நாளை கிருஷ்ண ஜெயந்தி
கிருஷ்ண ஜெயந்தி .அதில் இரண்டு விதமான பூஜைகள் உண்டு. ஒன்று வைதீகமான பூஜை. இரண்டு சாதாரணமான பூஜை.
வைதீகமான பூஜை என்றால் அதற்கென்று ஒரு முறை உண்டு.சாஸ்திரிகளை வைத்தோ அல்லது நீங்களோ ஆவாகனம், புண்ணியாக வசனம், பிம்ப ஆவாஹனம், மந்திர ஜெபம் ,அர்ச்சனை ,மந்திர புஷ்பம், நிவேதனம் என்று அதற்கென்று ஒரு முறை இருக்கிறது .
எளிமையான பூஜையில் அன்பு தான் முக்கியம். ஒரு குழந்தையை கொஞ்சுகின்ற பாவனை தான் முக்கியம். கண்ணன் நம் வீட்டுக்கு வருகின்றான். நம்முடைய குழந்தையாக இருக்கின்றான்.நாம் தரும் சீடை முறுக்கு, பால், வெண்ணை, சர்க்கரை எல்லாவற்றையும் சாப்பிடுகின்றான். அந்த குழந்தையின் குதூகலம் எண்ணத்தில் இருந்தால் கிருஷ்ண ஜெயந்தி அற்புதமாக கொண்டாடப்படுகிறது என்று பொருள் .
எப்போது பூஜை செய்யலாம்?
ஆவணி ரோகிணி அஷ்டமியிலே அர்த்த ஜாமத்தில் அவதரித்தவன் என்பதினால் அர்த்தஜாம பூஜை தான் கண்ணனுக்கு உகந்தது.
ஆனால் அது முடியாது என்று நினைப்பவர்கள் முன்னிரவு பூஜையாக அதாவது மாலை சந்திர உதயத்துக்கு பிறகு செய்யலாம் .
என்னென்ன படைக்க வேண்டும்?
குழந்தைகள் விரும்புகின்ற எல்லாவற்றையும் படைக்கலாம். சிலவற்றை முக்கியமாகப் படைக்க வேண்டும். என்பதை ஆழ்வார்கள் பாசுரங்களிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள்.
அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலிற் கலந்து
சொப்பட நான் சுட்டு வைத்தேன் தின்னல் உறுதியேல் நம்பி!
செப்பு இள மென்முலையார்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர்
சொப்பட நீராட வேண்டும் சோத்தம் பிரான்! இங்கே வாராய்
கறந்த நற்பாலும் தயிரும் கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய்
பிறந்ததுவே முதலாகப் பெற்றறியேன் எம்பிரானே!*
சிறந்த நற்றாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே
மறந்தும் உரையாட மாட்டேன் மஞ்சனம் ஆட நீ வாராய்
நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்-
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ
இந்தப் பாசுரங்களின் மூலம் மிக முக்கியமாக பால் ,வெண்ணெய், அப்பம், சிற்றுண்டி,(சிற்றுண்டி என்றால் சிறு பலகாரங்கள் அதாவது நொறுக்கு தீனிகள்)இவற்றோடு அக்கார அடிசிலும் படைக்க வேண்டும் என்பது தெரிகிறது..
அக்கரவடிசல் தயாரிப்பதற்கான குறிப்புகள்:
பொதுவாக நாம் பண்டிகை மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு அக்கரவடிசல் தயாரிப்போம். எனவே பிரசாதத்திற்கு வெள்ளை அரிசியைப் பயன்படுத்துங்கள்.
அக்கார வடிசலுக்கு அரிசி+பருப்பு, தண்ணீர்/பால் என்ற விகிதம் அதிகம். நாம் அரிசி மற்றும் பருப்பு நன்றாகவும், மிருதுவாகவும் சமைக்க வேண்டும்.
அரிசி மற்றும் பருப்பை 5-6 விசில் வரை வேகவைக்கவும். அழுத்தத்தை இயற்கையாக வெளியிட அனுமதிக்கவும்.
பால் மற்றும் நெய்யில் தாராளமாக இருங்கள், அதுதான் உண்மையான அக்கரைவடிசல் பெறுவதற்கான ரகசியம்.
வெல்லத்தை வேகவைத்து உருக்கி, வடிகட்டிய வெல்லத்தை சமைத்த அரிசி மற்றும் பருப்பு கலவையில் சேர்க்கலாம்.
சர்க்கரை மற்றும் வெல்லம் சேர்த்த பிறகு, தீயை குறைவாக வைத்து, அக்கரவடிசலை சமைக்கவும். கலவையை அதிகமாக கொதிக்க வேண்டாம்.
முக்கியமாக பொம்மைகளைப் படையுங்கள் .கண்ணனுக்கு தொட்டில் போடும் விழா நடைபெறுகிறது .தேவாதி தேவன் வந்து பிள்ளையாக அவதரிக்கிறானே, இதைக் கொண்டாட வேண்டுமே என்று பல்வேறு பரிசுப் பொருட்களை தேவர்கள் அளித்ததாக பெரியாழ்வார் ஒரு பாடலில் சொல்கிறார் .
மாணிக்கத்தொட்டிலை பிரமன் அளித்தானாம் .
அருமையான ஒளிபொருந்திய மாதுளம் பூ கோர்த்த அரைவடத்தை ஈசன் தந்தானாம்.
அழகான கிண்கிணியை இந்திரன் மகிழ்ச்சியோடு தந்தானாம்.
அமரர்களில் ஒருவர் வலம்புரிச் சங்கும், ஒருவர் சேவடியும், ஒருவர் ஒருவர் வளையல்களும் என்று விதவிதமான பரிசில்களைத் தந்தார்களாம்.
குழந்தைகளையும் ,இறைவனையும்,முதியவர்களையும் ,நோயாளிகளையும் பார்க்கச் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக்கூடாது என்று பெரி யவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.இங்கே தெய்வமே குழந்தையாக அவதரித் திருக்கிறதே…அதனால் ஒவ்வோரிடமும் பரிசில்கள்…
மகாலட்சுமி தாயாரோ அற்புதமான பரிசுகளை கண்ணனுக்கு அளித்தாரம்.
கானார் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும்
வானார் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும்
தேனார் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள்
கோனே அழேல் அழேல் தாலேலோ
குடந்தைக் கிடந்தானே தாலேலோ
என்பது பெரியாழ்வார் பாசுரம். (நமது வீட்டில் குழந்தைகளை தாலாட்டும்போது இந்தப் பாடல்களைப் பாடலாம்.ஒழுக்கமும் பக்தியும்,தமிழும் வளரும்.)
கிருஷ்ண ஜெயந்தி அன்று இந்தப் பாடல்களை மனதில் வைத்து பல அழகான விளையாட்டுப் பொருள்களையும் நிவேதனங்களோடு சேர்த்து படைக்க வேண்டும். முக்கியமாக பொம்மைகள், பிள்ளைகளின் எழுது பொருள்கள், புத்தகங்கள் என்று படைக்கலாம். கண்ணனுக்கு இவற்றையெல்லாம் சமர்ப்பித்து விட்டு, பூஜை முடிந்த பிறகு, குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களைத் தரலாம். அழகான கண்ணனுடைய கதைகளை சொல்லச் சொல்லியோ ,நடித்துக் காட்டியோ இந்தப் பரிசு பொருள்களை அளிக்கலாம். நம் வீட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் கண்ணனின் அம்சம் தான். அத னால்தான் எந்த குழந்தைக்கு கிருஷ்ணர் வேடம் போட்டாலும் கனகச்சிதமாக பொருந்தி விடுகிறது .அதற்காகத்தானே கோகுலாஷ்டமி வருகிறது .
அன்று இந்த நம்மாழ்வார் பாசுரத்தை சொல்லுங்கள்.
ஸ்ரீமத் பாகவதத்தில் கண்ணனுடையபால லீலைகள் எல்லாமே சிறப்பு தான் .ஆனால் எந்த நிகழ்ச்சி ஆழ்வார்களை மயக்கியது என்ற ஒரு விவாதம் உண்டு. ஒவ்வொன்றுமே ஒரு தத்துவார்த்த நிகழ்வு தான். பூதனையிடம் பால் குடித்தது, சகடா சூரனை உதைத்து அழித்தது, தேனுகாசூரனை ஒழித்தது ,கேசி என்கிற குதிரை முகம் கொண்ட அசுரனை முடித்தது, காளிங்கனின் தலைமீது நர்த்தனம் ஆடியது என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் கண்ணன் வெண்ணை திருடி விட்டான் என்று சொல்லி, ஒரு பழைய உரலில் வலிமை இல்லாத குறுங்கயிற்றால் யசோதை கட்ட, உலகத்தை எல்லாம் கட்டியவன், ஒரு தாயின் முயற்சிக்கும் செயலுக்கும் கட்டுப்பட்டு நின்றானே, அதைத்தான் கொண்டாடுகிறார்கள்.
பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர் மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு
எத்திறம் ! உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே
இப்படியும் ஒரு எளிமையா (சௌலப்யம்)? என்று நினைத்து நினைத்து மூவாறு மாதம் அதாவது 18 மாதம் நம்மாழ்வார் மயங்கியே இருந்தாராம்.
எனவே இந்தப் பாசுரத்தைச் சொல்லுங்கள்.

பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர் மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு
எத்திறம் ! உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே
