நமது பண்டிகைகளின் அமைப்பு வித்தியாசமானதாக இருக்கும். மாதத்தின் பிறப்பில் கொண்டாடும் பண்டிகைகள் உண்டு. மாதத்தின் நிறைவில் கொண்டாடும் பண்டிகைகள் உண்டு. அந்தந்த மாதங்களிலேயே கொண்டாடும் பண்டிகைகள் உண்டு. ஆனால் ஒரு மாதமும் இன்னொரு மாதமும் இணையும் வேளையில் கொண்டாடப்படும் நோன்பு (விரதம்) காரடையான் நோன்பு.
மாசி மாதமும் பங்குனி மாதமும் சேரும் வேளையில், இந்த நோன்பு பெண்களால் நோற்கப்படுகிறது. இந்த நோன்பின் நோக்கம் நல்ல குடும்ப வாழ்க்கை அமைவதும், நல்ல கணவன் அமைவதும், கணவன் எந்தவித ஆயுள் பங்கமும் இன்றி நீடித்த வாழ்நாள் பெறுவதும் ஆகும். ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மனே இந்த விரதத்தை அனுஷ்டித்தாள் . அதனால் இந்த நோன்பிற்கு காமாட்சி அம்மன் விரதம் என்றும் பெயர் உண்டு.
பொதுவாக தீர்க்க சுமங்கலித்துவம் கிடைப்பதற்காக பெண்களால் இந்த நோன்பு நோக்கப்படுகிறது. இந்த நோன்புக்கு பின்னணியாக அமைந்த கதை சத்தியவான் சாவித்திரி கதை.
சாவித்திரி சத்தியவான் என்னும் வாலிபனை மணந்து கொண்டாள் . அவன் பெயருக்கு ஏற்றபடி சத்யவானாகவே திகழ்ந்தான். ஆனால் சத்ய வானுக்கு விதி குறைந்த வாழ்நாளையே கொடுத்திருந்தது. ஆயுள் குற்றம் உடைய அவனை மணந்து கொண்ட சாவித்திரி, எப்படியாவது கணவனின் ஆயுளை நீட்டிக்க வேண்டும் என்று நினைத்தாள். ஆயினும் விதி வலியதாக இருந்தது.
சத்தியவான் ஒரு நாள் காட்டில் இறந்து போனான். அவனுடைய உயிரைக் கவர்ந்து சென்ற எம தூதர்களை சாவித்திரி பின் தொடர்ந்தாள். எப்படி யாவது தன்னுடைய கணவனின் உயிரைத் திருப்பித் தந்து விட வேண்டும் என்று மன்றாடினாள். அதற்காக அவள் நோற்ற விரதம் இது.
இதற்கு நிவேதனம் செய்ய வேண்டும் அல்லவா! காட்டில் அவள் என்ன செய்வாள், பாவம்.
நம்முடைய மனதில் பத்தி இருந்தால், கிடைக்கும் பொருள்களை வைத்துக் கொண்டு, பிரசாதத்தைச் செய்து, பகவானுக்குப் படைக்கலாம். அதை அவன் ஏற்றுக் கொள்வான் என்பதற்கு உதாரணமாகவும் இந்தக் கதை அமைந்திருக்கிறது .
சாவித்திரி காட்டில் கிடைத்த பொருள்களைக் கொண்டு அடை செய்தாள். மரத்தின் நாரை கயிறாகத் திரித்து சரடு செய்தாள் .
இந்த நோன்பினை மன உறுதியோடு நோற்று, நோன்பின் பலனாக தன் னுடைய கணவனின் உயிரை மீட்டெடுத்தாள். கார் அடை செய்து இந்த நோன்பு நோற்றதால் இதற்கு காரடையான் நோன்பு என்று பெயர்.
கருத்த நிறம் கொண்ட உருவம் படைத்ததால் எமனுக்கும் காரடையான் என்று பெயர்.அவனிடமிருந்து நோன்பு நோற்று கணவன் உயிரை மீட்டதால் காரடையான் நோன்பு என்று பெயர்.
கடுமையான தீமை அல்லது மரணம். இவற்றுக்கு நாம் தரும் வண்ணம் கார் வண்ணம் அதாவது கருப்பு வண்ணம். அதனால்தான் துக்கத்தை அனுசரிப்பதற்காக நாம் கருப்பு வண்ண உடை அல்லது பட்டையை அணிகின்றோம்.
இந்த விரதம் சகல விதமான இருட்டையும் துன்பத்தையும் விலக்கும் என்பதால் இந்த விரதத்திற்கு காரடையான் நோன்பு என்று பெயர்.
சுமங்கலிகள் செய்யும் தலையாய பிரார்த்தனைகள் இதில் உண்டு. தங் களுடைய குடும்பம் நல்லபடியாக இருக்க வேண்டும் என்பதற்காக அம் பிகையிடம் பிரார்த்தனை செய்யும் விரதம் இந்த விரதம்.
“மாசிக் கயிறு பாசிப்படியும்” (விருத்தியாகும்) என்ற பழமொழிக்கேற்ப திருமாங்கல்யத்தை இன்றைய தினம் மாற்றிக் கொள்வார்கள்.
பங்குனி மாதம் பிறக்கும் வேளை- மாசி மாதம் முடியும் வேளையில் இந்த விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்
இன்றைய தினம் புதன்கிழமை. கேட்டை நட்சத்திரத்தில் இந்த நோன்பு தொடங்குகிறது. புதன்கிழமை பெருமாளுக்கு உரிய நாள். கேட்டை நட்சத்திரம் புதனுக்குரிய நட்சத்திரம்.
இப்படிப்பட்ட சிறப்போடு உள்ள இந்த நாளில் காலை ஐந்து மணியி லிருந்து ஆறு மணி வரை இந்த நோன்பு நோற்கப் படுவதற்கு நல்ல நேரம்.
இது எளிமையான நோன்பு தான்.
பூஜை செய்யும் இடத்தை வழக்கம் போல நல்ல முறையில் சுத்தம் செய்து, அழகான கோலங்களைப் போட வேண்டும். வாழை இலையை வைத்து, அந்த இலையின் நுனியில், வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் மற்றும் மஞ்சள் சரடு இவற்றை வைக்க வேண்டும். பருப்பு அடை தயார் செய்து படைக்க வேண்டும். அந்த அடையையே இரண்டு விதமாகச் செய் வார்கள்.
ஒன்று இனிப்பை சேர்த்து வெல்ல அடையாகத் தயாரிப்பார்கள். இனிப்பு சேர்க்காமல் கார அடையாகவும் தயாரிப்பார்கள்.
காரடையான் நோன்பில் கார் அரிசிமாவும் காராமணி அல்லது துவரையும் கலந்த அடை செய்து அதை வேக வைப்பார்கள் அதுதான் பிரசாதமாகப் படைக்கப்படும். அடை தயாரிக்கும் போது வாணலியின் அடியில் வைக்கோல் போட்டு அதன் மேல் தட்டு வைத்து அடையை வேக வைப் பார்கள். சத்தியவான் உடலில் இருந்து உயிர் பிரிந்தவுடன்,” இந்த உயிரை நான் திரும்ப கொண்டு வரும் வரை இந்த உடலை பாதுகாத்திருக்க வேண்டும்” என்று, சாவித்திரி பக்கத்தில் இருந்த வைக்கோலால் அவனு டைய உடலை மூடி விட்டு சென்றாள் .அந்த நினைவாக வைக்கோலைப் பயன்படுத்துவார்கள்.

நோன்பு சரட்டில் மஞ்சள் கிழங்கு மற்றும் புஷ்பத்தை இணைக்க வேண்டும். கூடவே வெண்ணையையும் படைக்க வேண்டும். இந்த நோன்பின் போது சத்தியவான் சாவித்திரி கதையைப் படிக்க வேண்டும்.
அம்பிகையின் ஸ்தோத்திரங்களையும் நாமாவளியையும் பாராயணம் செய்ய வேண்டும். தூப தீபங்கள் காட்டி, அம்பிகையை வணங்கியபின் நல்ல நேரத்தில் மகாலட்சுமி அல்லது பார்வதி தேவி படத்தில் (சிலர் கும்பத்தில் அம்பிகையை ஆவாஹனம் செய்வார்கள்) நோன்பு சரட்டை அணிவித்து, பிறகு நோன்பு நோற்றவர்கள் அணிந்து கொள்ளலாம்.
காரடையான் நோன்பு சரடு காட்டும் பொது சொல்ல வேண்டிய பாடல்
1.தோரம் க்ருஹ்ணாமி ஸுபகே
ஸஹாரித்ரம் தராம்யஹம்
பர்த்து: ஆயுஷ்ய ஸித்யர்த்தம்
ஸுப்ரிதா பவ ஸர்வதா
2.உருகாத வெண்ணையும்
உப்பு அடையும் இனிப்பு அடையும்
தருகின்றேன் தருகின்றேன்
சரணம் உனைப் புகுகின்றேன்
அருளாளா மணவாளன்
ஆயுளை நீ காத்தருள
சிறு மஞ்சள் கயிறு அதனை
சீர் நினைந்து கட்டுகின்றேன்
காலதேவன் மனம் குளிர
கண்ணிய நல் வாழ் வருள
காப்பாய் அம்மா சாவித்திரி
கைகூப்பி வணங்குகின்றோம்
வயதில் முதிர்ந்த சுமங்கலி பெண்கள் வயதில் குறைந்த பெண்களுக்கு ஆசீர்வாதம் செய்து இந்த சரட்டை அணிவிக்கலாம். இந்த நோன்பு சரடு கட்டிய பின் நிவேதனம் செய்யப்பட்ட கார அடை, வெல்ல அடை இவற்றை வெண்ணையோடு சேர்த்து பிரசாதமாக எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பூஜை முடிக்கும் வரையில் எதுவும் சாப்பிடாமல் உபவாசம் இருக்க வேண்டும். இந்த நோன்பு அடையில் சிலவற்றை பசு மாடுகளுக்கு கொடுப்பதும் சிறப்பு.
வைணவர்கள் திருமாங்கல்ய சரடை மாற்றிக்கொண்டு நோன்புச்சரடை அணிவார்கள்.
இதனுடைய பலனாக,
1.தம்பதிகளின் கருத்து வேற்றுமை மறையும்.
2.அவர்களிடத்திலே அன்னியோன்யம் பெருகும்.
3.குடும்ப ஒற்றுமை தழைக்கும்.
- குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.
- சுபகாரியத் தடைகள் நீங்கும்
6.கணவனின் ஆயுள், செல்வம் வளரும்.
7.திருமண வயதில் காத்திருக்கும் பெண்களுக்கு விரைவில் திருமணம் ஆகும்.
- நல்ல கணவன்மார் கிடைப்பார்கள்.
- எல்லாப் பெண்களுக்கும் தீர்க்க சுமங்கலித்துவம் கிட்டும்.
