Thirupalliyezhuchi Lyrics with Tamil Meaning simple form
மார்கழி மாதம் பிறந்து விட்டது. ஊரெங்கும் திருப்பள்ளி எழுச்சி ,திருப்பாவை விடியலில் பூபாள ராகமாக நம் செவிகளில் ஒலிக்கப் போகிறது.
அந்த ஒலியின் நாதத்தில் நாம் உத்தமனை தரிசித்து ஆன்மீக விழிப்புணர்வை அடையப் போகின்றோம்.
உறங்குவான் போலே யோகு செய்யும் பெருமாளுக்கு திருப்பள்ளி எழுச்சி என்பது ஒரு பாவனை தான்.
மனதுக்குள்ளே இருக்கக்கூடிய பெருமாளை பாடி நாம் பள்ளி உணர்த்து கிறோம் என்று சொன்னால் நாம் உணருகிறோம் என்று பொருள்.
திருப்பாவை திருப்பள்ளியெழுச்சி இரண்டும் தனுர் மாத சிறப்பு பிரபந்தங்கள். திருப்பாவையை அருளிச் செய்தவர் ஆண்டாள் நாச்சியார் .
திருப்பள்ளியெழுச்சி பிரபந்தத்தை அருளிச் செய்தவர் தொண்டரடிப் பொடியாழ்வார்..
திருப்பள்ளி எழுச்சியில் அதிகாலையின் அற்புத சூழல்கள் அழகுத் தமிழில் விவரிக்கப்படுகின்றன.

அதில் முதல் பாசுரம் இது .
கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான்
கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்,
மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம்
வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,
எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த
இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,
அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும்
அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே.
எம்பெருமானே, கதிரவன் கீழ்த்திசையில் எழுந்துவிட்டான். இருள் அகன்றது . ஒளி பிறந்தது. அதாவது அஞ்ஞானம் மறைந்து ஞானம் பிறந்தது. வழி கிடைத்தது. மலர்கள் எல்லாம் வண்ணக் காட்சிகளாக மதுவைச் சிந்தி, அந்த எம்பெருமானுடைய இருப்பை உணர்த்துகிறது. இந்திராதி தேவர்கள் உன் ஆலயத்தின் முன் திரண்டு இருக்கிறார்கள். ஆலயக் கதவு எப்போது திறக்கும் என்று வழி மேல் விழி வைத்து காத்து இருக்கிறார்கள். பறவைகளின் சத் தத்தோடு இந்த தேவாதி தேவர்கள் வந்த யானைகள், குதிரைகள், ஓசை கடல் ஓசை போல் கேட்கிறது முரசு சத்தம் எதிரொலிக்கிறது. எம்பெருமானே, நீ பள்ளி உணர வேண்டும்.

இனி இரண்டாம் பாசுரம்
கொழுங்கொடி முல்லையின் கொழுமல ரணவிக்
கூர்ந்தது குணதிசை மாருத மிதுவோ,
எழுந்தன மலரணைப் பள்ளிகொள் ளன்னம்
ஈன்பனி நனைந்தத மிருஞ்சிற குதறி,
விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்
வெள்ளெயி றுறவதன் விடத்தனுக் கனுங்கி,
அழுங்கிய ஆனையி னருந்துயர் கெடுத்த
அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே.
மணம் வீசும் முல்லை மலர்கள் எங்கும் மணம் பரப்பிக் கொண்டிருக்கின்றன. அருமையான பனிக்காற்று உள்ளத்தில் சிலிர்ப்பை ஏற்படுத்திக் கொண்டி ருக்கிறது.
காற்றுக்கு எத்தனை பெயர்கள் தெரியுமா?
தெற்கிலிருந்து வீசினால் –தென்றல்!
வடக்கிலிருந்து வீசினால் –வாடை !
கிழக்கிலிருந்துவீசினால் —கொண்டல் !
மேற்கிலிருந்து வந்தால் —மேலை!
திசை பொருத்து காற்றின் பெயர்கள்:
தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று!
வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று !
கிழக்கிலிருந்துவீசுவது கொண்டல்க் காற்று !
மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று !
காற்று வீசும் வேகம் பொருத்தும் பெயர்கள் மாறுபடும் :
6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று “மென்காற்று”
6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று “இளந்தென்றல்”
12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று “தென்றல்”
20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று “புழுதிக்காற்று”
30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று “ஆடிக்காற்று”
100கி.மீ வேகத்தில் வீசும் காற்று “கடுங்காற்று”
101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று “புயற்காற்று”
20 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று “சூறாவளிக் காற்று”
மாருதம் என்பது காற்று. தென்றல் காற்றினை வடமொழியில் மந்த மாரு தம் என்கிறார்கள். நறுமணக்காற்றினை ‘சுகந்த மாருதம்’ என்பார்கள். சண்டமாருதம் என்பது பெருங்காற்று.
கீழ்த்திசையில் ஒளிச்சுடர் தோன்றியதால் எங்கும் ஒளி வெள்ளம் பாய்கிறது அன்ன பட்சிகள் தங்கள் சிறகுகளை எல்லாம் உதறி எழுந்து விட்டன. அன்று கஜேந்திரன் என்ற யானை முதலையின் குகை போன்ற வாயில் கடுமையாக துயரம் அடைந்து, உன்னை அழைத்தபோது, நீ காப்பாற்றுவதற்காக ஓடி வந்ததுபோல் வரவேண்டும்.
இங்கே “அருந்துயர்” என்கிற ஒரு வார்த்தை அற்புதமானது.
துயரம் என்பதே கொடுமையானது அதிலே அருமையான துயரமா? என்று ஆழ்வார் சொல்வதற்கு என்ன காரணம் என்று சொன்னால், இந்தத் துயரம் அல்லவா அருமையான பகவானை நேரடியாக அழைத்து வந்தது. பகவானை நேரடியாக அ.ழைக்கும் மந்திரம் அருமையான மந்திரம் போல பகவானே நேரடியாகத் தோன்றச் செய்ததுயரம் அருமையான துயரம்.
மூன்றாவது பாசுரம்
சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம்
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி,
படரொளி பசுத்தனன் பனிமதி யிவனோ
பாயிறு ளகன்றது பைம்பொழில் கமுகின்,
மடலிடைக் கீறிவண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருத மிதுவோ,
அடலொளி திகழ்தரு திகிரியந் தடக்கை
அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே.
பொதுவாகவே நாம் விளக்கேற்றும் போது கிழக்கு திசை நோக்கி விளக்கேற்ற வேண்டும் ,மேற்கு திசை நோக்கி விளக்கேற்ற வேண்டும் என்று திசைகளை சொல்லுகின்றோம்.
அது ஒரு மரபு தான்.
ஆனால் வெளிச்சம் என்பது எல்லா திசைகளிலும் பரவி திசைகள் தோறும் இருட்டை விலக்குகிறது என்பதுதான் உண்மை.
சூரியன் எழுந்து விட்டதால் மினுங்கிக்கொண்டிருந்த தாரகைகள் ஒளியைச் சுருக்கிக் கொண்டன . இருள் அகன்றது. கமுகு பாளைகள் விரிந்து எங்கு பார்த் தாலும் நறுமணம். நாற்றம் என்றால் நறுமணத்தைக் குறிக்கும். ஆனால் இப் பொழுது நாற்றம் என்பது துர் வாடையைக் குறிக்கும் சொல்லாகப் பொருள் மாறிவிட்டது. நாள் என்றால் நல்லநாள். நாற்றம் என்றால் நறு மணம்.ஆண்டாளும் நாற்றத் துழாய்முடி என்று குறிப்பிடுகிறாள். ஆனால் இப் பொழுது நாற்றம் என்னும் வார்த்தையை துர்நாற்றத்தைக் குறிப்பிட வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பனி விடியலின் மென்மை எங்கெங்கும் பரவியி ருக்கிறது.படர் ஒளி,சுடர் ஒளி அடல் ஒளி முதலிய வார்த்தைப் பிரயோகங்களை கவனிக்க வேண்டும். சூரியனுக்கு ஒளி கொடுத்த அல்லது ஒரு காலத்தில் சூரியனின் ஒளியை மறைக்கும் ஒளிபடைத்த (மஹா பாரதத்தில்) எம்பெருமானின் கையிலுள்ள கையாழி (சுதர்சன ஆழ்வர்-சக் கரழ்வார் ) ஒளி வீச நீ பள்ளி எழுந்தருள வேண்டும்.

