போல கணவனுடைய முழுமையான கவனமும் மனைவியிடமும், மனைவியின் முழுமையான கவனம் கணவனிடமும் இருந்து குடும்பம் நடத்தினால், குடும்பம் நன்றாக இருக்கும் என்பதைச் சொல்லாமல் சொன்னார்கள்.
கேள்வி: ஜாதகத்தைப் பார்த்து செய்கின்ற திருமணங்கள் கூட தோல்வி அடைந்து விடுகிறது காரணம் ஏன்?
பதில்: சாலையின் ஓரமாகப் போனாலும், சமயத்தில் பேருந்து இடித்து விடுகிறது. அதனால் சாலையின் நடுவில் நடக்க முடியுமா? சில விதிகள் நமக்கு இது குறித்து அனுபவத்தில் பெரியோர்களால் கொடுக்கப்பட்டி ருக்கின்றன. அதை நம்பி நாம் செயல்படுகின்றோம். இதற்கு பெரியவர்கள் “சாஸ்திர மரியாதை” என்று சொல்லுகின்றார்கள்.
கேள்வி: அப்படியானால் திருமண பொருத்தம் பார்த்து செய்வதன் மூலமாக நாம் நாம் நன்மை அடைகின்றோம். வெற்றி பெறுகின்றோம் ?
பதில்: இதில் வெற்றி தோல்வி என்று எதுவும் கிடையாது. நாம் ஒவ்வொ ருவரும் நமது வாழ்க்கையை நன்றாக வாழ விரும்புகின்றோம். அதற்கான முயற்சியைச் செய்கின்றோம். அந்த முயற்சியில் சில நேரங்களில் தவறி விடுவது குறித்து வருத்தப்படத் தேவையில்லை. திருமண பொருத்தம் பார்க்கும் போது பல விஷயங்கள் ஆராயப்பட்ட பின்னரே, திருமணம் செய்வது நல்லது.
ஏனெனில் பெண்ணின் ஜாதகத்தில் 3ம் இடம் மாமனார்,(7 ம் இடத்துக்கு 9ம் இடம் என்பதால்), 10ம் இடம் மாமியார்,(7 ம் இடத்திற்கு 4ம் இடம் என்பதால்) என பல உறவுகளை தெரிந்து கொள்ள முடியும்.
கேள்வி:திருமண பொருத்தம் பார்க்கும் போது அந்த பெண்ணின் ஜாதகம் ஆயில்யம், மூலம், கேட்டை, விசாகம் நட்சத்திரங்கள் இருந்தால் வேண்டாம் என ஒதுக்கி விடுகின்றனர்.ஏன்?
பதில்:இதை பல ஜோதிடர்கள் சொல்லி விட்டனர்.அது அப்படியே பழகி விட்டது. ஏதோ ஒரு குடும்பத்தில், ஏதோ ஒருவருக்கு கெட்டது நடந்திருக் கும். அந்தப் பழியை யார் மீதாவது போட வேண்டும். வந்த பெண்ணின் மீது போடுவது எளிதாக இருந்தது.போட்டுவிட்டார்கள்.
ஒவ்வொருவர் ஆயுள் பலமும் அந்தந்த தனிப்பட்ட ஜாதகத்தை சேர்ந்தது.இதில் மூலம் ஆயில்யம் எல்லாம் பெரிதாக ஒன்றும் செய்யாது.
கேள்வி:பின் எப்படி இந்த பழமொழி வந்தது.?
பதில் :அந்தக் காலம் பற்பல வியாதிகள்.மருத்துவ வசதிகள் இல்லாத காலம். சராசரி வயது குறைவு.அக்காலத்தில் எந்தப் பழியும் பெண்ணின் மீது எளிதாகப் போட்டு விடுவார்கள்.பெண் திருமணம் ஆகி வந்தவுடன், மாமியாருக்கு நடுத்தர வயதுக்கு மேல் ஆகியிருக்கும் என்பதால், நோய் வந்து எதேச்சையாக இறந்து போயிருப்பார்..அந்த பெண் ஆயில்யமாக இருக்க ஒரு விதி எழுதியிருப்பார்கள்.மற்ற விஷயங்களை விட, இந்த விஷயங்கள் எளிதாகப் பரவும்.அது மட்டுமில்லை; மாமனாரோ மாமியாரோ எப்போது இறந்தாலும், அது வந்த மருமகளின் மூல நட்சத்திரமும் ,ஆயில்ய நட்ஷத்திரமும் செய்த வேலைதான் என்று நம்புகிறார்கள்.அதனால் பயந்து கொண்டு தள்ளி விடுகிறார்கள்.
கேள்வி: அப்படியானால் என்ன செய்வது?
பதில்:விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் வழி.ஜோதிடர்களின் பலர் விதி களை மட்டும் பார்க்காமல் விதி விலக்குகளையும் பார்க்க வேண் டும்.அந்தக் காலத்தில் குடும்ப ஜோதிடர்கள் இருந்தார்கள். மொத்த ஜாதகங் களை பார்ப்பார்கள். 3ம் இடத்தில் ராகு, கேது, சனி,10ல் ராகு கேது, சனி,9ல் செவ் வாய், ராகு, சனி ,5ம் இடத்தில் சனி, ராகு, கேது, செவ்வாய் என ஏதேனும் ஒரு கிரகமாவது பெண் ஜாதகத்தில் குறிப்பிட்ட இடங்களில் இருப்பின், மாமனார், மாமியார், மூத்த மைத்துனன், இளைய மைத்துனன் ஆகியோரின் ஜாதகத்தில் அவர்களின் ஆயுள் பலத்தை சோதித்து அதை முடிவு செய்த பின்னர் பொருந்துமா என முடிவு செய்வார்கள்.. இப்படி ஆராயாமல், வெறுமனே பெண்ணுக்கு ஆயில்யம், விசாகம், கேட்டை, மூலம் நட்சத்திரம் இருந்தால் வேண்டாம் என ஒதுக்குவது தவறு.
கேள்வி:இந்த நட்ஷத்திரங்கள் பெண்ணுக்கு மட்டும்தான் பார்க்க வேண்டுமா?
பதில்:இதில் ஒரு முக்கியமான கருத்து இருக்கிறது.கணவன் மாமனார் வீட்டுக்குப் போவதில்லை.பெண் தான் கணவன் வீட்டிற்கு வந்து அந்த குடும்பத்தில் ஒருத்தியாக ஆயுள் காலம் முழுதும் இணைகிறாள்.
மற்ற உறுப்பினர்கள் அங்கேயே இருப்பவர்கள்.அவர்கள் ஜாதக பலன்களை மாற்ற முடியாது. நல்லதோ கெட்டதோ அனுபவிக்க வேண்டியது தான். ஆனால்,பெண்ணை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருப்பதால், நல்ல ஜாதகம் தேர்ந்தெடுக்க முயற்சி செய்கிறார்கள்.இந்த ஒரு வாய்ப்பு தானே இருக்கிறது.ஆனால் அதுவும், இங்குள்ள ஜாதக விதிப்படியே நடக்கிறது .
கேள்வி:மூலம் நட்சத்திரம் குறித்து சில கருத்துக்கள் நிலவுகிறதே…
பதில்:எல்லா நட்ஷத்திரம் குறித்தும் உள்ள பதில் தான் இந்த கேள்விக் கும்.ஆனால், மூல நட்சத்திரத்தைப் பொறுத்தவரை வித்தியாசமான கருத்து உண்டு .”ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம்” என்கி றார்கள்.
ஒரே நட்ஷத்திரம் எப்படி இரண்டு மாறுபட்ட வேலையைச் செய்கிறது என்பது தெரியவில்லை. ஜோதிடத்தில் அப்படி எதுவும் கூறப்படவே இல்லை.
“அவிட்டத்தில் பிறந்தால் தவிட்டுப் பனையில் தங்கம்,கேட்டையில் பிறந்தால் கோட்டை ஆளலாம்” -இப்படி பழமொழிகள் நிறைய உண்டு.
ஆனால் நடைமுறை விளைவுகளைப் பார்த்து இதை யாரும் உறுதி செய்து கொள்வது இல்லை. மூலம் நட்ஷத்திரத்தில் கூட ,உண்மையான அர்த்தம் “ஆனி மூலம் அரசாளும், பின் மூலம் நிர்மூலம்” என்று தான் கூறப்பட்டுள்ளது.
அதாவது ஆனி மாதத்தில் வரும் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அரசாள்வார்கள். அதுவும் பின் மூலம் எனப்படும் மூலம் 4ம் பாதத்தில் பிற்பகுதியில் பிறந்தவர்கள் எதிரிகளை நிர்மூலமாக்குவார்கள் என்பதே உண்மையான அர்த்தம்.
இது கூட ஒரு நட்ஷத்திரத்தின் உயர்வைக் குறித்து உயர்வு நவிற் சியாக சொல்லப்பட்டது.
மூல நட்ஷத்திரத்தில் அவதாரம் செய்தவர் ஆஞ்சநேயர்.அவர் எதிரி படைகளை அடித்து நிர்மூலமாக்குகிறார் அல்லவா .
அவர் உயர்வை வைத்து கூட இந்த பழமொழி வந்திருக்கலாம்.
அவர் மூல நட்ஷத்திரத்தில் பிறந்து பெருமை பெற்றதால், எல்லோரும் அதே சிறப்பை அடைய முடிவது இல்லை.
அவர் மாதிரி அறிவாற்றலும் திறமையும்,பக்தியும்,செயல் வேகமும் இருந் தால் பெருமை அடையலாம்.அதற்கு எந்த நட்ஷத்திரத்திலும் பிறக்கலாம்.
