கண்ணனின் பிறந்த நாளை முதன் முதலில் கொண்டாடியவர் பெரியாழ்வார். கண்ணன் பிறந்த நாள் விழா நிகழ்வுகளை ஒரு பதிகமாகப் பாடி இருக்கிறார் .கண்ணன் ஆயர்பாடியில் பிறந்தான் அல்லவா. அவர்கள் தயிர் கடைந்து கொண்டிருந்த உறியை அப்படியே எடுத்து வந்து முற்றத்தில் மகிழ்ச்சியோடு உருட்டி நின்று ஆடினார்களாம். நல்ல மணமுள்ள நெய், பால், தயிர் எடுத்து ஒருவர் மீது ஒருவர் தூவிக் கொண்டார்களாம் . இந்த ஆட்டத்தில் அவர்கள் கூந்தல் அவிழ்ந்தது தங்களை மறந்து ஆடினார்களாம். இவற்றையெல்லாம் ஒரு பாடலில் சொல்லுகின்றார்.
உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்
நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே

உறியடித் திருவிழா
“உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார் “பாடல் காட்சியை அப்படியே பல ஊர்களிலும் நடைமுறைக் காட்சியாக நாம் காணலாம் கோகுலாஷ்டமியின் போது உறியடி விழா பல ஊர்களில் நடக்கும். இரண்டு கம்பங்கள் நட்டு, மேலே பால், வெண்ணை, நெய், தயிர் பானைகள் தொங்கும். வழுக்கு மரத்தில் ஏறி அடிக்க வேண்டும். ஒரு நீண்ட குச்சியை வைத்து மரம் ஏறி அதைச் செய்ய முயலும் போது நான்கு புறங்களில் இருந்தும் தண்ணீரை வாரி இறைப் பார்கள்.மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்பார்கள். மஞ்சள் வஸ்திரத்தை அணிந்து கொண்டு, துளசி மாலையை சூட்டிக்கொண்டு, இளைஞர்கள் உற்சாகமாக இந்த கோலாகலத்தில் கோகுலாஷ்டமி கொண்டாடுவது பெரியாழ்வார் காலத்திலிருந்து இருக்கிறது.வரகூர் உறியடித் திருவிழா விசேஷமானது.
வரகூர்
வரகூர், தஞ்சாவூரிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள சிறு கிராமம். வரகூர் மக்கள், இங்குள்ள வெங்கடேசப் பெருமாளை தங்கள் குலதெய்வமாகக் கொண்டுள்ளனர். இங்கே, பெருமாள் சந்நிதியில், வெள்ளிக்காப்பு வைத்து பிரார்த்தனை செய்துகொண்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதால் பலரும் வருகின்றனர்.ஒருகாலத்தில், பூபதிராஜபுரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் வரகூர் என்றானது. அதாவது நாராயண தீர்த்தர் எனும் அடியவர், பல க்ஷேத்திரங்களுக்குச் சென்று தரிசித்து வந்தார். அப்போது இந்த ஊருக்கு வரும் போது அவருக்கு வழி தெரியவில்லை. அந்த சமயத்தில், பெருமாள், வெண்பன் றியாக வந்து வழிகாட்டியதுடன் தன்னுடைய திருக்கோலத்தையும் காட்டியருளினார். வராகம் என்றால் பன்றி. இதையடுத்து இந்த ஊர், வராகூர் என்று அழைக்கப்பட்டு, பின்னர் வரகூர் என மருவியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.இங்கு கோகுலாஷ்டமி 10 நாள்கள் நடைபெறும்.அதில் உறியடி உற்சவன் ஏக விஷேஷம்.வ்வொரு நாளும் பெருமாள் ஒவ்வொரு விதமான கோலத்தில் காட்சி தருவார்.
உறியடி ஏன்?
கண்ணனின் லீலைகளில் ஒன்று உயரே கட்டப்பட்ட உறியிலிருந்து எப்படியோ ஏறி,திருடுவது.இதற்கு சிறுவர்களின் முதுகில் ஏறுவது, பானையை உடைப்பது.வழுக்கி மேலே ஏறுவது என பல வழிகளை கையாண்டதாக புராணங்களில் உண்டு.அந்த பாவனை தான் இத்தனை விழாக்களும். உறியடி நாளன்று காலையில் சதுர்வேத பாராயணமும் பாகவதர்களின் நாம சங்கீர்த்தனமும் செய்வார்கள். இரவு உறியடிக் கண்ணனாக பெருமாள் வீதியுலா வரும் வேளையில், நூற்றுக் கணக்கான பக்தர்கள், அங்கப்பிரதட்சணம் செய்துகொண்டே கோயிலை அடைவார்கள். உரியில் கட்டப்பட்ட கயிறு மேலும் கீழும் ஆடப்பட்டு, சிறுவர்கள் மற்றும் ஆண்கள், கையில் தடிகளுடன் “உறியடியோ கோவிந்தா” என்று கோஷம் ஓடுவார்கள்.. உரியை (பானை) அடிக்கவும். பல முயற்சிகளுக்குப் பிறகு, உரி உடைக்கப்பட்டு, “நாராயண கோவிந்தா” மற்றும் “வெங்கட்ரமண கோவிந்தா” என்ற கோஷம் விண்ணை முட்டும். உறியடி முடிந்ததும் வழுக்கு மரம் நடக்கும். 40 அடி உயர எண்ணெய் பூசிய வழுக்கு கம்பத்தின் உச்சியில் மூங்கில் தட்டில் கட்டப்பட்ட பெரிய முறுக்குகள்.சீடைகள்.மீண்டும், “நாராயண கோவிந்தா” மற்றும் “உறியடியோ கோவிந்தா” என்ற முழக்கங்கள் இதை போல எல்லா ஊர்களிலும் உறியடி உற்சவம் உண்டு.
