தமிழ் மறை தந்த வள்ளல்
சே.கோகுலாச்சாரி
ஆசிரியர், ஆலய தரிசனம்
வைணவ சமயம் மிகத் தொன்மையான சமயம். இதற்குச் சான்று சங்க இலக்கியங்கள் குறிப்பாக பரிபாடல் போன்ற சங்க இலக் கியங்கள் .
தொல்காப்பியம் முதற்கொண்டு சங்க நூல்கள் பலவற்றிலும் திருமால் வழிபாடு பற்றிய குறிப்புகள் ஆழமாகப் பதிந்துள்ளன. சங்க இலக்கியங்களுக்கும் முற்பட்ட இலக்கண நூலான தொல் காப்பியத்திலேயே திருமால் வழிபாட்டிற்கான சான்று கிடைத்து விடுகிறது.
திணை மயக்கப் பேரிலக்கணத்தில் முல்லை நிலத்திற்குரிய தெய்வமாக திருமால் குறிப்பிடப்படுகிறார். “மாயோன் மேய காடுறை உலகமும்…” (தொல்காப்பியம்) இதன் மூலம் தமிழர் களின் நிலப்பகுப்பு காலத்திலிருந்தே திருமால் வழிபாடு பிரிக்க முடியாத ஒன்றாக இருந்துள்ளது தெளிவாகிறது.
1.பரிபாடல்
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பரிபாடல் வைணவ சமயத்தின் தொன்மைக்கும், அதன் தத்துவ வளர்ச்சிக்கும் ஒரு சிறந்த கருவூலமாகும். பரிபாடலில் திருமாலுக்காகவே தனிப் பாடல்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பல ஆய்வாளர்கள் பரிபாடலை ஆழ்வார்களின் பக்தி இலக்கியங்களுக்கு முன்னோடியாகக் கருதுகின்றனர்.
பரிபாடலில் திருமால் பரம்பொருளாகவும், உலகைக் காத் தருளும் இறைவனாகவும் போற்றப்படுகிறார் இதில் திருமாலின் அவதாரங்கள், அவர்தான் பிரம்மன் மற்றும் சிவனுக்கும் மூல மான பரம்பொருள் போன்ற தத்துவக் கருத்துக்கள் பேசப்படு கின்றன.
குறிப்பாக, திருமாலின் வராக அவதாரம், நரசிம்ம அவதாரம் மற்றும் கிருட்டிண அவதாரக் கதைகள் பரிபாடலில் மிக விரிவாகப் பாடப்பட்டுள்ளன.
இறைவனுக்கு உருவமும் உண்டு, அருவமும் உண்டு; அவன் எங்கும் நிறைந்திருப்பவன் (அந்தர்யாமி) என்ற தத்துவம் பரி பாடலில் அழகாக விளக்கப்பட்டுள்ளது:
“தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ; கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ…”
2.பிற சங்க நூல்களிலும்
பரிபாடல் மட்டுமன்றி, பிற சங்க நூல்களிலும் திருமால் பற்றிய குறிப்புகள் பரவலாகக் காணப்படுகின்றன:
பாரதம் பாடிய பெருந்தேவனார், திருமாலையும் பல தேவனையும் (பலராமன்) போற்றிப் பாடியுள்ளார். மேலும், திரு மாலின் மார்பில் இருக்கும் ‘மறு’ (ஸ்ரீவத்சம்) மற்றும் ‘கருடக் கொடி’ பற்றிய குறிப்புகள் புறநானூற்றில் உள்ளன.
கிருட்டிணரின் லீலைகள், கன்றுகளை மேய்த்தல், காளிங்க நர்த்தனம், மற்றும் குன்றக்குரவை போன்ற ஆயர்பாடி நிகழ்வுகள் கலித்தொகையில் மிக அழகாக விவரிக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரத்தில் பள்ளி கொண்டிருக்கும் ‘திருவெஃகா’ (சொன்ன வண்ணம் செய்த பெருமாள்) கிடந்த கோலத்தைப் பற்றியும், திருவேங்கடம் (திருப்பதி) பற்றியும் சங்க கால ஆற்றுப்படை நூல்கள் பேசுகின்றன.
3.ஸ்ரீ ராமானுஜரின் விசிஷ்டாத்வைத மரபு
வரலாற்று ரீதியாக நாம் சங்க இலக்கியங்களை முதல் சான்றாகப் பார்த்தாலும், ஸ்ரீ ராமானுஜரின் விசிஷ்டாத்வைத தரிசனத்தின் (கோட்பாட்டின்) அடிப்படையில், ஆன்மீக மற்றும் தத்துவ ஒழுங்குமுறையோடு அணுகும்போது வைணவ மரபை வேறு வரிசையில் நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்
1.வேதங்கள்
2.அவதாரங்கள்
3.ஆழ்வார்கள், பாசுரங்கள்
4.ஆச்சாரியார்கள் உரைகள் மற்றும் வழிபாட்டு மரபுகள்
விசிஷ்டாத்வைதத்தின் அடிப்படை அடித்தளமே வேதங்கள்தான். ஸ்ரீ ராமானுஜர் தனது தத்துவத்திற்கு ‘உபய வேதாந்தம்’ என்று பெயரிட்டார்.சமஸ்கிருத வேதங்களும் உபநிடதங்களும் இறை வனின் உண்மைத் தன்மையையும், பிரம்மத்தின் இயல்பையும் கூறும் முதன்மைச் சான்றுகள் (முதன்மையான வரிசை).
இறைவன் ஒருவனே, அவனே பரம்பொருள் (ஸ்ரீமன் நாராயணன்) என்பதை நிலைநாட்ட ராமானுஜர் வேதத் தத்துவங்களையே (முக்கியமாக உபநிடத வாக்கியங்களை) அடித்தளமாகக் கொண்டார்.
வேதங்கள் காட்டும் அந்தப் பரம்பொருள், எட்டாத உயரத்தில் மட்டும் இருக்கவில்லை; எளிய மனிதர்களும் தன்னை வந் தடைய வேண்டும் என்பதற்காக பூமிக்கு இறங்கி வந்த நிலை களே அவதாரங்கள் ஆகும்.பரிபாடல் காட்டும் வராக, நரசிம்ம, கிருஷ்ண அவதாரங்கள் இதில் அடங்கும்.
விசிஷ்டாத்வைதத்தில் ‘பர, வியூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை’ என்ற ஐந்து நிலைகளில் இறைவன் இருக்கிறான். அதில் ‘விபவ’ எனப்படும் அவதாரங்கள், மனிதர்களோடு மனிதனாக இறைவன் பழகி, தர்மத்தை நிலைநாட்டிய மிக முக்கியமான இரண்டாம் நிலை ஆகும்.
வேதங்களின் சாரத்தையும், அவதாரங்களின் அழகையும் பாமர மக்களும் உணரும்படி எளிய தமிழில், பக்திப் பெருக்குடன் பாடி அருளியவர்கள் ஆழ்வார்கள்.
சங்க இலக்கியங்கள் திருமாலின் தொன்மையை வரலாற்று ரீதியாகக் கூறினால், ஆழ்வார்களின் பாசுரங்கள் திருமாலிடம் சரணடையும் ‘பிரபத்தி’ (சரணாகதி) தத்துவத்தை தத்துவார்த்த ரீதியாகக் கற்பிக்கின்றன. விசிஷ்டாத்வைதத்தின் உயிர்நாடியே இந்த சரணாகதிதான்.
மேலே குறிப்பிட்ட மூன்று நிலைகளையும் (வேதம், அவதாரம், ஆழ்வார் பாசுரம்) சாதாரண மனிதன் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும், எப்படி வழிபட வேண்டும் என்று நெறிப்படுத்திய வர்கள் ஆச்சாரியார்கள்.
நாதமுனிகள், ஆளவந்தார் தொடங்கி ஸ்ரீ ராமானுஜர் வரை உள்ள ஆச்சாரியார்கள், பாசுரங்களுக்கும் வேதங்களுக்கும் விரிவான உரைகளை (வியாக்கியானங்கள்) எழுதினர்.
கோயில்களில் வழிபாட்டு முறைகளை (பாஞ்சராத்ர ஆகம முறைப்படி) சீரமைத்து, அனைவரும் இறைவனை அடையும் எளிய வழிபாட்டு மரபை ராமானுஜர் உருவாக்கினார். இந்த உரைகளும் மரபுகளும்தான் இன்று நாம் பின்பற்றும் வைணவத் தின் நடைமுறை வடிவமாகும்.
இதை இப்[படியும் பார்க்கலாம்.
மனிதனின் வாழ்வையே செம்மைப்படுத்தி அவனுடைய ஆத்மாவைக் காப்பாற்றி ஒரு நிலையான நல்வாழ்வை தருவதற்கும் இறைவனை உணர்வதற்கும் அடைவதற்கும் வேதங்கள் வழிகாட்டுகின்றன. இது அடிப்படையான கருத்து. .
இதனை ஆச்சாரிய ஹ்ருதயம் முதல் சூத்திரம் விவரிக்கிறது.
“காருணிகனான ஸர்வேஸ்வரன் அறிவிலா மனிதர் உணர் வெனும் சுடர் விளக்கு ஏற்றி ,பிறங்கிருள் நீங்கி, மேலிருந்த நந்தா வேதவிளக்கைக் கண்டு, நல்லதுந் தீயதும் விவேகிக் கைக்கு, மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான கலைகளை நீர்மையினாலருள் செய்தான்.
சூத்திரத்தின் விரிவான பொருள்
ஜீவாத்மாக்களைக் கரையேற்றுவதில் எல்லையற்ற கருணை கொண்டவன் இறைவன் (ஸர்வேஸ்வரன்). அவனது கரு ணையைப் பெற வழியறியாமல், (அறியாமை) என்னும் இருளில் ஆழ்ந்து கிடந்தவர்கள் மக்கள்.
இந்த அறியாமை இருளைப் போக்குவதற்காக, எம்பெருமான் ஆழ்வார்களின் அவதாரத்தை நிகழ்த்தி, அவர்கள் மூலமாகத் திவ்யப் பிரபந்தங்கள் (திருவாய்மொழி) என்னும் அறிவுச் சுடரை ஏற்றினான்.
அறிய முடியாததும், பரம ஒளியாக நிலைத்திருப்பதும் ஆகிய வேதத்தின் உட்பொருளை (நந்தா வேத விளக்கு) மனிதர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில், பகவான் ஆழ்வார் களுக்கு ஞானத்தை அருளினான். எது நல்லது, எது தீயது என்று பாகுபடுத்தி அறிய முடியாத மக்களுக்கு, வேதத்திற்கு இணை யான ஒளியாகத் திகழும் தமிழ் பாசுரங்களை (கலைகளை) இறைவன் கருணையோடு அருளினான்.
வேதங்கள் என்பவை எம்பெருமானின் திருவாக்கு (ஆக்ஞை).
மனிதன் தன் ஆத்மாவைச் செம்மைப்படுத்திக் கொள்ள எது தர்மம், எது அதர்மம் என்று காட்டும் ‘சட்டப் புத்தகம்’ போல வேதங்கள் முதலில் வழங்கப்பட்டன.
ஆனால்,வேதங்கள் மிகவும் கடினமான மொழியில் (சமஸ் கிருதத்தில்) இருந்ததாலும்,மனிதர்கள் தங்கள் சுயநலத்தால் அதற்குத் தவறான அர்த்தங்கள் கற்பித்து திசைமாறியதாலும், வெறும் சட்டப் புத்தகத்தை மட்டும் வைத்துக் கொண்டு மனிதர் களைக் காப்பாற்ற முடியாது என்பதை எம்பெருமான் உணர்ந் தான்.
ஒரு தத்துவத்தை ஏட்டில் படிப்பதை விட, யாராவது வாழ்ந்து காட்டினால் எளிதாகப் புரியும் அல்லவா? அதற்காகவே எம் பெருமான் ராமராகவும், கிருஷ்ணராகவும் தானே பூமிக்கு இறங்கி வந்தான் (விபவ அவதாரம்).
ராமாவதாரத்தில்: “வேதம் சொன்னபடி ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும்” என்பதை தர்மத்தின் வடிவமாக (ராமோ விக்ரஹ வான் தர்மஹ) வாழ்ந்து காட்டினான்.
கிருஷ்ணாவதாரத்தில்: “தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட வேதங் களின் உண்மையான சாரம் சரணாகதிதான்” என்பதை பகவத் கீதை மூலம் (சரம ஸ்லோகம்) உபதேசம் செய்தான்.
இது இரண்டாவது நிலை
ஆனால், இதிலும் எம்பெருமானுக்குப் பூரண திருப்தி ஏற்பட வில்லை. ஏன்? அவன் அவதரித்த காலத்தில் வாழ்ந்த மனிதர் களுக்கு மட்டுமே அந்தப் பேறு கிடைத்தது. மேலும், அவன் பரம்பொருள் (கடவுள்) என்பதால், மனிதர்கள் “அவன் கடவுள், அவனால் அப்படியெல்லாம் தர்மமாக வாழ முடியும்; எங்களால் எப்படி முடியும்?” என்று தள்ளி நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.
மான் கூட்டத்தைப் பிடிக்க நினைப்பவன், மனித உருவில் போனால் மான் ஓடிவிடும்; மான் தோலைப் போர்த்திக் கொண்டு மானாகவே மாற வேண்டும்.
எம்பெருமான் சிந்தித்தான்: “நம்மைப் பார்த்து மனிதர்கள் பயப் படுகிறார்கள். எனவே, நம்முடைய நித்யசூரிகளையே (பரமபதத் தில் எப்போதும் வாழும் ஆத்மாக்களை) மனிதர்களாக, சாதாரண மனிதர்களுக்குள் ஒருவராகப் பிறக்க வைப்போம்.”என நித்ய சூரிகளை ஆழ்வாரகளாக அவதரிக்கச் செய்தான் .
அப்படி அவதரித்தவர்கள்தான் ஆழ்வார்கள்.
அவர்கள் காடு, மேடு என்று அலையாமல், தங்களின் எளிய தமிழ் பாசுரங்கள் மூலம், மனிதர்களின் உள்ளத்து உணர்வுகளோடு கலந்து பேசினார்கள். கடுமையான குழப்பமான வேதங்களை அவர்கள் அழகான தமிழில் பாடி கொடுத்தனர்.
இது மூன்றாவது நிலை.
வேதங்கள் அறிவுரை’ கூறின;
அவதாரங்கள் ‘உதாரணமாக’ நின்றன;
ஆனால் ஆழ்வார்களோ, மனிதனின் கையைப் பிடித்துக் கூட்டிச் சென்று எம்பெருமானிடம் சேர்க்கும் ‘தாயன்போடு’ பாசுரங் களைப் பாடினார்கள்.
4.நாதமுனிகள்
ஆழ்வார்கள் பக்தி நிஷ்டர்கள் . அவர்கள் எம்பெருமானின் கல் யாண குணங்களில் தங்களை முழுமையாக மறந்து, ஆழமாக மூழ்கித் திளைத்தவர்கள் (‘ஆழ்வார்’ என்ற சொல்லுக்கே ஆழக் கால்பட்டவர் என்றுதான் பொருள்).
அவர்களுடைய நோக்கம் சமூகத்தை மாற்றுவதோ, ஒரு நிறு வனத்தை உருவாக்குவதோ அல்ல; மாறாக, இறைவனுடன் தாங் கள் கொண்ட அந்த ஆத்மார்த்தமான காதலையும் அனுபவத் தையும் பாசுரங்களாகப் பொழிவது மட்டுமே. அவர்கள் ஒவ் வொருவரும் தனித்தனித் தீவுகளாக பக்திப் பெருக்கில் வாழ்ந் தார்களே தவிர, மனித குலத்தை ஒரு பெரிய இயக் கமாகவோ அமைப்பாகவோ திரட்டும் உலகியல் சிந்தனை அவர்களுக்கு இருக்கவில்லை.
இதன் விளைவாக, ஒரு பெருந்துயரம் நிகழ்ந்தது:
ஆழ்வார்களுக்குப் பிறகு, அவர்கள் அருளிச் செய்த உன்னத மான தமிழ் வேதங்கள் (நாலாயிர திவ்ய பிரபந்தம்) பாடுவாரும் கேட்பாருமின்றி முற்றிலுமாக மறைந்து போயின. ‘அரங்கன் கவி’ உலகிற்குத் தெரியாமல் மண்ணுக்குள் புதைந்த தங்கம் போலானது.
இந்த இக்கட்டான நிலையில்தான், எம்பெருமான் வைணவ மரபைக் காக்கவும், அதை ஒரு உலகளாவிய பேரியக்கமாக மாற்றவும் ஆச்சாரியார்களை அவதரிக்கச் செய்தான். அதில் முதன்மை ஆச்சாரியராக (பிரதம ஆசாரியர்) அவதரித்தவர் ஸ்ரீ நாதமுனிகள்.
ஆச்சாரியார்களின் அவதாரமும், நாதமுனிகளின் பங்களிப்பும் ஏன் வைணவத்தில் ஒரு புதிய யுகத்தைத் தோற்றுவித்தது என்பதை நாம் இப்படிப் பார்க்கலாம்:
மறைந்து போன பாசுரங்களை மீட்டெடுக்க நாதமுனிகள் மேற் கொண்ட முயற்சி ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சாதனை.
காட்டுமன்னார் கோயிலில் (வீரநாராயணபுரம்) சில பாசுரங்களை தற்செயலாகக் கேட்ட நாதமுனிகள், அதன் சிறப்பை உணர்ந்து, எஞ்சிய பாசுரங்களைத் தேடி ஆழ்வார்திருநகரிக்குச் சென்றார்.
அங்கே நம்மாழ்வாரின் சீடரான மதுரகவியாழ்வாரின் பரம் பரையில் வந்த பராங்குசதாசரைக் கண்டு, ‘கண்ணினுண் சிறுத் தாம்பு’ பாசுரத்தைப் பெற்று, அதை பத்தாயிரம் முறை யோக நிஷ்டையில் தியானித்தார்.
அதன் பயனாக, நம்மாழ்வாரே நேரில் தோன்றி, மறைந்து போன நாதமுனிகளுக்கு நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுவதையும், அதன் தத்துவ அர்த்தங்களோடு உபதேசம் செய்தார்.
பாசுரங்களை மீட்டதோடு நாதமுனிகள் நின்றுவிடவில்லை; ஆழ் வார்களால் செய்ய முடியாத அந்த ‘இயக்க வடிவத்தை’ அவர் உருவாக்கினார்:
பாசுரங்களை வெறும் பாடல்களாக வைக்காமல், அதற்குத் தாளமும் இசையும் (தேவ கானம்) அமைத்தார். தன் மருமகன் களான கீழகத்து ஆழ்வானுக்கும் மேலகத்து ஆழ்வானுக்கும் அதைக் கற்றுக்கொடுத்து, கோயில்களில் பாடச் செய்தார்.
ஸ்ரீரங்கம் போன்ற பெரிய கோயில்களில் திரு விழாக்களின் போது பாசுரங்களை அபிநயத்துடன் பாடும் ‘அரையர் சேவை‘ என்னும் வழிபாட்டு முறையைத் தொடங்கி வைத்தார்.
மார்கழித் திங்களில் ஆழ்வார்களின் பாசுரங்களைக் கொண் டாடும் ‘அத்யயன உத்ஸவம்’ (வைகுண்ட ஏகாதசி திருவிழா) முறையை முறைப்படுத்தி, தமிழ் வேதத்திற்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தார்.
வேதங்கள் வழிகாட்டின;
அவதாரங்கள் வாழ்ந்து காட்டின;
ஆழ்வார்கள் பக்தி வெள்ளத்தைப் பாய்ந்தோடச் செய்தார்கள்;
ஆனால், அந்த பக்தி வெள்ளம் வீணாகிவிடாமல், அதை அணை கட்டி, கால்வாய் வெட்டி, மனித குலத்தின் தாகத்தைத் தீர்க்கும் ‘பேரியக்கமாக’ மாற்றிய பெருமை பிரதம ஆசாரியர் நாதமுனி களையே சாரும்.
வேதங்கள் – உண்மையை அறிவித்தன.
அவதாரங்கள் – உண்மையை வாழ்ந்து காட்டின.
ஆழ்வார்கள் – உண்மையை அனுபவித்துப் பாடினர்.
நாதமுனிகள் முதலான ஆசாரியர்கள் – அந்த உண்மையை மரபாக, அமைப்பாக, தலைமுறை தலைமுறையாக நிலைநிறுத் தினர்.
ஆழ்வார்கள் அருளை வழங்கினர்;
ஆசாரியர்கள் அந்த அருளை உலகம் முழுவதும் சென்ற டையச் செய்தனர்.
நாதமுனிகளிலிருந்து தொடங்கும் ஆசாரிய பரம்பரை, ஆழ் வார்களின் அனுபவச் செல்வத்தை மனித சமுதாயத்தின் நிலை யான ஆன்மீகச் சொத்தாக மாற்றிய பெரும் பணியைச் செய்தது.
5.நாலாயிரம் தொகுப்பு
ஆழ்வார்கள் பன்னிருவர். அவர்கள் வெவ்வேறு கால கட்டங்களில் வாழ்ந்தவர்கள். சில பேர் இணைந்தும் தனித்தனி யாகவும் பாசுரங்கள் பாடி இருக்கின்றனர்.. இணைந்து என்று சொல்லும்போது முதலாழ்வார்களைச் சொல்லலாம்.
ஆழ்வார்கள் திருமங்கை ஆழ்வாரைபோல அந்தந்த திவ்ய தேசங்களுக்குச் சென்று பாசுரங்கள் பாடுவார்கள்.அல்லது நம்மாழ்வாரைப்போல இருந்த இடத்தில் இருந்தே பாடுவார்கள். அந்தப் பாசுரங்கள் எல்லா பகுதியிலும் பிரச்சாரத்தில் இருந்ததா என்பது தெரியவில்லை.
உதாரணமாக நம்மாழ்வாரின் பாசுரங்களை மதுரகவி ஆழ்வார் பரப்பினார். நம்மாழ்வாரின் பாசுரங்களைப் பரப்ப திருமங்கை யாழ்வார், முயற்சிகளை மேற்கொண்டார்.
அவர்தான் நம்மாழ்வார் திருவுருவத்தை எழுந்தருளச் செய்து, முதன் முதலில் ஸ்ரீரங்கத்தில் திருஅத்யயன உற்சவத்தில் திரு வாய்மொழி ஓதும் வழக்கத்தை (திருவாய்மொழி திருநாள்) ஏற்படுத்தியவர். ஆனால் அதற்குப் பிறகு நாதமுனிகள் காலம் வரை அங்கொன்றும் இங்கொன்றுமாக சில திவ்ய தேசங்களில் தெரிந்தவர்கள் பாசுரங்களைப் பாடினார்களே தவிர, எல்லா ஆழ்வார்களின் பாசுரங்களும் முழுமையாக தொகுக்கப் பெற வில்லை. அதைச் செய்தவர் நாதமுனிகள்.
ஆழ்வார்கள் என்னும் மேகங்கள் பொழிந்த பக்தி மழையை, திருமங்கையாழ்வார் போன்றோர் தேக்கி வைக்க முயன்றனர். ஆனால், அது வற்றிப் போகும் நிலையில், நாதமுனிகள் என்னும் உழவர்தான் அதை ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்ற ஏரியாக மாற்றி, தமிழகம் முழுவதும் பக்திப் பயிர் செழிக்கச் செய்தார்.
நாதமுனிகள், தேர்ந்த உளவியல் பேராசிரியராகவும், ரசி கராகவும் , ஆழ்ந்த பக்திமானாகவும், இசைப் பேரறிஞராகவும், யோகத்தில் சிறந்தவராகவும் இருந்ததால் வைணவ மரபைக் காப்பாற்றுவதற்கு முதலில் ஆழ்வார்கள் பாசுரங்களைக் காப் பாற்றி ஆக வேண்டும் என்ற உணர்வுடன் இருந்தார். அதற்காக அவர் செய்த ஏற்பாடுகள்.
- சிதறிக் கிடந்த ஆழ்வார்களின் பாசுரங்களை முறையாகத் தொகுத்து நாலாயிரம் ஆக்கினார்.
- அவை ஒரே தொகுப்பாக இருக்கும்போது மறைவதற்கு இனி வழி இல்லை என்று நிச்சயித்தார்..
- கோவில் உற்சவ முறைகளில், சேவா காலம் என்று ஏற் படுத்தி, ஆழ்வார்கள் பாசுரங்களைப் பாடும் முறையை உண் டாக்கினார். பூஜை முறையில் பாசுர முறை (பத்ததி) சேர்க்கப் பட்டு, நித்யாநு சந்தானமாக சேவிக்கப்படுவதால், பாசுரங்கள் இனி மறைவதற்கு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தார்.
- வைணவர்களின் இல்லங்களிலும் தினசரி வழிபாட்டு முறை யில் காலை முதல் மாலை வரை மற்றும் விசேஷ காலங்களில் இன்னின்ன ஆழ்வார்களின் பாசுரங்களை இப்படிச் சேவிக்க வேண்டும் என்ற முறையை ஏற்படுத்தியதால் இன்றைக்கும் வைணவர் இல்லங்களின் குறைந்தபட்சம் திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, கண்ணினும் சிறுத்தாம்பு, போன்ற ஆழ்வார்களின் பாசுரங்கள் வாழ்வியலோடு கலந்திருக் கின்றன.
- அதற்கடுத்து, அவருடைய மிகப்பெரிய சாதனை, இந்த பிரபந் தங்களை கிரமமாகத் தொகுத்தது.
இப்பொழுது அதைப் பற்றித் தான் இந்த ஆய்வுக் கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம்.
நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை, நாலாயிரம் என்றும், அருளிச் செயல் என்றும் சொல்லுவார்கள்.
அருளிச்செயல் என்பது பாடல்களின் தன்மையைக் குறிப்பது. ஆழ்வார்கள் தங்கள் சொந்தப் புலமையால் இதைப் பாடவில்லை; எம்பெருமானின் அருளால், அவன் உள் இருந்து ,மயர்வற மதிநலம் தந்து ஆட்கொண்டதால் “அருளப்பட்ட” சொற்கள் இவை. எனவே இது ‘அருளிச்செயல்’ எனப்பட்டது.
நாலாயிரம் என்று பாசுரங்களின் எண்ணிக்கையில் ஒரு சமய நூல் வழக்கப்படுவதில் ஒரு நுட்பம் உண்டு.
நாலாயிர திவ்ய பிரபந்தம் என்பது நூலின் அமைப்பைக் குறிப்பது. ‘பிரபந்தம்’ என்றால் ‘நன்கு கட்டப்பட்டது’ என்று பொருள்.
ஆழ்வார்கள் அத்தனை பேரும் இணைந்து எழுதிய பாசுரங்கள் எத்தனை என்பதை உடனே சொல்லிவிடலாம். நினைவு கொள்வது எளிது. எதிர்காலத்தில் ஏதேனும் ஆழ்வார் பாசுரத்தில் எண்ணிக்கைக் குறைவு ஏற்பட்டாலும் கண்டுபிடித்து விடலாம்.
அக்காலத்தில் ஓலைச்சுவடிகளில் மட்டுமே பாடல்கள் எழுதப் பட்டன. சுவடிகள் பூச்சிகளால் அரிக்கப்படலாம், காலப் போக்கில் சிதையலாம் அல்லது பிரதி எடுப்பவர்களின் கவனக் குறைவால் சில பாடல்கள் விடுபடலாம். ஆனால், நூலின் பெயரே “நாலாயிரம்” என்று இருக்கும்போது, எதிர்காலத்தில் யாராவது கணக்கிட்டுப் பார்த்தால் பாடல்கள் குறைந்திருப்பது உடனே தெரிந்துவிடும். இது “எண்ணிக்கைக் குறைவு ஏற்பட்டால் கண்டு பிடிப்பதற்கான” ஒரு பாதுகாப்பு வளையமாகச் செயல்பட்டது.
இலக்கியங்களையும் பக்திப் பாடல்களையும் ஆன்மிகக் கண் ணோட்டத்தோடு மட்டுமல்லாமல், சுவடிகளைப் பாதுகாக்கும் தொலைநோக்கு மேலாண்மை மற்றும் கட்டமைப்பு நுட்பத் தோடு நாதமுனிகள் செய்திருக்கிறார்.
நாதமுனிகள் தொகுப்பில் செய்த இரண்டு முக்கிய பணிகள்
1.ஆழ்வார் பிரபந்தங்களுக்குப் பெயர் சூட்டியது.
2.நான்கு ஆயிரமாகத் தொகுத்து அமைத்தது (வரிசை)
6.பிரபந்தங்களுக்கு எப்படிப் பெயர் சூட்டினார்?
நாதமுனிகள் பாசுரங்களைத் தேடிக் கண்டுபிடித்ததோடு நின்று விடாமல், அவற்றுக்கு முறையான பெயர்களைச் சூட்டி, ஒரு நேர்த்தியான வரிசையில் அமைத்ததே இன்று நாம் ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்று கொண்டாடுவதற்குக் காரணம்.
அவர் பிரபந்தங்களுக்குப் பெயர் சூட்டிய விதம், அவற்றின் பாடு பொருள், இசை வடிவம் மற்றும் பாசுரங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
பிரபந்தங்களுக்கு அவர் பெயர் சூட்டிய மற்றும் வரிசைப்படுத்திய நுட்பமான வழிமுறைகள் இதோ:
- நான்கு பெரும் பிரிவுகளாகத் தொகுத்தல் (நான்கு வேதங் களுக்கு இணையாக) நாதமுனிகள் ஒட்டுமொத்த 4000 பாசுரங் களையும் சமமாகப் பிரித்து, நான்கு பெரும் தொகுதிகளாக வரிசைப்படுத்தினார்:
1.முதலாயிரம் (இசைப் பாசுரங்கள் – முதல் பகுதி)
2.பெரியதிருமொழி (திருமங்கையாழ்வாரின் தனிப் பெரும் பங்களிப்பு)
3.திருவாய்மொழி (நம்மாழ்வாரின் முதன்மைப் பனுவல்)
4.இயற்பா (இசை இல்லாமல், இயல் நடையில் ஓதக்கூடிய பாசுரங்கள்)
- தனித்தனி பிரபந்தங்களுக்குப் பெயர் சூட்டிய நுட்பம்
ஒவ்வொரு ஆழ்வாரின் பாடல்களையும் தனித்தனிப் ‘பிரபந்தங் களாகப்’ பிரித்து, அவற்றுக்குப் பெயர் சூட்டியதில் நாதமுனிகள் சில முக்கியக் காரணிகளைக் கையாண்டார்:
- முதற்குறிப்பால் பெயர் பெற்றவை
பல்லாண்டு என்று தொடங்கும் பெரியாழ்வார் இறைவனுக்குக் காப்பிட்டுப் பாடிய முதல் 12 பாசுரங்கள், தனிப் பிரபந்தமாக ‘திருப்பல்லாண்டு’ எனப் பெயரிடப்பட்டது.
திருப்பாணாழ்வார் பாடிய 10 பாசுரங்கள். இதன் முதல் பாசுரம் “அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன்…” என்று தொடங்குவதால், இப்பெயர் பெற்றது.
மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரைப் போற்றிப் பாடிய 11 பாசுரங் கள். இதன் முதல் வரி “கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண் ணப் பண்ணிய…” எனத் தொடங்குவதால் இதே பெயரால் அழைக் கப்படுகிறது.
- அந்தாதிக் தொடையால் பெயர் பெற்றவை
முதல் திருவந்தாதி
இரண்டாம் திருவந்தாதி
மூன்றாம் திருவந்தாதி
- முதற்குறிப்பாலும் அந்தாதிக் தொடையாலும்
நான்முகன் திருவந்தாதி
- பாடியோரால் பெயர் பெற்றவை
பெரியாழ்வார் திருமொழி
நாச்சியார் திருமொழி
பெருமாள் திருமொழி- குலசேகராழ்வார் பாடிய 105 பாசுரங்கள். சேர மன்னரான இவரை வைணவ மரபில் ‘குல சேகரப் பெருமாள்’ என்றே அழைப்பர், அதனால் அவர் பாடியது பெருமாள் திருமொழி.
- அளவால் பெயர் பெற்றது
பெரிய திருமொழி
- எண்ணலங்காரம்
திரு எழுகூற்றிருக்கை
- பாவால் யாப்பால் பெயர் பெற்றவை
திருவாசிரியம்
திருச்சந்த விருத்தம்-திருமழிசையாழ்வார் ‘சந்தம்’ என்ற தனித்துவமான இசை நடையில் பாடிய 120 பாசுரங்கள்.
திருக்குறுந்தாண்டகம்
திருநெடுந்தாண்டகம்,திருகுறுந்தாண்டகம் -திருமங்கை யாழ்வார் பாடியவை. ‘தாண்டகம்’ என்பது தமிழ்ப் பாவின வகை. நீண்ட அடிகளைக் கொண்டது நெடுந்தாண்டகம் (30 பாடல்கள்), குறுகிய அடிகளைக் கொண்டது குறுந்தாண்டகம் (20 பாடல்கள்).
- செயலால் பெயர் பெற்றவை
திருப்பாவை (பாவை நோன்பு நோற்றல்)-ஆண்டாள் மார்கழி நோன்பிருந்து பாடிய 30 பாசுரங்கள். ‘பாவை நோன்பு’ என்ற பாடுபொருளால் இப்பெயர் பெற்றது.
திருப்பள்ளியெழுச்சி (பள்ளி எழுப்புதல்)-அரங்கநாதனைத் துயில் எழுப்பப் பாடியது ‘திருப்பள்ளியெழுச்சி’ (10 பாடல்கள்).
9.தன்மையால் பெயர் பெற்றவை
திருவிருத்தம்
சிறியதிருமடல்
பெரிய திருமடல்
திருமாலை- தொண்டரடிப்பொடியாழ்வார் பாடியவை. இறைவனுக்குச் சூட்டும் மலர்மாலை போன்ற பாசுரங்கள் ‘திருமாலை’ (45 பாடல்கள்);
- சிறப்பால் பெயர்பெற்றது
திருவாய்மொழி-திருவடிவிலிருந்து (வாய்) வந்த மொழி” அல்லது “வேதத்தின் சாரம்” என்ற பொருளில் இதற்குத் திருவாய்மொழி என்று நாதமுனிகள் பெயரிட்டார்.(வேதம் -வாய்மொழி -எழுதாக்கிளவி)
- நூலின் பொருள் சிறப்பால் பெயர்பெற்றது
பெரியதிருவந்தாதி
இவற்றால் நாதமுனிகள் பழைய தமிழ் மரபுகளைத் தழுவிப் பதிய மரபுகளை தோற்றுவித்துள்ளார்.
சிலப்பதிகாரம் அருகதேவனின் அருளிச் செயல்களை பெருமகன் திருமொழி திருமாலே* என்கிறார். அந்த முறையில் பெரி யாழ்வார் திருமொழி, நாச்சியர் திருமொழி, பெருமாள் திருமொழி என்று பெயரிடப்பட்டுள்ளன. பாசுரங்களின் மிகுதியான எண்ணிக் கையாலும் அதிகமான யாப்புகளாலும் பெரிய திருமொழி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ் தொகை நூல்கள் பாடுபொருள் கொண்டு தொகையாக புறநானூறு ஐங்குறுநூறு மற்றும் பத்து பகுதிகளைக் கொண்ட பதிற்றுப்பத்து என்ற பெயர்களில் இருக்கின்றன.
நாதமுனிகள் 100 பாடல்களைக் கொண்ட தொகுப்பை பத்து என்று குறிப்பிடுகிறார். 10- 11 பாசுரங்கள் கொண்ட தொகுப்பை பதிகம் என்று அமைகிறார்.
10 பதிகங்கள் கொண்ட 100 பாடல்களை பத்து (சதகம்) என்று நாத முனிகள் அமைத்துள்ளார். இது வேத அடிப்படையில் ரிக் வேத மண்டலங்கள் என்ற உட்பிரிவை ஒட்டியது. இந்த அடிப் படையில்முதல் பத்து ,இரண்டாம் பத்து மூன்றாம் பத்து என்று எண்ணிக்கை சொல்லப்படுகின்றன.
நாதமுனிகள் இப்படி இலக்கணத் தூய்மையோடும், இசை நுணுக் கத்தோடும் பெயரிட்டு முறைப்படுத்தியதால்தான், சிதையாமால் ,ஆழ்வார்களின் அருந்தமிழ் இன்றுவரை அடுத்தடுத்த தலை முறைகளுக்குக் கடத்தப்பட்டு வருகிறது.
7.ஆழ்வார்களும் அவர்கள் அருளிய பிரபந்தங்களும் அதில் உள்ள பாசுர எண்ணிக்கையும்
- 1.பொய்கையாழ்வார்- முதல் திருவந்தாதி-100 பாசுரங்கள்
2.பூதத்தாழ்வார்- இரண்டாம் திருவந்தாதி- 100 பாசுரங்கள்
3.பேயாழ்வார்- மூன்றாம் திருவந்தாதி- 100 பாசுரங்கள்
4.திருமழிசையாழ்வார்
- திருச்சந்தவிருத்தம்- 120 பாசுரங்கள்
- நான்முகன் திருவந்தாதி- பாசுரங்கள்
- நம்மாழ்வார்
- திருவிருத்தம்- 100 பாசுரங்கள்
- பெரிய திருவந்தாதி- 87 பாசுரங்கள்
- திருவாசிரியம் – 7 பாசுரங்கள்
- திருவாய்மொழி-1102 பாசுரங்கள்
- பெரியாழ்வார்
- திருப்பல்லாண்டு-12 பாசுரங்கள்
- பெரியாழ்வார் திருமொழி- 461 பாசுரங்கள்
- ஆண்டாள்
- திருப்பாவை-30 பாசுரங்கள்
- நாச்சியார் திருமொழி-143 பாசுரங்கள்
- மதுரகவி ஆழ்வார்
கண்ணிநுண் சிறுத்தாம்பு-11 பாசுரங்கள்
9 . குலசேகர ஆழ்வார்
பெருமாள் திருமொழி-105 பாசுரங்கள்
10 தொண்டரடி பொடியாழ்வார்
- திருமாலை-45 பாசுரங்கள்
- திருப்பள்ளி எழுச்சி-10 பாசுரங்கள்
- திருப்பாணாழ்வார்
- அமலன் ஆதிபிரான் -10 பாசுரங்கள்
- திருமங்கை ஆழ்வார்
- பெரிய திருமொழி- 1084 பாசுரங்கள்
2.. திருகுறுந்தாண்டகம் -20 பாசுரங்கள்
3.திருநெடுந்தாண்டகம் -30 பாசுரங்கள்
4.திருஎழுகூற்றிக்கை -1
5.சிறிய திருமடல் -77+1/2 பாட்டு
6.பெரிய திருமடல் -148+1/2 பாட்டு
ஆக 12 ஆழ்வார்களின் மொத்தப் பிரபந்தங்கள் 24. மொத்த பாசுரங்கள் 4000.
இவை நான்கு ஆயிரங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
முதல் ஆயிரத்தில் திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, திருப் பாவை, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி, திருச்சந்த விருத்தம், திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, அமலனாதிபிரான், கண்ணிநுண் சிறுத்தாம்பு ஆகிய 10 பிர பந்தங்கள் சேர்த்து மொத்தப் பாசுரங்கள் – 947
இரண்டாவது ஆயிரத்தில் திருமங்கையாழ்வாரின் பெரிய திரு மொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், சேர்ந்து பாசுரங்கள் – 1134
மூன்றாம் ஆயிரத்தில் நம்மாழ்வார் திருவாய்மொழி மட்டும் பாசுரங்கள் –1102
நான்காம் ஆயிரத்தில், முதல் திருவந்தாதி, இரண்டாம் திரு வந்தாதி, மூன்றாம் திருவந்தாதி, நான்முகன் திருவந்தாதி ,திரு விருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருஎழுகூற்றி ருக்கை, சிறிய திருமடல் பெரிய திருமடல் சேர்ந்து பாசுரங் கள் –817 .
ஆக 947+1134+1102+817=4000 பாசுரங்கள்(தென்கலை சம்பிரதா யப்படி )ஆதாரம் –ஸ்ரீமன் நாதமுனிகள் வைபவப் பிரகாசிகை டாக்டர் ஏ வி ரங்கா சாரியார் பக்கம் 62 -63.
8.வேதங்கள் 4, பிரபந்தங்கள் 4 ஆயிரம்
ஸ்ரீமன் நாதமுனிகளின் நுட்பமான அறிவு, இந்த நான்கு ஆயிரத்தை எப்படிப் பிரித்துத் தொகுத்தார் என்பதில் வெளிப் படுகிறது.
வேத வியாசர், வேதங்களை நான்காகப் பிரித்தது போல, நாதமுனிகள், ஆழ்வார்களின் அருளிச் செயலை நான்கு ஆயிர மாகப் பிரித்தார்.
வேதங்களை வியாசர் பிரிக்கவில்லை என்றால் எப்படி அவை நமக்குக் கிடைத்திருக்காதோ, அதேபோல நாதமுனிகள் இந்த ‘அனுசந்தான கிரமத்தில்’ நாலாயிரத்தைப் பிரித்து, அதற்கு இசை யமைத்துத் தந்திராவிட்டால், தமிழ் உலகிற்கு இந்தத் திவ்யப் பிரபந்தங்கள் கிடைத்திருக்கவே வாய்ப்பில்லை.
வைணவ மரபில் அவரை “நாதமுனிகள்” (நாதங்களை, அதாவது இசையையும் தத்துவத்தையும் கூட்டிய முனிவர்) என்று அழைப்பது மிகப் பொறுத்தமானது.
நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் வரிசைக் கிரமத்தை இரண்டு விதமாகச் சொல்லலாம்.
- அவதாரக் கிரமம்
- அனுஷ்டானக் கிரமம்
அவதாரக் கிரமம் என்பது, பிரபந்தங்கள் எந்த வரிசையில் அவ தரித்தன என்னும் அவதார அடிப்படையில் கால வரிசைப்படித் தொகுப்பது. அப்படித் தொகுத்தால் நாலாயிரப் பிரபந்தத்தின் முதல் பிரபந்தம் பொய்கை ஆழ்வாரின் முதல் திருவந்தாதி எனத் தொடங்கி, இரண்டாம் ,மூன்றாம் ,நான்காம் திருவந்தாதி என்று போகும். கடைசியாக திருமங்கையாழ்வாரின் பிரபந்தங்கள் வந்திருக்கும்.
ஆனால், நாதமுனிகள் இந்தப் பிரபந்தங்களை தொகுக்கும் பொழுது, அனுஷ்டான வரிசையில் (செய்முறையாக ) தொகுத் தார்.
அனுஷ்டான வரிசையாகத் தொகுக்கும்போது அதற்கும் ஒரு அடிப்படை வேண்டும் அல்லவா. இதற்கு அவர் எடுத்துக் கொண் டது வடமொழி வேதங்களை.
வடமொழி வேதங்களை அடிப்படையாகக் கொண்டு பிரபந்தங் களைத் தொகுத்தார். அப்படியானால் அவதார கிரமத்தை விட்டு விட்டாரா என்று கேட்கலாம். முதலாயிரம், பெரிய திருமொழி, திருவாய்மொழி ஆகியவற்றை அனுசந்தான கிரமத்திலும், இயற்பாவை அவதாரக் கிரமத்திலும் அமைத்தார்..
வைணவ மரபில், வேதங்களின் சாரமாக, முமூஷுக்கள் அரிய வேண்டிய, மூன்று மகா மந்திரங்களைச் சொல்வார்கள்.
- திருமந்திரம் எனும் எட்டெழுத்து மந்திரம்
- த்வயம் எனும் 25 எழுத்து மந்திரம்
- சரம ஸ்லோகம் 32 எழுத்து மந்திரம்
இதனை ரகசியங்கள் மூன்று என்று சொல்வார்கள்.
9.முதலாயிரத்தின் ஓங்கார சப்த விளக்கமாக 9 பிரபந் தங்கள்
முதலில் அவதரித்தது திருமந்திரம் எனும் எட்டெழுத்து மந்திரம். திருமந்திரத்தில், மூன்று பதங்கள் இருக்கின்றன. முதல் பதம் பிரணவம்.(ஓம்) இரண்டாவது பதம் நம. மூன்றாவது பதம் நாராயணாய.
முதலாயிரத்தின் தொடக்கமே பெரியாழ்வாரின் “பல்லாண்டு பல்லாண்டு” என இறைவனுக்குக் காப்பிடுவதில் தொடங்குகிறது. திருமந்திரத்தின் முதல் சொல்லான ‘ஓம்’ (பிரணவம்) எவ்வாறு இறைவனின் பரத்துவத்தையும் (உயர்வையும்), அவனுக்கே நாம் அடிமை என்பதையும் காட்டுகிறதோ, அதேபோல முதலாயிரம் முழுவதும் இறைவனின் பெருமைகளையும் அவனுக்கே நாம் செய்யும் கைங்கரியத்தையும் (தொண்டையும்) பேசுகிறது.
திருமந்திரத்தின் முதல் பதமான பிரணவம், எவ்வாறு முதலாயிரத்தின் ஒன்பது பிரபந்தங்களுக்கு அடிப்படையாக அமைகிறது என்பதை மேலும் ஆழமாகப் பார்க்கலாம்:
பிரணவத்தின் முதல் எழுத்தான ‘அ’ காரம், அகில உலகிற்கும் காரணமானவனும், அனைவரையும் காப்பவனுமான (ஸர்வ ரக்ஷகன்) நாராயணனைச் சொல்லுகிறது.
திருப்பல்லாண்டு: எம்பெருமானின் வடிவழகைக் கண்டு, அவனுக்குத் தீங்கு வந்துவிடுமோ என்று அஞ்சி, காக்கும் கடவுளுக்கே ‘பல்லாண்டு பாடி” காப்பு இடுகிறார் பெரியாழ்வார்.
இது ‘அ’ காரத்தின் ரக்ஷகத்துவத்தின் உச்சம்.
பெரியாழ்வார் திருமொழி: கண்ணனின் அவதார லீலைகளையும், அவன் உலகைக் காக்க எடுத்த முயற்சிகளையும் விவரிப்பதன் மூலம் இறைவனின் மேன்மையை நிலைநாட்டுகிறது.
‘உ’ காரம் என்பது, ஜீவாத்மா எம்பெருமானுக்கு மட்டுமே உரியவன் (அநந்யார்ஹ சேஷத்துவம்) என்பதைக் குறிக்கும். இதில் மகாலட்சுமியின் (பிராட்டியின்) புருஷகாரத்வம் (பரிந் துரை) அடங்கியுள்ளது.
திருப்பாவை + நாச்சியார் திருமொழி: ஆண்டாள் நாச்சியார், ஜீவாத்மா இறைவனைத் தவிர வேறு யாரையும் அடையக் கூடாது என்பதையும், அவனுக்கே அடிமை பூண வேண்டும் என்பதையும் தன் காதலால் (பக்தி) உணர்த்துகிறார். இது ‘உ’ காரத்தின் சாரமாகும்.
பெருமாள் திருமொழி: குலசேகர ஆழ்வார், “படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே” என்று இறைவனுக்கு மட்டுமே தான் உரியவன் என்பதைத் தெளிவாகப் பறைசாற்றுகிறார்.
‘ம’ காரம் என்பது ஜீவாத்மாவைக் குறிக்கும். இது ஆத்மா உடலை விட வேறானது (தேஹாந்தர விலக்ஷணம்) என்பதையும், அது ஞானமே வடிவானது என்பதையும் காட்டுகிறது.
திருச்சந்த விருத்தம்: திருமழிசை ஆழ்வார், தத்துவங்களை (24 தத்துவங்கள் மற்றும் ஆத்மா) மிக நுட்பமாகப் பகுத்து ஆராய்ந்து, உடலைத் தாண்டிய ஆத்ம ஞானத்தைப் பேசுகிறார்.
நாதமுனிகள் இந்த வரிசையை அமைத்ததில் ஒரு தத்துவ ஒழுங்கு இருக்கிறது. ஜீவாத்மா தன்னை உணர்ந்து (ம காரம்), இறைவனின் புகழைப் பாடி (அ காரம்), அவனுக்கே ஆட்பட்டு (உ காரம்) முக்தி அடையும் பாதையை இந்த ஒன்பது பிரபந்தங்களும் காட்டுகின்றன.இந்த வரிசைமுறையில், முதலாயிரம் வெறும் பாடல்களின் தொகுப்பு மட்டுமல்ல; அது ஒரு முமூக்ஷு (மோட்சத்தை விரும்புபவர்) தனது ஆன்மீகப் பயணத்தில் கடக்க வேண்டிய சரணாகதிப் படிநிலைகளின் வரைபடம்.
தானே சிஷ்யனுமாய் ஆசார்யனுமாய் நின்று” பகவான் அருளிய மந்திரத்தின் பொருளை, ஆழ்வார்களின் பாசுரங்கள் வழியாக நாதமுனிகள் நமக்குப் புரிய வைத்துள்ளார். இந்த ஒன்பது பிரபந்தங்களை தினமும் சேவிப்பது என்பது திருமந்திரத்தை முறைப்படி உச்சரிப்பதற்கு இணையான பலனைத் தரும் என்பது பெரியோர்களின் வாக்கு.
திருமாலை, திருப்பள்ளி எழுச்சி, அமலனாதிபிரான்: திருப்பள்ளி எழுச்சி ஆத்மா இறைவனை நோக்கித் துயில் எழுவதையும், திருமாலை அவனது குணங்களில் மூழ்கித் திளைப்பதையும் காட்டுகின்றன. ‘அமலனாதிபிரான்’ ஆத்மா இறைவனின் திருமேனி அழகில் லயித்துத் தன்னை மறப்பதைக் குறிக்கிறது.
10.நம பதம் – கண்ணிநுண் சிறுத்தாம்பு
திருமந்திரத்தின் இரண்டாவது பதமான “நம:” என்பதற்கு இலக்கண மற்றும் தத்துவப் பகுப்பாய்வு வைணவ ரகசியார்த் தங்களின் மிக ஆழமான உண்மையை வெளிப்படுத்துகிறது.
வைணவ ஆச்சார்யர்கள் இதனை “அஹங்கார-மமகார நிவி ருத்தி” என்பார்கள்.
“ம:” (மம): எனது, நான் எனக்குரியவன் (சுவாதந்திரிய புத்தி / மமகாரம்).
“ந”: இல்லை (அதனை மறுப்பது).
“நம:”: நான் எனக்குரியவன் அல்லன்;
எனது என்று எதுவும் இல்லை; எல்லாம் எம்பெருமானுக்கே உரியது. நாதமுனிகள் ஏன் மதுரகவி ஆழ்வாரின் “கண்ணிநுண் சிறுத்தாம்பு” பிரபந்தத்தை பத்தாவது பிரபந்தமாக இதனுடன் சேர்த்து முதலாயிரத்தை நிறைவு செய்தார் என்பதற்கான காரணம் இந்த “நம:” பதத்தில் தான் அடங்கியுள்ளது.
“நம:” பதம் என் முயற்சியால் எதுவும் இல்லை என்பதை உணர்த்துகிறது. மதுரகவி ஆழ்வார் தன் பாசுரத்தில் இறைவனைப் பற்றி நேரடியாகப் பாடவே இல்லை.
“தேவு மற்றறியேன் குருகூர் நம்பி” (நம்மாழ்வாரைத் தவிர வேறு தெய்வத்தை நான் அறியேன்) என்கிறார்.
“நான் எனக்குரியவன் அல்லன், என் ஆச்சார்யனாகிய நம்மாழ் வாருக்கே உரியவன்” என்று தன் ஆத்மாவை ஆச்சார்யனிடம் ஒப்படைப்பது “நம:” என்பதன் சிறந்த வடிவமாகும்.
முதலாயிரத்தின் முந்தைய 9 பிரபந்தங்களும் இறைவனைப் பற்றிக் கூறின (பகவத் விஷயம்).
ஆனால் வைணவத்தில், இறைவனை நேரடியாகப் பற்றுவதை விட, அவனது அடியாரையும் ஆச்சார்யனையும் பற்றுவதே (பாகவத விஷயம்) மிக உயர்ந்தது.
“அ” காரத்தில் தொடங்கிய ஜீவாத்மாவின் பயணம், “நம:” என்ற ஆச்சார்ய சரணாகதியில் (கண்ணிநுண்சிறுத்தாம்பில்) முடியும் போதுதான் முதலாயிரம் தத்துவ ரீதியாக முழுமை பெறுகிறது.
நாதமுனிகள் காலத்தால் பிற்பட்ட மதுரகவி ஆழ்வாரின் பிரபந்தத்தை, கால வரிசையை (அவதாரக் கிரமத்தை) உடைத்து முதலாயிரத்தின் இறுதியில் வைத்ததற்கு இதுவே காரணம்.
திருமந்திரத்தின் “பிரணவமும்” (முதல் 9 பிரபந்தங்கள்), “நம:” பதமும் (10-ஆவது பிரபந்தம்) இணைந்தால்தான் “முதலாயிரம்” என்ற தத்துவக் கட்டமைப்பு நிறையும் என்று அவர் கணித்தார்.
11.நாராயணாய -இரண்டாம் ஆயிரம்
வைணவ தத்துவத்தில் நாராயண பதம் இரண்டு பெரும் பொருள் களை (வ்யுத்பத்திகளை) உள்ளடக்கியது:
1.தத்புருஷ ஸமாஸம் (அயனத்தின் நாரங்கள்): நாரங்களுக்கு (பொருள்களுக்கு) எம்பெருமான் இருப்பிடமாக (ஆதாரமாக) இருப்பது. அதாவது, அவனுக்குள் அனைத்தும் அடக்கம்.
2.பஹுவ்ரீஹி ஸமாஸம் (நாரங்களை அயனமாக உடை யவன்): எம்பெருமான் அனைத்துப் பொருள்களுக்குள்ளும் அந்தர் யாமியாக (உள் உறைபவனாக) இருப்பது.
அறிவு, ஆனந்தம், கல்யாண குணங்கள், திவ்ய ஆயுதங்கள், பெரிய பிராட்டி உள்ளிட்ட நாச்சிமார்கள், நித்தியசூரிகள், பர மாகாசம் (வைகுண்டம்) முதல் இந்த அண்ட சராசரங்கள், தேவர்கள் வரை அனைத்தும் இந்த ‘நாரங்கள்’ என்ற சொல் லுக்குள் அடங்கிவிடுகின்றன. இவற்றுக்கு ஆதாரமாக விளங் குவதால் அவன் பரத்வம் (மேன்மை) மிக்கவன்; அதே சமயம் அவற்றுக்குள் உறைவதால் அந்தர்யாமித்வம் மற்றும் ஸௌசீல்யம் (எளிமை) மிக்கவன்.
முதலாயிரத்தை திருமந்திரத்தின் முதல் இரண்டு பதங்களோடு (ஓம், நம:) முடித்த ஸ்ரீமந் நாதமுனிகள், இந்த விரிந்த நாராயண பதத்தின் விளக்கமாகவே இரண்டாம் ஆயிரத்தை அமைத்தார்.
இதில் திருமங்கையாழ்வாரின் மூன்று முக்கிய பிரபந்தங்களை அவர் வரிசைப்படுத்தியதன் தத்துவப் பின்னணி இது.
- பெரிய திருமொழி: நாராயண நாமத்தின் மகிமை
திருமங்கையாழ்வார் தன் பிரபந்தத்தின் முதல் பதிகத்திலேயே, தான் பலவாறு உழன்று துன்புற்று, இறுதியில் கண்டுகொண்டது “நாராயணா என்னும் நாமம்” என்று இந்த பதத்தையே முதன் மையாகப் போற்றுகிறார். நாராயண பதத்தில் அடங்கியுள்ள அத்தனை குணங்களையும், வடிவங்களையும் (அர்ச்சை வடிவங்களாக) நாடு முழுவதும் உள்ள திவ்ய தேசங்களுக்குச் சென்று அவர் மங்களாசாசனம் செய்ததே இந்த பெரிய திருமொழியாகும்.
- தாண்டகங்கள் காட்டும் தத்துவம்
திருக்குறுந்தாண்டகமும் திருநெடுந்தாண்டகமும் நாராயண பதத்தின் ஆழமான தத்துவ முடிச்சுகளை அவிழ்க்கின்றன. குறிப்பாக, திருநெடுந்தாண்டகம் வைணவத்தின் மிக முக்கிய பிரபந்தமாகக் கருதப்படுகிறது (இதற்குப் பராசர பட்டர் அருளிய உரை மிகவும் பிரசித்தி பெற்றது). நாராயணனே உபாயம் (வழி) மற்றும் உபேயம் (இலக்கு) என்பதை இவை தெள்ளத்தெளிவாக நிறுவுகின்றன.
திருமங்கையாழ்வாரின் இந்த மூன்று பிரபந்தங்களும் சேர்ந்து மொத்தம் 1134 பாசுரங்களாக வருகின்றன. எண்ணிக்கையில் இது ஆயிரத்தைத் தாண்டினாலும், ‘நாராயண’ பதத்தின் விரிவான விளக்கமாக இவை அமைந்திருப்பதால், நாதமுனிகள் இவற்றை ஒரே தொகுப்பாக “இரண்டாம் ஆயிரம்” (பெரிய திருமொழித் தொகுப்பு) என்று பெயரிட்டு அமைத்தார்.
12.த்வய மந்த்ரம் திருவாய்மொழி
திருமந்திரத்தின் விரிவாக முதலாயிரமும் இரண்டாம் ஆயிரமும் அமைந்த விபரத்தைக் கண்டோம். அடுத்து த்வய மந்திரம், வைணவத்தில் “மந்திர ரத்தினம்” என்று போற்றப் படுகிறது.
காரணம், அது வெறும் தத்துவங்களை மட்டும் பேசாமல், ஒரு ஜீவாத்மா உய்வடைவதற்கான செயல்முறை வழியை (உபாயத் தையும் உபேயத்தையும்) காட்டுகிறது.
இதனை அடிப்படையாகக் கொண்டு, நாதமுனிகள் நம்மாழ் வாரின் திருவாய்மொழியை மூன்றாவது ஆயிரமாக அமைத்தார்
த்வய மந்திரம் இரண்டு வாக்கியங்களைக் கொண்டது:
- பூர்வ வாக்யம் (முதல் வரி):
ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே
- உத்தர வாக்யம் (இரண்டாம் வரி):
ஸ்ரீமதே நாராயணாய நம:
நம்மாழ்வார் அருளிய 1102 பாசுரங்களைக் கொண்ட திருவாய் மொழி முழுவதுமே, இந்த இரண்டு வாக்கியங்களின் விரிவுரை யாகவே (வ்யாக்யானமாகவே) திகழ்கிறது.
- பூர்வ வாக்யமும் திருவாய்மொழியின் தொடக்கமும்
மந்திரத்தின் பொருள்: பெரிய பிராட்டியாரை (மகாலட்சுமியை) முன்னிட்டுக்கொண்டு (புருஷகாரமாக வைத்து), எம்பெருமா னுடைய திருவடிகளையே தஞ்சமாகப் (உபாயமாகப்) பற்றுவது.
நம்மாழ்வார் திருவாய்மொழியின் முதல் பாசுரத்திலேயே, “உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன் / மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்” என்று தொடங்கி, “துயரறு சுடரடி தொழுதெழென் மனனே” என்று எம்பெருமானின் திருவடி களையே தஞ்சமாகப் பற்றுகிறார்.
திருவாய்மொழியின் ஆறாம் பத்தில் (6.10), திருவேங்கட முடையான் (திருப்பதி ஏழுமலையான்) சந்நிதியில், “அகலகில் லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா” என்று பிராட்டியை முன்னிலைப்படுத்தி, “உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந் தேனே” என்று த்வய மந்திரத்தின் பூர்வ வாக்யப் பொருளை அப்படியே பாசுரமாக வடித்திருப்பார்.
- உத்தர வாக்யமும் திருவாய்மொழியின் முடிவும்
பெருமாளும் பிராட்டியும் இணைந்திருக்கும் திவ்ய தம்பதிகளின் சேர்த்தியிலே, தனக்காக இல்லாமல் (மமகாரமற்று) அவனுடைய உவப்பிற்காக மட்டுமே நித்திய அடிமை (கைங்கரியம்) செய்ய வேண்டும் என்று வேண்டுவது (நாராயணாய நம:).
நம்மாழ்வார் தன் பிரபந்தத்தின் மூன்றாம் பத்தில் (3.3), “ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி / வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்” என்று எம்பெருமானுக்கு எக்காலத்திலும் வழுவாத கைங்கரியம் செய்ய வேண்டும் என்று உருகுகிறார்.
திருவாய்மொழியின் இறுதிப் பத்தில், ஜீவாத்மா அர்ச்சிராதி மார்க்கம் வழியாக வைகுண்டம் சென்று, அங்கே திவ்ய தம்பதி களின் சேர்த்தியில் நித்திய கைங்கரியம் பெற்றுத் திளைப்பதோடு திருவாய்மொழி நிறைவு பெறுகிறது.
த்வய மந்திரத்தின் இறுதிப் பொருளான ‘கைங்கரியப் பேறு’ இங்கு தான் சித்திக்கிறது.
நம்மாழ்வார் ரிக், யஜுர், ஸாம, அதர்வண என்ற நான்கு வேதங்களின் சாரமாக நான்கு பிரபந்தங்களைச் செய்துள்ளார் (திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய் மொழி).
அவற்றுள் ஸாம வேதத்தின் சாரமாக விளங்கும் திருவாய் மொழி, த்வய மந்திரத்தின் முழு வடிவமாக இருப்பதால், நாத முனிகள் இதனைத் தனித் தொகுப்பாக, மிக உயரிய இடத்தில் “மூன்றாவது ஆயிரமாக” அமைத்தார்.
வைணவர்கள் அன்றாடம் அநுசந்திக்கும் மிக முக்கியப் பகுதி யாக இது விளங்குவதற்குக் காரணமும் இந்த த்வய மந்திரத் தொடர்பே ஆகும்!
வேதங்களில் நான் சாம வேதமாக இருக்கிறேன் (வேதானாம் ஸாமவேதோஸ்மி) என்று பகவத் கீதையில் கண்ணன் சிறப் பித்துக் கூறுவான்.
இசை வடிவமான அந்தச் சாம வேதத்திற்கும் திருவாய் மொழிக்கும் உள்ள பொருத்தத்தை நாதமுனிகள் கண்டறிந்த விதம் வியப்பிற்குரியது:
வடமொழியில் சாம வேதத்திற்கு ஆயிரம் கிளைகள் (ஸஹஸ்ர சாகா) உண்டு என்பார்கள்.
நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழியும் மிகச் சரியாக ஆயிரத்து நுாற்று இரண்டு (1102) பாசுரங்களைக் கொண்டது. (இதனைத்தான் மரபில் ‘திருவாய்மொழி ஆயிரம்’ என்பார்கள்).
சாம வேதத்தின் ஒவ்வொரு கிளைக்கும் ஒரு பாசுரம் என்ற வீதத்தில், சாம வேதத்தின் சாரமாக விளங்கும் சாந்தோக்கிய உபநிஷத்தின் ஒட்டுமொத்த தத்துவத்தையும் நம்மாழ்வார் தமிழில் பாடி அருளினார்.
சாந்தோக்கிய உபநிஷத்தின் மிக முக்கியப் பகுதி “ஸத் வித்யா” ஆகும். அதாவது “பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னால் ‘ஸத்’ (உண்மை/இறைவன்) மட்டுமே இருந்தது; அதுவே உலகமாகப் பெருகியது” என்ற தத்துவம்.
நம்மாழ்வார் திருவாய்மொழியின் முதல் பத்தின் இரண்டாவது பதிகத்தில் (1.2.1) இதனை அப்படியே தமிழில் கொண்டு வரு கிறார்:
“வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடையான் இடை வீடுசெய்மினே“
உலகப் பற்றுகளை நீக்கி, எல்லாவற்றிற்கும் காரணமான அந்த ‘ஸத்’ ஆகிய பரம்பொருளிடம் ஆத்மாவைச் சமர்ப்பிக்கச் சொல் லும் சாந்தோக்கிய உபநிஷத்தின் சாரமே இந்த வரிகள்.
நாத முனிகள் சாம வேதத்தின் இசைப் பண்பையும் தத்துவப் பண்பையும் உணர்ந்தே, திருவாய்மொழிக்குத் தேவதான இசை அமைத்து, அதனைத் தனிப் பெரும் மூன்றாவது ஆயிரமாக அநுசந்தான கிரமத்தில் வைத்தார்.
13.இயற்பா–நான்காம் ஆயிரம்
இதுவரை அனுஷ்டான கிரமத்திலே முதல் மூன்று ஆயிரங்களை அமைத்த நாதமுனிகள் ,சரமச்லோக விவரணமான இயற்பா பிரபந்தங்களை அவதார க்ரமத்திலே நான்காவது ஆயிரமாக அமைத்தார்.
சரமம் என்ற வடமொழிச் சொல்லுக்கு “இறுதி” அல்லது “நிறைவு” என்று பொருள். நாதமுனிகள் இதனை இரண்டு தளங்களில் கையாண்டுள்ளார்:
1.தத்துவத் தளம் (சரம ஸ்லோகம்): உபாயங்களில் இறுதியான சரணாகதியை (பிரபத்தியை) இது குறிக்கிறது.
2.அநுஷ்டானத் தளம் (உற்சவ நிறைவு): திவ்ய தேச திருவிழாக்களின் இறுதிப் பகுதியிலும், அன்றாட வழிபாட்டின் (சாற்றுமுறையின்) நிறைவிலும் ஓதப்பட வேண்டிய பிரபந்தமாக நாதமுனிகள் இயற்பாவை வரிசைப்படுத்தினார்.
“ஆழ்வார்களின் ஒவ்வொரு பாசுரத்திலும் திருமந்திரம், த்வயம், சரம ஸ்லோகம் ஆகிய மூன்றும் கலந்தே இருக்கின்றன.”
உதாரணமாக, முதலாழ்வார்களின் இயற்பா பிரபந்தங்களான திருவந்தாதிகளிலேயே திருமந்திரத்தின் சாரமான அகார பொருளும், த்வயத்தின் சரணாகதியும், சரம ஸ்லோகத்தின் உபாயத்துவமும் விரவிக் கிடக்கின்றன.
எனவே, இயற்பாவைத் துல்லியமாகச் “சரம ஸ்லோகத்தின் அர்த்தம் மட்டுமே கொண்டது” என்று சுருக்கிவிட முடியாது.
மாறாக, அது ஒட்டுமொத்த தத்துவங்களின் திரட்சியாகவும், அதே சமயம் அநுஷ்டானத்தின் “நிறைவுப் பகுதியாகவும்” இருப்பதால் நாதமுனிகள் இதனை நான்காம் ஆயிரமாக வைத்தார்.
நாதமுனிகள் திவ்ய பிரபந்தத்திற்குச் செய்த சிறந்த தொண்டு, அதற்கு இசையமைத்தது (தேவ கானம்).
முதல் மூன்று ஆயிரங்கள் ,முதலாயிரமும், பெரிய திரு மொழியும், திருவாய்மொழியும் பண்ணோடு (இசையோடு) பாடப் பட வேண்டியவை.நான்காம் ஆயிரம் (இயற்பா): இயல் + பா = இயற்பா. இது இசை இல்லாமல், சொற்களின் நயம் விளங்க “இயல்பாகச் சேவிக்கப்பட” (ஓதப்பட) வேண்டியது.
அவர் அமைத்துத்தந்த க்ரமத்திலேயே பகல் பத்து, இராப்பத்து இயற்பா ஸேவை சாற்றுமறை ஸ்ரீமந்நாதமுனிகளால் தொடங் கப்பெற்று எல்லா ஸந்நிதிகளிலும் முறையாக நடத்தப்படுகிறது என்பது குறிக்கொள்ளத்தக்கது.
நாதமுனிகள் தமிழ் வேதத்தைத் தொகுத்ததோடு தன் கடமை முடிந்தது என்று எண்ணவில்லை.
அது காலம்கடந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்குச் சென் றடைய வேண்டும் என்பதற்காக, அதைத் தத்துவத்தோடும் (மூன்று ரகசியங்கள்), இசையோடும் (இசைப்பா/இயற்பா), ஆலய வழிபாட்டோடும் (பகல் பத்து/இராப்பத்து) பிணைத்து ஒரு வாழ்வியல் நெறியாகவே மாற்றித் தந்துள்ளார்.
