இந்த உலகம உயிரற்ற சேதனப் பொருட்களையும் உயிருள்ள ஜீவாத்மாக்களையும் தன்னகத்தே கொண்டது. இவைகள் தோன்றுகின்றன. நிலைக்கின்றன. மறைகின்றன. சிருஷ்டி, ஸ்திதி, ப்ரளயம் என்ற இம்மூன்று நிலைகளும் எவர் செய்கிறாரோ , அவரே பகவான். அந்த பகவானுடைய பத்தினியாகவும், உலகிற்கெல்லாம் தாயாகவும் விளங்குகின்ற பெரிய பிராட்டியாரே மகாலக்ஷ்மி. அந்த மகாலக்ஷ்மி தாயாரை ஒரே ஒரு முறை நமஸ்கரித்தாலும் போதும், சகல விதமான பலன்களையும் ஒரு சேர அளிக்கிறாள் என்று பராசர பட்டர் தனது குணரத்னகோசம் என்னும் நூலில் கூறுகிறார்.
வேதபாகங்களில் மிக மிக முக்கியமான மந்திரங்களைச் சூக்த மந்திரங்கள் என்கிறோம். அம்மந்திர சூக்தங்களில் ஐந்து சூக்தங்கள் மிக முக்கியமானது. அவைகள் பஞ்ச சூக்தங்கள் என்கிறோம். அதில் இரண்டு சூக்தங்கள் பகவான் ஸ்ரீமந் நாராயணனைக் குறிப்பவை. மூன்று சூக்தங்கள் அவனுடைய முப்பெரும் தேவியர்களான மகாலக்ஷ்மி (ஸ்ரீதேவி), பூதேவி, நீளாதேவியைக் குறிப்பன.சிறப்பு என்னவென்றால் நாராயணனைக்குறித்த சூக்தமும் அவன் மகாலட்சுமியோடு இருப்பதாகவே பேசுகின்றன.
தாய் தந்தை குரு தெய்வம்.
இவைகளைத் தினசரி பாராயணம் செய்வதன் மூலம் ஸ்ரீ மகாலட்சுமியின் பேரருளைப் பெறலாம்.
வேத வாக்கியங்களில் மிக முக்கியமான வாக்கியம். மாத்ருதேவவோ பவ; பித்ருதேவோபவ; ஆசார்யதேவோ பவ; அதிதி தேவோ பவ; (தைத்திரீய உபநிஷத்).
இதன் பொருள் எளிமையானது.
மாதாதான் தெய்வம்; தந்தைதான் தெய்வம்; ஆசார்யன்தான் தெய்வம்; விருந்தினர்தான் தெய்வம்; இவர்களைக் கொண்டாடவேண்டும் என்பது சாதரணமானப் பொருள்.
இந்த நால்வகைப்பொருளும் மகாலட்சுமியைக் குறிக்கும் என்பது சிறப்புப்பொருள்.
ஸர்வலோகாநாம் மாதா – அதாவது எல்லா உலகிற்கும் தாய் என்பதால் அவளைத் தாயாகக் கொண்டாடுகிறோம். உயிர்களுக்கான எல்லாவிதமான நன்மைகளையும் செய்வதாலும் – தந்தையான விஷ்ணுவைக் காட்டி அவரோடு நம்மைச் சேர்த்து வைப்பதாலும் தந்தையைக் காட்டிய தாய் ஆகிறாள்.
உபதேசத்தாலே உயிர்களைத் திருத்துவதால் அவளே குருவாகிறாள். தாய்க்குரிய இனிமையும், தந்தைக்குரிய நன்மைதரு குணமும், ஆச்சாரியனுக்குரிய ஆன்மநன்மையும் ஒரு சேரத்தருவதாலும், பகவானோடு பிரிக்கமுடியாதபடி இணைந்திருப்பதாலும் அவளே தெய்வமாகிறாள்.
குறைகளை குறைத்து நிறைகளை அதிகரிப்பவள் :
மகாலட்சுமியின் பரிவு எப்படிப்பட்டது என்று பார்க்க வேண்டும். ஒரு குழந்தை தவறு செய்திருந்தாலும்கூட, அதைப் பெரிதுபடுத்தாது, அக்குழந்தையின் மீது தந்தை கோபம் கொள்ளாது தடுத்து இருவரையும் சேரவிட்டு மகிழ்பவள் தாய். மகாலக்ஷ்மித் தாயார் குழந்தைகளான நாம் செய்யும் சிறு நற்செயல்களைக்கூட பெருமாளிடம் மலைபோல விவரித்துச் சொல்வாளாம். ஏதேனும் குறைகள் இருப்பினும் அதனை கடுகளவு குறைத்துக் காட்டுவாளாம்.
மன்னிப்பவள் :
மகாலட்சுமியான சீதை – பூமாதேவியின் அம்சமாக இருப்பினும் – (பூமாதேவி ஸ்ரீதேவியின் அங்கமாகவே கொள்வது மரபு) – தன்னைக் கொடுமைப்படுத்திய ராட்சசிகளை அழிக்க அனுமன் அனுமதி கேட்டபோது, “மாருதி! இவ்வுலகில் பாவம் செய்யாதவர்கள் யார்?” இவர்கள் அரசனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு தீங்கு செய்தவர்கள். எனவே “மன்னித்து விடு” என்று கருணை காட்டியவள்.
தீபத்தில் லெக்ஷ்மி :
ஸ்ரீ மகாலட்சுமித்தாயார் எப்போதும் தனியாக இருப்பதில்லை. எப்போதும் எம்பெருமானோடு சேர்ந்தே இருக்கிறாள். தீபலட்சுமி பூஜை செய்கிறோம். அதில் மகாலட்சுமியை ஆவாஹணம் செய்கிறோம். இப்பூஜையினால் 1) புகழ் 2) கல்வி
3) வீரம் 4) வெற்றி 5) புத்திரப்பேறு 6) தைர்யம் 7) தனம் 8) தான்யம் 9) சுகம்
10) இன்பம் 11) அறிவு 12) அழகு 13) கௌரவம் 14) அறம் 15) ஆரோக்கியம் 16) நீண்ட ஆயுள் முதலிய செல்வங்கள் – நீங்காத செல்வங்களாகக் கிடைக்கின்றன. ஆனால், மகாலட்சுமியைத் தனியாக வழிபடக்கூடாது. விஷ்ணுவோடு சேர்த்தே வழிபடவேண்டும். இதற்கு எளிய வழி திருவிளக்கு பூஜையே ஆகும். எரியும் திருவிளக்கு மஹாவிஷ்ணு. திருவிளக்கின் ஜோதியே ஸ்ரீமகாலட்சுமி.
நற்குணங்களைத் தருபவள் :
காகாசுரன் என்றொருவன் தேவன். இந்திரனுடைய மகன். அவன் சீதையைக் காமநோக்கோடு அணுகினான். கண்ணிழந்தான். அசுரனானான். காகாசுரன் என்ற பெயர் பெற்றான். அசுர வம்சத்தில் தோன்றிய பிரகலாதன் பகவானையும் பிராட்டியையும் வணங்கினான். தேவனானான். பிரகலாதாழ்வான் என்ற பக்தனானான்.அவனுக்கென்றே பகவான் ஒரு அவதாரம் எடுத்தார். அதுதான் நரசிம்ம அவதாரம்.
தேவகுணம் பெறவும், அசுரகுணம் நீங்கவும் மகாலட்சுமியை வணங்கவேண்டும்.
பாற்கடலில் ஏன் அவதாரம்?
பாற்கடலில் மகாலட்சுமி அவதாரம் என்பது எல்லோருக்கும் தெரியும். பாற்கடலை ஏன் கடைய வேண்டும்?
செல்வத்தை அவமதிப்பது மகாலட்சுமியை அவமதிப்பது போல…. நமக்குக் கிடைத்த செல்வத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும், தீயவழியில் செலவிடுவதும் மகாலட்சுமியை அவமதிப்பதாகும்.
ஒரு முறை துர்வாசர் மகாலட்சுமியின் பிரசாதத்தை எடுத்துக்கொண்டு இந்திரனைப் பார்க்கச் சென்றார். ஐராவதம் என்ற யானையின் மீது கம்பீரமாக வீற்றிருந்த இந்திரன் செல்வச் செருக்கோடு அந்த பிரசாதத்தை யானையின் மீது வைக்க அது தன் காலில் போட்டு நசுக்கியது. மகாலட்சுமியின் பிரசாதத்தை அவமதித்த இந்திரன் தனது புகழ், செல்வம், அனைத்தையும் இழந்தான். தன் தவறை உணர்ந்து பாற்கடலைக் கடைந்தபோது அச்செல்வங்கள் அடுத்தடுத்துக் கிடைத்தன.
அப்பொழுது ஆயிரம் சூரியப்பிரகாசத்துடன் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரைப் பூவில் மகாலட்சுமி தோன்றினாள். அத்தனை தேவர்களும் பார்த்துக் கொண்டிருக்க நேராகச் சென்று மகாவிஷ்ணுவின் திருமார்பில் அமர்ந்தாள்.
அனைத்தும் மகாலட்சுமியின் அருளால் :
ஐராவதம், நவமணிகள், இந்திரப்பதவி என எத்தனைச் செல்வங்கள் இருப்பினும் அவைகள் அதன் அதிபதியான மகாலட்சுமிக்கு இணையாகாது. அதே சமயம் மகாலட்சுமி என்கிற செல்வத்தை அடைந்துவிட்டால் அத்தனைச் செல்வத்தையும் பெற்றதாகி விடும். பகவான் விஷ்ணு எல்லாம் உடையவராக விளங்குவதற்கு காரணம், அவர் “ஸ்ரீ” யாகிய மகாலட்சுமியை உடையவராக இருக்கிறார்.
மூத்ததேவியும், ஸ்ரீதேவியும் :
மகாலட்சுமியின் தமக்கைக்கு ஜேஷ்டாதேவி என்று பெயர். மூத்ததேவி என்பார்கள். இருவருக்கும் ஒரு முறை அழகு பற்றிய பிரச்சினை வந்து விட்டது. நாரதர் இப்பிரச்சினையை எப்படித் தீர்த்து வைத்தார் தெரியுமா?
அம்மா ஜேஷ்டாதேவி! மகாலட்சுமி! இருவரும் அழகுதான். ஒரே ஒரு வேறுபாடு! ஜேஷ்டாதேவி – மூத்ததேவி (மூதேவி அல்ல) – போகும்போது அழகு! அம்மா மகாலட்சுமி! நீ வரும்போது அழகு!
மகாலட்சுமி செல்வத்தை மட்டும் தருவதில்லை. செல்வத்தின் பயனையும் தருகிறாள். மகாலட்சுமி விலகும்போது, அந்தச் செல்வமே பகையாக மாறி அழிக்கிறது. நம்மாழ்வார், “செல்வமே பெருநெருப்பாய்” என்று இதனைப் பாடுகிறார்.
இராவணன் அழிவு :
வாமன அவதாரத்தில் – எங்கே மகாலட்சுமியின் திருஷ்டி – அதாவது கடைக்கண் பார்வை – மகாபலியின் மீது விழுந்து விட்டால் – அவன் செல்வத்தை இந்திரனுக்குத் தர இயலாது என எண்ணி, மான்தோலால் தன் மார்பில் அகலாத இருக்கும் மகாலட்சுமியை பகவான் மறைத்தாராம்.
இராவணன் சகல செல்வங்களோடு வாழ்ந்தான். எப்போது அந்தச் செல்வம் அனைத்தையும் இழக்கத் தொடங்கினான் தெரியுமா?
மகாவிஷ்ணுவாகிய இராமனிடமிருந்து – மகாலட்சுமியாகிய சீதையைப் பிரித்து அசோகவனத்தில் கொண்டு வந்து சிறை வைத்தான்.
செல்வமாகிய மகாலட்சுமியை சிறைவைத்த இராவணன் தன் செல்வங்களையெல்லாம் இழந்தான்!
அவளே அறியாத பெருமை :
மகாலட்சுமியின் தொடர்பினால்தான் தேவனும் தேவனாகிறான் என்கிறது வேதம். ஆழ்வாரும், “திருவில்லாத் தேவரைத் தேறேன் மின் தேவு”-
வைணவ மரபில் வெறும் நாரணன் கிடையாது. திருநாரணன்தான். திருமால் தான். திருவடிதான்.
கூரத்தாழ்வான் ஸ்ரீஸ்தவம் என்றொரு நூலை இயற்றியிருக்கிறார். அதில் அவர் அறுதியிடுகிறார்.
“மகாலட்சுமித்தாயே! உன் மகிமையும் பெருமையும் குணங்களும் கருணையும் உன் கணவனான – எல்லாம் அறிந்த பகவானுக்கும் தெரியாது. அவ்வளவு ஏன் உன்னாலும் உன் பெருமை அறிய முடியாது!”
இவ்வளவு பெருமை வாய்ந்த மகாலட்சுமியின் திருவடியைப் பணிவோம்! அவள் திருவருள் கருணையின் பயனைப் பெறுவோம்.
