இது திருப்பள்ளியெழுச்சியின் நான்காம் பாசுரம்.
மேட்டிள மேதிகள் தளைவிடு மாயர்கள்
வேய்ங்குழ லோசையும் விடைமணிக் குரலும்
ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள்
இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரிசிலை வானவ ரேறே
மாமுனி வேள்வியைக் காத்துஅவ பிரதம்
ஆட்டிய அடுதிறல் அயோத்தியெம் மரசே
அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தரு ளாயே.
நன்கு உயரமாகவும் இளமையாகவும் உள்ள எருமைகள். அவைகளை மேய்ச் சலுக்காகக் கட்டவிழ்த்து விட்டு விட்டார்கள் ஆயர்கள். அந்த எருமைகள் மேய்சலுக்குப் போகும் பொழுது ஆயர்கள் ஊதும் புல்லாங்குழலின் இசை காதில் விழவில்லையா…. அந்த எருதுகள் அசைந்து அசைந்து போகின்ற பொழுது அதன் கழுத்தில் கட்டியுள்ள மணி ஓசையானது எல்லா திசைகளிலும் பரவி விட்டது
அக்காலத்தில் வீதிகள் வழியே மேய்ச்சலுக்கு மாடுகளை அழைத்துச் செல்லும் ஆயர்கள் ஊதும் குழல் ஓசையும், எருதுகளின் கழுத்து மணி ஓசையும் விடிந்துவிட்டது என்பதை நமக்கு உணர்த்தும்.
வயல்களில் உள்ள வண்டுகள் இனிய ஓசையோடு ஆரவாரம் செய்து கொண்டு கிளம்புகின்றன .
இப்படிப்பட்ட இனிய காலைப் பொழுதில் ஒரு காலத்தில் ராம அவதாரம் எடுத்து இலங்கையில் விபீஷணனைத்தவிர தவிர மற்ற அனைவரையும் ஒன்றுமில்லாமல் அடித்த அழகிய வில்லை உடைய தேவர்களுக்குத் தலைவனான இராமபிரானே,
விசுவாமித்திர மகரிஷியின் யாகத்தை நிறைவேற்றுவதற்காக சென்றவனே,
யாகம் நிறைவேறி அவப்ருத ஸ்நானம் (விழா /யாகம் முடிந்தவுடன் நீராட்டு என்ற வழக்கம். அக்காலத்தில் உண்டு. திருமணம் ஆன பிறகு கூட நீராடுவதும் உண்டு .இதை ஆண்டாளும் சொல்லுகின்றாள் .
குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலஞ் செய்து மா மண நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று* அங்கு ஆனைமேல்
மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான் )
அப்படி விசுவாமித்திரர் வேள்வியைக் காத்து அவர் அவபிரதம் செய்யும் படியாக அருளிச் செய்தவனே
அயோத்திக்கு அரசனே
திருவரங்க பெருமானே
நீ உணர வேண்டும்.பள்ளி எழுந்தருள வேண்டும் .
தேவர்களின் காரியத்தை முடிக்க அவதாரமே எடுத்தாயே, எங்களுக்காக சற்று எழுந்தருள கூடாதா என்கின்ற தொனி இந்தப் பாசுரத்தில் உள்ளது.
இரிந்தன சுரும்பினம் என்பது அற்புதமான சொல்.
வண்டுகள் மதுவுண்ண தாமரை மலர்களில் புகுந்தன .
பொழுது போய் இரவு வந்தது.
மயக்கத்தில் வண்டுகள் உள்ளன.
சூரியன் அஸ்தமிக்க மலர்கள் மூடிக்கொண்டன. எப்படி வெளியே வருவது என்று தெரியாமல் வண்டுகள் வருந்தின.
பொழுது விடிந்து விட்டது அல்லவா.
தாமரை மலர்ந்து வண்டுகள் விடுதலைப் பெற்றன.
விடுதலை கிடைத்துவிட்டது என்று ஆரவாரம் செய்து கொண்டு கிளம்பின ..
இரிதல் என்றால் சாய்தல் ஓடுதல் என்று பொருள்.
ஐந்தாம் பாட்டு
புலம்பின புட்களும் பூம்பொழில் களின்வாய்
போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குணதிசை கனைகட லரவம்
களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கலந் தொடையல்கொண் டடியிணை பணிவான்
அமரர்கள் புகுந்தன ராதலி லம்மா
இலங்கையர் கோன்வழி பாடுசெய் கோயில்
எம்பெரு மான் பள்ளி யெழுந்தரு ளாயே.
அழகான சோலை. அங்கே பூத்திருக்கும் பூக்கள். அந்தச்சோலையைத் தேடி வந்த பறவைகளின் ஆரவாரம் அற்புதமாக இருக்கிறது.
விடிந்தது காலைப்பொழுது.
வந்துவிட்டது கீழ்த்திசையில் சூரியன்.
கடல் அலைகள் எழுப்பும் ஓசை எங்கும் வியாபித்திருக்கிறது.
தேனைப் பருகி களிப்பு உற்ற வண்டுகள் உற்சாகமாக இசைபாடி கொண்டு திரிகின்றன .
பலவகைப் பூக்களால் தொடுக்கப்பட்ட அழகான மாலைகளை கையில் வைத்துக்கொண்டு தேவர்கள் உன்னுடைய சந்நிதிக்கு திருப்பள்ளிஎழுச்சிக்காக வந்து நிற்கின்றனர்.
ஆகையினாலே எல்லோருக்கும் தேவனான தேவனே,
ராவணன் தம்பியாகிய வீடணன் உன்னை அடைக்கலம் அடைந்தான் அதனால் பலன் அடைந்தான். விபீஷண ஆழ்வார் தொண்டு செய்கின்ற அவன் விரும்பி வழிபடும் திருவரங்கம் கோயிலை உடையவனே, பள்ளி எழுந்தருள வேண்டும்.
(வண்டுகள் பறவைகள் ஓசைகள் எல்லாம் விடிந்ததைக் காட்டும் குறியீடுகள். அந்த சிற்றறிவு உயிரினங்களும் காலையில் எழுந்து அழகான இசை பாடிக்கொண்டு திரிய ,ஆறறிவு படைத்த மனிதன் உறங்கலாமா என்பது கேள்வி)
வண்டுகள் என்பது பகவத் பக்தி நிஷ்டர்கள் என்பது பெரியவாச்சான்பிள்ளை அனுபவம்.
