வாலாஜாபேட்டை ஸ்ரீமத். வெங்கட்ரமண பாகவதர் அவர்களின் 245 வது ஜெயந்தி இசை விழா (சென்னை )

மார்ச் 22 .8. 2026 ஞாயிற்றுக்கிழமை வாலாஜாபேட்டை ஸ்ரீமத். வெங்கட்ரமண பாகவதர் அவர்களின் 245 வது ஜெயந்தி இசை விழா மற்றும் சென்னை ஸ்ரீமத் வெங்கட்ரமண பாகவதர் சங்கீத சமாஜத்தின் ஏழாம் ஆண்டு விழா பாரதிய வித்யா பவன் மினி ஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சத்குரு ஶ்ரீ தியாகராஜருக்கும் வெங்கட்ரமபாகவதற்கும் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று முதல் நிகழ்ச்சியாக ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமியின் பஞ்சரத்தின கீர்த்தனைகள் இசை ஆராதனையாக சென்னை ஸ்கந்தகான வித்யாலயா பள்ளி நிறுவனர் திருமதி.லட்சுமி கிருஷ்ணசுவாமி மற்றும் அவர்களின் மாணவ மாணவியரால் அழகாக பாடப் பெற்றது.அவர்களை சமாஜத்தின் கமிட்டி உறுப்பினர்கள் திரு.விஜயகுமார் மற்றும் திரு. நாகராஜன் அவர்களின் கலைஞர்களை கௌரவம் செய்தார்கள்.
அடுத்த நிகழ்ச்சியாக 2026 ஆம் ஆண்டிற்கான ஸ்ரீமத் வெங்கட்ரமண பாகவதர் விருது வழங்கும் விழா இனிதே தொடங்கியது. நிகழ்ச்சியின் முதலில் சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கு ஏற்றிய பின் இறை வணக்கம் திருமதி. விஷ்ணு பிரியா சுதர்சன் அவர்கள் அழகாக பாடி துவங்கி வைத்தார்.

அடுத்ததாக சமாஜத்தின் நிர்வாக குழு உறுப்பினர். திரு. கே. வி. விஜயகுமார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து ஸ்ரீ வெங்கட்ரமண பாகவதர் அவர்களின் இசை தொண்டை பற்றியும் அவருடைய பாடல்கள் இன்னும் எப்படி எல்லாம் பரப்பப்பட வேண்டும் என்பதைப் பற்றியும் முன்னிலை முறையாக திரு. டாக்டர். வி.எல்.வி. சுதர்சன் அவர்கள் மிக அழகாக விளக்கினார்கள்.


இந்த ஆண்டு ஸ்ரீமத் வெங்கட்ரமன பாகவதர் சுவாமி விருது மூத்த முகர்சிங் கலைஞர். “கலைமாமணி” திரு. ஏ. எஸ். கிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக பாகவதர் விருது பத்திரிகையாளர் மற்றும் சௌராஷ்டிரா டைம் ஆசிரியர் திரு.டாக்டர்.எஸ். டி. ஞானேஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. விருது பெற்ற கலைஞர்களை பாராட்டி திரு. எஸ். பிரேம்குமார், நிறுவனர் சௌராஷ்ட்ரா கிளாசிக்கல் போரம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

விருது பெற்ற கலைஞர்களின் ஏற்புரைக்கு பின் அன்றைய நிகழ்ச்சியின் முத்தாய்ப்பான இசை நிகழ்ச்சியாக விதுஷி.திருமதி. ராதா பார்த்தசாரதி அவர்களுடைய வாய்ப்பாட்டு நிகழ்ச்சி மிகவும் அற்புதமாக நடைபெற்றது. திருமதி. ராதா பார்த்தசாரதி அவர்கள் நிகழ்ச்சியில் முழுமையாக வெங்கட்ரமன பாகவதர் உடைய கீர்த்தனைகளை மட்டும் அழகாக பாடினார். மேடைகளில் அதிகம் பாடாத கீர்த்தனைகளையும் பாடாந்தரம் செய்து மிக அழகாக பாடினார். அவருக்கு உறுதுணையாக திரு. ஆர். சதீஷ்குமார் அவர்கள் வயலின் வாசித்தார். திரு. திருநாகேஸ்வரம் ஆர்.எஸ். மணிகண்டன் அவர்கள் சௌக்கியமாக பாடுபவருக்கு உறுதுணையாக அழகாக மிருதங்கம் வாசித்தார். விருது பெற்ற இசைக் கலைஞர் திரு.ஏ. எஸ். கிருஷ்ணன் அவர்கள் முகர்சிங் வாசித்தார். அன்றைய இசை நிகழ்ச்சி நிறைவில் வெங்கட்ரமன பாகவதருடைய மங்களம் பாட பூஜை மற்றும் மங்கள ஆர்த்திகளை திரு. ரகு அய்யா அவர்கள் செய்தார்கள். இனிதே நிகழ்ச்சி நிறைவுற்றது.


நிகழ்ச்சியின் பிரசாத விநியோகம் மற்றும் உணவு உபசாரங்களை திரு. ஆர். வி. கார்த்திக் அவர்கள் பொறுப்பாக செய்து கொடுத்தார்கள்.
இந்த இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றதற்கு காரணமானவர்களை பாராட்டி திரு. பி. எஸ். ஹரிஷ் குமார் அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியின் தொடக்க முதல் முடிவு வரை நிகழ்ச்சியை சமாஜத்தின் உறுப்பினர்களான திருமதி. விஷ்ணு பிரியா சுதர்சன் மற்றும் திரு.ஸ்ரீ ராம் அவர்கள் அழகாக தொகுத்து வழங்கினார்கள். இசை நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
– நமது ஆசிரியர் –
