charama kainkaryam சரம கைங்கர்யம் & MangalaDeepam மங்கள தீபம்
– திருமதி. பிரேமாவரதன்
ஆலயதரிசனம் செப்டம்பர் 2018 இதழைப் புரட்டிக் கொண்டிருந்தபோது மஹா பெரியவாளின்,”இறந்த உடலுக்கு ஏன் காரியம் செய்ய வேண்டும்?” என்ற தலைப்பில் வந்த கட்டுரை அடியேன் மனதை ஈர்த்தது. அதையொட்டி அடியேனும் ஸ்ரீ மாறநேர் நம்பிக்குச் செய்யப்பட்ட சரம கைங்கர்யத்தைப் பற்றிய கட்டுரையைக் கீழே சமர்ப்பிக்கிறேன்.
ஆளவந்தாருடைய சிஷ்யரான பெரிய நம்பி என்னும் ஆசார்யர் ஸ்ரீ ராமாநுஜருடைய ஆசார்யர்கள் ஐவரில் மிகவும் முக்கியமானவர். ஆளவந்தாருடைய மற்றொரு சிஷ்யர் மாறனேர் நம்பி என்பவர். ஒருமுறை ஆளவந்தாருக்கு முதுகில் ராஜபிளவை ஏற்பட்டபோது, தன்னுடைய ஆசார்யரான ஆளவந்தார் கஷ்டப்
படுவதைக் கண்டு சகிக்க மாட்டாமல் அதனைத் தாம் வாங்கிக் கொண்டாராம். என்னே ஒரு ஆசார்ய பக்தி! நம்மால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத உண்மையன்றோ இது!
மாறநேர் நம்பியின் அந்திம தசை. அவருடைய திருவுள்ளக் கிடக்கை தான் என்ன? பெரிய நம்பிகளிடம், இந்த உடலை என்னுடைய உறவினர்கள் யாரிடத்திலும் காட்டிக் கொடுக்கக்கூடாது என்றருளிச் செய்து திருநாடேகினார். ஆளவந்தார் அபிமாநித்த உடலாயிற்றே! அதனால்தானே இவ்வளவு தீவிரம் காட்டினார் மாறநேர் நம்பி! அதை மனதில் கொண்டு பெரிய நம்பியும் அவ்வாறே யாரிடமும் காட்டிக் கொடுக்காமல், தாமே மாறநேர் நம்பிக்கு சரமகைங்கர்யம் செய்தருளினார். பெரிய நம்பி செய்த செயலை அனைவரும் ஆட்சேபித்தார்கள். பார்த்தார் உடையவர். பெரிய நம்பியின் வாயாலேயே இதன் உட்கருத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்து, பெரிய நம்பியிடம் வந்து,”சாஸ்த்ர வரம்பு குலையாமல் காரியம் செய்திருக்கலாமே. தேவரீரே செய்ய வேண்டுமோ? யாரையாவது கொண்டு காரியம் செய்திருக்கலாமே” என்று கேட்டாராம். அதற்கு பெரிய நம்பி பதிலளித்தாராம்.
“சந்த்யாவந்தனத்தை வேறொரு ஆளை வைத்துச் செய்யலாமா? நாமே அன்றோ செய்ய வேண்டும்! ஒரு பறவையான ஜடாயுவுக்கு இராமபிரான் சரம கைங்கர்யம் செய்யவில்லையா? இராமபிரானைக் காட்டிலும் நான் உயர்ந்தவனா? ஜடாயுவைக் காட்டிலும் மாறநேர் நம்பி தாழ்ந்தவரா? பயிலும் சுடரொளி நெடுமாற்கடிமை போன்ற ஆழ்வார் அருளிச் செயல்களில் அடியவர்களுக்கு ஆட்பட்டிருத்தல் பற்றிக் கூறப்பட்டிருப்பதெல்லாம் கடலோசை போல் அர்த்தமற்றதா? ஆழ்வார் அருளிச் செய்த அர்த்தத்தைச் சிறிதாகிலும் பின்பற்ற வேண்டாமா?” என்றாராம்.
மாறநேர் நம்பி விஷயமாகப் பெரியநம்பி உடையவர்க்கு அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது. (ஸ்ரீ வசன பூஷணம் 234).
நன்றி: பூமா வேங்கடகிருஷ்ணன்
குறிப்பு: ஸ்ரீ வைஷ்ணவ முத்துக்கள்.
——————————————————————————————————————–
மங்கள தீபம் -பிரேமா வரதன்
அந்திப்பொழுது கடந்து, கொஞ்சம் இருளும் சூழ்ந்து கொண்ட நேரத்தில், கோயில் கர்ப்பக்ரஹத்தில் திருவிளக்கு எரிகிறது. திரி கொஞ்சம் உள்ளே போய்விட்டதால் அணையப் போகும் சமயம், அங்கு ஓடிக்கொண்டிருந்த ஓர் எலியின் வாலின் நுனி பட்டு, சுடர் விட்டுப் பிரகாசமாக எரிய ஆரம்பித்தது. அப்படித் திருவிளக்கு ஏற்றின பலன் எலிக்குப் போய்ச்சேர, அடுத்த பிறவி பலிச்சக்கரவர்த்தியாக வாய்த்தது.
வள்ளல் தன்மை வாய்ந்த பலிச் சக்கரவர்த்தியை”நான்” என்னும் அகந்தை ஆட்டிப்படைத்தது. வித்தை கற்க குருவை அணுகினான் ஒருவன். குருவோ, அவனைப் பார்த்து,”நான் செத்த பிறகு வா” என்றாராம். (அதாவது ஆணவம் செத்த பிறகு). குலச்செருக்கு, கல்விச்செருக்கு, தனச் செருக்கு இவை மூன்றும் அறவே இல்லாத கூரத்தாழ்வான் முக்குறும்பறுத்த பிரான் என்று யாவராலும் போற்றப்பட்டாரன்றோ!
“உள்ளத்திலே கர்வம் கொண்ட போதிலும் ஓங்கி
அடித்திடுவான்
நெஞ்சில் கர்வத்தினால் ஒரு வார்த்தை சொன்னால்
அங்கே காறி உமிழ்ந்திடுவான்”
என்று கர்வத்தை பெருமான் ஒரு நாளும் பொறுக்க மாட்டான் என்கிறார் மகாகவி பாரதி.
பார்த்தான் எம்பெருமான்.
ஒரு குறளாய் மூவடி மண் வேண்டி பலிச் சக்கரவர்த்தியை யாசிக்க, அவனும் தாரை வார்க்க, ஓங்கி உலகளந்த உத்தமனாம் வாமனனால் மண் ஓரடி, விண் ஓரடி, மூன்றாவது அடி அவன் சிரஸில் வைத்து, அவன் அக இருளைப் போக்கி, உலகத்திற்கு தீபமேற்றினான். அத்திருநன்னாளே திருக்கார்த்திகையாகும்.
———————————————————
இன்று வெள்ளிக்கிழமை. பெருமாள் திருமஞ்சனம் முடிந்து, அலங்காரத்திற்கு திரை போட்டிருந்தபடியால், வெளியே அடியோங்கள் பொழுது போவதற்கு, அவரவர்கள் தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையையும், தாங்கள் வளர்ந்த விதத்தையும் சொல்லிக்கொண்டிருந்தபோது, அடியேன் நினைவும் பின்நோக்கிச் சென்றது. அப்போது அடியேனுக்கு நாலைந்து வயதுக்குள்தான் இருக்கும். அகத்தில் கோசாலை இருந்தது. பசு மாட்டிற்கு வைக்கோல், புண்ணாக்கு, தவிடு என்று யாவும் தீவன
மாக, அடியேனுடைய தமையனால் காஞ்சி ஸ்வாமியின் (ஸ்வீகார) புத்திரர் செல்வமணி ஸ்வாமி (வைகுண்டவாசி) பராமரித்து வந்தார். அஹோபாக்யம்! அந்த சமயம் நான் அம்மா சொல்வது ஏதாவது கேட்காவிட்டால் மிகவும் கோபித்துக் கொள்வாள். அடியேன் உடனே அழ ஆரம்பித்தால் அடியேனின் உறவினர் ஒருவர் உன்னை உன் அம்மா தவிட்டுக்கு வாங்கினாள் என்று கேலி செய்வார். அம்மாவையும் கோபித்துக் கொள்வார். அந்த நிகழ்ச்சி அடியேன் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விட்டது. ஒருத்தரை வாங்கவும் விற்கவும் முடியுமா என்றெல்லாம் தோன்றாத வயது. ஆனால், பெரியாழ்வார் கண்ணனெம்பிரானையே ஆய்ச்சிகள் விற்றது பற்றிப் பாடுகிறார்.
காசின் வாய்க்கரம் ……….
எம் தம்மை விற்கவும் பெறுவார்களே..
(பெரியாழ்வார் திருமொழி 4-4-10)
உண்ணும்சோறு, பருகுநீர், திண்ணும் வெற்றிலை யாவும் கண்ணனே என்றிருக்கும் கோபிகளை விட்டுக் கண்ணன் மதுரை வந்துவிடுகிறான். உத்தவருக்குத் தாளவில்லை. உன்னை விட்டு அவர்களால் எப்படிப் பிரிந்திருக்க முடிகிறது? பிரிவுத் துயரம் அவர்களை எந்த அளவிற்குப் பாதித்திருக்கும்! நான் போய் அவர்
களை சமாதானப்படுத்தி விட்டு வருகிறேன் என்று ப்ருந்தாவனம் வந்த உத்தவருக்குத் தூக்கி வாரிப்போட்டது.
ஒவ்வொரு கோபியும் பானை நிறைய வெண்ணெய், தயிர், மோர் எடுத்துக் கொண்டு கண்ணன் வாங்கலையோ, க்ருஷ்ணன் வாங்கலையோ, கோவிந்தன் வாங்கலையா என்று வாய் நிறைய அவன் திருநாமங்களை பரமானந்தத்துடன் உச்சரித்துக் கொண்டு எதிரில் வந்ததைப் பார்த்த உத்தவர் ஸ்தம்பித்து நின்றார். கண்ணன் ஒவ்வொருவர் இதயத்திலும் உறைந்திருக்கின்ற தத்துவத்தை உணர்த்திய கோபிகைகளுக்கு அஞ்சலி செய்து புறப்பட்டார் கண்ணனிடம்.
———————————————-
ஸ்ரீராமன் வனவாசம் சென்றான். தசரதனின் கண்கள் ராமனையே பின்தொடர்ந்து சென்றனவாம். திரும்பிவரவில்லை
யாம். அவனோடு ஐக்கியம் ஆகிவிட்டனவோ என்று நினைக்கும்
படி பகவானைக் கண்ட கண்கள் ஆனந்தம் அடையும். பகவானைப் பிரிந்த கண்கள் துன்புறும். பகவானிடம் ஈடுபட்ட இந்திரியங்களின் நிலையை நம்மாழ்வார் பத்துப் பாசுரங்களால் உணர்த்துகிறார். (திருவாய்மொழி 3.8.1).
“முடியானே! மூவுலகும் தொழுது ஏத்தும், சீர்
அடியானே! ஆழ்கடலைக் கடைந்தாய், சீர்
கொடியானே! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில்
நெடியானே! என்று கிடக்கும் என் நெஞ்சமே!”
ராஜாதி ராஜன் அல்லவா! அதற்கேற்ப முடியும் கிரீடமும், அவன் சேஷி – பரத்வம், முழுமுதற் கடவுள், பரம்பொருள் என்று நிரூபிக்க மூவுலகத்தினரும் பிரஹ்ம ருத்ராதிகளும் பிடித்துக் கொள்ள விரும்பும் திருவடிகள் – துயரறு சுடரடிகள். “ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த” (பெரியாழ்வார் திருமொழி 1.8.6) திருவடிகள். இந்தத் திருவடிகளே நமக்குச் சரணம். அவனிடம் சரணடைந்து விட்டால், நம் குணங் களைப் பார்க்காமல் தாழ நின்றும் நம்மைக் காப்பாற்றும் சுலபன். தேவர்களுக்கு அமிருதம்பெற்றுத் தர, தன் உடல் நோவக்கடல் கடைந்தானே! கருடன் மீதேறி வந்து – ஓடிவந்து – பக்தனைக் காப்பாற்றியவன். சர்வோத்தமன் என்பதற்கேற்ற கல்யாண குணங்கள். அவன் அழகிலும் கல்யாண குணங்களிலும் ஈடு பட்டால் நாம் உய்யலாம் என்பதே உபதேசம்.
இந்த பகவத் பிரசாதம் என்னும் இன்பத்தைப் பெற, இச் சுவையை அனுபவிக்க நாம் என்ன செய்ய வேண்டும்? முத லாழ்வார் பொய்கையாழ்வார் உபதேசம் இதோ: (முதல் திருவந்தாதி 58)
தொழுது மலர் கொண்டு தூபம் கையேந்தி
எழுதும் எழுவாழி நெஞ்சே! – பழுதின்றி
மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கைதொழுவான்
அந்தரமொன்றில்லையடை.
ஒரு பூ. மணமுள்ள வாசனைப்பூ. தூபம் தீபம் இவைகளைக் கையில் எடுத்துக்கொண்டு, பகவானை அடைந்து, அவன் துயரறு சுடரடிகளைத் தொழுது எழலாமே! திவ்யப் பிரபந்தங்களைப் பாடலாமே! இதில் எதற்குத் தாமதம் என்கிறார். ்எழு அடைசு என் கிறார். மனமே நீ பயப்பட வேண்டாம். புறப்படு. பகவானின் மலர டியைப் பெற்று உயர்வு பெற்று வாழ்வாயாக என்கிறார். மந்திரங் களையும், இனிய தமிழில் ஆழ்வார்கள் அருளிச் செய்திருக்கும் திவ்ய – தெய்வீகமான ப்ரபந்தங்களையும் பழுதின்றிக் கற்க வேண் டும். ஆசார்யன் திருவடியில் கற்பதே பழுதின்றிக் கற்பது. சர்வேஸ் வரன் முன் நின்று அவன் கல்யாண குணங்களைப் பாடி மகிழ்ந்தால் பகவான் திருவடிகளை அடையலாம் என்கிறார்.
எம்பெருமானின் பெருமையை உணர்ந்து, ஐந்து இந்திரி யங்களையும் அடக்கி, உயர்ந்த புஷ்பங்களை சம்பாதித்துக்கொண்டு, ஆர்வத்தோடு, பக்தி நிறைந்த உள்ளத்தோடு, பகவந் நாமங்களைப் பாடிக்கொண்டு பகவானை அணுகினால், அவன் திருவடிகளை அனுபவிக்கலாம் என்கிறார். பூதத்தாழ்வார் இரண்டாவது ஆழ்வார். (இரண்டாம் திருவந்தாதி 6).
அறிந்து ஐந்தும் உள்ளடக்கி ஆய்மலர் கொண்டு, ஆர்வம் செறிந்த மனத்தராய்ச் செவ்வே, அறிந்து அவன் தன் பேரோதியேத்தும் பெருத்தவத்தோர் காண்பரே காரோத வண்ணன் கழல்.
ஐம்புலன்களை அடக்கி, உலக வாழ்வை வெறுத்து மறந்து மனத்தை பகவானிடம் நிலை நிறுத்தி தியானம் செய்தால், பிறவி என்னும் பிணி, நோய் தானாக அறுந்து விழும் என்கிறார். மூன்றாம் ஆழ்வார் பேயாழ்வார். (மூன்றாம் திருவந்தாதி 88).
“ஓர்த்த மனத்தராய், ஐந்து அடக்கி, ஆராய்ந்து
பேரத்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம்”
இது நல்லது. இது கெட்டது என்று ஐயப்பட வேண்டாம். மஹா விஸ்வாசத்துடன் – பகவான் நம்மைக் காப்பாற்றுவான் என்னும் முழு நம்பிக்கையுடன் பகவானை அணுக வேண்டும். எம்பெருமான் திருவடி எல்லோருக்கும் பொதுவானவை. துயரறு திருவடிகள். அத்திருவடிகள் “போய பிழையும் புகுதருவான் நின்றனவும்” எல்லாப் பாபங்களையும் அழித்து விடும் என்கிறார் பேயாழ்வார். (மூன்றாம் திருவந்தாதி 88).
“அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண்துழாய் மார்பன், பொது நின்ற
பொன் அம் கழலே தொழுமின், முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து”
வாருங்கள்! நாமும் நம் இரு கண்களால் பகவானைப் பார்த்து அவன் வடிவழகில் மயங்கி, மகிழ்ச்சியடைவோம்.
– தொடரும்.
——————————————————————————————————————————————————————————-
தம்பி பரதனுக்குப் பாதுகையும் அரசுமீந்த இராமன்
தம்பி பரதனுக்குப் பாதுகையும் அரசுமீந்த இராமன், அவனை நினைத்து மிகவும் பெருமிதமடைந்து இலக்குவனிடம் பாராட்டி ஓய மாட்டான். லக்ஷ்மணனும் பரதாழ்வானைப் புகழ்ந்து பேச ஆரம்பித்து, கடைசியில் கைகேயியைத் திட்டித் தீர்த்து முடிப்பான். இராமன் பொறுமையிழந்து,”இளையா! பரதனை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டு. கேட்டுக்கொண்டே இருப்பேன். ஆனால், கைகேயியை நிந்திக்காதே” என்று கடுமையுடன் கட்டளையிட, லக்ஷ்மணனும் வாய் மூடிக் கொள்வான். எய்தவனிருக்க அம்பை நோவானேன்? என்பதல்லவா உண்மை! இதைக் கம்ப நாட்டாழ்வார் எவ்வளவு அழகாகப் பாடுகிறார்! பார்ப்போம் கீழே.
இலங்கையில் அசோக வனத்தில் இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதாதேவியை வணங்கிய அனுமான், தான் இராமதூதன் என்று சொல்லி இராமன் உரைத்த அடையாளங்களையும் பிராட்டியிடம் எடுத்துரைக்க, பிராட்டியும் இராமனிடம் சொல்ல அனுமனுக்குச் சில அடையாளங்கள் கூறுகிறாள்.
ஒரு சமயம் பிராட்டியானவள் தான் ஆசையுடன் வளர்த்து வரும் கிளிக்கு, ராமனைப் பெயர் வைக்கச் சொல்ல உடனே எம்பிரான்,”என்னை வளர்த்த மாசற்ற கேகய மன்னன் மகளாகிய கைகேயிீயின் பெயரையிட்டு அழைப்பாயாக “என்று சொல்கிறான்.
இந்நிகழ்ச்சியைப் பிராட்டி அனுமனுக்குத் தெரிவிக்கும் போது, ராமபிரான் கைகேயி அன்னையின் பெயரை வைக்கச் சொன்னதின் பொருள் அப்போது புரியவில்லை. ஆனால், இப்போது உணர்ந்து கொண்டேன். எறும்பு ஊறக் கல்லும் தேயும் என்பது போல், கூனியின் துர்ப்போதனையினால் கைகேயி இராமனைக் காட்டிற்கு ஏவினாள். அவளாகச் சிந்தித்துச் சொல்லவில்லை. சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை என்பதற்கிணங்க, அவ்வாறு நடந்து கொண்டாள்.
அதனால் இராமபிரான் கைகேயியின் மனநிலையைப் புரிந்து கொண்டு, என்னுடைய கிளிக்கு அவள் பெயரைச் சூட்டினான்.”சொல்லின் செல்வனே! உண்மையின் பிறப்பிடமான அனுமனே! இந்த உண்மையான மொழியை எம்பிரானிடம் தெரிவிப்பாயாக” என்று மொழிகின்றாள்.
“என் ஓர் இன் உயிர் மென் கிளிக்கு யார் பெயர் ஈகேன்
மன்ன என்றலும் மாசு அறு கேகயன் மாது என்
அன்னை பெயர் ஆக என அன்போடு அந்நாள்
சொன்ன மெய்ம்மொழி சொல்லுதி மெய்மை தொடர்ந்தோய்”.
