வைணவ தென்கலை மரபின் நிறைவு ஆச்சார்யனான சுவாமி மணவாள மாமுனிகளை ஸ்ரீ ராமானுஜரின் புனர் அவதாரம் என்று சொல்வர்.
ஐப்பசி மாதம் திருமூல விண்மீனில் அவதரித்தவர். 73 திரு நட்சத்திரங்கள் இந்த மண்ணுலகில் வாழ்ந்து மகத்தான பல பணிகளைச் செய்தவர்.
விசதவாக்சிகாமணி ,ஈட்டின் பெருக்காளர் போன்ற பல விருதுகளைப் பெற்றவர்.
வைணவப் பணிகளை பிரித்துப் பார்க்கலாம்.
அவருடைய வைணவப் பணிகளை இப்படிப் பிரித்துப் பார்க்கலாம்.
1.திவ்ய தேசங்களைப் பராமரித்தல்.
2.வைணவ சமய அறிவை மக்களிடம் பரப்புதல்.
3.நூல்களை இயற்றுதல்.
நூல்களை இயற்றியதை இப்படிப் பிரித்துப் பார்க்கலாம்.
1.ரகசிய நூல்களுக்கு வியாக்கியானங்கள் செய்தல்…
2.ஆழ்வார்கள் பாசுரங்களின் உரையைப் பரப்புதல்..
3.பெரியவாச்சான் பிள்ளையின் உரை கிடைக்காத பகுதிகளுக்கு புதிதாக உரை வரைந்து இணைத்தல்…
புதிய நூல்கள் இயற்றுதல் என்பதைப் பிரித்தால்
வடமொழி நூல்களை இயற்றுதல்
தமிழ் மொழி நூல்களை இயற்றுதல்
தமிழ் மொழி நூல்களில் அவர் எழுதிய அற்புதமான நூல்கள்
1.திருவாய்மொழி நூற்றந்தாதி 2.உபதேசரத்தினமாலை
3.ஆர்த்தி பிரபந்தம்
உபதேசரத்தினமாலை
உபதேசரத்தினமாலை 73 பாசுரங்களால் இயற்றப்பட்ட நூல். வைணவத்தின் 74 சிம்மாசனாதிபதிகளுக்கு இணையாக 74 பாசுரங்கள் வேண்டும் என்பதற்காக மணவாள மாமுனியின் சீடரான எறும்பியப்பா எழுதி சேர்க்கப்பட்ட சாற்றுக்கவி சேர்த்தால் 74 பாசுரங்கள் ஆகிவிடும்.
மன்னுயிர்காள் இங்கே மணவாள மாமுனிவன்
பொன்னடியாம் செங் கமலப் போதுகளை உன்னிச்
சிரத்தாலே தீண்டில் அமான் அவனும் நம்மை
கரத்தாலே தீண்டல் கடன்
வைணவ மரபுப்படி முகப்பு சாற்றுக்கவி(தனியன்) ஒன்று உண்டு .உபதேசரத்தி னமாலை நூலுக்கு கோயில் கந்தாடை அண்ணன் இயற்றிய ஒரு தனிப் பாசுரத்தையும் சேர்த்துக்கொண்டால் 75 பாசுரங்கள் ஆகிவிடும்.
முன்னர் திருவாய்மொழிப் பிள்ளை தாம் உபதேசித்த நேர்
தன்னின் படியைத் தண வாதசொல் மணவாள மாமுனி
தன் அன்புடன் செய் உபதேசரத்தினமாலை தன்னை
தன் நெஞ்சு தன்னில் தரிப்பவர் தாள்கள் நமக்கே
உபதேசரத்தினமாலை என்று பெயரிட்டு இருக்கிறார்.
ஆழ்வார்களின் பாசுரங்கள் தொகுப்பை பிரபந்தங்கள் என்று நாம் கூறு கின்றோம். அருளிச்செயல் என்று கூறுகின்றோம். தமிழ் வேதம் என்றும் கூறு கின்றோம்.
ஆனால் அந்த பிரபந்தத்திற்கு பெரிய திருமொழி, திருவாய்மொழி, அமலனா திபிரான் என்றெல்லாம் பிற்காலத்தில் பெயரிடப்பட்டது. அந்தாதி போன்ற வகைகளைக் கொண்டும், முதல் தொடரைக் கொண்டும், வேறு சில அமைப்புகளைக் கொண்டும் ஆழ்வார்களின் பிரபந்தங்கள் பெயரிடப்பட்டன .
ஆனால் மணவாள மாமுனிகளின் பிரபந்தத்திற்கு மணவாளமாமுனிகள் உபதேசரத்தினமாலை என்று பெயரிட்டு இருக்கிறார்.
எழுபத்து மூன்றாம் பாசுரத்தில் சொல்லுகின்றார்.
இந்த உபதேச ரத்தினமாலை தன்னைச்
சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் எந்தை
எதிராசர் இன் அருளுக்கென்றும் இலக்காகி
சதிராக வாழ்ந்திடுவார் தாம்
வழி குரவர்கள்மீது அளவுகடந்த அன்பு
உபதேசரத்தினமாலை என்பது உபதேசங்கள் ஆகிய ரத்தினங்களால் ஆன மாலை ஒரு மாலை என்றால் அதில் மையப்பகுதி என்று ஒன்று இருக்கும். முன் பகுதி ஒன்று இருக்கும். பின்பகுதி என்று ஒன்று இருக்கும். ஆழ்வார்களை முன் பகுதியாகவும், மதுரகவி ஆழ்வார் மற்றும் ராமானுஜரை நடுப்பகுதி ஆகவும் பின்புள்ள ஆசாரியர்களின் வரிசையை நிறைவுப் பகுதியாகவும் வைத்து அமைத்த மாலை இந்த மாலை.
73 ஆண்டுகள் இந்த நிலவுலகத்தில் வாய்ந்ததால் 73 பாசுரங்களை இந்த மாலையில் அவர் பாடி தொகுத்தார் என்று சுவாரஸ்யமாக சொல்வதுண்டு .
இது அஷ்டாக்ஷரம்போல அமைந்திருக்கிறது என்றும் நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆழ்வார்கள் பிரணவம் போலேயும் பக்தி நிஷ்டர்கள் என்பதால் அவர்களை முதல் பகுதியில் வைத்து விட்டு நம: பதத்துக்கு உரியதான ஆசாரிய வைபவத்தை மதுரகவி ஆழ்வார் எம்பெருமானார் வரலாற்றை நடுவில் வைத்து நாராயணாய பத த்துக்கு உரிய கைங்கரியத்தை நிறைவுப் பகுதியாகவும் வைத்துப் பாடியிருக்கலாம்.
எப்பொழுது பாடலாம் என்று அடுத்து பார்க்க வேண்டும்?
வைணவ மரபில் அத்யயன காலம் அழகிய காலம் என்றும் உண்டு கார்த்திகை பௌர்ணமி முதல் மார்கழியில் அத்யயன காலம் தொடங்குகின்ற வரையில் இந்த உபதேசரத்தினமாலை ஓதலாம். திருவீதி புறப்பாட்டின் போது ஓதலாம். திருமலையில் திருவாதிரை நாளன்று சேவிக்கிறார்கள். ஒவ்வொரு ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் அவதரித்த நாள்களில் இல்லங்களிலும் ஆலயங்களிலும் அந்தந்த ஆழ்வார்கள் ஆசா ரியர்களுக்கு உரிய உபதேசரத்தினமாலை பாசுரம் ஓது கின்ற மரபும் உண்டு. நாள் பாட்டு பாடும் மரபை ஏற்படுத்தினார்.
பிரபந்த சாரத்திற்கு உபதேசரத்தினமாலைக்கும் ஒரு வேற்றுமை உண்டு. அதில் திருப்பல்லாண்டு பெரியாழ்வார் திருமொழியோடு இணைந்ததாகக் கொள்ளப்படுகிறது. மணவாள மாமுனிகள் நடைமுறை மரபை ஒட்டி திருப்பல்லாண்டு ஓம் எனும் பிரணவ விஷயமாகக் கொண்டு தனி பிரபந்தம் ஆக அருளிச் செய்கிறார்.
வைணவத்தை வளர்த்த வழி குரவர்கள்மீது அளவுகடந்த அன்பும் மதிப்பும் உடையவர் மணவாளமாமுனிகள். அப்படி மதிக்க வேண்டும் என்று நினைப்பவர். அப்படி மதிக்காதவர்களை மூர்க்கர் என்று அவரே சொல்கிறார்.
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு
பின்னோர்ந்து தாம் அதனைப் பேசாதே தம் நெஞ்சில்
தோற்றினதே சொல்லி இதுசுத்த உபதேசவர
வாற்றதென்பர் மூர்க்கர் ஆவார்
இன்னொரு நிகழ்ச்சியும் இதற்குச் சான்றாகச் சொல்லலாம்.
நாம் அதில் கை வைக்கலாகாது
பெரியாழ்வார் திருமொழியின் முதல் 4 பதிகங்களுக்கு, பெரியவாச்சான் பிள்ளை உரை கிடைக்காமல் போன பொழுது அதற்கு, புதிதாக தேனும் பாலும் கன்னலும் அமுதமாக தித்திக்கும் வகையில் எழுதிச் சேர்த்தார் மணவாளமா முனிகள்.
இந்த உரையின் இனிமையைக் கண்ட சீடர்கள் மற்ற பாசுரங்களுக்கும் இதைப் போன்ற ஒரு உரையைச் சேர்த்து தரலாம் என்று கேட்டபொழுது முன் னோர்கள் உரை இருக்கும்பொழுது நாம் அதில் கை வைக்கலாகாது என்று மறுத்தார்.
திருவாய்மொழிப்பிள்ளை இன்னருளால்
தமக்கு முன்னால் வைணவத்தை வளர்த்த ஆழ்வார்களின் மீதும் ஆசாரியர் கள் மீதும் பரம அன்பு கொண்ட மணவாளமாமுனிகள் அந்த ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் வாழ்க்கைச் சுருக்கத்தை வெண்பாவில் வைத்துப் பாடினால் என்ன என்று நினைக்க அதன்வழியாகப் பிறந்ததுதான் இந்த உபதேசரத்தின மாலை.
எந்தை திருவாய்மொழிப்பிள்ளை இன்னருளால்
வந்த உபதேச மார்க்கத்தைச் சிந்தை செய்து
பின்னவரும் கற்க உபதேசமாய் பேசுகின்றேன்
மன்னிய சீர் வெண்பாவில் வைத்து
அவர்களின் வரலாற்றையும் ஆசாரியர்களின் வரலாற்றையும் நாம் தெரிந்து கொள்வதற்கு நமக்கு உதவி செய்கின்ற நூல்கள் குருபரம்பரை நூல்கள். அதற்கு அடுத்ததாக நமக்கு உதவுவது வியாக்கியானங்களில் உள்ள சில செய்திகள். மூன்றாவதாக திருவரங்கத்து அமுதனார் இயற்றிய ராமானுஜ நூற்றந்தாதி. அதில் ராமானுஜருக்கு முன்பு இருந்த நாதமுனிகள், கூரத்தாழ்வான் போன்றவர்களின் வாழ்க்கை குறிப்புகள் நமக்கு கிடைக்கின்றன. அதற்கு பிறகு வேதாந்த தேசிகர் எழுதிய பிரபந்த சாரம். நிறைவாக சுவாமி மணவாள மாமுனிகள் அருளிச்செய்த உபதேசரத்தினமாலை.
இதில் மணவாளமாமுனிகள் முந்தைய ஆச்சாரியரான திருவாய் மொழிப்பிள்ளை வரை நமக்கு பல செய்திகள் கிடைக்கின்றன. அதைவிட மிக முக்கியமாக திருவாய்மொழியின் உரை நூல்கள் பற்றிய செய்திகள் குறிப்பாக ஈட்டின் வழி பற்றிய செய்திகள் உபதேசரத்தினமாலை மூலம் மிகத்தெளிவாகக் கிடைக்கின்றன.
அதற்கடுத்து பிள்ளை உலக ஆசாரியர் இயற்றிய பல நூல்களில் இரண்டு நூல்கள் அருமையான நூல்கள். ஒன்று சீர் வசன பூஷணம் இன்னொன்று முமூஷுபடி . லோகாசாரியர் எழுதிய 18 ரகசிய நூல்களில் ஒரு நூலாக முமூஷுபடி வந்துவிடும். ஆனால் சீர் வசன பூஷணம் என்பது வைணவத் தின் தத்துவங்களை விளக்குகின்ற நூல். அந்த நூலின் பெருமையை சுவாமி மணவாள மாமுனிகள் உபதேச ரத்தின மாலையில் மிக வியப் போடு விரிவாகப் பேசுகின்றார் . நிறைவாக சில பாசுரங்களில் வைணவன் ஒருவன் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி கள் ,வாழ்க்கை வழிமுறைகள் , ஆச்சார்ய சிஷ்ய இலக்கணங்கள் ,என மிகத்துல்லியமாக பசு மரத்தில் ஆணி இறக்கினால் போன இறக்குகின்றார்.
எழுபத்திமூன்று பாடல் வரிசை
எழுபத்திமூன்று பாடல் வரிசையை இப்படிப் பார்க்கலாம்.
1.திருவாய்மொழி பிள்ளையின் பெருமை.
2.இந்த நூலை யாரெல்லாம் ஏற்றுக் கொள்வார்கள்?
கற்றோர்கள் தாமுகப்பர் கல்விதன்னில் ஆசையுள்ளோர்
பெற்றோமென உகந்து பின்பு கற்பர் – மற்றோர்கள்
மாச்சரியத்தால் இகழில் வந்தென் நெஞ்சே இகழ்கை
ஆச்சர்யமோ தானவர்க்கு
3.ஆழ்வார்களின் பெருமை
ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி
தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி – ஏழ்பாரும்
உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்யமறை தன்னுடனே சேர்ந்து
- ஆழ்வார்களின் வரிசை
பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை
அய்யன் அருள்மாறன் சேரலர்கோன் – துய்யபட்ட
நாதன் அன்பர் தாள் தூளி நற்பாணன் நற்கலியன்
ஈதிவர் தோற்றத் தடைவாமிங்கு.
முதல் ஆழ்வார்களை பாடிவிட்டு, கடைசி ஆழ்வாரான திருமங்கை ஆழ்வாரிடத்திலிருந்து வரிசையாகச் சொல்லிக் கொண்டே வருகின்றார்.
திருமங்கையாழ்வார் குறித்து இரண்டு பாடல்களும், திருப்பாணாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், குலசேகர ஆழ்வார் குறித்த ஒரு பாடலும், நம்மாழ்வார் குறித்து இரண்டு பாடல்களும் பாடு கின்றார்.மதுரகவி ஆழ்வாரை பற்றி இரண்டு பாசுரங்கள் பாடிய சுவாமி மணவாள மாமுனிகள் தன் மனம் கவர்ந்த பெரியாழ்வார் பற்றி ஐந்து பாசுரங்களும் அவருடைய திருமகளைப் பற்றி 4 பாசுரங்களும் போற்றுகின்றார்.
ஆழ்வார்களில் அதிக பாசுரங்களைப் பெற்றவர் பெரியாழ்வார்.
மங்களாசாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வத்தளவு தானன்றி – பொங்கும்
பிரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான்
பெரியாழ்வார் என்னும் பெயர்
- ஆண்டாள் பெருமை
இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் – குன்றாத
வாழ்வாக வைகுந்த வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்
ஆழ்வார்களில் ஆச்சாரியரான மதுரகவியாழ்வாரைச் சொல்லிவிட்டு எம் பெருமானார் விஷயத்துக்கு வந்து விடுகின்றார்.
எம்பெருமானார் விஷயத்துக்கு 3 பாசுரங்களை அளித்த மணவாளமா முனிகள் ஆழ்வார்கள் அவதரித்த ஊர்களைப் பற்றி நான்கு பாசுரங் களையும், அருளிச்செயல் சிறப்பைப் பற்றி இரண்டு பாசுரங்களையும் பாடி விட்டு, சுவாமி நாதமுனி களைப் பற்றி ஒரு பாசுரம் பாடுகின்றார்.
6.சுவாமி நாதமுனி களைப் பற்றி
தெருள் உற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவாரார்
அருளிச்செயலை அறிவாரார் – அருள் பெற்ற
நாதமுனி முதலான நம் தேசிகரை அல்லால்
பேதை மனமே உண்டோ பேசு
7.எம்பெருமானார் தரிசனம்
ராமானுஜர் காலத்திற்குப் பிறகு வைணவ மரபு எப்படி மாற்றம் கண்டது அதுவரை வைதிக தரிசனமாக இருந்த வைஷ்ணவ தரிசனம் எம் பெருமானார் தரிசனம் என்று மாறி வேகம் பெற்றது என்பதையும் இரண்டு பாசுரங்களால் விளக்குகின்றார்.
ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர்
ஏரார் எதிராசர் இன்னருளால் – பாருலகில்
ஆசை உடையோர்க்கு எல்லாம் ஆரியர்காள் கூருமென்று
பேசி வரம்பறுத்தார் பின்
எம்பெருமானார் தரிசனம் என்றே இதற்கு
நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார் – அம் புவியோர்
இந்த தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த
அந்தச் செயல் அறிகைக்கா
8.நஞ்சீயர் நம்பிள்ளை பெருமை
திருவாய்மொழிக்குரிய பல்வேறு உரைகளை(6,9,12,24,36) குறித்துப் பாசுரங் கள் பாடுகின்றார் .அதில் நம் பிள்ளை ஈடு குறித்து இரண்டு பாசுரங்களைப் பாடிவிட்டு, நஞ்சீயர் நம்பிள்ளை பெருமை பாடுகின்றார்.
நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை
என்பர் அவர் தம் ஏற்றத்தால் – அன்புடையோர்
சாற்று திருநாமங்கள் தான் என்று நன் நெஞ்சே
ஏத்ததனைச் சொல்லி நீ இன்று
9.பிள்ளை லோகாச்சாரியார்
ஆச்சாரியர்கள் குறித்து அடுத்தடுத்து பாடிவிட்டு பிள்ளை லோகாச்சாரியார் பெயர் காரணம் குறித்த அருமையான செய்தி கூறுகின்றார்.
தன்னுபுகழ்க் கந்தாடை தோழப்பர் தம் உகப்பால்
என்ன உலகாரியரோ என்று உரைக்கப் – பின்னை
உலகாரியன் என்னும் பெயர் நம்பிள்ளைக்கு ஓங்கி
விலகாமல் நின்றது என்று மேல்
பின்னை வடக்குத் திருவீதிப்பிள்ளை அன்பால்
அன்ன திருநாமத்தை ஆதரித்து – மன்னுபுகழ்
மைந்தர்க்குச் சாத்துகையால் வந்து பரந்தது எங்கும்
இந்தத் திருநாமம் இங்கு
சீர் வசன பூஷணம் சிறப்பை ஏழு பாசுரங்களால் பாடுகின்றார். உபதேச ரத்தினமாலையில் மிக அதிக பாசுரங்களைப் பெற்றவர் பிள்ளை லோகாச்சாரியார் அவர் இயற்றிய ஸ்ரீவசன பூஷணம் 7 பாசுரங்கள். பெறுகிறது
அன்னபுகழ் முடும்பை யண்ணல் உலகாசிரியன்
இன்னருளால் செய்தகலை யாவையிலும் – உன்னில்
திகழ் வசநபூடணத்தின் சீர்மை யொன்றுகில்லை
புகழலவிவ் வார்த்தை மெய்யிப்போது
ஆர்வசந பூடணத்தின் ஆழ்பொரு ளெல்லாமறிவார்?
ஆரதுசொன்னேரி லநுட்டிப்பார் – ஓரொருவர்
உண்டாகில் அத்தனைகா ணுள்ளமே யெல்லார்க்கும்
அண்டாத தன்றோ வது
அதற்குப் பிறகு குரு சிஷ்யன் உடைய விளக்கங்களை 8 பாசுரங்களால் பாடுகின்றார்.
10.குரு சிஷ்யன்
ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையன்
ஆன குருவை அடைந்தக்கால் மாநிலத்தீர்!
தேனார் கமலத் திரு மாமகள் கொழுநன்
தானே வைகுந்தம் தரும்.குரு
ஆத்மாவைக் காக்க வேண்டும்.சீடன் குருவின் தேகத்தை காக்க வேண் டும்.
11.பலச்சுருதி
உபதேசங்களை ஐந்து பாசுரங்களாலும் பாடி,நிறைவாக பலச்சுருதியாக ஒரு பாசுரமும் பாடி 73 பாசுரங்களை முடிக்கின்றார்.
நாத்திகரும் நல் கலையின் நன் நெறிசேர் ஆத்திகரும்
ஆத்திக நாத்திகருமாம் இவரை ஓர்த்து நெஞ்சே!
முன்னவரும் பின்னவரும் மூர்க்கர் என் விட்டு நடுச்
சொன்னவரை நாளும் தொடர்
நல்ல மணம் உள்ளதொன்றை நண்ணி இருப்பதற்கு
நல்ல மணம் உண்டாம் நயமது போல் நல்ல
குணம் உடையோர் தங்கள் உடன் கூடி இருப்பார்க்கு
குணம் அதுவே யாம் சேர்த்தி கொண்டு
பூருவாசாரியர்கள் போதம் அனுட்டானங்கள்
கூறுவார் வார்த்தைகளைக் கொண்டு நீர் தேறி
இருள் தருமா ஞாலத்தே இன்பம் உற்று வாழும்
தெருள்தருமா தேசிகனைச் சேர்ந்து
