கருட புராணத்தில் ஒரு கேள்வி இருக்கிறது .ஒரு மனிதன் ரகசியமாகச் செய்யும் தவறுகளை எப்படி யார் கணக்கெடுக்கிறார்கள் ?
பல கோடி ஜீவன்களும் செய்யும் தவறுகளை முறையாகக் கணக்கெடுக்க முடியுமா? என்ற கேள்வியை கருடன் கேட்க ,ஸ்ரீமன் நாராயணன் பதில் சொல்லுகிறார் .
முன்பொரு சமயம் ஏற்பட்ட பிரளயத்தில் எல்லா உலகங்களும் பிரம்ம இந்திராதி தேவர்களும் ஸ்ரீவிஷ்ணுவிடம் ஒடுங்கினார். அப்போது ஆலிலைப் பாலகனாக வடபத்ரசாயியாக அந்தப் பெரும் புனலில் பகவான் பள்ளி கொண்டு யோக நித்திரையில் இருந்தார்.
திருமாலின் உந்திக் கமலத்திலிருந்து நான்முகன் தோன்ற நான்முகன் தான் முகமாய் சங்கராதி தேவர்களை படைத்தார் .
கால தேவன் படைக்கப்பட்டான். தெற்கு திசையில் ஜெய்மினி என்பவன் எமப் பட்டினத்தில் இருந்து கொண்டு தன் தொழிலை கவனிக்க ஆரம்பித்தான்.
அவனுடைய வேலை ஜீவன்கள் சுதந்திரமாகச் செய்யும் பாவ புண்ணியங்களை ஆராய்ந்து அதற்கு ஏற்ப பலன்களைத் தருவது. ஆனால் எண்ணிறந்த ஜீவன்கள் இரவும் பகலும் இடைவிடாது செய்யும் நற்செயல்களையும் தீய செயல்களையும் அவனால் அறிய முடியவில்லை.
இதற்காக அவன் பல காலம் பல்வேறு வழிகளை முயன்று பார்த்தான். முடியவில்லை.
பிறகு பிரம்ம தேவனைக் குறித்து தவம் செய்து தனக்கு அந்த சக்தியைத் தரவேண்டினான். பிரம்மன் எமனின் நிலையையும் அவன் கோரிக்கையின் நியாயத்தையும் உணர்ந்த பிரம்மன் ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்தார் .
அவற்றைக் கிள்ளி 12 உருவம் உடையவர்களை உண்டாக்கினார் இவர்கள் மிக அழகானவர்கள். மனக்கண்ணால் மனம் செயல் இரண்டையும் அறிய வல்லவர்கள்.
உலகின் எந்தக் கோடியில் எத்தகைய செயல்களை ஒரு ஜீவன் எத்தனை ரகசியமாகச் செய்தாலும் அதனை உடனடியாகத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள். சிரவணர்கள் என்று இவர்களுக்குப் பெயர்.
எமனின் கணக்குப்பிள்ளை சித்ரகுப்தன். இவன் ஜீவராசிகளின் பாவ புண்ணியங்களை விடாது எழுதிக் கொண்டே வருகிறான். இந்தக் கணக்கை சித்திரகுப்தனுக்கு உடனுக்குடன் சொல்வதுதான் 12 சிரவணர்களின் வேலை.
பூமியில் நாம் வாழும் பொழுது இந்த 12 சிரவணர்களும் நம் செயல்களைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் என்ற உணர்வோடு தவறுகள் செய்யாதவனாக இருக்க வேண்டும்.
நம் செயல்களை உடனுக்குடன் அறியும் அந்தப் பெரியோர்களை வணங்கி பூஜிக்க வேண்டும். 12 கலசங்களில் தண்ணீரும் அன்னமுமாக அந்தணருக்கு 12 சிரவணர்கள் குறித்து தானம் செய்யலாம். இது சிரவணர்கள் குறித்த வழிபாடாகும்.
மனிதனாகப் பிறந்தவன் எவ்வளவு தவ வலிமை பெற்றவனாக இருந்தாலும் ஒரு நாள் இந்த உலகத்தை விட்டுச் சென்றே ஆக வேண்டும். அப்போது அவனுடன் யாரும் துணைக்கு வர மாட்டார்கள். துணைக்கு வருவது அவன் செய்த பாவ புண்ணியங்களை.
மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே
இனமான சுற்றம் மயானம் மட்டே வழிக்கு ஏது துணை
தினையாப் அளவு எள் அளவாகிலும் முன்பு செய்த தவம்
தனை ஆள என்றும் பர லோகம் சித்திக்கும் சத்தியமே
அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழி அம்பு பொழுக
மெத்திய மாதரும் வீதி மட்டே விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே
(அத்தம் -அர்த்தம் = செல்வம், விழி அம்பு = கண்ணீர்)
பட்டினத்தார்
