பாவமும் புண்ணியமும் (ஆன்மிகம்) – Paavamum Puniyamum – Aanmeegam
நம்முடைய வாசகரின் (ஆக்கூர் பெருமாள்) விரிவான கடிதம். அவசியம் அனைவரும் படிக்கவும்.
மார்ச் 2020 ஆலயதரிசன இதழின் தலையங்கத்தில், மானிடர்கள் அனுபவித்து வரும் பாப புண்ணியங்கள், பூர்வ ஜென்ம கர்ம வினைகளின் அடிப்படையில் நடந்து கொண்டு இருக்கின்றன என்பதை நன்கு ஆராய்ந்து எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் வெளியிட்டு இருக்கிறீர்கள்.
சிலவற்றிற்குக் காரணம் புரியவில்லை என்றும் குறிப்பிட்டு இருப்பது புரியாத புதிராகத்தான் தோன்றுகிறது. பலமுறை படித்தும் முடிவில் குழம்பிப் போய் இருக்கிறேன். தற்செயலாக பீரோவில் இருந்த பழைய பலவிதமான புத்தகங்களில் ஏதோ ஒன்றைத் தேடும் போது அங்கிருந்த ஆலயதரிசன அக்டோபர் 2009 இதழ் தவறி கீழே விழுந்தது. எடுத்துப் பார்த்தேன். அட்டையில் திருக்கோவிலூர் உலகளந்த எம்பெருமான் ஒரு காலைத்தூக்கி உலகளந்து கொண்டு இருந்தார். பிரித்துப் பார்த்தேன். எழுத்துக்கள் அனைத்தும் மிகச்சிறியதாக அச்சிடப்பட்டு இருந்தது. என்ன ஆச்சரியம்!
தலையங்கத்தின் தலைப்பு:- நமது பாவ புண்ணியங்கள் நம்பிள்ளைகளைச் சேருமா? 2009 ல் ஏற்பட்ட விவாதம் 2020 மார்ச் வரை முடிவுறாமல் தொடர்ந்து வருவது வியப்பும், ஆச்சரியமும் கிடையாது.
மானிடராகப் பிறந்த ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் மன உளைச்சல், தீராத கவலை, துயரம், தனிமையில் இருந்து மனதில் தோன்றும் பழைய மறக்க முடியாத சம்பவங்களால் எண்ணி எண்ணி கண்ணீர் விட்டு அழுதல் போன்ற பிரச்சினைகள் சிக்கி இதனின்றும் வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இவைகளில் ஒன்று 26 வயதில் இறந்து போன என் மகனை மறக்க முடியாமல் புத்திர தோஷத்தினாலும் புத்திர சோகத்தினாலும் மனதுள் அழுது கொண்டும், மற்றவர்களிடம் சிரித்துக் கொண்டும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். பாவ புண்ணியங்கள், பூர்வ ஜென்ம வினைகள் இவைகளைப் பற்றி உலகில் வாழும் லட்சக்கணக்கான அல்லது கோடிக்கணக்கான மக்கள் இதனைப் பற்றி ஒரு நாள் அல்லது ஒரு நிமிடம் கூட சிந்திப்பது இல்லை.
நல்ல பதவியில் அல்லது போதுமான வருமானம் பெறுபவர்கூட ஆடம்பரமாக தினந்தோறும் ஏராளமான தவறுகள் செய்து கொண்டுதான் வாழ்கிறார்கள்.இவர்களுக்குத் தாங்கள் கூறிய கருத்துக்கள் போய் சோராது. இதனை எண்ணிப்பார்க்கவும் அவர்களுக்கு நேரம் இருக்காது. காரணம், தற்காலிகமான ஆடம்பரவாழ்க்கை, அளவுக்கு அதிகமான வருமான வரவுகள்.
பாவ புண்ணியங்கள், பூர்வ ஜென்ம வினைகள் இவைகளைப் பற்றி எண்ணுபவர்கள், உண்மையான ஆன்மிக வாதிகளும், ஏழ்மையில் வறுமையில் வாடுபவர்களும், ஏதோ ஒருவகையில் தன் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்களுமே இவற்றைப் பற்றி எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.
பாவ – புண்ணியங்கள் பற்றிக் கூறாத புராண இதிகாச வரலாறுகள் மிகவும் குறைவு.
நான் அதிகம் கற்றவனோ அல்லது ஏதேனும் ஒரு வகையில் புலமை பெற்றவனோ கிடையாது. அவ்வப்போது மற்றவர்கள் பேசுவதைக் கேட்டு மனதில் அசை போடுவதும் நல்ல பல புத்தகங்களைப் படிப்பதும் தொடர் பணியாகும்.
பாவ – புண்ணியங்கள், கர்ம வினைகள் இவைகளைப் பற்றி திருப்பூர் கிருஷ்ணன் என்பவர் எழுதிய வரலாற்றை இவ்விடத்தில் கூறுவது சாலச் சிறந்ததாகும்.
மகாபாரத போர் முடிவில் அனைவரும் அழிந்த பிறகு திருதராட்டிரன், கண்ணனிடம் (ஸ்ரீகிருஷ்ணன்) நான் என்ன பாவம் செய்தேன்? பிறவியிலேயே கண் இழந்ததும் இல்லாமல் நூறு பிள்ளைகளையும் இழந்து போய் தவிக்கிறேனே என்று கேட்டான்.
அதற்கு கண்ணன் சிரித்துக்கொண்டே,“என் தோள்களை பிடித்துக் கொண்டே சென்ற பல ஜென்மங்கள் (பிறவிகள்) இவைகளை மனதில் நினைத்துப் பார்” என்றார்.
பின்னர் திருதராட்டிரன் கண்ணனின் தோள்களைப் பற்றியபோது பழைய ஜென்மங்கள் நிழற்படம் போல் தொடர்ந்து வந்ததைக் கண்டான்.
ஒரு பிறவியில் அவனும், அவன் மனைவியும் அரசனாகக் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தனர். அப்போது தன் அரண்மனைக் குளத்தில் வாழும் அன்னப்பறவை தன் நூறு குஞ்சுகளுடன் மனமகிழ்வோடு நீந்தி விளையாடியதைக் கண்ட அரசன், பொறாமை கொண்டு, தனக்குக் குழந்தைகள் இல்லை; இந்தப் பறவைக்கு நூறு பிள்ளைகளா? என்று ஆத்திரத்துடன் தண்ணீரில் இறங்கி நூறு குஞ்சுகளைக் கொன்றதும் அல்லாமல் பயந்து அலறிய அன்னப்பறவையின் கண்களையும் தன் வாளால் குத்தி குருடாக்கிவிட்டான்.
இதனைப் பார்த்துக் கொண்டு இருந்து அவனுடைய மனைவி (அரசி) வாய்விட்டு மனமகிழ்வோடு சிரித்தாள்.
பின்னர் கண்ணன் திருதராட்டிரனை தன்தோள்களிலிருந்து கைகளை எடுக்கச் செய்தார். மன்னன் சுய நினைவுக்கு வந்தான்.
திருதராட்டிரன் அழுதுகொண்டே கண்ணனிடம்,“கண்ணா! கண்டேன். பூர்வ ஜென்மத்தில் நான் செய்த கொடும் வினையால் இப்பிறவியில் கண்ணிழந்தும், நூறு பிள்ளைகளை இழந்ததும் நான் செய்த கொடும் பாவமே!” என்று கதறினான்.
ஆனால், மகாபாரதம், ஆதிபர்வத்தில் திருதராட்டிரன் கண்ணிழந்து பிறந்த வரலாற்றை வேறுவிதமாகச் சொல்லப்பட்டுள்ளது.
இருப்பினும் பாவ – புண்ணியம் ஜென்ம வினைப்பயன் இதற்கு இதுவே முக்கிய சான்றாகும்.
தசரதன் பார்ப்பன சிறுவனை அறியாமல் கொன்ற பாவத்தை அதே பிறவியில் இராமனது பிரிவால் அனுபவித்து உயிர் துறந்தான்.
புராண – இதிகாசங்கள் கூறும் வரலாறு பொய்யல்ல. முற்றிலும் உண்மையே.
மனிதனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்றதைப் போன்று தாங்கள் தலையங்கத்தில் ஜென்ம – வினைகள் , பாவ – புண்ணியங்கள், தந்தை – மகன் , மனைவி – மகன் இவர்கள் செய்த பாவ – வினைகள் இதிலிருந்து ஓரளவேணும் விடுபட ஒரு வகையில்“ஆன்மிகம்” ஒன்றே சிறந்த வழியாகும்.
—————————————————————————————————————————————–
சென்ற இதழைப் பற்றி நம்முடைய கட்டுரையாளர் (வளவ. துரையன்) அவர்களின் விரிவான கடிதம்.
ஆலயதரிசனம் ஆகஸ்ட்-செப் 2020 இதழ் படித்தேன். தலையங்கம் நல்ல கருத்தைச் சோல்கிறது. ஒருவருக்குக் கருத்துச் சுதந்திரம் இருக்கிறதென்று காலம் காலமாக இருக்கின்றவற்றைக் கேலி செவதும், அதன்மூலம் பிறர் மனத்தைப் புண்ணாக்குவதும் கூடாது. மேலும் இந்து மதத்தில்தான் சிறுவர்களை இள வயதிலேயே பக்தி வழியில் கொண்டு செல்வதில்லை. தொடக்கப் பள்ளியில் பயிலும் வயதிலேயே மற்ற மதத்தினர் தம் குழந்தைகளுக்கு மத வாழ்வைப் பயிற்சி செது கொடுத்து விடுகின்றனர். இந்து மதத்திற்காகவே இருக்கின்ற மடாதிபதிகள் தங்கள் போக்கில் இவற்றைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் அவர்களுக்கு மேலும் இதுபோல் செயல் செயத்தூண்டுகிறது.
காலத்தின் நன்மருந்து நற்பாதம் எனக் காட்டும் கே.பி, பத்மநாபனின் வெண்பாக்கள் எல்லாமே பக்தி மணமும் யாப்பு நயமும் கலந்து விளங்குகின்றன. வானொலி நிலயத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள் படிக்கச் சுவாரசியமாக இருக்கின்றன. மற்றை நம் காமங்கள் மாற்று என்னும் நாச்சியாரின் மறைபொருளை டி.கே சீனிவாசன் வைரமணியையும், பாசிமணியையும் காட்டி நன்கு விளக்கி உள்ளார். நாம் இவ்வுலகில் சாதாரண விஷயங்களில் வைக்கும் பற்று பாசிமணி போன்றது என்னும் கருத்து உள்ளில் பதிகிறது.
நான்கு திசைகளிலும் உள்ள அடியவர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்பதற்காகவே எம்பெருமான் எல்லாத் திசைகளிலும் தம் அழகைக் காட்டி அருள் செகிறார் என்பது சுதர்சனம் அவர்களின் அரிய புதிய விளக்கம். சிறப்பாக உள்ளது. இராமாயணம் படிப்பதால் கிடைக்கும் பயன்களை வால்மீகியின் மூன்று ஸ்லோகங்களை வைத்து விளக்கும் டி. ரங்காச்சாரி அவர்களின் கருத்துகள் மிக அருமை. இது இன்னும் கொஞ்சம் பெரிய கட்டுரையாக மிளிர்ந்திருக்க வேண்டும்.
ஸத்சங்கம் பகுதியில் ஒருவன் இறையருள் பெற்றுவிட்டால் அவனிடம் எந்த விதமான குற்றங்களும் இருக்காது. கீழ்மைக் குணங்களும் இருக்காது. அதனாலேயே நாம் தெரிந்து கொள்ளலாம் என்பது நல்ல பொருத்தமான விடை. ஆலயதரிசனம் பராசரனுக்குச் சரியான முறையில் சிறப்பு செதிருக்கிறது. பாராட்டுகள்.
ஹே! பாதுகே!.. பல அரிய கருத்துகளைத் தாங்கி நிற்கிறது. எட்டுவகை மலர்களுக்குக் கூறப்படும் விளக்கங்களும், நான்கு ஸ்தானங்களைக் காட்டுவதும் யாவரும் அறிய வேண்டியவை. ஆர்.வி. ஸ்வாமி யாருக்கும் தெரியாத தீர்த்தங்களை அறிமுகம் செது வைக்கிறார். அவற்றின் வரலாறுகள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியவை. பன்றியாழ்வான் பெயர்க்காரணம் அடியேனுக்குத் தெரியவில்லை.
டாக்டர். வெங்கடேஷ் யாரும் அறியாத 18 நாள்கள் வாதப்போர் பற்றி நூலாகவெளியிட்டிருக்கிறார், அதற்கு ஆலய தரிசனம் அந்நூலைப் படிக்கத் தூண்டும் விதத்தில் மதிப்புரை எழுதி உள்ளது. நூலைச் சற்று சுருக்கி எளிய விலையில் தமிழில் வெளியிட ஆவன செய வேண்டுகிறேன். திவ்யதேசயாத்திரையில் பல இடங்களைக் குறிப்பிடுவதோடு அவற்றுடன் தொடர்பான சரித்திரங்களையும் சிறப்பாகக் காட்டுகிறார் உடையவர்தாஸன். வீமன் கட்டுரை ரத்தினச் சுருக்கமாக இருக்கிறது. திருக்குறள் ஆவரங்கைத் தொடர வேண்டுகிறேன். இரகுவீரரின் அலகிலா விளையாட்டில் தமிழ் விளையாடுகிறது.
இறுதியாக நாம் என்னதான் சோன்னாலும் எத்தனை முறை எழுதினாலும் சந்தா தொடர்ந்து செலுத்த மறுக்கிறார்கள் சிலபேர்கள் என்பது உண்மையாகும். இந்நடைமுறை இலக்கிய இதழ்களுக்குத் தான் என்றில்லாமல் ஆன்மிக பக்தி இதழ்களிலும் நிலவுவது கொடுமையிலு ம் கொடுமை. இருப்பவர்களுக்குக் கொடுக்க மனமில்லை. இல்லாதவர்கள் எப்படியும் தொடர்ந்து சந்தா செலுத்து கிறார்கள். இதுவே இன்றைய சிற்றிதழ்கள் நிலை. அதற்காக நாம் இதை நிறுத்த மாட்டோம். புலி வாலைப் பிடித்து விட்டோம் அல்லவா”?
– வளவ. துரையன், கடலூர்.
ஆலயதரிசனம்! வெள்ளிவிழாப் பற்றி நம்முடைய கட்டுரையாளர் (- மதுராந்தகம் ரகுவீர பட்டாச்சாரியார்) அவர்களின் விரிவான கடிதம்.
ஆலயதரிசனம்! வெள்ளிவிழா ஆண்டில் அதன் ஆசிரியர் மணிவிழா ஆண்டில்! வெள்ளியும் மணியும் இணைவதை எண்ணி எண்ணிப் பார்க்கிறேன். ஒரு கனவு! அதில் குன்றிமணி பிரமனை நோக்கித்தவம் செய்கிறது. பிரமன் நேரில் தோன்றுகிறான்.
பிரமன்: மணியே! என்ன வரம் வேண்டும்?
மணி: ஐயனே! பொறுமையாக அடியேனது குறையைக் கேட்டு ஆவன செய்யுங்கள்.
பிரமன்: அளிப்பதற்காகத்தானே வந்திருக்கிறேன். கேளுங்கள்.
மணி: ஒன்றுமில்லை! எனது நெடுநாளைய சந்தேகம் ஒன்று உள்ளது. அதனைப் போக்க வேண்டும்.
பிரமன்: சந்தேகமா! என்ன அது?
மணி: மணிகள் பலவகை. பொன்மணி, முத்துமணி, இரத்தினமணி, கோமேதகமணி என நவமணிகள் உண்டு அல்லவா! என்னையும் குன்றிமணி (குந்துமணி) என்று பெயரிட்டுப் படைத்து விட்டீர்கள். நான் குன்றிய மணிதானா?
பிரமன்: யார் சொன்னது? உன் தவம் பலித்துவிட்டது. இனிமேல் உன்னை நான் பொன் போன்ற மணிகளை நிறுப்பதற்கு உன்னையும் பயன்படுத்தச் செய்வேன். பயப்படாதே! போய் வா!
கனவு கலைகிறது. கனவு ஒரு படிப்பினை தருகிறது. எடைக்கல்லும் பொன்னுடன் இணையும்.
ஆ! லயதரிசனத்தில்! எத்தனை லயங்கள்! மூளைகள் லயப்படச் செய்யும் தலையங்கள்! தேசிகலயம்! மருத்துவ லயம்! பாதுகை லயம்! வினா விடைகளெனும் விவாத லயம்! உலாலயம்! விளையாட்டு லயம்! அப்பப்பா! ஆலயதரிசனங்களில் இல யிக்கும் இதயங்கள் தொடர்ந்து முன்னூறு லய தரிசனங்களையும் ஒரே தொகுப்பாக லயப்படுத்தி லயிக்கும் ஆலயங்கள்! பாராட்டிற் குரியவர்கள் ( பார்வை: ஆலயதரிசனம் பிப்ரவரி 2020 இதழ்)
கோகுலாச்சாரிய ஸ்வாமியும் ஒரு லய வித்வான்தான்! உரைநயம், இசைநயம், கவிதைநயம், கட்டுரைலயம், ஆன்ம லயம், அறிவுலயம், கணினிலயம், கலைநயம், வைணவலயம், விஞ்ஞான லயம் இப்படிப் பட்டியலிட்டுப் பரவலாம்.
ஏற்ற கலங்களாக ஆலயதரிசனத்தை அணி செய்யும் மாற்றாதே பொழியும் வள்ளல் பெரும் பசுக்களிடையே குன்றி மணியாக கடுகாக அடியேனும் இறுதியில் ஒட்டும்படி செய்து வரும் வைணவமணி, வைணவ ரத்தினம் கோகுலாச்சாரியருக்குப் பல்லாண்டு பாடுவதே ஒரு வேள்விதான்.
தரிசனத்தில் தரிசனமாய் சரிசமமாய் பரிவதனால் எளியவ
னும் இடம் பெறவே வைத்ததற்கு பல்லாண்டு பாடி இதுவும் இறைவனது இன்னருளே. அலகிலா விளையாட்டு என்பது ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகையில் நடத்தப்பட்டு வரும் தீராத விளையாட்டு என உணரும் போதுதான் எழுத்தும் தெய்வம், எழுதுகோலும் தெய்வம், அது உணர்த்தும் உணர்வும் தெய்வம் என்பது புரிகிறது.
– மதுராந்தகம் ரகுவீர பட்டாச்சாரியார்
