4.அடியேன் பெற்ற நெருக்கம்
(c)எஸ்.கோகுலாச்சாரி
சுவாமியோடு அடியேனுக்கு உள்ள பழக்கம் சுமார் 40 ஆண்டு காலத்திற்கு மேல் இருக்கும். இந்த 40 ஆண்டு காலத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.
முதல் 10 ஆண்டுகள்: சற்று சாதாரணமான பழக்கம்.
அடுத்த 10 ஆண்டுகள்: அந்தப் பழக்கம் சற்று வேர்விட்டு, நெருக்கமானது.
அடுத்த 5-6 ஆண்டுகள்: இன்னும் சற்று அதிக நெருக்கமானது.
கடைசி 13 ஆண்டுகள் (2013 – 2026): அவர் நம்மை விட்டுப் பிரிந்த இந்த ஆண்டு வரை, அவர் தமக்கு நெருக்கமான ஒருவராக அடியேனைக் கருதியது அடியேன் பெற்ற பெரும் பாக்கியம்.
40 ஆண்டுகளுக்கு முன்னாலும் அவரைப் பற்றித் தெரியும். அதற்குக் காரணம், அவர் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் தேவஸ்தானத்தின் நிர்வாக அறங்காவலர். எங்களுக்கு, எங்கள் மூதாதையர்களின் ராமானுஜர் கூடம் ஒன்று புவனகிரியில் இருந்தது.
சுவாமி ராமானுஜர் வைணவத்தைப் பரப்ப அந்தக் காலத்திலேயே செய்த அற்புதமான நிர்வாக அமைப்புகளில் ஒன்று, இந்த ராமானுஜ கூடங்கள். (இதைப்பற்றி வேறு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பேசுவோம்). ராமானுஜ கூடங்கள் மூலமாகத்தான், சிறிய கிராமங்களில் கூட வைணவம் வளர்ந்தது, உயிர்ப்போடு இருந்தது என்பது ஸ்வாமிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஆகையினால்தான், கிராமங்களில் உள்ள ராமானுஜ கூடங்கள், வைஷ்ணவ சபைகள், கோயில்கள் என இதிலெல்லாம் சுவாமிக்கு ஈடுபாடு அதிகம்.
இதற்காகவே, திருக்கோவலூரில் சுவாமி ஒரு மாநாடு நடத்தினார். அத்தனை பாகவத சபைகளின் தரவுகளையும் ஒன்றாக இணைத்து, ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்க முயன்றார். அதில் அடியேனையும் ஈடுபடுத்தினார். அதற்கென்றே ஒரு செய்திப் பத்திரிக்கை நடத்தவும் ஊக்குவித்தார்.
சுவாமியை, அவரை நன்கு உணர்ந்த பாகவதர்கள், அவரிடத்தில் பாடம் கேட்டவர்கள், ‘நம் காலத்து ராமானுஜர்’ என்று அடைமொழி கொடுத்து அழைப்பதும், பத்திரிக்கைகளில் எழுதுவது பற்றிக் கூட சிலருக்கு அபிப்பிராய பேதம் இருக்கலாம். ஆனால், அவர் எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், ஒவ்வொரு சிறு வாய்ப்பையும் வைணவ வளர்ச்சிக்கு எப்படிப் பயன்படுத்தினார் என்பதை அருகில் இருந்து பார்த்தவன் நான்; அவர் சொல்லக் கேட்டவன். அவர் செய்த களப்பணியை வேறு யாரும் செய்திருக்க முடியாது. அதைக்குறித்துச் சற்று விரிவாகவே பின்னாளில் எழுதுகிறேன்.
ஆங்காங்கே உள்ள பாகவதர்களை எல்லாம் வைணவத்தில் ஈடுபடுத்த வேண்டும், வழிநடத்த வேண்டும் என்பதில் அவருடைய தணியாத ஆர்வம் வளர்ந்து கொண்டே இருந்தது. அதனால் எந்த ஒரு பாகவதரிடத்திலும் அவர் அன்போடும் மிகுந்த மதிப்போடும் பழகுவார். தான் ஓர் ‘ஆச்சார்ய புருஷன்’ என்று தலைக்கனம் கொள்ள மாட்டார். தன்னுடைய மேதமை, பதவி முதலியவற்றை நினைக்க மாட்டார். கிராமத்து பாகவதர் அவரைக் கண்டு வணங்குவதற்கு முன், இவரே கைகூப்பி வணங்குவார்; பரிவோடு விசாரிப்பார்.
என்ன சந்தேகம் இருந்தாலும் இவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். இவர் அந்தந்த ஊர் ராமானுஜ கூடத்திற்குப் போவார்; அனைவரையும் உட்காரவைத்து நல்ல விஷயங்களைப் பற்றிப் பேசுவார். அவர்களுக்கு அது பெரும் உற்சாகமாக இருக்கும்.
எங்கள் ராமானுஜ கூடம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 110 ஆண்டுகள் ஆகிறது. அதில் பல வைபவங்கள் நடக்கும். அதில் ஒன்று மாசி மகம். கிள்ளை தீர்த்தவாரி முடிந்து, வெள்ளாற்றை (நிவா நதி என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த ஆறு) கடந்து எங்கள் ஊருக்கு பெருமாள் எழுந்தருளுவார். எங்கள் ஊரில் பெருமாளுக்கு மூன்று மண்டகப்படிகள் உண்டு. அதில் முதல் மண்டகப்படி எங்கள் இராமானுஜ கூடத்தில் நடக்கும்.
இது சுவாமியின் திருத்தகப்பனார் காலம் முதல் நடந்து வருகிறது. எங்கள் பெரியப்பா ராமானுஜர் கூடத்தின் நிருவாகி. பெருமாளோடு நம்முடைய சுவாமியும் வருவார். அப்போது அவரைப் பார்ப்பேன்; பெரிய அளவில் பழக்கம் இல்லை. ஆனால், அவர் நேரத்தை கொஞ்சம் கூட வீணாக்க மாட்டார். ராம பாணம் போல விசுக் விசுக்கென்று நடந்து வருவார். திருமஞ்சனம் முடிந்து அலங்காரத்திற்குத் திரை போட்டவுடன், சத் விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்து விடுவார். ஒலிபெருக்கி கிடையாது, அது தேவையுமில்லை. அந்த மணிக்குரல் ஒலியில் ஒலிபெருக்கியாவது ஒன்றாவது!
சில நேரங்களில், ராமானுஜ கூடத்துக்கு பெருமாள் வரமுடியாத பொழுது, நாங்கள் எல்லோரும் சேர்ந்து சிதம்பரம் பட்டாபிராமன் சன்னதிக்குச் சென்று விடுவோம். திருமஞ்சன வைபவத்தை அப்பொழுதும் நம்முடைய சுவாமிகள் மிகச் சிறப்பாக நடத்துவார்.
50 ஆண்டு காலமாக எங்கள் ஊரில் ‘எம்பெருமானார் தரிசன சபை’ என ஓர் அமைப்பு உண்டு. அதில் ஆண்டுதோறும் வைணவ மாநாடு நடைபெறும். அதற்காகவும் அவர் ஆண்டுதோறும் வருவார். இவைகள் எல்லாம் ஸ்வாமியோடு எனக்கு இருந்த ஆரம்பகால தொடர்புகள்.
ஆனால், இலக்கியக் கூட்டங்களில் மட்டுமே பேசிக்கொண்டிருந்த அடியேன், ஒருமுறை வைணவ மாநாட்டிலே பேசினேன். அப்பொழுது நான் கல்லூரியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். என்னுடைய பேச்சை ஸ்வாமி மிகவும் பாராட்டினார். ஸ்வாமியிடத்திலே இருக்கக்கூடிய ஒரு அற்புதமான பழக்கம், மற்றவர்களை அவர்கள் முயற்சி செய்கின்ற துறையிலே, கொஞ்சமும் மனம் தளர்ந்து விடாமல் தொடர்ந்து ஊக்கமூட்டி உற்சாகப்படுத்துவதுதான். அதற்குப் பிறகுதான் சுவாமியோடு எனக்கு நெருக்கம் அதிகரித்தது.
1996-ல் நான் ‘ஆலய தரிசனம்’ என்ற பத்திரிகையைத் தொடங்கினேன். அந்தப் பத்திரிகையை சுவாமி படித்து விட்டு, மிக உற்சாகமாக எனக்குக் கடிதம் எழுதினார். சுவாமி ஒருவரைப் பாராட்டுவதற்குத் தயங்கவே மாட்டார்; உடனுக்குடன் பாராட்டுவார். அவரிடம் எப்பொழுதும் சில தபால் கார்டுகள் இருக்கும். ஒரு நிகழ்ச்சி முடிந்த கையோடு, பாராட்டு வகையிலே ஒரு சில வார்த்தைகள் எழுதி உடனடியாகக் கடிதம் அனுப்புவார்.
இது, சென்ற மாதம் ‘சப்தகிரி’ சஞ்சிகையில் வந்த எனது கட்டுரையைப் பாராட்டிப் பேசியது வரை தொடர்ந்தது. அவர் புகழ்ச்சியில் பஞ்சம் இருக்காது, வஞ்சகமும் இருக்காது. சில நேரங்களில் நமக்கு அது சற்று அதிகப்படியாகத் தோன்றினாலும் கூட, நாம் முன்னேற வேண்டும் என்ற நிஜமான விருப்பம் மட்டுமே அதில் இருக்கும். யாரையும் மட்டம் தட்டுவதற்காக வஞ்சப் புகழ்ச்சியாக அவர் பேசி நான் பார்த்ததே இல்லை. ‘ஆலய தரிசனம்’ இதழ்தான் எனக்கும் அவருக்குமான நெருக்கத்தை மிக அதிகமாக ஆழப்படுத்தியது.
