சிவமந்திரம், சிவதரிசனம், சிவவழிபாடு ஆகிய மூன்றுமே ஒவ்வொரு வருடைய வாழ்கையிலும் மிகவும் முக்கியம்.அப்படி வாழ்ந்து காட்டியவர் களை நாயன்மார்கள் என்று போற்றுகிறது பெரியபுராணம். சிவன் கோயிலில் எரிந்து கொண்டிருந்த விளக்குத் திரியைத் தூண்டிவிட்ட காரணத்தினால் அளவில்லாத புண்ணியம் பெற்ற எலி, மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த் தியாகப் பிறந்ததை புராணங்கள் தெரிவிக்கின்றன. மகாபாரதத்தில் வேத வியாசர் அர்ச்சுனனைப் பார்த்துச் சொல்கிறார். “எவன் ஒருவன் அனுதினமும் சூரியன் உதிப்பதற்கு முன்னால் எழுந்து, மனத்தூய்மையோடு ருத்ர ஜெபம் செய்கிறானோ, அவன் இந்த உலகில் எல்லாவகையான இன்பங்களையும் அடைவது நிச்சயம்” என்கிறார். சிவ தரிசனமும் சிவ நாமமும் பாபங்களை பஸ்பமாக்கி மகத்தான வாழ்க்கையைத்தரும்.”ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை அன்போடு உச்சரித்தாலே, பல பிறவிகளில் செய்த பாவம் விலகும். அதை இரவு முழுக்க ஓதி ,விடியல் எனும் வாழ்வை நோக்கும் வழிபாடே சிவராத்திரி .

சிவம், சக்தி இவை இரண்டும் இரட்டை தன்மைகள். ஒன்றில்லாமல் ஒன்றில்லை. அதே சமயத்தில் ஒன்றுக்குள் ஒன்று. இதனுடைய குறியீடுகளே சிவசக்தி தோற்றங்களாக விளங்குகின்றன. சக்தியின் இருப்பிடம் சிவமாகவும், சிவத்தின் வெளிப்பாடு சக்தியாகவும் விளங்கி இந்த பிரபஞ்சம் இயங்கு கின்றது. ராத்திரி என்பது அமைதி. எந்த ஒரு சக்தியும் வெளிப்படும் முன் அமைதியாகத் தான் இருக்கும். ஆனால் அது வெளிப்படத் தொடங்கியவுடன் பல்வேறு பரிணாமத்துடன் இருக்கும். சிவராத்திரி முழுக்க அமைதி தியானம்.(meditation) ஆற்றலின் இருப்பு. பிரார்த்தனை.(prayers) அதனுடைய வெளிப்பாடுதான் சக்தியின் வெளிச்சம். அக்னி ஸ்வரூபம். சிவ பரம்பொருளை உணர்தல்.(Realisation of sivan)
நம்முடைய ஆன்றோர்கள் சிவனுக்கு ஒரு ராத்திரியும், சக்திக்கு ஒன்பது ராத்திரியும் ( நவராத்திரி )என்று வைத்தார்கள். இதனுடைய காரணத்தை நாம் உணர்ந்து கொண்டாலே சிவசக்தி சொரூபத்தையும், சிவராத்திரியின் தத்துவத் தையும் உணர்ந்து கொள்ள முடியும். சிவம் என்பது உள்முக ஆற்றல். அது வெளிக்குத் தெரியாது. சக்தி என்பது வெளிப்புறச் செயல்பாடுகள். அதைப் பார்க்க முடியும்; அனுபவிக்க முடியும்;உணர முடியும்; உள் முக ஆற்றல் இல்லையேல், வெளிப்புறச் செயல் கிடையாது. அதனால் தான் “சிவம் இல்லையேல் சக்தி இல்லை” என்று சொன்னார்கள். சிவம் என்பது நிலை பெற்ற ஆற்றல் . சக்தி என்பது வெளிப்படும் ஆற்றல்.நிலைபெற்ற ஆற்றல் ஒரே தொகுப்பாக ஒரு நிலையில் மட்டும் இருக்கும். வெளிப்படும் ஆற்றல் ஒன்பது வகையாக வெளிப்படும். இங்கு ஒன்பது என்பது உபச்சாரமாக சொல்லப்பட்ட பெரிய எண்ணாக இருந்தாலும், பல்வேறு பரிணாமங்களுடன் வெளிப்படும் என்று பொருள். அதனால்தான் சிவனுக்கு ஒரு ராத்திரியும், சக்திக்கு ஒன்பது ராத்திரியும் வைத்தார்கள்.
இதை மிக எளிதாக உணர்ந்து கொள்ள ஒரு சின்ன உதாரணத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.. நீர் தேக்கங்களைப் பார்த்திருப்பீர்கள். அது இரண்டு பகுதிகளாக இருக்கும். மேல் பகுதி(upstream), கீழ் பகுதி(downstream) என்று சொல்வார்கள். நடுவில் அணை கட்டப்பட்டிருக்கும். அணையின் மேல் பகுதியில், கடல் போல் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருக்கும். மிகவும் ஆழமாகவும், அகலமாகவும் உள்ள அந்த தண்ணீர் ஆற்றல், நிலை பெற்றதாக, எந்த அசைவும் இல்லாமல் “சிவமே” என்று இருக்கும். அப்படித் தேக்கி வைக்கப்படுவதற்குக் காரணம், அதை மிகச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான். இப்பொழுது மேல் பகுதி சிவ சொரூபமாக, அமைதியாக, சிவராத்திரி போல் இருக்கிறது. மேல் பகுதி தண்ணீர், அணையைக் கடந்து, கீழ்ப்பகுதியில் ஓடுகின்ற பொழுது ,பல்வேறு வாய்க்கால்களாகத் தெரியும். அது பயிர்களை வளர்க்கிறது. உலகை காக்கிறது. தேவைப்பட்டால் மின் சாரத்தை(hydro power) நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். எத்தனையோ சக்திகளாக மாற்றிக்கொண்டு செயல்படலாம். இப்பொழுது அர்த்த நாரீஸ்வரரை நினைத்துக் கொள்ளுங்கள். ஈஸ்வர பாகம் அணையின் மேல் பகுதி. சக்தி பாகம் அணையின் கீழ் பகுதி. ஆனால் இரண்டும் ஒன்று .அந்த ஒன்றை உணர்வது தான் சிவராத்திரி.
(c) Aalayadharisanam Editorial Board
