By எஸ்.கோகுலாச்சாரி
வைணவ நெறியை உலகமெல்லாம் போற்றும்படி செய்தவர் இராமானுஜர்.அனைத்துலகம் வாழப் பிறந்த எதிராசராகிய எம்பெருமானார் செய்த காரியங்களும் சாதனைகளும் வியக்கத்தக்கவை.
இந்திய தத்துவ மரபுக்கு அவர் அள்ளித் தந்த கொடைகள் அனேகம்.ஆயினும், இராமானுஜர் தமிழை ஆதரிக்கவில்லை. வளர்க்கவில்லை.வடமொழி நூல்கள் இயற்றுவதிலும்பரப்புவதிலும் காலம் கழித்தார்.அவர் தமிழ் மொழி மீது பெரிய அளவில் ஈடுபாடு கொண்டவர் அல்ல என்ற ஒரு குற்றச்சாட்டும் அவ்வப்பொழுது எழுகிறது.
அதற்கு அடிப்படையாக அவர்கள் கூறுகின்ற காரணம் இராமானுஜர் எழுதிய அத்தனை நூல்களும் வடமொழியில் தானே இருக்கின்றன. தமிழ் மொழியில் ஒரு நூல் கூட இராமானுஜர் இயற்றவில்லை என்று கேள்வி கேட்கின்றனர்.
இராமானுஜர் ஒன்பது நூல்களை இயற்றினார் என்பதும், அந்நூல்கள் வடமொழியில் அமைந்தவை என்பதும் உண்மைதான்,
வேதாந்த தத்துவங்களை நிறுவுவதிலும், வேத சாரமான உபநிடத விளக்கங்களைப் பரப்புவதிலும் அவர் ஈடுபட வேண்டிய அவசியம் இருந்தது. பழமையான வேத தர்மம் தான், வைணவ மதம் என நிரூபணம் செய்ய வேண்டியிருந்தது.
வேதத்தின் அர்த்தம் இதுதான் என்று, வேறு அர்த்தங்கள் சொன்ன மதங்களைக் கண்டிக்க வேண்டிய தேவையும் இருந்தது.
அவரை தேடி வந்து சேர்ந்த, வாத பிரதி வாதங்களை-(உதாரணமாக யக்ஞ மூர்த்தியின் பதினெட்டு நாள் தர்க்கத்தை சொல்லலாம்-) எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியும், அவர் வைணவ சமய தலைவர் என்பதால் இருந்தது.
வேதத்தின் பிரம்ம பாகம் உபநிடதங்கள் ஆகும். கடுமையான பகுதி.ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பொருள் சொன்ன பகுதி.அதன் திரண்ட கருத்து பிரம்ம சூத்திரங்கள்.
வேதவியாசர் தொகுத்த பிரம்ம சூத்திரத்திற்கு பொருள் காண்பதிலும் பல பிரசினைகள் இருந்தன.
சங்கரர் ஜீவ ஈஸ்வர தத்துவ அபேதத்தை சொல்லும் சுருதிகளுக்கு சங்கர பாஷ்யம் செய்ததார்.
மத்வர் ஜீவ ஈஸ்வர தத்துவ பேதத்தைச் சொல்லும் சுருதிகளுக்கு மத்வ பாஷ்யம் செய்ததார்.
இதில் விட்டுப்போன கடக சுருதிகளையும் இணைத்து பொருள் காணும் சமயத் தேவை இராமானுஜருக்கு இருந்தது.
இது அவருடைய ஆசாரியரான ஆ ளவந்தாருக்கு இராமானுஜர் தந்த உறுதி-இதற்கே அவருடைய வாழ்நாளில் பெரும்பகுதி பயன்பட்டது.
இதற்கென்றே அவர் பலப் பல இடங்களுக்கு சென்றார்.பிரம்ம சூத்திரத்திற்கு இதற்கு முன்னால் வரைந்த அத்தனை உரைகளையும் கற்க வேண்டிய அவசியம் அவருக்கு இருந்தது.
போதாயன விருத்தி உரையை பெறுவதற்காகப் பல்லாயிரம் கிலோமீட்டர்கள் நடந்து காஷ்மீர தேசத்திற்குச் சென்று வந்த சாதனை மகத்தானது.
பிரம்ம சூத்திரத்திற்கு அந்த வ்ருத்தி உரை அடிப்படையில் சரியான முறையில் பொருள் காணவேண்டிய அவசியம் இருந்தது.இவையெல்லாம் அத்தனை எளிமையான காரியம் அல்ல.அதற்கு காலமும் நேரமும் உழைப்பும் உற்சாகமும் தேவை.
எனவே அவர் இயற்றிய 9 நூல்களிலும் பிரம்ம சூத்திரத்திற்கு அவர் எழுதிய உரையானது இன்றளவும் ஸ்ரீ பாஷ்யம் என்று போற்றப்படுகின்றது அவரும் பாஷ்யக்காரர் என்று போற்றப்படுகின்றார்
இதுதவிர வேதாந்தப் பொருள் விளக்கமாக அவர் எழுதிய வேதாந்த சாரம் வேதாந்த தீபம் ,வேதாந்த சங்கிரகம் என்ற நூல்கள் வேதாந்த உபநிடதங்களுக்காக எழுத வேண்டியிருந்தது
இதைப்போலவே கண்ணன் அருளிய உபநிடத சாரமான பகவத்கீதைக்கும், ஒரு சரியான கோணத்தில், வைணவ தத்துவத்தை நிறுவுவதற்காக, உரை செய்ய வேண்டி இருந்தது. அது கீதா பாஷ்யம் என்று புகழ் பெற்றது.
இதுவும் தேவைப்படுகின்ற ஒரு ஆய்வு நூல் தான்.
உபநி ட தங்களுக்கு 3 நூல்,பிரம்ம சூத்திரத்திற்கு ஒரு நூல், பகவத் கீதைக்கு ஒரு நூல், என்று ஐந்து நூல்கள் இயற்றியவர், இந்த உலக மக்கள் உய்ய வேண்டும் என்பதற்காக ஒரு பங்குனி உத்திர நாளில் கத்ய திரையம் என்று மூன்று பிரார்த்தனை நூல்களை இயற்றினார் .
வைணவ வழிபாட்டு முறைகளை விளக்குகின்ற நித்தியம் என்கிற கிரந்தத்தை இயற்றினார்.
இன்றளவும் இந்த நூலை ஒட்டித்தான் திரு ஆராதனைகள் திருமால் கோயில்களில் நடைபெறுகின்றன.
ஆக, நவரத்தினங்களான இந்த ஒன்பது நூல்களும், எந்தச் சூழ்நிலையில், எந்த அடிப்படையில் இயற்றப்பட்டது ,என்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் இதற்காக அவர் தமிழுக்கு ஏதும் செய்யவில்லை, ஆதரிக்கவில்லை, ஈடுபாடு கொண்டிருக்கவில்லை என்பது ஏற்றத் தகுந்த வாதமல்ல
ஒருவர் தமிழில் நூல் எழுதினால்தான் தமிழை ஆதரித்தவர் ஆவார் என்று நாம் நிர்ணயிக்க முடியாது.
இராமானுஜருடைய சிந்தனையைப் பொருத்தவரை அவர் ஆழ்வார்கள் இயற்றிய அருந்தமிழை பொன்னே போல் போற்றினார்.தன்னுடைய உயிர் சக்திக்கு உந்து துணையாக இந்த உயர்தமிழ்ப் பாசுரங்களை உணவாகக் கொண்டார்.
ஒவ்வொரு நொடியிலும் அவர் சிந்தனை, இந்த பாசுரங்களின் இசையிலும், சந்தத்திலும், சொல் அமைப்பிலும், தூய பொருளிலும் தோய்ந்திருந்தது என்பதை , அவர் காலத்தில் அவரோடு வாழ்ந்த ஆசாரியர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள் .
ஸ்ரீபாஷ்யத்தில் சில சூத்திரங்கள், அவர் மனதில் ஐயப்பாடுகளை ஏற்படுத்திக் குழப்பிய போது, அவர் மனத்தெளிவு பெற்றதற்குக் காரணமாக அமைந்தது,தென் குருகூர் புனிதன் தந்த தமிழ் மறையான திருவாய்மொழி தான்.
இதை தமது ஆச்சாரிய ஹிருதயத்தில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஒரே வரியில் ஆணி அடித்தார் போல் சொல்லுகின்றார்
“பாஷ்யகாரர் இது கொண்டு சூத்திரங்களை ஒருங்க விடுவார்.”
இராமானுஜருக்கு எத்தனையோ திருநாமங்கள் ஏற்பட்டன. உலக உயிர்கள் எல்லாம் உய்ய வேண்டும் என்பதற்காக ,அவர் திருக்கோட்டியூர் நம்பிகளிடம் பெற்ற அர்த்தங்களை ,ஆசை உடையவர்கள் எல்லாம் வாருங்கள் என்று, அறிவித்து அள்ளி வழங்கினார்.
அதனை திருக்கோட்டியூர் நம்பிகள் முதலில் கண்டித்தாலும், பின்பு கட்டி அணைத்து, எம்பெருமான் கருணை கொண்டவன் என்று அழைக்கிறோம். அவனைவிட, இந்த உயிர்கள் உய்ய வேண்டும் என்று நினைத்த இராமானுஜரை- தான் நரகம் போனாலும் பரவாயில்லை என்று எண்ணிய இரானுஜரை பாராட்டினார் கோஷ்டியூர் நம்பிகள்.
இராமானுஜரின் மனம் எம்பெருமான் மனத்தை விட விசாலமானது என்பதால் அவரை எம்பெருமானார் என்று அழைத்தார். அது முதல் வைணவ தரிசனமே எம்பெருமானார் தரிசனம் ஆகியது என்று படிக்கிறோம்
சங்கத்தமிழ் ஆகிய திருப்பாவையை தினசரி காலையில் சேவித்துக் கொண்டிருப்பது, திருப்பாவை பொருளிலேயே ஈடுபட்டு இருப்பது, பாவத்தோடு பாடுவது என்று இருந்ததால் திருப்பாவை ஜீயர் என்று பெயர் பெற்றார்.
ஒரு தமிழ் நூலின் பெயரோடு இராமானுஜர் பெயர் பொருத்தப்பட்டு, இன்றளவும் அழைக்கப்படுகிறார் என்றால், அது தமிழின் மீது கொண்ட இராமானுஜர் கொண்ட ஈடுபாட்டினால் அல்லாது வேறென்ன?
இராமானுஜர் காலம் வரை ஆழ்வார்களின் அருளிச் செயலுக்கு உரைகள் எழுதப்படவில்லை. தமிழ் வேதமான திருவாய்மொழிக்கு ஒரு உரைநூல் கூடச் செய்யப்படவில்லை.
திருவாய்மொழிக்கு முதன்முதலில்உரை வகுக்கப்பட்டது இராமானுஜரின் காலத்தில்தான்.
அவர்தான் தனது மானசீக புத்திரரான திருக்குருகைப்பிரான் பிள்ளான் என்ற சீடரின் மூலம் திருவாய் மொழிக்கு முதல் உரையைக் கொடுத்தருளினார்.
தினசரி முற்பகலில் வேதாந்த விஷயங்களைப் பற்றிய ஆய்வுகளில் அவர் மனம் ஈடுபட்டிருந்தாலும்,தனது உயிருக்கு உஜ்ஜீவனமாகக் கொண்டது ஆழ்வாரின் மறைத் தமிழைத்தான்.
இரவெல்லாம் தூங்காமல் திருவாய்மொழியில் ஈடுபாடு கொண்டு இருப்பார்.திருவாய்மொழிப் பாசுரங்களின் பொருட் சிறப்பில் உருகி உருகி நெஞ்சு கரைந்து கண்ணீர் விடுவார்.பல ஆடைகள் அவர் விடும் கண்ணீரில் நனையும்.
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்
என்ற ஆழ்வாரின் மன நிலைக்கு செல்வார். என்று அவருடைய திருவாய்மொழி ஈடுபாட்டினை பதிவிட்டு இருக்கிறார்கள்.
அவர் காலத்திலேயே இராமானுஜரைப் போற்றும் வண்ணம் அவருடைய தமிழ்மொழி ஈடுபாடு குறித்தும் ,அவர் செய்த பல்வேறு சாதனைகளை இணைத்தும் , எழுதப்பட்ட அருமையான நூல் இராமானுஜ நூற்றந்தாதி.
இந்த நூற்றந்தாதி நூல் இராமானுஜரின் தமிழ்மொழி ஈடுபாட்டை எப்படிப் படம் பிடித்துக் காட்டுகிறது என்பதைத் தெரிந்து கொண்டாலே இரானுஜரின் தமிழ் ஈடுபாட்டைப் புரிந்து கொள்ள முடியும்.
பாணர் குலத்தில் பிறந்த திருப்பாணாழ்வாரின் தேன் தமிழை உச்சிமேல் வைத்துப் போற்றியவர் இராமானுஜர்.
அவரை செந்தமிழால் சீரிய நான்மறைச் செம்பொருளை அளித்தவர் என்று இராமானுஜர் கொண்டாடிக் கொண்டிருந்தார்.
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழல் செய்த சடகோபனைச் சிந்தை செய்து, திருவாய் மொழி கொண்டு,,உயிர்களெல்லாம் உய்வதற்கு வழி செய்து உதவியவர் இராமானுஜர் .
ஆரணம் என்றால் வேதம் திருவாய்மொழியை சீர் நெறி தரும் செந்தமிழ் ஆரணம் என்று முடிவு செய்தார் வாடா மறை வல்லாரான இராமானுஜர்.
பரகாலன் பனுவல்களான திருமங்கை ஆழ்வார் தமிழ் மீது, இராமானுஜருக்கு எல்லையற்ற ஈடுபாடு.காரணம். அப்பாசுரங்கள் அனைத்தும் ஈரப் பதத்தோடு உள்ளத்தில் ஊடுருவி ஆன்மிக வெளிச்சம் பாய்ச்சுபவை.
நெஞ்சுக்கு இருள் கடி தீபம், அடங்கா நெடும் பிறவி
நஞ்சுக்கு நல்ல அமுதம், தமிழ் நன்னூல் துறைகள்
அஞ்சுக்கு இலக்கியம், ஆரண சாரம், பரசமயப்
பஞ்சுக்கு அனலின் பொறி-பரகாலன் பனுவல்களே
என்ற தமிழ் பாடலால் திருமங்கை ஆழ்வாரின் பாசுர சிறப்பை அறியலாம்..இதை முறையாகத் தெரிந்தவர் இராமானுஜர் என்பதால் அவரைப் போற்றி தனக்கு இதை கற்று தர வேண்டும் என்கிறார் அவர் சீடரான எம்பார்.
எங்கள் கதியே இராமநுச முனியே
சங்கை கெடுத்து ஆண்ட தவராசா பொங்கு புகழ்
மங்கையர்-கோன் ஈந்த மறை ஆயிரம் அனைத்தும்
தங்கும் மனம் நீ எனக்குத் தா
என்பது அவர் வேண்டுகோள்.
திருமங்கை அழ்வாரைப் போற்றி இராமானுஜரே ஒரு தமிழ் பாடலை இயற்றியிருக்கிறார்.,தமிழ் மொழியின் மீதும், தமிழ் இலக்கண இலக்கியங்கள் மீதும், இராமானுஜர் கொண்ட ஈடுபாட்டின் ஆழத்தை தெரிவிக்க இந்த ஒரு பாடல் போதும் அந்தப் பாசுரம், பெரியதிருமொழி பாடுவதற்கு முன் தனியனாக சேவிக்கப்படுகிறது
வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ் வேந்தன் வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்திரம்கொள் மங்கையர்-கோன்
தூயோன் சுடர் மான வேல்
இப்படித் தொட்ட தொட்ட இடமெல்லாம், இராமானுஜரின் தமிழ் இதய துடிப்பை காண்கின்ற போது, இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் அவரின் தமிழ் ஈடுபாட்டினைக் குறை சொல்வது ஆய்வு செய்யாதார் மனநிலை.
கட்டுரையாளர்
ஓய்வுபெற்ற பேராசிரியர்
