By S.Gokulachari
(1)
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு
விளக்க உரை:
சாணூரன் முஷ்டிகன் போன்ற மல்லர்களை வென்ற வலிமையான தோள்களையுடையனே ! நீல நிறமுடைய மணிவண்ணா! பலப்பல வருடங்களிலும், அனேக பிரம்ம கல்பங்களிலும் இன்னும் ஆயிரம் கோடி காலங்களிலும் உன்னுடைய அழகான சிவந்த திருவடிகளுக்கு திருக்காப்பு உண்டாகட்டும். இந்த பாசுரம் ஆனது பல்லவி போல ஒவ்வொரு பாசுரத்திலும் சேர்ந்து சொல்லத் தக்கது . இதற்கு மேல் உள்ள பாசுரமும் சேர்த்து ஒரே பாட்டாக சேவிப்பது வழக்கம்.
(2)
அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே
விளக்க உரை:உனக்கு அடிமைகளாக சேவை செய்கின்ற அடியோங்களுக்கும் , எங்களுக்குச் சுவாமியான உன்னோடும் எந்தப் பிரிவும் இல்லாமல் என்றென்றும் உள்ள தொடர்பு பல்லாண்டு காலம் இருக்க வேண்டும். உன்னுடைய வலது மார்பில் பிரியாமல் அமர்ந்திருக்கின்ற பிராட்டிமார் முதலான நாச்சியார்களுக்கும் பல்லாண்டு பாடுகின்றேன். உன்னுடைய வலது திருக்கையிலே ஒளி வடிவமாக சுடர்விட்டுப் பிரகாசிக்கின்ற , என்றும் இருக்கக்கூடிய, பகைவர்களை அழி க்கக்கூடிய திருவாழி ஆழ்வானுக்கும் பல்லாண்டு.போரிலே சேனைகளை வெற்றி கொள்ளுகின்ற வைகையில் சங்க நாதம் செய்யும் அளவற்ற பெருமையுடைய பாஞ்சசன்யமாகிய திருச்சங்காழ்வாருக்கும் பல்லாண்டு பாடுகின்றேன்.
(3)
வாழாட் பட்டுநின் றீருள்ளீ ரேல்வந்து மண்ணும் மணமும்கொண்மின்
கூழாட் பட்டுநின் றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கை
பாழா ளாகப் படைபொரு தானுக்குப் பல்லாண்டு கூறுதமே
விளக்க உரை::
ஆத்ம ஜீவனம் ஆகிய வாழ்வுக்கு, பரமாத்மாவுக்கு அடிமை செய்கின்ற தொண்டு முக்கியம்.அந்த சேவையிலே நிலைத்து நிற்பவர்களாக இருப்பீர்கள் என்றால் வாருங்கள். வந்து எங்களோடு சேர்ந்து எம்பெருமானுக்கு நடக்கக்கூடிய விழாவுக்கு மண் சுமப்போம்.(அங்குரார்பணம்-ம்ரித்யு சங்கரணம்) திருமுளைத் திருநாள் என்று இதற்குப் பெயர். இல்லை வெறும் சோறு உண்பதற்காக, ஏதோ ஒரு வேலையில், உலகியலிலே அடிமைப்பட்டு இருப்பவர்களாக இருந்தால்,உங்களுக்கு எங்கள் குழுவில் வேலை இல்லை. நாங்கள் உங்களை அங்கீகரிக்கப் போவதில்லை. காரணம் நாங்கள் ஏழு தலைமுறையாக எந்த குற்றமும் இல்லாதவர்கள். எங்களுக்கு என்ன வேலை என்று சொன்னால் இராவணன் போன்ற அரக்கர்கள் ஒரு காலத்தில் இந்த அண்டத்தையே இலங்கையிலிருந்து ஆண்டு கொண்டிருந்தார்கள் அல்லவா .. அவர்களை வேரோடு அழிப்பதற்காக வானர சேனையை திரட்டிக்கொண்டு போர் செய்த பெருமானாகிய ராமபிரானுக்கு நாங்கள் பல்லாண்டு பாடுபவர்கள்.
(4)
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடு மனமுடை யீர்கள் வரம்பொழி வந்துஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கறி யநமோ நாராய ணாயவென்று
பாடு மனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே
விளக்க உரை:
கைவல்யத்தில் உள்ள ஆசையை விட்டு எங்கள் கோஷ்டியில் ஒன்றாக சேர்ந்து அளவற்ற ஆனந்தம் பெற வேண்டும். அடியார்களோடு கூட வேண்டும் என்று நினைத்தால், தனி இன்பம் காணுகின்ற அந்த எண்ணத்தை விட்டு வெளியே வாருங்கள்.எம்பெருமானை பூர்ண அனுபவம் பண்ணுவோம். ஏற்கனவே நீங்கள் காலத்தை கோட்டை விட்டு விட்டீர்கள்.இன்னும் தாமதம் ஏன்? சீக்கிரமாக வந்து எங்களோடு சேர்ந்து விடுங்கள் அப்படி சேர்ந்த பிறகு மற்றவர்களும் இந்த பெருமையை தெரிந்து கொள்ளும் படியாக நமோ நாராயணாய என்கின்ற அந்த திருமந்திரத்தை ஒத்த மனம் உடையவர்களாக நாம் உரக்கப் பாடுவோம்.பகவானுக்கு மங்கல வாழ்த்துக் கூறுங்கள்.
(5)
அண்டக் குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகே சன்தனக்கு
தொண்டக் குலத்திலுள் ளீர்வந் தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்துபல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்மினே
விளக்க உரை:
எம்பெருமான் அண்டத்தில் உள்ள அத்தனை உயிரினங்களுக்கும் தலைவன். நியமிப்பவன். இதில் அசுரர்கள் ராட்சசர்கள் இருந்தால்,அவர்களுடைய நெருக்கமான கூட்டத்தை நிர்மூலமாக்கி மற்றவர்களை காப்பவன்.இந்திரியங்கள் வென்று,நம்மையும் வெல்ல வைக்கும் இருடி கேசன். அந்த பகவானுக்கு அடியவர்கள் ஆக இருக்கும் குழுவிலே இருப்பவர்களே, நீங்கள் உண்டியே உடையே என்று உலகியல் சிற்றின்பங்களையே பிரயோஜனம் என்று நம்பிக்கொண்டிருந்த அந்தப் பழைய ஆசையை நீக்கி கொண்டு அடியார்களாகிய எங்களோடு சேர்ந்து பகவானுடைய திருவடிகளை வணங்கி அவருடைய ஆயிரம் நாமங்களையும் சொல்லி எப்பொழுதும் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று மங்கல வாழ்த்துக் சொல்லிக் கொண்டிருப்போம் வாருங்கள்.
(6)
எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதுமே
விளக்க உரை:
என்னுடைய அப்பா, அவருடைய அப்பா, அவருடைய அப்பா, அவருக்கு அப்பா,அவருடைய பாட்டன் என்று ஏழு தலைமுறையாக நாங்கள் அந்தந்த காலங்களிலேயே வந்து முறை தப்பாமல் பரம்பரை பரம்பரையாக தெய்வத் தொண்டு புரிந்து கொண்டிருக்கிறோம். திருவோண நட்சத்திரம் வந்துவிட்டால், எங்களுக்கு அது ஒரு விழாக்காலம். காரணம் அப்படிப்பட்ட ஒரு திருவோண நட்சத்திர நாளில்தான்.அந்தி மாலை நேரத்திலே கீழே மனிதனாகவும் முகம் சிங்கமாகவும் இணைந்த நரசிம்ம மூர்த்தியாய்த் தோன்றி பரம பக்தனாகிய பிரகலாதனுக்கு பகைவனான இரணியனை கொன்றொழித்தார். அப்படிப்பட்ட அந்த பகவானுக்கு நாம் பல்லாண்டு பாடுவோம்.
(7)
தீயிற் பொலிகின்ற செஞ்சுட ராழி திகழ்திருச் சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழிகுருதி
பாயச் சுழற்றிய ஆழிவல் லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
விளக்க உரை:
நாங்கள் ஐந்தீக்கை என்று சொல்லப்படுகின்ற சங்கு சக்கர முத்ரா தாரணம் பெற்றவர்கள். வேத மந்திரங்கள் சொல்லி சிவந்த ஒளி உடைய அந்த நெருப்பிலே சங்கு சக்கரங்களை காய்ச்சி நாங்கள் அவனுக்கு உரியவர்கள் என்று அடையாளம் செய்யப்பட்டவர்கள்.அப்படிப்பெற்று முறையாக பகவத் கைங்கரியம் செய்து வருகின்றோம் .அந்தப் பகவான் ஒரு காலத்திலே மிகுந்த பலசாலியான ஆயிரம் கரங்களையும் உடைய மாயப் போர் செய்வதில் வல்லவரான பானாசுரனை தன்னுடைய திருக்கையில் சுழல்கின்ற சக்கராயுதத்தை வைத்து அழித்தான். ஆயிரம் தோள்களும் குருதிபட வெட்டிச் சாய்த்தான். அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு வாழ்த்துக்கள் சொல்வோம். வாருங்கள். மங்களாசாசனம் செய்வோம். வாருங்கள்.
(8)
நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்ல
பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே
விளக்க உரை:
நெய்யோடு கலந்த அற்புதமான அறுசுவைப் பிரசாதத்தையும், எப்பொழுதும் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து சேவை புரிகின்றன சேவகர்களையும், அழகான கைகளினால் தருகின்ற தாம்பூலத்தையும் , கழுத்தில் ஆபரணங்களையும், காதில் குண்டலங்களையும், மார்பில் பூசி கொள்ளுவதற்கு மணமிக்க சந்தனத்தையும் இட்டுக் கொண்டு, வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருந்தோம் .அதுதானே மிகச்சிறந்த வாழ்க்கை என்று உலகியல் சுகங்களில் ஒட்டிக் கிடந்த என்னை, அதெல்லாம் தற்காலிகமானது என்று சொல்லி,சுத்த சாத்வீக குணம் கொண்டவனாய் மாற்றியனே . படமெடுக்கும் பாம்புக்கு விரோதியாக கருடனை கோடியாக உடைய எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்யப் போகின்றேன். காரணம் அவன் அத்தனை நன்மைகளை எனக்கு செய்திருக்கின்றான்.
(9)
உடுத்துக் களைந்தநின் பீதக வாடை யுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன சூடும்இத் தொண்டர்களோம்
விடுத்த திசைக்கரு மம்திருத் தித்திரு வோணத் திருவிழவில்
படுத்தபைந் நாகணைப் பள்ளிகொண் டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
விளக்க உரை:
சுவாமியின் இடுப்பில் சாத்திக்கொண்டு அடுத்த நாள் திருமஞ்சனம் முடிந்தவுடன் கழிந்துவிட்ட அந்த உடுத்து களைந்த பட்டு ஆடையை நாங்கள் பிரசாதமாக எடுத்துக் கொள்கின்றோம். பகவானுக்கு அமுது செய்து அந்த பாத்திரத்தில் மிகுந்ததை உணவாக உண்கின்றோம். அவன் சூடிக்களைந்த மாலைகளைத்தான் அதுவும் துளப மாலைகளைத்தான் நாங்கள் பரம போக்கியமாக சூடிக் கொண்டிருக்கிறோம். இப்படி அவன் சம்பந்தமில்லாத எதையும் நாங்கள் எங்களோடு சேர்த்துக் கொள்வதில்லை. அப்படிப்பட்ட ஆதிசேஷன சயனத்தில் ரவணையில் சயனித்து இருக்கின்ற சுவாமிக்கு நியமப்படி நாங்கள் காரியம் ஆற்றி கொண்டு திருவோண நாளாகிய இன்றைய நாளிலே அவருக்கு மங்களாசாசனம் செய்கின்றோம்.
(10)
எந்நாள் எம்பெரு மான்உன் தனக்கடி யோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திருமது ரையுள் சிலை குனித்து ஐந்தலைய
பைந்நா கத்தலை பாய்ந்தவ னே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே
விளக்க உரை:
பகவானே! உனக்கு நாங்கள் அடிமைப்பட்டவர்கள் என்று எங்களுடைய வாய்களில் என்றைக்கு சொல்லத் தொடங்கினோமோ அந்த தினம் முதல் அடியவர்களும் அடியார்களுடைய தொடர்புடைய பொருள்களும் சொந்தங்களும் நல்ல கதியை அடைந்துவிட்டது. உஜ்ஜீவனம் பெற்றுவிட்டது. அருமையான ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்து, மதுரை நகரில் கம்சன் நடத்திய அந்த வில் விழாவில் சென்று கம்சனுடைய ஆயுதக் கிடங்கில் இருந்து வில்லை வளைத்து முறித்து வென்றவனே , ஒரு காலத்தில் ஐந்து தலையுடைய நாகத்தின் மீது காளிங்க நர்த்தனம் ஆடியவனே உனக்கு நாங்கள் மங்களாசாசனம் செய்வோம்.
(11)
அல்வழக் கொன்றுமில் லாஅணி கோட்டியர் கோன்அபி மானதுங்கன்
செல்வனைப் போலத் திருமா லேநானும் உனக்குப் பழவடியேன்
நல்வகை யால்நமோ நாரா யணாவென்று நாமம் பலபரவி
பல்வகையாலும் பவித்திர னேஉன்னைப் பல்லாண்டு கூறுவனே
விளக்க உரை:
மாலே எந்தவிதமான வழக்குகழும் வம்புகளும் அநீதிகளும் இல்லாமல் இருக்கக்கூடிய சாத்வீகமான வேத பண்டிதர்கள் வாழுகின்ற திருக்கோட்டியூரில் ஸ்ரீவைஷ்ணவ தலைவராக விளங்குகின்ற செல்வ நம்பியைப் போல அடியேனும் பழைய தாசனாக ஆகிவிட்டேன். எல்லாவிதங்களிலும் பரிசுத்தமான எம்பெருமானே, எல்லா வகையாலும் எங்களுக்கு நன்மை உண்டாகும்படி உன்னுடைய திருமந்திரத்தை அனுசரித்து ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்தையும் மற்றும் உள்ள அநேக நாமங்களையும் திருப்பித் திருப்பிச் சொல்லி மங்களாசாசனம் செய்வேன்.
(12)
பல்லாண் டென்று பவித்திர னைப்பர மேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண் டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டு சித்தன் விரும்பியசொல்
நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ நாராய ணாயவென்று
பல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே
விளக்க உரை:
பரிசுத்தமானவரே, பரமபத நிலையை உடையவனே, ஸ்ரீசார்ங்கம் என்னும் வில்லை அடக்கி ஆள்பவனே எம்பெருமானே, ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த பெரியாழ்வார் மிக விரும்பிச் சொன்ன, இந்த திருப்பல்லாண்டு என்னும் பிரபந்தத்தை சொல்வதற்கு நல்ல காலம் வாய்த்தது என்று அனுபவித்து அனுபவித்து, யாரெல்லாம் பாடுவார்களோ அவர்கள் பரமாத்மாவாகிய ஸ்ரீமன் நாராயணனை சூழ்ந்துகொண்டு எட்டெழுத்து மந்திரத்தை சொல்லி எப்பொழுதும் மங்களாசாசனம் செய்யப் பெறுவார்கள் .
