தை அமாவாசையிலிருந்து ஏழாவது நாள் சூரிய ஜெயந்தி கொண்டா டப்படுகிறது. அன்றிலிருந்தே சூரியன் தன் வெப்பக்கதிர்களை சிறிது சிறிதாய் கூட்டுகிறான். தெற்குப் பாதையில்(தட்சிணாயண) பயணிக்கும் சூரியன், வடக்கு வழியில்(உத்தராயண) திசை திரும்பிப் பயணிக்க ஆரம்பிக்கும் நாளும் ”ரத சப்தமி” எனக் கொண்டாடப்படுகிறது.சூரிய பகவான் ஒரு சப்தமி திதி அன்றுதான் காஷ்யபருக்கும் அதிதிக்கும் மகனாக அவதரித்தார்.சப்தமி திதி அன்று செய்யப்படும் வழிபாடுகள் அனைத்தும் ஆத்ம காரகனாகிய சூரிய பகவானுக்கு உகந்தவை.ரத சப்தமிக்கு அடுத்த நாள் பீஷ்மாஸ்டமி. பீஷ்மர் முக்தி அடைந்த இந்த நாளில் நீர் நிலைகளுக்குச் சென்று புனித நீராடி தரிசனம் செய்வது நல்லது. அந்த நாளில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் விசேஷம் என்று சொல்லப்படுகிறது.
சியாமளா நவராத்திரி
நான்கு நவராத்திரிகள் வருடத்திற்குக் கொண்டாடப்படுகின்றன. அதில் சியாமளா நவராத்திரியும் ஒன்று. ராஜமாதங்கி தேவியை பிரத்தியேக தேவ தையாக வழிபடுகின்ற விழா இந்த விழா. வடக்கே காளி தேவியையும் வழிபடுகின்றனர். தைமாத வளர்பிறை பிரத மையில் ஆரம்பித்த விழா, இன்றைய தினம் நிறைவுறுகிறது. அம்பாளை கலசத்தில் ஆவாகனம் செய்து ஒன்பது நாட்களும் வழிபட்டவர்கள், இன்றைய தினத்தில் பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். அதனால் பற்பல நன்மைகளை அடையலாம்.
தை கிருத்திகை,(30.1.23)
ஆண்டுக்கு மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள்தை கிருத்திகையில் விரதம் இருந்து வள்ளி மணாளனை வழிபட்டால் குறைகள் அனைத்தும் தீரும். நினைத்தது நடக்கும்!’’ என்று சிவபெருமானே வாக்குறுதி அளித்ததாகவும் கூறுவர்.கார்த்திகை விரதம் இருப்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு ஏதும் உண்ணாமல் உபவாசம் இருக்க வேண்டும். உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இதனால் சகல நன்மைகளும் அடை யலாம்.
கண்ணப்ப நாயனார் குருபூஜை-1.2.2023 – புதன் கிழமை-
சைவ சமயத்தில் வண் தொண்டர்கள் என்று சில தொண்டர்களைக் குறிப்பிடுவார்கள். ஒருவர் கல்லால் அடித்தார். ஒருவர் வில்லால் அடித்தார். ஒருவர் காலால் உதைத்தார் என்று சிறப்பாகச் சொல்வதுண்டு. கல்லால் அடித்தவர் சாக்கியநாயனார். வில்லால் அடித்தவன் விஜயன். காலால் உதைத்தவர் கண்ணப்பன். .
“கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்” என்று சுந்தரமூர்த்தி நாயானாரும், “நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன்” என பட்டினத்தாரும் கண்ணப்பரை குறிப்பிடுகின்றனர்.
வேடர் குலத்தில் பிறந்த திண்ணன், வேட்டை ஆடுவதில் சிறந்தவர். ஒருமுறை வேட்டையாடச் சென்றபோது, காளத்தி மலையில் குடுமித் தேவர் என்ற சிவலிங்கத்தினை கண்டார். சிவன் மீது அன்பு பெருகியது. அவரை தன் குணத்திற்கும் வசதிக்கும் ஏற்ப வணங்க ஆரம்பித்தார்.தினசரி வாயில் நீர்சுமந்து வந்து அபிசேகம் செய்தார், மலர்களாலும், இலை களாலும் அர்ச்சனை செய்து, வேட்டையாடிய பன்றி இறைச்சியைப் படைத்தும் வந்தார். இதைக்கண்டு ஆகம விதிப்படி குடுமித்தேவரை வணங்கும் சிவகோசரியார் மனம் வருந்தினார் . இறைவனிடம் முறையிட்டார். கண்ணப்பரின் அன்பினை சிவ கோசரியாருக்கு உணர்த்த ஒரு நாடகம் நடத்தினார் ஈசன் . திண்ணனார் வரும் வேளையில் சிவலிங் கத்தி்ன் வலக்கண்ணில் குருதி வருமாறு செய்தார் சிவபெருமான். கண் ணில் குருதி வடிவதைக் கண்டு திண்ணனார் பச்சிலை இட்டு மருத் துவம் பார்த்தார். ஆயினும் பலன் இல்லை.தன் கண்ணை பறித்து இலிங் கத்தின் கண்ணிருக்கும் இடத்தில் இட்டார். இலிங்கத்தின் வலக்கண்ணில் வரும் குருதி நின்றது.ஆனால், இடக்கண்ணில் குருதி வழியத் தொடங்கியது, “இது என்ன சோதனை?” என்று நினைத்த திண்ணனார் தனது இடக்கண்ணையும் அகழ்ந்தெடுக்க திட்டமிட்டார்.
தன்னுடைய காலால், இறைவன் கண் உள்ள இடத்தை அடையாளப் படுத்திக் கொண்டு, தன் கண்ணை பறித்து, இறைவனுக்கு வைக்கத் துணிந்தார். இறைவன் “நில் கண்ணப்ப” என்று சொன்னார். அவருடைய வைராக்கியத்தையும் தியாகத்தையும் கண்டு சிவபெருமான் காட்சி தந்தார்.
கண்ணப்ப நாயனாரின் குருபூஜை தை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் நடைபெறுகிறது. அந்த தினம் இன்று.
