மனிதனாக வாழ பல கடமைகளை சாத்திரம் வரையறுத்துக் கொடுத்திருக்கிறது. அதில் ஒன்று தன்னுடைய சம்பாத்தியத்தின் ஒரு பகுதியை தான தர்மமாகக் கொடுக்க வேண்டும். நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும்.
இன்னும் சொல்லப்போனால், ஒரு மனிதனின் தேவைக்கு அதிகமான பணம், ஏதோ ஒரு வகையில் அவனிடம் சேருகிறது என்று சொன்னால், அந்தப் பணத்தை அவன் தகுந்த வழியில் செலவு செய்ய வேண்டும் என்று தான் சாஸ்திரம் (அற நூல்கள்) விதிக்கிறது.
இந்து மதம் மட்டுமல்ல; உலகத்தில் உள்ள எல்லா மதங்களும் இதைத்தான் சொல்லுகின்றன.
உன்னுடைய தேவைக்கு மேலே உள்ள ஒவ்வொரு பணமும், உனக்கு உரியதன்று ;அது உன் மூலமாக செலவு செய்ய வேண்டும் என்பதற்காக உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது ஆன்மீகத்தின் மிக அடிப்படையான தத்துவம்.
தான தர்மங்கள் மனிதனின் கருணையை வளர்க்கின்றன. அவனுடைய மனது நேர்மறைச் சிந்தனையோடு இயங்குவதற்கு தான தர்மங்கள் வழி வகுக்கின்றன. மனிதனைத் தூய்மைப்படுத்துகின்றன. ஒருவன் வாழும்போது செய்யும் தான தர்மங்கள் அவன் மரணத்திற்கு பின்னால் கட்டாயம் வரும். இதைத் தவிர வேறு எதுவும் வராது.
இதைத்தான் பட்டினத்து அடிகள்,
அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழி அம்பு பொழுக
மெத்திய மாதரும் வீதி மட்டே விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே.
இதை இன்னும் தெளிவாக, எளிமையாக, கவியரசு கண்ணதாசன் ஒரு திரைப்படப் பாடலிலே சொல்வார்.
வீடு வரை உறவு,
வீதி வரைமனைவி,
காடு வரை பிள்ளை,
கடைசி வரை யாரோ?
இந்தக் கடைசி காலத்தை நோக்கித்தான் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் நகர்ந்து கொண்டிருக்கிறது அதன் முடிவில் அவரோடு துணைக்கு யாரும் வர மாட்டார்கள் .
அவருக்கு துணை வேண்டும் என்று சொன்னால், வாழும் காலத்தில், அவனே தன்னுடைய கையால் தான தர்மங்களை செய்திருக்க வேண்டும்.
தான தர்மங்கள் செய்கின்ற பொழுது சில முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த உலகத்தில் பிறந்த பொழுது, நாம் எந்தச் சொத்தையும் எடுத்துக் கொண்டு வரவில்லை. வெறும் மனிதனாக, உடலில் ஆடை கூட இல்லாமலே பிறந்தோம். அதைப் போலவே ஒரு சல்லிக் காசு கூட இங்கிருந்து எடுத்துச் செல்ல முடியாதபடிக்கு, எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுதான் ஒருவரை அடக்கம் செய்கின்றார்கள்.
உலகத்தை எல்லாம் வென்ற அலெக்சாண்டர், கடைசியில் தன்னுடைய இரண்டு கைகளையும் அகலமாக திறந்தபடி வைத்து, “எத்தனையோ செல்வங்களை என்னுடைய வாழ்நாளில் நான் பெற்றேன்; ஆனால் எதையும் எடுத்துக்கொண்டு செல்லவில்லை என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள் ,”என்பதற்காக தன்னுடைய சவப்பெட்டியின் வெளியிலே,தன் திறந்த கைகளை வைத்து எடுத்துச் செல்லுமாறு தன்னுடைய வீரர்களுக்கு உத்தரவிட்டார் என்பதையும் பார்க்கின்றோம்
அப்படியானால் எந்தச் செல்வமும் நமக்கு உரியது அல்ல; சில காலம் நமக்காகக் கொடுக்கப்பட்டது; அதை நாமே நம்முடைய புத்தியோடு, நல்ல சிந்தனையோடு, நம்முடைய கையாலேயே, தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்பதுதான் சாத்திரங்கள் சொல்லுகின்ற நீதி
அப்படி தான தர்மங்கள் செய்யும்பொழுது ,”நான் செய்த தான தர்மத்தில் தான் இவன் வாழ்கிறான்”” நான் செய்த உதவியால் தான் இவன் முன்னுக்கு வந்திருக்கிறான்” என்று நினைத்து விடக்கூடாது.
\அகங்காரங்களோடு செய்யப்படும் தான தர்மங்கள் பயனற்றவை என்று பகவத்கீதையும் சொல்லுகின்றது அதற்கு ராஸச தானம் என்று பெயர். ஏதோ ஒரு நோக்கத்தோடு செய்கின்ற தானம், அந்த நோக்கத்தை மட்டும் தான் தரும்.புண்ணியங்களை தந்து விடாது.
மனதில் கெட்ட எண்ணங்களோடு, மறைமுகமான எண்ணங்களோடு, சுயநலத்தோடு தானம் செய்வது ஒரு வகையில் அவனுக்கு கெடுதலையே தரும்.
அடுத்து தானம் செய்யும் பொழுது சஞ்சலமான எண்ணங்கள் வந்து விடக் கூடாது. தானம் தந்துவிட்டு நாம் அதிகமாகச் செய்துவிட்டோமா 20 ரூபாய்க்கு பதிலாக பத்து ரூபாய் தந்து இருக்கலாமோ ? என்றெல்லாம் நினைக்கக் கூடாது .
தானத்திற்கு முன்பும் தானம் செய்த பின்பும், தந்தவர், வாங்கியவர் இருவருக்கும் மனத்திருப்தி உண்டாக வேண்டும்.
தகுதியற்றவரால் தகுதியற்ற முறையில் தகுதியற்றவருக்கு செய்யப்படும் தான தர்மங்கள் எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்.
அதைப்போலவே புண்ணிய காலங்கள், உற்சவங்கள், விரதங்கள் போன்றவற்றில் தானம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அந்த உற்சவமோ, விரதமோ முழுமையான பலனைத் தரும்
புண்ணிய காலத்தில், புண்ணிய இடத்தில் செய்யப்படும் தானங்கள், மற்ற காலங்களில், மற்ற இடங்களில் செய்யப்படும் பலனை விட, பல மடங்கு பலம் தரும் என்பதால் தான், விசேஷமான காலங்களில் தானத்தை செய் என்று சடங்குகளின் ஒரு பகுதியாக, மற்றவர்களுக்குத் தருவதை அமைத்தார்கள் .
உதாரணமாக, உங்கள் பிறந்த நாள் விழா என்று சொன்னால், அன்றைக்கு ஏதேனும் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
உங்கள் வீட்டில் நல்ல காரியம் செய்தாலும் சரி. அல்லது அபர காரியங்கள் என்று சொல்லக்கூடிய காரியங்கள் நடந்தாலும் சரி. அதன் ஒரு பகுதியாக கட்டாயமாக தானத்தைச் செய்ய வேண்டும். தர்மத்தைக் கொடுக்க வேண்டும்.
அதுவும் கல்விக்காக செய்யப்படும் தானம், மிக விசேஷமான பலனைத் தரும். அதனால் தான் அந்த காலத்தில் பெரியவர்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை, மற்றவர்கள் கல்விக்காகச் செலவிட்டார்கள். உலகத்திலேயே சிறந்த தானமாக அன்னதானத்தைச் சொல்வார்கள். ஆனால் அன்னதானத்தை விட சிறந்தது வித்யாதானம்.
கல்வி தானம் என்று சொல்லப்படுகின்ற வித்யாதானம் பல தலைமுறை களுக்கும் புகழைத் தரக்கூடியது அதனால் தான் மகாகவி பாரதியார்
அன்னசத்திரம் ஆயிரம் நாட்டலும்
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
என்றார்.
கிரக தோஷ பரிகாரமாக, மிக எளிமையான பரிகாரம் வித்யா தானம். நமக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் அற்புதமான பலன்களைத்தரும்.
நாம் பெரிய பள்ளிக்கூடங்களை கட்ட முடியாவிட்டாலும், நாம் படித்த படிப்பு, நாலு ஏழை குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதற்கு பயன்படுகிறது என்று சொன்னால், அதைவிட சிறப்பான தானம் எதுவும் இல்லை. அது மட்டும் அல்ல; கல்வி தானத்தின் பயன் என்பது நாளுக்கு நாள் வளரும். யார் நம்மிடம் வித்தையைப் பெற்றார்களோ, அவன் வளர வளர தானத்தின் பயனும் வளரும்.
இரண்டு பேருக்கு படிக்க உதவி செய்வது என்பது கோடி பேருக்கு செய்த தானத்தை விடப் பெரிது.
நிச்சயமற்ற வாழ்க்கையில் செய்யும் தான தர்மத்தை, நினைத்த உடனே காலம் தாழ்த்தாதது செய்து விட வேண்டும்.
மகாபாரதத்தில் யட்ச பிரச்னம் என்று ஒரு பகுதி உண்டு .யட்ஷன் கேட்கும் கேள்விகளுக்கு தர்ம புத்திரன் பதில் சொல்லுவார். அதில் ஒரு கேள்வி எது வியப்பானது?
அதற்கு தர்மபுத்திரர் பதில் சொல்லுவார்.
நிச்சயமற்ற வாழ்க்கையை சாஸ்வதம் என்று நினைத்துக் கொண்டு எந்த நற்செயல்களையும் செய்யாமல் ஒருவான் வாழ்கிறானே ,அதுதான் வியப்பானது .
ஆம்.அருட்பிரகாச வள்ளலார் வாழ்க்கையின் நிலையாமையை குறித்து அற்புதமாகச் சொல்வார்
இன்று வருமோ, நாளைக்கே வருமோ, அல்லது
மற்றொண்டு வருமோ, அறியேன் எங்கோவே
ஆம்; நிச்சயமற்ற நிலையற்ற வாழ்க்கையில், நிச்சயமான பலன் ஒன்று கிடைக்க வேண்டும் என்று சொன்னால், இன்று ,இப்பொழுதே ,எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். தான தர்மங்களை செய்யுங்கள். அது ஒன்றே உங்கள் தலையைக் காக்கும்.
