திருமங்கையாழ்வார் அவதார விழா
ஆழ்வார்கள் பன்னிருவர். அதில் கடைசி ஆழ்வார் திருமங்கையாழ்வார். இவர் சீர்காழிக்கு பக்கத்தில் திருக்குறையலூர் என்னும் திருத்தலத்தில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் அவதாரம் செய்தவர்.
திருமங்கையாழ்வார் பாடல்களை வேதசாரம் என்பார்கள்.
நெஞ்சுக்கு இருள் கடி தீபம் அடங்கா நெடும் பிறவி
நஞ்சுக்கு நல்ல அமுதம் தமிழ் நன்னூல் துறைகள் அஞ்சுக்கு
இலக்கியம் ஆரண சாரம் பல சமயப்
பஞ்சுக் கனலின் பொறி பரகாலன் பனுவல்களே-
என்று இவருடைய பாசுரங்களின் சிறப்பை கூரத்தாழ்வான் பாடுவார் .
இவருக்கு நாலு கவிப் பெருமாள் என்கின்ற விருது உண்டு. ஆசுகவி, சித்திரக் கவி, வித்தாரக்கவி, மதுரகவி, என்ற நால் வகைக் கவிகளும் பாடுவதிலும் வல்லவர். வைணவத்தின் 108 திருத்தலங்களில் வடநாடு ஆரம்பித்து தென்னாடு வரைக்கும் மிக அதிகமான திருத்தலங்களைச் சென்று சேவித்து தமிழ் பாசுரங்களால் மங்களாசாசனம் செய்தவர். திருமங்கை ஆழ்வார்.
பகவானிடம் இருந்து நேரடியாக பஞ்ச சம்ஸ்காரமும் (திருநறையூர் நம்பியிடம்) மந்திர உபதேசமும்(திருவாலி கல்யாண ரெங்கநாதரிடம்) பெற்றவர்.
நம்மாழ்வாரின் நான்கு வேத சாரமான பொருளை தனது ஆறு பிரபந்தங் களால் அருளிச் செய்தவர். இவர் அருளிய பிரபந்தங்கள் பெரிய திரு மொழி, திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல் , சிறிய திருமடல் திருக்குறுந்தாண்டகம் திருநெடுந்தாண்டகம்.
பல ஆலயங்களிலே இவர் திருப்பணிகள் செய்திருந்தாலும் திருவரங் கத்தில் வெகு காலம் தங்கி பற்பல திருப்பணிகளைச் செய்திருக் கிறார்.இவருடைய அவதார உற்சவம் எல்லா ஆலயங்களிலும் விமர் சையாகக் கொண்டாடப்பட்டாலும், சீர்காழிக்கு அருகிலே உள்ள திரு நகரியில் 10 நாட்கள் பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு தெற்கு நோக்கி தனிச் சன்னதியில் திருமங்கையாழ்வார் குமுதவல்லி நாச்சியாருடன் காட்சி அளிக்கிறார். இவருக்கு தனிக் கொடி மரமும் இந்த ஆலயத்தில் உண்டு என்பது சிறப்பு.
