உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் எதனால்? எப்படி தப்பிப்பது? –தலையங்கம்
அடைந்த அரு வினையோடு அல்லல் நோய் பாவம்
மிடைந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கு இடையை
முன் இலங்கை வைத்தான் முரண் அழிய முன் ஒரு நாள்
தன் வில் அங்கை வைத்தான் சரண்.
இன்று உலகம் எப்படி இருக்கிறது?
கலி என்ன என்பதையும், அதன் கொடூரத் தாண்டவத்தையும் கண்ணெதிரே நாம் கண்டு கொண்டிருக் கிறோம். தினம் தினம் உலகெங்கும் அடுத்து என்ன நடக்கும் என்கின்ற அச்சத்தோடு மனித குலம் தவித்துக் கொண்டிருக்கும் காட்சியைக் கண்டு கொண்டிருக்கிறோம். வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் இப்படி ஒரு இக்கட்டான காலகட்டம் எந்த நூற்றாண்டுகளிலும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை.
உலகத்தின் ஒரு பகுதியில் பதட்டம் இருந்தாலும், இன்னொரு பகுதியில் அமைதி நிலவும்.
இதுதான் இத்தனை காலமும் உலகம் கண்டு வந்தது.இந்தியாவில் பூகம்பம் நிகழ்ந்தால், அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஆறுதலாக இருக்கும். ஐரோப்பிய நாடுகளிலோ, மற்ற நாடுகளிலோ பேரழிவு நிகழ்ந்தால், உலகத்தின் பிற பகுதிகள் ஆறுதல் சொல்லவும் உதவிகள் செய்யவும் துணை நிற்கும்.
உலகத்தின் ஏதோ ஒரு பகுதியில் ஒவ்வொரு நேரத்திலும் இயற்கை பேரழிவுகளும், அல்லது செயற்கை பேரழிவுகளும் (தீவிரவாதம், போர்) என அழிவுகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.
ஆனால், உலகத்தின் அத்தனை நாடுகளும் ஒரே நேரத்தில் பதட்டத்திற்கு உள்ளாகி அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நிகழ்வை நம் வாழ்நாளில் நாம் கண்டு கொண்டிருக்கிறோம்.
ஒரு வகையில் இந்த அவலத்தைக் காண இயலாத நம் முன்னோர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
இன்றைக்கு தினம் தினம் கேள்விப்படுகிற செய்திகள் நாம் ஏதோ குருஷேத்திர யுத்தகளத்தில் நிற்பது போன்ற ஒரு நினைவை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன.
குருஷேத்திரத்தில் காலையிலே யுத்தத்துக்குப் போகிறவன் மாலை பாசறைக்கு வந்தால்தான் உண்டு. அதைப்போலவே ஒவ்வொருநாள் செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் இன்று எத்தனை பேர் ஆபத்தில் இருக்கிறார்கள்? எத்தனை பேர் பலியாகி விட்டார்கள்?- என்கின்ற செய்திகள் விரிந்து நம் மனதைப் பிசைகிறது.
உலகில் எத்தனையோ நோய்கள் உண்டு.மரணங்கள் உண்டு. போர்களினாலும் சமூகக் கொடுமை களினாலும் மரணங்கள் நிகழ்வது உண்டு.
ஆனால், அத்தகைய மரணத்தில் கூட இல்லாத அவலம் இப்பொழுது இந்தத் தொற்று நோயால் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.நோயால் பாதிக்கப்பட்டு ஒருவர் இறந்து விட்டாலும் கூட, அவருடைய உடலை முறையான மரியாதையோடு அடக்கம் செய்கின்ற நல்வாய்ப்பைக் கூட, இன்றைய மனித குலம், அச்சத்தி
னால் இழந்து கொண்டிருக்கின்ற அவலத்தை நாம் கண்டு கொண்டிருக்கிறோம்.
இது எத்தனை பெரிய அவலம்?
ஆயினும் இன்றைய விஞ்ஞான உலகமும் -பொருளாதார உலகமும் – நவீன உலகமும் கையைப் பிசைந்து கொண்டு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறும் காட்சி அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
ஒரு பக்கத்தில் இப்படிப்பட்ட ஒரு மோசமான நிலையை இந்த மனித குலம் எதிர்பார்த்து இருக்கத்தான் வேண்டும் என்கிற ஒரு எண்ணத்தையும் நம்மால் புறந்தள்ளிவிட முடியவில்லை.
காரணம், வினை விதைக்கும் போது தினை விளைந்து விடுவதில்லை.
அண்டத்தைக் கிழித்துக்கொண்டு சூரிய மண்டலத்துக்கு அப்பால் பிரபஞ்சத்தை அறிவதற்கு முன்னேறி கொண்டிருக்கின்ற விஞ்ஞானம் நம் கண்ணெதிரே நம்மைத் தாக்கிக்கொண்டிருக்கும் வைரஸ் கிருமி எப்படி இருக்கும்? என்ன வடிவில் இருக்கும்? எங்கே இருக்கும்? என்பதை உணரமுடியாது இருக்கிறது. உணர்ந்தாலும் வெல்லும் வழி இன்றைய தேதி வரை இல்லை.
உயிரற்றதாகப் படிந்து உயிர் பெறும் வைரஸ்- எறும்பை விட சின்னதானது.ஏன் இப்படிப்பட்ட அவலம்? இதற்குக் காரணம் என்ன?விஞ்ஞான உலகம் இதன் காரணத்தை குறித்து சிந்தித்ததாகத் தெரியவில்லை. ஆராவதாகத் தெரியவில்லை.ஆனால், அதற்குப் பதிலாக இதை எப்படி வெற்றி கொள்ளலாம் என்று பல பரிசோதனைகளை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
அது அவசியம் தான். வேறு வழி இல்லை தான்.
ஆனாலும், இந்தக் கிருமிகள் எல்லாமே ஏதோ ஒரு இடத்தில் இருந்து வந்தவை அல்ல.
நம்மிடையே இருந்தே நாம் வாழும் உலகில் வாழ்ந்தே மனித இனத்தை மட்டும் குறிபார்த்து அழித்து விடத் துடிக்கின்றன .
இராமாயணத்தில் இந்திரஜித் போர் பற்றிய செய்திகள் உண்டு. அதில் முதலில் நேருக்கு நேராக போர் செகின்ற இந்திரசித்தன் திடீரென்று மாயப் போர் புரிய ஆரம்பிப்பான்.
அந்தப் போரை எதிர்த்து இராமனுடைய வானரப்படைகள் போராட முடியாத ஒரு சூழல் ஏற்படும்.
அப்பொழுது ஒவ்வொருவரும் இந்திரசித்தன் எங்கு இருக்கிறான் என்று தேடுவார்கள். அவன் அம்பு வருகின்ற திசைமாறிக் கொண்டே இருப்பதால் அவன் இந்த நொடியில் எங்கிருக்கிறான் என்பது தெரியாது.
இப்பொழுது இந்த தீ நுண்மி நடத்துகின்ற தாக்குதலைப் பார்த்தால், இராமாயணத்தில் இந்திரஜித் நடத்திய மாயப்போரை நினைவுபடுத்துவதாக இருக்கிறது.
அப்படியானால் இந்தப் போரை அறிவதற்கும் வெல்வ
தற்கும் நமக்கு இராமபிரான் என்கிற இறையாற்றல் வேண்டும் .
அப்படிப்பட்ட இராமருடைய கருணை கிடைக்க வேண்டும் என்று சொன்னால் நாம் பண்பாலும், அன்பாலும், எண்ணத்தினாலும், செயல்களாலும் அந்த இராமருடைய கருணைக்குத் தகுதி உள்ளவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
உண்மையில் மனித இனம் மட்டுமே தன்னுடைய வாழ்க்கைக்காக எதை வேண்டுமானாலும் அழித்து விடலாம் என்று நினைக்கிறது.
ஒரு கட்டத்தில் மனித இனமே மனித குலத்தின் ஒரு பகுதியை அழித்து விடவும் தயாராகி நிற்கிறது.
உதாரணமாக சில நிகழ்வுகள்.
ஒரு ஊரிலே நாய்கள் அதிகமாகிவிட்டன. அந்த நாய்கள் சில மனிதர்களைக் கடித்து விடுகின்றன. உடனே நாம் நவீன கருவிகளைக் கொண்டு அத்தனை நாய்களையும் சாகடித்து விடத்தயங்குவதில்லை.
அதைப்போலவே பன்றிகள் ஆங்காங்கே திரிகின்றன என்று சொன்னால் அதனை அழிப்பதற்கும், பாம்புகளை அழிப்பதற்கும், மற்ற மற்ற எத்தனையோ ஜீவராசிகளை அழிப்பதற்கும், நவீன கருவிகளையும், விஷ மருந்துகளையும் மனித இனம் கையாளுகின்றது. இது நவீன உலகத்தில் சரியாகத்தான் தோன்றும்.
காரணம், மனிதன் தன்னுடைய வாழ்க்கைக்கு வேண்
டிய எல்லாச் செயல்களையும் சரி என்றுதான் சொல்லுவான்.
அதற்கேற்பவே, அவன் சட்டத்தை வைத்துக் கொள்வான். சட்டங்களில் இரண்டு வகையான சட்டங்கள் உண்டு. ஒன்று மனித குலம் வாழ, அதன் நலன்களுக்காக, அந்தந்த நாட்டில் அவர்களே செய்து ஏற்றுக்கொண்டு பின் பற்றுகின்ற சட்டம். இன்னொன்று தர்மத்தின் சட்டம்.
ஆராய்ச்சி மணி அடித்து நீதி கேட்ட பசுவின் துயரைத் தீர்த்தான் மனு நீதிச்சோழன் என்கிற கதை கதையாகப் பார்க்கப்படுகிறதே தவிர, மனித இனத்தோடு வாழ்ந்த ஒரு உயிரின் உரிமையை, அன்றைக்கு எந்த அளவுக்கு மதித்தான் அரசன் என்கிற உண்மை உரைக்க வில்லை.
மனிதன் தன்னுடைய வாழ்நாளில் பலமுறை தர்மத்தின் சட்டங்களை மீறி இருக்கின்றான்.
இன்னொரு உதாரணத்தைச் சொல்லுகின்றேன்.
நம்முடைய வசதிக்கும் நம்முடைய வளத்துக்கும் தேவை என்கிற பட்சத்தில் அது மலையாக இருந்தாலும், மரங்களாக இருந்தாலும், நாம் அழித்து விடுவதற்கு கணமும் தயங்குவதே இல்லை.
மரங்களுக்கு உயிர் இல்லை என்று நினைக்கின்றோம்.
ஆனால், வளர்ந்த மரங்களை வேரோடு வெட்டிச் சாய்க்கும் போது அதன் வலி மனிதனுக்குப் புரிவதில்லை.
மனிதன் எந்த உயிரினத்திற்கும் பயந்து தன் வாழ்விடங்களை மாற்றிக் கொண்டதில்லை. ஆனால் மற்ற உயிர்கள் மனிதனுக்குப் பயந்து தம் வாழ்விடங்களிலிருந்து விரட்டியடிக்கப் பட்டிருக்கின்றன.
மனிதன் எத்தனையோ உயிர்களின் வாழ்விடங்களை வெற்றிடங்களாக மாற்றி, அதனை தன் வசப்படுத்திக் கொண்டது வரலாறுகளில் இருக்கிறது.
காலம் வருகின்ற பொழுது ஏதோ ஒருவிதத்தில் மனிதனை மனித குலத்தை அந்த வினைகள் பழிவாங்கி விடுகிறது.அமெரிக்கா இவ்வளவு துன்பப்படுகிறது என்று நினைக்கின்ற பொழுது நீங்கள் அமெரிக்காவின் வரலாற்றையும் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அன்றைக்கு இங்கிலாந்தில் இருந்தும் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் குடியேறியவர்கள் தயவு தாட்சண்யம் இல்லாமல் அமெரிக்காவின் பழங்குடிகளை கொன்று குவித்த வரலாறு சரித்திரப் பக்கங்களில் இரத்தக்கறையுடன் இருக்கின்றது.
இன்றும் அதைப் போலவே பல தவறுகளை பல நாடுகள் செய்து கொண்டே இருக்கின்றன.
அதில் ஒன்றுதான் கருப்பினத்தவர்கள். கழுத்தில் முழங்காலை வைத்து ஒரு ஆங்கில போலீஸ் கொன்றது.
ஆஸ்திரேலியாவின் கதையை எடுத்துக் கொண்டாலும் அதுவும் இப்படிப்பட்ட கதைகள்தான்.
இப்படி மனித குலம் தொடர்ந்து தவறுகளைச் செகின்றது.
அதனுடைய விளைவுகள் ஏதோ ஒரு விதத்தில் கணக்குத் தீர்த்துக் கொள்கின்றன.
மனிதன் எண்ணங்களாலும் செயல்களாலும் தொடர்ந்து தவறுகள் செய்து கொண்டிருக்கிறான் அல்லது தவறு செய்யத் தூண்டப்படுகின்றான்.
இன்றைய அரசியலும் நவீன விஞ்ஞானமும் எப்படியாவது வாழ வேண்டும் எப்படியாவது முன்னேற வேண்டும் என்பதைத்தான் சொல்லிக் கொடுத்ததே தவிர, உண்மையில் அன்பையும் பண்பையும் உயிர் களை நேசிக்க கூடிய தன்மையையும் நிச்சயம் உண்டாக்கவில்லை.
ஆனால் நம்முடைய பாரத தேசத்தில் நமக்கு அந்த பண்பாடு இருந்திருக்கிறது. அந்த கலாச்சாரம் இருந்திருக்கிறது.“எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி” என்கிற வாசகம் நமக்கு இருக்கிறது.
எல்லா உயிரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் என்று சொல்லக் கூடிய நினைவு நமக்குத்தான் இருக்கிறது.
அதனால்தான் கூரத்தாழ்வான் என்கிற வைணவ ஆசாரியர் ஒரு வாழை இலையை அரிகின்ற பொழுது, அதில் விழுந்த சொட்டு நீர் அதன் ரத்தமோ என்று நினைத்துக் கலங்கினார்.
உலர வைத்த தன் கோவணத்தை எடுக்கின்ற பொழுது, ஒரு பறவைக் கூட்டின் முட்டையை உடைத்து விட்டோமே – அந்த பறவை குஞ்சு இறந்து விடுமே என்று கலங்கினார் ரமணர்.அந்த உடைந்த முட்டையி லிருந்து குஞ்சு உயிர் பெறும் வரை உண்ணாநோன்பிருந்தார்.
ஒரு விஷப் பாம்பின் நகர இயலா நிலை கண்டு அதன் வாயில் தைத்த முள்ளை எடுத்து அதனை அதன் பாதையில் விட்டார் எம்பார் என்கிற மகான்.
நீரில்லாமல் தலைசாய்ந்து காந்து வாடும் பயிர்களைக் கண்டு மனம் பதறினார் வள்ளலார்.
நம்முடைய சாத்திரங்கள் பூத யக்ஞம் என்று, எல்லா உயிர்களுக்கும் தந்துவிட்டுத்தான் நீ உண்ண வேண்டும் என்கிற வாழ்க்கை நெறியை நமக்கு வகுத்து வைத்தன.
ஓடுகின்ற நீரை அசுத்தப்படுத்துவதற்கு உனக்கு உரிமை இல்லை என்று சோல்லி வைத்தனர்.
ஒருமுறை ரமணமகரிஷி ஒருவரிடம் பல் விளக்குவதற்காக சிறு வேப்பங்குச்சியைக் கேட்டார். உடனே அந்த சீடர் ஓடிச்சென்று ஒரு பெரிய கிளையை உடைத்து கொண்டு வந்துவிட்டார். பதறிப்போன ரமணர் இந்த மரத்தினுடைய மொத்த கிளையையும் ஒடிப்பதற்கு உனக்கு யார் அதிகாரம் தந்தது என்று அதட்டினார்.
இவையெல்லாம் நம்முடைய முன்னோர்கள் நமக்குச் சொல்லித் தந்தவை.

ஆனால், இத்தனையையும் மறந்தோம். காற்றை நஞ்சாக்கினோம். தண்ணீரை நஞ்சாக்கினோம். மண்ணை ரசாயனங்கள் கொண்டு நஞ்சாக்கினோம். பல நீர்நிலைகளை பாழாக்கினோம். பல கி.மீ சதுப்பு நில காடுகளை அழித்தோம். லட்சக்கணக்கான மரங்களைச் சாய்த்து அந்த மரங்களுக்கு வாழ்வாதாரமான பல்வேறு உயிரினங்களை விரட்டினோம்.
இன்றைக்கு பெருநகரங்களில் அமாவாசைக்குச் சோறு வைக்கக் கூட காக்கைகள் இல்லை.
விஞ்ஞானம் என்ற பெயரில் நம் கண்ணுக்குத் தெரியாமல் அழித்த உயிரினங்கள் எத்தனை என்பதைக் கொஞ்சமாவது மனிதகுலம் சிந்தித்துப் பார்த்தால் நமக்கு ஏன் இந்த கொரானா என்கிற கிருமி வந்திருக்கிறது என்பது புரியும்.
நாம் எதை விதைக்கிறோமோ அதுதான் நமக்கு பிற்பட்டவர் அறுவடை செய்வார்கள் .
நமக்கு முன்னால் நவீனம் என்கிற பெயரில் விதைத்த பல விஷயங்களை நான் இப்பொழுது அறுவடை செய்து கொண்டிருக்கிறோம்.
இதற்கு மேல் இந்த விஷயத்தில் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
இது ஏதோ கற்பனையாக சொல்வதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். சமீபத்திலே திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரியில் இந்த கிருமியை குறித்து ஆராச்சி செய்தனர் .
ஒரு பேட்டியில் அந்த விஞ்ஞானி சொல்லுகின்றார். இந்தக் கிருமிகள் எல்லாம் வாழ்ந்த வாழ்விடங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு விட்டன. அழியாத கிருமிகள் அடைவதற்கு ஒரு இடம் வேண்டும்.

தான் வாழ்ந்த உயிரினத்தை உணவாகக் கொண்ட மனிதரிடம் சென்று பற்றத் தொடங்கிவிட்டன. அங்கே யிருந்து அடுத்தடுத்து மற்ற மனிதர்களிடமும் பரவிக் கொண்டிருக்கின்றன என்ற ஒரு கருத்தை அவர் சொன்னார். எனவே, வேதாந்தமாகத் தெரிந்தாலும் கூட இதுதான் உண்மை.
அப்படியானால் நாம் இதில் தப்பிப்பதற்கு என்ன வழி என்று கேட்கலாம். ஒரே வழி சரணாகதி தான்.
இரண்டாவது வழி, நம்மை நாம் தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும்.
எண்ணங்களும் செயல்களும் நாமும் இந்த உலகில் உயிரினம் என்கிற நினைப்பு இருக்க வேண்டுமே தவிர, நமக்காகவே முழுமையாக இந்த உலகம் படைக்கப்பட்டது என்கிற நினைப்பை விட்டொழிக்க வேண்டும்.
அகம் எப்படியோ அப்படித்தான் புறம்.
இன்று மனிதனின் மனதில் உள்ள கெட்ட எண்ணமாகிய நுண்கிருமிகள் தான் -வெளியிலே பரவி இருக்கின்றன.
மனம் தூய்மை அடைந்தால் புறம் தூய்மை நிகழ்ந்து விடும்.
மனிதன் நிம்மதியாக வாழ முடியும்.
நம்மை படைத்த இறைவன்தான் இந்த நுண் கிருமிகளையும் நம் வினையின் எதிரொலியாகப் படைத்திருக்கிறான். எனவே இதை அவரால் மட்டுமே கட்டுப்படுத்தி நம்மைக் காப்பாற்ற முடியும்.
இதைத்தான் நம்முடைய மெய்யியலாளர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.
இனியாவது மனிதகுலம் தன்னையும் தன் செயல்களையும் திருத்திக்கொண்டு, புதியதோர் நேர்வழியில் இந்த கர்ம பூமியில் வாழும் கலையை தெரிந்து கொள்ளட்டும்.
இனி முதல் வரியில் தரப்பட்ட பாசுரத்தை மறுபடி வாசியுங்கள். நாம் இனி செய்ய வேண்டியது என்ன என்பது புரியும்.
