- ஆலமரம் சாய்ந்தது
By S.Gokulachari,Editor,aalayadharisanam.com
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்பார்கள். பொன்னையும் பொருளையும் விடவும் மதிப்பில் உயர்ந்த, ஆன்மிகமும் அறிவும் நிறைந்த ஒரு புண்ணியப் பொழுது அது என்ற அர்த்தத்திலேயே நம் முன்னோர் அப்படிச் சொல்லியிருப்பார்கள் போலும். ஆனால், 2026 ஜூலை மாதம் இரண்டாம் நாளான அந்தப் புதன்கிழமை அதிகாலை, எனக்கு அத்தகையதொரு பொன்னான பொழுதாக விடியவில்லை; மாறாக, நெஞ்சில் பேரிடியை இறக்கிய ஒரு துயரச் செய்தியோடுதான் விடிந்தது. வைணவப் பேரொளியாய், பல்லாயிரக்கணக்கானோரின் ஆன்மிகத் தாகத்தைத் தீர்த்து வந்த ஒரு மிகப்பெரிய ஆலமரம் சாய்ந்துவிட்டது என்ற செய்திதான் அது. ஒரு சகாப்தம் நிறைவுற்ற அந்த விடியலை விட, என் வாழ்வில் வேறென்ன பெரும் அதிர்ச்சி இருந்துவிட முடியும்?
உண்மையில், இந்த மரணச் செய்தி எனக்கு முற்றிலும் எதிர்பாராத ஒன்று அல்ல. அவருடைய உடல்நிலை இருந்த நலிவுற்ற நிலையைக் கவனித்து வந்த எனக்கு, என் உள் உணர்வு ஒரு எச்சரிக்கையைத் தந்துகொண்டேதான் இருந்தது. ‘இம்முறை அவர் பிழைத்து வருவது அபூர்வம்’ என்று என் மனம் மெல்லப் பறைசாற்றியபடிதான் இருந்தது. மரணம் என்பது பிரபஞ்ச நியதிதான் என்றாலும், காலம் நமக்குப் பிரியமானவர்களைத் தன்னிடம் இழுத்துக்கொள்ளப் போகிறது என்பதை முன்கூட்டியே அறிவது ஒரு தனி வதை.
ஆயினும், அந்தப் புதன்கிழமை விடியற்காலையில் செய்தி வந்தடைந்த அந்த நிமிடம், மனதைக் கல்லாக்கிக் கொள்ள நினைத்த என் முயற்சிகள் யாவும் தோற்றுப் போயின. எதிர்பார்த்த துயரமாகவே இருந்தாலும், அது நிஜமாகி நம் கண்முன்னே வந்து நிற்கும்போது ஏற்படும் இதய வலி தாள முடியாதது. அந்த அதிகாலை வேளை, சொல்லொணா வேதனையையும், நெஞ்சை அடைக்கும் பாரத்தையும் சுமந்த ஓர் இருண்ட பொழுதாகவே என் நினைவில் உறைந்துபோனது. வைணவப் பெருங்கடலின் ஒரு பெரும் அலை ஓய்ந்து போனதன் வலி, என் ஆன்மாவை உலுக்கிய தருணம் அது.
மறைவுச் செய்தி தந்த அதிர்ச்சியிலிருந்து மெல்ல மீண்டு, உள்ளூரில் இருக்கும் அவருடைய முக்கிய அன்பர்களுக்கும், அவரை நன்கறிந்தவர்களுக்கும் இந்தத் துயரச் செய்தியைப் பகிர்ந்து கொண்டேன். கடமைகள் ஒருபுறம் துரத்தினாலும் மனம் அவசரமாய் அவரை நோக்கிக் கிளம்பியது. நான் சிதம்பரம் நோக்கிப் புறப்பட்டேன். இதோ, சிதம்பரத்தின் மேல வீதியில், காவல் நிலையத்திற்கும் காய்கறி மார்க்கெட்டுக்கும் எதிரே கம்பீரமாய் நிற்கும் ‘வேங்கடார்ய குருகுலம்’ என்ற அந்தத் திருமாளிகைக்குள் வந்துவிட்டேன். எப்போதும் ஆன்மிக ஒளியும், அறிஞர்களின் நடமாட்டமும் நிறைந்திருக்கும் அந்த இல்லம் அன்று மௌனத்தில் மூழ்கியிருந்தது. உள்ளே நடுக்கூடத்தில், 92 அகவைகள் நிறைவுற்ற அந்த மகா புருஷரின் திருமேனியைத் தரையில் கிடத்தியிருந்தார்கள். பல்லாண்டுகாலம் வைணவத் தத்துவங்களை உலகிற்குப் போதித்த அந்தப் பேரறிஞரின் உடல் அசைவற்று நின்ற காட்சி நெஞ்சைப் பிழிந்தது.
நான் இயல்பிலேயே உணர்ச்சிகளுக்கு ஆட்படக்கூடியவன். தத்துவங்களின் பின்னணியில் நின்று, இந்த உலகத்தின் நிலையாமையைப் பற்றி என்னால் மணி கணக்கில் பேசிவிட முடியும்; ‘யாக்கை நிலையற்றது, பிறப்பும் இறப்பும் இயற்கையின் நியதி’ என்று பிறருக்கு ஆறுதல் சொல்ல முடியும். ஆனால், வெறும் தத்துவப் பேச்சுகளால் மட்டும் மனித மனத்தின் எளிய பாச உணர்ச்சிகளை வென்றுவிட முடியுமா என்ன? தத்துவங்களை எல்லாம் தாண்டி, பாசத்தோடு பிறந்துவிட்ட ஒரு சாதாரண மனிதனாக அந்த நிஜத்தை எதிர்கொண்டபோது, என்னால் என் துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நிலையாமை என்ற தத்துவம் என் அறிவுக்குத் தெரிந்தாலும், என் அன்பு அந்தப் பேரிழப்பை ஏற்க மறுத்தது. என்னை அறியாமலேயே கண்கள் குளமாகின; சற்று நேரம் அங்கே உடைந்து அழுதேன். அந்தப் பெருந்துயரத்தின் முன்னால் மனிதனாகிய நான் வேறென்னதான் செய்துவிட முடியும்?
அழுகையினூடே அவருடைய திருமுகத்தைக் கூர்ந்து கவனித்தேன். ஆச்சரியமாக, அந்த முகத்தில் ஒரு பேரமைதியும் சாந்தமும் குடி கொண்டிருந்தது. சொல்லப்போனால், கடந்த ஒரு மாத காலமாக அந்தப் பழுத்த உடல் அனுபவித்து வந்த மருத்துவ வேதனைகள், ஊசி முனைகள், மருந்து களின் வீரியம் என அத்தனை உபாதைகளிலிருந்தும் முற்றிலுமாக விடு பட்டுவிட்ட ஒரு நிம்மதியும் சந்தோஷமுமே அந்தத் திருமுகத்தில் பிரகாசிப்பது போல எனக்குத் தோன்றியது. மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல, அது ஆன்மாவின் விடுதலை என்பதை அந்த மகா புருஷரின் முகம் எனக்கு மௌனமாக உணர்த்திக் கொண்டிருந்தது. (contd.,)
