அறிவு தெளிவிலாது போகும்படி செய்வது எவை ? – Bhagavath Geetha Answers
அர்ச்சுனன் கௌரவப் பாண்டவப் படைகளுக்கு நடுவிலே கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறான்.
அர்ச்சுனன் மஹாரதர்கள், அதிரதர்கள், சமரதர்கள் அனைவரையும் கவனிக்கிறான். அவர்களை வீரர்களாகப் பார்க்க வேண்டியவன் உறவினர்களாகப் பார்க்கிறான். ஆசிரியர்களாகப் பார்க்கிறான். கண்ணனை மறந்துவிட்டான்.
உறவுகளை, மதிப்பிற்குரிய பெரியவர்களைக் கொன்று விட்டபின் ஏற்படும் பெருந்துயரத்தை மிகைப்படுத்திக் கொள்கிறான். துன்பம் பெருந்துன்பமாகி அர்ச்சுனன் எனும் வீரன் மறைந்து ஒரு பெரிய கோழையாகிவிட்ட நிலையில் கண்ணன் காலடியில் வீழ்ந்து புலம்புகிறான்.
“எனது இனிய உறவுகளை அழித்தபின் வரும் இன்பத்தை விட துறவே இனியது. கௌரவர்கள் வெற்றி பெற்றால் கூட கவலையில்லை் மோக வலையில் ஆழ்ந்து தன்னையே இழந்துவிட்டான் விசயன்.
அறுவை சிகிச்சையகத்தில் அறுவை சிகிச்சை தொடங்கிய நிலையில் ஒரு புகழ்பெற்ற மருத்துவர், “என்னால் இந்நோயாளியின் புனிதமான உடலைத் துன்புறுத்த முடியாது் இனி இத் தொழிலையே விட்டு விடுவேன் என்றார்.
நடுவானில் சென்று கொண்டிருக்கும் ஒரு விமான ஓட்டுனர் “இனிமேல் என்னால் ஓட்டும் பணியைச் செய்ய இயலாது. எனது பணியின் ஆபத்து இப்போதுதான் புரிகிறது் என்றார்.
தீர்ப்பு வழங்கவேண்டிய நேரத்தில் நீதிபதி “என்னால் இக்குற்றவாளிக்கு மரணதண்டனை அளிக்க இயலாது. நான் அவரது குடும்பம் சிதைவதற்கு காரணமாக விரும்பவில்லை. வேண்டுமானால் என்னையே தூக்கிலிடுங்கள், என்றார்.
அர்ச்சுனன் நிலை மேலே குறிப்பிட்ட மூன்று கற்பனை உரையாடல்களையே ஒத்துள்ளது.
கலக்கம் ஏன் உண்டாகிறது? அறிவுத் தெளிவின்மையால்!
அறிவு தெளிவிலாது போகும்படி செய்வது எவை? தளர்ச்சி, சோர்வு, அறியாமை, சோகம் (நாஸ்தி சோக ஸமோரிபு 🙂 சோகத்தைப் போல் எதிரி எதுவுமில்லை.
துயரமும் யோகமாகுமா? (விஷாதயோகம்) ஆகும். இங்கு அர்ச்சுனனின் துயரம் அவனது தன் முனைப்பை அழித்துவிட்டது.
யோகம் பெறுவதற்குரிய பக்குவத்தை அழித்துவிட்டது. நாற்று நடுவதற்கு முன் விவசாயி வயலில் சேற்றைக் கூட்டுவான்.
உழுத மண்ணும், தண்ணீரும் சேர்ந்து நடவுக்குத் தயாராகும். சுத்தமான கரும்பலகையில் எதையும் எழுதலாம். எழுத்துகள் பளிச்சிடுகின்றன.
மெழுகிய தரையில் கோலம் போடுவது போல, உழுத மண்போல் அர்ச்சுனனின் அழுத மனம் இருந்தது. தண்ணீர் போல் கண்ணீர் குழந்தைபோல ஆனான் அருச்சுனன். தாய்போல கீதைப் பாலூட்டி வருகிறான் கீதாசார்யன்.
ஞானப்பால் ஆகிய உபநிஷதம், ஞானாசிரியன் கண்ணன்! ஞானக் கண்ணால் காண்கிறான் சஞ்சயன். ஞானகுரு – வியாசர் அதை நமக்களித்தார். அஞ்ஞானம் தொலைவது அர்ச்சுனனுக்கு மட்டுமன்று நமக்குந்தான்.
(மதுராந்தகம் இயற்றிய திருக்கண்ணனமுது நூலிலிருந்து ஒரு பகுதி.அலகிலா விளையாட்டு அடுத்த இதழ் முதல் வழக்கம் போல்).
அபிமன்யூவின் மரணம் நமக்கு எதை சொல்கிறது? Abhimanyu Mahabharata death
கடலலைகள் ஓய்வதில்லை; காற்றும் ஓய்வதில்லை. சூரியனின் தோற்றம் மறைவு, சந்திரனின் வளர்ச்சி தேய்வு மாறுவதேயில்லை. இறைவனின் லீலை எனப்படும் விளையாட்டும் அப்படியே!
ஒரு கவிஞன் கூறினான். சாட்டை இல்லாப் பம்பரம் போல் ஆட்டி வைக்கும் இறையவன் என்றான். பம்பரம் சுற்றும் போது கயிறோ பையனோ காணப்படுவதில்லை. நாடகமானாலும் வண்ணதிரையானாலும் சின்னத்திரையானாலும் இயக்குனர் மறைந்தேயுள்ளார்.
பூவே உன்னைப் படைத்தவன் யார்? புதுமணம் உள்ளே நுழைத்தவன் யார்? பார்க்க அழகு தந்தவன் யார்? பலப்பல நிறங்களைப் படைத்தவன் யார்? உன்னைச் செய்தோன் வல்லவனே! உலகுக்கெல்லாம் நல்லவனே!
சிறிய வயதில் படித்த மனதில் படிந்த பாப்பாப் பாட்டு இது!
படிக்கவே தயங்கும் பையன்! பல்லாயிரம் பாடல்கள் பாடிய கவிஞன், எவரெஸ்ட்டைத் தொட்ட மாற்றுத்திறனாளி, உலகப்போருக்குக் காரணமான ஒரு சிலர் என எண்ணிப் பார்க்கும்போதுதான் இவ்வுலகின் மாறுபட்ட எதிரணிகளான பரிமாணம் புரிகின்றது. இவையனைத்தும் திட்டமிடப்பட்டவைகளே என்கிறான் ஆத்திகன்! அதுவே இறைவனின் மாயை (அ) லீலை (அ) விளையாட்டு என்றும் கூறி அமைதி தேடிக் கொள்கிறான் ஆத்திகன்.
விதி என்றும் கூறுவதுண்டு. பாரதம் பாடிய வில்லிப்புத்தூரார் அபிமன்யுவின்(Abhimanyu) அநியாய மரணத்தின்போது கூறுவது சிந்தனைக்குரியது.
மாயனாகிய கண்ணன் உனக்கு மாமன்! தனஞ்ஜயனெனப்படும் அருச்சுணன் தந்தை; தாத்தா யார் தெரியுமா? இந்திரன். முப்பத்து முக்கோடி தேவர்கட்கும் தலைவன். இப்படிப்பட்ட பெருமைகள் மட்டுமல்ல. அவனே சிறந்த வீரன். அப்படிப்பட்டவன் அநாதையாகி துரியோதனாதியர்கள் சூழ கையில் ஆயுதமுமின்றி ஜெயத்ரதன் என்ற வீரனால் (எதிரியால்) தலையில் கதை என்ற ஆயுதத்தால் அடிபட்டு வீழ்கிறான் என்றால் இது விதியென்பதா? விளையாட்டென்பதா?
உமர்கயாம் பாடல்களை மொழி பெயர்த்த கவிஞர் கூறுகிறார்.
எழுதிச்செல்லும் விதியின் கை
எழுதி எழுதி மேற்செல்லும்
அழுது விழுந்து புரண்டாலும்
அதிலே எதுவும் மாறாது.
இது பயமுறுத்தலா! எச்சரிக்கையா! அறிவுரையா! அனுபவமா? புரியவில்லை!
அலகுடைய விளையாட்டு பகுத்தறிவிற்குட்பட்டது. அலகிலா விளையாட்டு எதற்கும் கட்டுப்படாதது. சென்ற மாத தரிசனத்தில் திடீரென்று எனது திருக்கண்ணமுதிலிருந்து (கீதையனுபவம்) ஒரு பகுதி தரிசனமானதும் அலகிலா விளையாட்டே என்பதும் என்னைச் சிந்திக்க வைக்கிறது.
– தொடரும்.
பகவானின் அற்புதக் காட்சி
பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என நாராயணனின் ஐந்து நிலைகளில் எம்பெருமானின் மூர்த்திகள் கொண்டாடப்படுகின்றன.
அந்தர்யாமி என்ன என்பதை உணர்வதற்கு இன்றைய சூழல் வாய்த்துள்ளது.
திரு. வி.கல்யாண சுந்தர முதலியார் கூறுவார்.
ஆழ்வார்கள் அருந்தமிழில் அமர்ந்திருக்கும் அழகு என .
எம்பெருமானின் குழல் அழகு, வாய்அழகு, கைஅழகு, மெய்அழகு என அழகின் தரிசனத்தை ஆனந்தமாக அனுபவித்தது மட்டுமன்றி மற்றவரையும் அனுபவிக்க வைத்தவர்கள் ஆழ்வார்கள்.
இன்று மொழி விளக்கால் மட்டுமே எம்பெருமானை அனுபவிக்க முடியும்.
கோவலூரில் மூவர் காட்டிய மொழி விளக்கில் என்றும் இளமை எழில் கொஞ்சசுடராழியானைக்காட்டி இடர் ஆழியை நீக்கும் வழியை அமைத்த பாங்கு பரம சுகமானது.
கண்களில் கண்ட அற்புதமான திருமேனிகளின் தரிசனம் மீண்டும் அடியோமோடும் ஆர்வலர்களோடும் இடியுண்டு போந்தது பெரிதா போவது பெரிதா எனத் தடுமாறும் நிலை என்று கிடைக்கும்?
நேரடி தரிசனம் கானல் நீரோ?
நின்றான்; இருந்தான்; கிடந்தான் என அனுபவித்த ஆனந்தானுபவம், நினைந்து நினைந்து மனதில் ஏக்கத்தால் நனைந்து நனைந்து உருகுவதன்றி உவேது?
“கண்ணா! கார் மேனியனே! உனது விளையாட்டை நிறுத்திக்கொள்! தாங்காது உலகம்! சிறியோர் செத பெரும் பிழை எல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடனல்லவா!”
வியாதியின் மூலம் புரியவில்லை என்றாலும் விஸ்வரூபமாகப் பாதிக்கிறதே!
உப சம்ஹார விச்வமாத்மன் என உனது விஸ்வரூபத்திற்கே அன்பர்களால் தடை கேட்க முடிந்ததே! மீண்டும் சுப்ரபாதம் ஒலிக்கட்டும், காலை எழுந்திருந்து கரிய குருவி கணங்கள் மாலின் வரவு சோல்லி மங்கல ஒலி எழுப்பட்டும்.
வேதமும் பிரபந்தமும் தேவாரமும் திருவாசகமும் மற்றும் பஜனைகள் ஒலிக்கட்டும்.
புதிய உலகம் பூக்கட்டும். பூபாளம் புறப்படட்டும்.
அதிகாலை முதல் அர்த்தஜாமம் வரை முழு பூஜை முறை தொடரட்டும். இறைவா! சீறி அருளாதே! (இன்று கோயில்கள் திறக்கப்பட்டு விட்டன. நம் வேண்டுதல் நிறைவேறி விட்டது).
– மதுராந்தகம் ரகுவீர பட்டாச்சாரியார்
அலகு என்பதை எண்ணிப் பார்த்தேன். அரும்பதவுரையில் அளவு, நுனி, விதை, வாய் எனக் காணப்படுகிறது. அலகில்லாத என்பதை அளவில்லாத – நுனியில்லாத – விதையில்லாத, வாய் (துறை) இல்லாத என்றெல்லாம் பொருள் கூறலாம். லகு – அலகு என்ற நோக்கில் மிகப் பெரிய விளையாட்டு என்றும் கூறலாம். இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய நிலையில் வடமொழியில் லீலை என்று கூறப்படுகிறது.
காரண காரியம் என்பதில்லாத ஒரு செயலாகவே விளையாட்டு அமையும். எம்பெருமான் எடுத்த அவதாரங்களில் எதுவுமே அவனைப் பாதிக்கவில்லை. மீனாகவும், ஆமையாகவும் பன்றியாகவும், மாணியாகவும், நரஹரியாகவும் எடுத்த அவதாரங்களில் எதிலுமே அவன் பாதிக்கப்படவில்லை. திருமேனி பாதிக்கப்பட்ட (HALF) போதிலும் அவனது பெருமை பாதிக்கப்படவேயில்லை. மாறாக நரசிம்ம அவதாரம் மிகவும் கொண்டாடப்பட்டது.
வித்தின்றி வினைவது ஒன்றில்லை என்ற கம்பனது வரியும் அலகிலா விளையாட்டு என்பதையே வலியுறுத்துகிறது. முதல் தனி வித்து என்ற மாறன் சடகோபனின் உருவகம் சிந்தைக்கு அமுத ஊற்று. ஒரு பள்ளியில் கணித ஆசிரியர் கணிதத்துறையையும், வரலாற்று ஆசிரியர் வரலாற்றையும் பௌதிக ஆசிரியர் பௌதிகத்தையும் போதிப்பார். தலைமையாசிரியருக்கென ஒரு துறை இல்லை. அவர் எல்லாவற்றையும் காப்பவர்.
வணங்கும் துறைகள் பலப்பலவாக்கி என்று கம்பன் பரமனின் தலைமைப்பாட்டை உறுதிப்படுத்துவான். அலகில்லாதவனாக இன்னதன்மையன் என அறியப்படாதவனாக விளங்கும் இறையவன் அலகிலா விளையாட்டுடையவனாகவும் பெருந்தலைவனாகவும் கம்பன் எனப்படும் மாபெரும் கவிஞனால் முந்துற முன்னம் கொண்டாடப்படுகின்றான்.
இதன் பயன் என்ன? இவ்வாறு கூறுவதால் சந்ததிக்குக் கிடைக்கும் செய்தி என்ன? (Message) சிந்தனைக்குரியதே!
விளையாட்டு என்பது பொழுது போக்குவதே! பொழுது போக்குதல் என்பது பயனைக் குறித்ததல்ல. வைணவர்கள் காலகே்ஷபம் என்பார்கள். காலத்தை ஒழுங்காகக் கடத்துவது.
கார்கலந்தமேனியான் கை கலந்த ஆழியான்
பார் கலந்த வல்வயிற்றான் பாம்பணையான்
சீர் கலந்த சொல் நினைந்து போக்காரேல்
சூழ்வினையின் ஆழ் துயரை என் நினைந்து போக்குவர்
இப்போது
என்பது அருளிச் செயல்!
அடியார்களும் ஆழ்வார்களும் விழும் உடம்பு செல்லுந்தனையும் இறைவனைத் தொழுவார்கள். இறைவனது விளையாடல்களை – சேவகங்களை – வீரவிளையாட்டுக்களைப் பேசுவதன் மூலம் மனித உயிர்கள் தங்கள் கடமைகளையும் செய்து விருப்பு வெறுப்பின்றி வாழ்வில் இறையருள் பெற்றுய்யலாம்.
– தொடரும்.
ஆலயதரிசனம் வெள்ளிவிழா ஆண்டில்! அதன் ஆசிரியர் மணிவிழா ஆண்டில்! வெள்ளியும் மணியும் இணைவதை எண்ணி எண்ணிப் பார்க்கிறேன். ஒரு கனவு! அதில் குன்றிமணி பிரமனை நோக்கித்தவம் செய்கிறது. பிரமன் நேரில் தோன்றுகிறான்.
பிரமன்: மணியே! என்ன வரம் வேண்டும்?
மணி: ஐயனே! பொறுமையாக அடியேனது குறையைக் கேட்டு ஆவன செய்யுங்கள்.
பிரமன்: அளிப்பதற்காகத்தானே வந்திருக்கிறேன். கேளுங்கள்.
மணி: ஒன்றுமில்லை! எனது நெடுநாளைய சந்தேகம் ஒன்று உள்ளது. அதனைப் போக்க வேண்டும்.
பிரமன்: சந்தேகமா! என்ன அது?
மணி: மணிகள் பலவகை. பொன்மணி, முத்துமணி, இரத்தினமணி, கோமேதகமணி என நவமணிகள் உண்டு அல்லவா! என்னையும் குன்றிமணி (குந்துமணி) என்று பெயரிட்டுப் படைத்து விட்டீர்கள். நான் குன்றிய மணிதானா?
பிரமன்: யார் சொன்னது? உன் தவம் பலித்துவிட்டது. இனிமேல் உன்னை நான் பொன் போன்ற மணிகளை நிறுப்பதற்கு உன்னையும் பயன்படுத்தச் செய்வேன். பயப்படாதே! போய் வா!கனவு கலைகிறது. கனவு ஒரு படிப்பினை தருகிறது. எடைக்கல்லும் பொன்னுடன் இணையும்.
ஆ! லயதரிசனத்தில்! எத்தனை லயங்கள்! மூளைகள் லயப்படச் செய்யும்…. தலையங்கங்கள்! தேசிகலயம்! மருத்துவ லயம்! பாதுகை லயம்! வினா விடைகளெனும் விவாத லயம்! உலா லயம்! விளையாட்டு லயம்! அப்பப்பா! ஆலயதரிசனங்களில் இலயிக்கும் இதயங்கள் தொடர்ந்து முன்னூறு லய தரிசனங்களையும் ஒரே தொகுப்பாக லயப்படுத்தி லயிக்கும் ஆலயங்கள்! பாராட்டிற் குரியவர்கள் ( பார்வை: ஆலயதரிசனம் பிப்ரவரி 2020 இதழ்)
கோகுலாச்சாரி ஸ்வாமியும் ஒரு லய வித்வான்தான்! உரைநயம், இசைநயம், கவிதைநயம், கட்டுரைலயம், ஆன்ம லயம், அறிவுலயம், கணினி லயம், கலை நயம், வைணவ லயம், விஞ்ஞான லயம் இப்படிப் பட்டியலிட்டுப் பரவலாம்.
ஏற்ற கலங்களாக ஆலயதரிசனத்தை அணி செய்யும் மாற்றாதே பொழியும் வள்ளல் பெரும் பசுக்களிடையே குன்றி மணியாக கடுகாக அடியேனும் இறுதியில் ஒட்டும்படி செய்து வரும் வைணவமணி, வைணவ ரத்தினம் கோகுலாச்சாரியருக்குப் பல்லாண்டு பாடுவதே ஒரு வேள்விதான்.
தரிசனத்தில் தரிசனமாய், சரிசமமாய், பரிவதனால் எளியவனும் இடம் பெறவே வைத்ததற்கு பல்லாண்டு பாடி இதுவும் இறைவனது இன்னருளே. அலகிலா விளையாட்டு என்பது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வரிடமும் ஒவ்வொரு வகையில் நடத்தப்பட்டு வரும் தீராத விளையாட்டு என உணரும் போதுதான் எழுத்தும் தெய்வம், எழுதுகோலும் தெய்வம், அது உணர்த்தும் உணர்வும் தெய்வம் என்பது புரிகிறது.
இப்படி ஒரு அற்புதம் எப்படி நிகழ்ந்தது?
அப்படி நிகழ்ந்ததும் அலகிலா விளையாட்டு தான்!
அப்பனவன் சித்தனே பல்லாண்டு பாடினான்
ஆலிலையான் கதி என ஆனந்த மாடினான்
கண்டெடுத்தான் கோதையை கண்ணபிரான் அருளதால்
அண்டர்கோனின் அருளிலே அவள் பழுத்தாள் கனியென
பிள்ளைத்தமிழ் பாடினான் பெரியாழ்வார் ஆயினான்
பெண்பிள்ளை தன்னையும் பிச்சியாக ஆக்கினான்
பாமாலை பாடினாள் பூமாலை சூடினாள்
மாமாயன் தன்னையே மணப்பேன் நான் என்றனள்
மலர்மாலை கட்டியே மாமனாராய் ஆகினான்
மலர்கோதை மணமகள் மாயனவன் மணமகன்
இப்படி ஓர் ஆழ்வாரை எங்கும் கண்டதில்லை நாம்
ஒருமகள் பெற்றேன் என்றவர் கூறி
திருமகள் அவளே என்றும் கூறி
கரியவன் கவர்ந்தான் என்பதைக்கூறி
பெரியவர் ஆழ்வார் பெரிதும் மகிழ்ந்தார்
தமிழ்மொழி தன்னால் தமிழகம் தன்னில்
தமிழ் நெறிதெய்வ மாட்சிமை காட்டி
தமிழே திருமால் என்பதைக்கூறி
அமிழ்தமாக்கிய ஆழ்வார் வாழி
தந்தையும் மகளும் சிந்தை மகிழ்ந்து
தந்த தமிழ்ப்பா அப்பா அப்பப்பா
என்றும் மணக்கும் என் தமிழ் மணமே
நின்று நிலைக்கும் என்றும் எப்போதும்
