பொய்ப்பொருளிலும்
மெய்ப்பொருள் கண்ட
மெய்ப்பொருள் நாயனார்
(c)முனைவர் ஸ்ரீராம்
உலகத்தில் எல்லோரும் பொய்ப்பொருளாகிய பதவி,பட்டம்,.பணம் என்று தேடி அலையும் போது மெய்ப் பொருளாகிய சிவ பரம்பொருளை சதா சர்வ காலமும் எண்ணியவர் இவர்.
திருநீறு பூசிய அடியாரைக் கண்டால் சிவனாகவே எண்ணி வணங்கியவர்.
தொண்டை மண்டலத்தில் சேதிநாடு என்னும் நாட்டில் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட குறுநில மன்னர்.
சிவபெருமானை குலதெய்வமாக வணங்கிய மலையமான் குலத்தைச் சேர்ந்தவர். அவருடைய ஆட்சியில் பகைவர்கள் ஒடுங்கினர். குடிமக்கள் மகிழ்ச் சியோடு இருந்தனர். ஆலய விழாக்களில் அனைத்து பூஜைகளும் ஒழுங்காக நடைபெற்றன. உள்ளும் வெளியும் வென்று மெய்ப்பொருளே மனதில் நினைத்து இருந்ததால் இவருக்கு மெய்ப்பொருள் நாயனார் என்ற பெயர் ஆயிற்று.
அரசியல் நெறியின் வந்த
அறநெறி வழாமல் காத்து
வரைநெடுந் தோளால் வென்று
மாற்றலர் முனைகள் மாற்றி
உரைதிறம் பாத நீதி
ஓங்குநீர் மையினின் மிக்கார்
திரைசெய்நீர்ச் சடையான் அன்பர்
வேடமே சிந்தை செய்வார்
அகப்பகை வென்ற இவருக்கு புறப்பகையாக முத்தநாதன் என்கின்ற சிற்றரசன் இருந்தான்.இவரை மோது போரில் வெல்ல முடியாத முத்தநாதன் ஏதேனும் சூது செய்து இவரைக் கொன்றொழிக்க வேண்டும் என்ற கொடிய திட்டத்தை தீட்டினான்.
மெய்ப்பொருள் நாயனாரின் சிவபக்தியை கண்டும், அவர் சிவனடியார்களைக் கண்டால், உடலும் உள்ளமும் குழைந்து ஒடுங்கி வணங்குவதையும் அறிந்த முத்தநாதன், அவரை சாய்க்கும் வழியாக ஒரு சிவனடியாராக வேடம் போடுவது என்று முடிவு செய்தான்.
மெய்யெலாம் நீறு பூசி
வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினிற் படைக ரந்த
புத்தகக் கவளி யேந்தி
மைபொதி விளக்கே யென்ன
மனத்தினுட் கறுப்பு வைத்துப்
பொய்தவ வேடங் கொண்டு
புகுந்தனன் முத்த நாதன்.
என்று இவன் வேடத்தை சேக்கிழார் பாடுகிறார்.
திருநீறு தரித்து, கையில் ஏடு ஏந்தி, மெய்ப்பொருள் நாயனாரின் அரண் மனைக்குச் சென்றான்.
மெய்ப்பொருள் நாயனார் ஓய்வெடுக்கும் நேரம் அது.
சிவனடியாராக இருந்தாலும் கூட காலம் இல்லா காலத்தில், அரண்மனைக்குள் பிரவேசிக்கும் முத்தநாதனை, மெய்ப்பொருள் நாயனாரின் தனிப்பாதுகாவலன் தத்தன் தடுத்தான்.
ஆயினும் சிவ ஆகம நெறியை இப்பொழுதே நான் அரசனுக்குச் செப்ப வேண்டும் என்று காவலர்களை பலவந்தப்படுத்தி அரசரின் தனி அறையி னுள்ளே நுழைந்தான்.
சிவ வேடம் தரித்து இருந்தாலும் கூட சிவனாகவே கருதி மெய்ப்பொருள் நாயனார் முத்தநாதனை வணங்கினார்.
மங்கலம் பெருக மற்றென்
வாழ்வுவந் தணைந்த தென்ன
இங்கெழுந் தருளப் பெற்ற
தென்கொலோ என்று கூற
உங்கள்நா யகனார் முன்னம்
உரைத்த ஆகம நூல் மண்மேல்
எங்குமில் லாத தொன்று
கொடுவந்தேன் இயம்ப வென்றான்.
“தனியே இந்த மெய்ப்பொருள் ரகசியத்தை-யாரும் அறியா சிவ ரகசியத்தை தங்களுக்குச் சொல்ல வேண்டும். அதனால் யாரும் இங்கே இருக்க கூடாது” என்று முத்தநாதன் கேட்க,அவன் பொய்யுள்ளமறியாத அரசன், அரசி யாரையும் அந்தப்புரத்திற்கு அனுப்பிவிட்டு, ஒரு சிறந்த ஆசனத்தை முத்தநாதனுக்கு அளித்துவிட்டு அவனுடைய காலடியில் மெய்ப்பொருள் நாயனார் கை கூப்பி அமர்ந்து,” ஆகமம் கேட்பதற்கு தயாராக இருக்கிறேன்.அருள் கூர்ந்து சொல்லத் தொடங்கலாம்” என்று சொன்னவுடன், சுவடிக் கட்டைப் பிரிப்பது போல விரித்த முத்தநாதன், அதனுள்ளே மறைத்து வைத்திருந்த கொடிய குறுவாளால் மெய்ப்பொருள் நாயனாரை வெட்டி சாய்த்தான்.
குருதி வழிய சிவ நாமத்துடன் அவர் சாய்ந்தார். அதை கண்ட தத்தன் உடனே உடைவாளை ஓங்கி முத்தநாதனை வெட்டுவதற்குப் பாய்ந்து வந்தான்.
அந்த நிலையிலும் மெய்ப்பொருள் நாயனார் ஒரு சிவனடியாரைக் கொல்வது தகாது என்று “தத்தனே ..நில்… இவர் நம்மைச் சேர்ந்தவர்” என்பதைச் சொல்லி தடுத்தார். உலாம் உருக்கும் இந்தக் காட்சியை சேக்கிழார் சொல்லும் போதே நம் கண்களில் குருதி வழிகிறது.
மறைத்தவன் புகுந்த போதே
மனம்அங்கு வைத்த தத்தன்
இறைப்பொழு தின்கட் கூடி
வாளினால் எறிய லுற்றான்
நிறைத்தசெங் குருதி சோர
வீழ்கின்றார் நீண்ட கையால்
தறைப்படும் அளவில் “தத்தா
நமரெ”னத் தடுத்து வீழ்ந்தார்.
அதுமட்டுமில்லை; அவர் செய்த அடுத்த செயலானது இன்னும் அற்புதமானது.
” கொடிய செயலைச் செய்த இவனை கொள்ளவேண்டாம்” என்பதே அரச ஆணையானபோது “இனி செய்ய வேண்டியதே என்ன ?”என்று கேட்க ,”தத்தா…இனி இவர் அரண்மனையில் இருக்கும் வரை, இவருடைய உயிருக்கு ஆபத்து. சிவ வேடம் தரித்த எதிரியாக இருந்தாலும் கூட அதற்கு ஒரு மதிப்பு தர வேண்டும். இப்போது நீ செய்ய வேண்டிய ஒரே வேலை இந்த அடியாருக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நகரத்துக்கு வெளியே பாதுகாப்பாக விட்டு வர வேண்டும். அதுவரை நான் காத்திருப்பேன்” என்றார்.
ஊரே திரண்டு முத்தநாதனை கொல்வதற்கு தயாராக இருந்த நிலையில், அரசரின் ஆணையை எல்லோருக்கும் சொல்லி அமைதிபடுத்தி விட்டு, கனத்த மனதோடு, கொடியவன் முத்தநாதனை, சிவ வேடம் தரித்து இருந்த ஒரே காரணத்தினால், நாட்டிற்கு வெளியே பாதுகாப்பாக விட்டுவிட்டு, கண்ணீருடன் அரண்மனைக்கு திரும்பினான்.
சென்றடி வணங்கி நின்று
செய்தவ வேடங் கொண்டு
வென்றவற் கிடையூ றின்றி
விட்டனன் என்று கூற
இன்றெனக் கையன் செய்த
தியார்செய வல்லா ரென்று
நின்றவன் தன்னை நோக்கி
நிறைபெருங் கருணை கூர்ந்தார்.
அதுவரை தம்முடைய உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்த மெய்ப் பொருள் நாயனார்,” என் வாழ்நாளில் நீ செய்த காரியத்தை இனி வேறொருவர் யார் செய்யப் போகிறார்கள்?” என்று கை கூப்பியபடி சிவபதம் அடைந்தார்.
எதையும் சிவதரிசனமாகவே கண்ட மெய்ப்பொருள் நாயனாரின் குருபூஜை தினம் இன்று. (கார்த்திகை உத்திரம்)
