திருக்குறள் ஆய்வரங்கம் – பேராசிரியர். எஸ் கோகுலாச்சாரி
Thirukkural Meaning Research Forum – Prof. S. Gokulachari
6.6.2020 சனிக்கிழமை அன்று புவனகிரி தமிழ்ப் பேரவையில் “திருக்குறள் ஆய்வரங்கம்” பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்ப் பேரவையின் “தலைவர்” வழக்கறிஞர். கே.கே.பாஸ்கரன் தலைமை வகித்தார். “திருக்குறள் புலவர்”. திரு.ஜெயராமன் அவையை நெறிப்படுத்தினார். “இலக்கிய வித்தகர்” பேராசிரியர். அன்பழகனார் விவாத அரங்கத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிக நுணுக்கமாகவும் விளக்கமாகவும் சுவையாகவும் விடை அளித்தார்.
சுமார் இரண்டரை மணி நேரம் தமிழ் ஆர்வலர்களோடு நடைபெற்ற இந்த விவாத அரங்கம், கலந்து கொண்ட ஒவ்வொருவருள்ளும் சீரிய சிந்தனை விதைகளை விதைத்தது.
வழக்கறிஞர் கே.கே. பாஸ்கரன் ஐயா அவர்கள் தமிழ் ஆய்வரங்கத்தை ஒட்டிய பார்வையில் திருக்குறளைப் பற்றிய கட்டுரையைத் தொடர்ந்து ஆலய தரிசனத்தில் வெளியிடவேண்டும் என்று விரும்பினார்.
ஆய்வரங்கத்தில் பேசப்பட்ட கருத்துக்களையும் மற்ற அறிஞர்களின் சிந்தனைகளையும் இணைத்து திருக்குறள் ஆய்வரங்கம் கேள்வி-பதில் முறையில் தொடங்கப்படுகிறது.
கேள்வி: திருக்குறளின் தனிச்சிறப்பு என்ன? Speciality of Thirukkural
பதில்: நம்முடைய பாரத நாட்டில் தோன்றிய அறநூல்களில் தமிழ் மொழியில் இயற்றப்பட்ட திருக்குறள் (Thirukkural) தலையாய இடத்தைப் பெறுகிறது. தமிழ் இலக்கியத்தின் உயிராகத் திகழ்கிறது.
மனித குல மேம்பாட்டிற்கு உரிய நல்வழிகளை அழுத்தமாகவும் ஆழமாகவும்- எவரும்- எக்காலத்திலும் மறுக்க இயலா வண்ணம்-எக்காலத்திற்கும் பொருந்தும் வண்ணம்-சொல்லப்பட்ட உயர்ந்த நூலாக திருக் குறள் திகழ்கிறது.
திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரைப் பற்றி பேசவந்த மகாகவி பாரதி திருவள்ளுவர் தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே சொந்தமானவர். ஆனால் திருவள்ளுவரைப் பெற்றதன் மூலம் உலகப் புகழை தமிழகம் அடைந்தது என்கிற கருத்திலே“வள்ளுவன் தன்னை உலகி னுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”என்று கம்பீரமாகப் பாடுகின்றார்.
இத்தகைய பெருமை மிக்க திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு நோக்கில் திருக்குறளுக்கு அழகான உரைகளை தம்தம் நோக்கத்தில் பல சான்றோர் அளித்தி ருக்கிறார்கள்.
——————————————————————————————————————–
கேள்வி: திருக்குறள் எத்தனைப் பாக்களை உடையது? How many athigaram in thirukural?
பதில்: திருவள்ளுவர் (Thiruvalluvar) 1330 அருங் குறள் பாக்களையும் முப்பாலாகத் தந்திருக் கிறார்.முப்பாலாக வள்ளுவர் பாகுபாடு செய்யவில்லை என்பது சிலர் கருத்து.ஆனால் திருவள்ளுவ மாலை எனும் நூல் வள்ளுவனார் முப்பாலை (அறம், பொருள், இன்பம்) பிரித்தே பாடியிருக்கிறார் எனச் சுட்டிக்காட்டுகிறது.
——————————————————————————————————————–
கேள்வி: தமிழ் இலக்கியங்களிலே இப்படிப் பகுக்கும் வழக்கம் உண்டா?
பதில்: பன்மொழிப்புலவர் மீனாட்சிசுந்தரனார் ஒரு கருத்தைப் பதிவு செய்கின்றார். வடமொழி நூல்களில் அறம், பொருள், இன்பம் முதலிய ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நூல்களை இயற்றும் வழக்கம் இருந் திருக்கிறது. ஆனால் திருவள்ளுவர் இந்த மூன்றையும் தம்முடைய நூலில் ஒன்றாகச் செய்திருக்கின்றார்.
பண்டைய தமிழ் இலக்கிய மரபில் அகம் என்றும், புறம் என்றும், திணை வகைகள் இரண்டாகப் பகுப்பது மரபு. ஆனாலும், கூட திருவள்ளுவர் வகுத்த வழியில் அறம், பொருள், இன்பம் என மூவகைப்படுத்துவதும் சரிதான்.
“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்போடு புணர்ந்த ஐந்திணை”
என்கிற களவியல் நூற்பாவில் இருந்து இப்படிப் பகுப்பது பண்டைய நெறி தான் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
——————————————————————————————————————–
கேள்வி: திருக்குறளுக்கு மிகமுக்கியமான உரையாசிரியர்கள் யார்?
பதில்: திருக்குறளுக்கு பழைய உரையாசிரியர்களிலிருந்து நவீன உரையாசிரியர்கள் வரை, பலர் உரை வகுத்திருக்கின்றனர். ஆயினும், திருக்குறள் உரை வரைந்தோரில் குறிப்பிடத்தக்கவர்கள், தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேலழகர், பரிதி, திருமலையர், மல்லர், கவிப்பெருமாள், காலிங்கர் என்று குறிப்பிடும் வழக்கம் உண்டு. இதில், இன்றளவும் சிற்சில விமர்சனங்கள் இருந்தாலும் கூட, பரிமேலழகர்(Parimelazhagar) உரையே மிக முக்கியமான உரையாகக் கருதப்படுகின்றது.
——————————————————————————————————————–
கேள்வி: திருக்குறளின் முதல் அதிகாரம்?
பதில்: கடவுள் வாழ்த்து.
——————————————————————————————————————–
கேள்வி:முதல் குறள்? First Thirukkural?
பதில்: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. (Agara muthala eluthellam Thirukkural)
——————————————————————————————————————–
கேள்வி: இதன் சுருக்கமான பொருள்?
பதில்: எழுத்து எல்லாம் அகர முதல -எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன. உலகு ஆதிபகவன் முதற்று- அதுபோல உலகம் ஆதிபகவனாகிய முதலை உடைத்து.
——————————————————————————————————————–
கேள்வி: எழுத்துக்கள் அகரத்தை முதலாக உடையன போல, உலகம் ஆதி பகவானை முதலாக உடையது. இந்த உவமை எப்படி பொருத்தம் உடையதாக ஆகிறது ?
பதில்: கடவுள் வாழ்த்து என்பதினால் இது தலைமை வாழ்த்து. எழுத்துக்கள் எல்லாம் தலையெழுத்தாக “அ” எழுத்தை உடையன. அதைப்போலவே உலகத்துக்குத் தலைமையாக ஆதிபகவன் விளங்குகின்றான். இப் பாட்டால் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது. இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. “அ” என்கிற எழுத்து (அகாரம்)விகாரத்தான் அன்றி, நாத மாத்திரையாகிய இயல்பால் பிறக்கிறது. எழுத்துக்கு விகாரம் என்பது ஒரு விதமான முயற்சியைக் குறிக்கிறது. (நாக்கு அண்ணத்தைத் தொடுதல், இதழ் குவித்தல் போன்ற செயல்களைச் செய்துதான், சில எழுத்துக்கள் பிறக்கும்) ஆனால் “அ” என்கிற எழுத்தைச் சொல்லிப்பாருங்கள். அது எந்த முயற்சியும் இன்றி இயல்பாகவே பிறக்கும்.அதைப்போலவே இறைவன் இயல்பாகவே தலைமை பெற்றவனாக இருக்கின்றான். இது தமிழ் எழுத்துக்களை மட்டுமே நோக்கிச் சொன்னது அல்ல. வடமொழி எழுத்துக்களுக்கும், ஏன் மற்ற மொழி எழுத்துக்களுக்கும் கூட இது பொருந் தும். கீதையிலே கண்ணன்,” எழுத்துக்களில் நான் அகாரமாக இருக்கின்றேன்” என்கின்றான்.
——————————————————————————————————————–
கேள்வி: உலகு என்கிற சொல் எதைக் குறிக்கிறது?
பதில்: உலகம் என்னும் வடசொல்லுக்கு இடப்பொருளும், உயிர்கள் என்னும் பொருளும் இருத்தலால், அதனை வட சொல்லாகக் கருதி ஈண்டு உயிர் மேல் நின்றது என்றார்.
ஆனால், இது தமிழ்ச்சொல். இடவாகுபெயர் என்ற இலக்கணப்படி இங்கு உலகு என்பது உயிர்கள் நிலைத் திருக்கும் உலகம். உலகத்தின் மேல் நிற்கும் உயிர்களையும் உயிர்த் தொகுதிகளையும் குறிக்கும். முதற்றே என்பதில் உள்ள ஏகார இடைச்சொல் தேற்றப் பொருள் தரும்.(தேற்றம்- தெளிவு)
(வைணவக் கோட்பாடு இறைவனுக்கு உடலாக உலகும் (அசித்) உலகின் கண் உள்ள உயிர்களும்(சித்) இருக்கின்றன என்ற முப்பொருள் தத்துவத்தையும் சிந்திக்கலாம். சைவத்தில் இது வேறு மாதிரியாகச் சொல்லப்படுகிறது.)
——————————————————————————————————————–
கேள்வி : பேறுகள் நான்கு என்று சொல்கிறார்களே?
பதில்: ஆம். அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்று நான்கு வகை பேறுகளைச் சொல்வது மரபு இதை வடமொழியில் தர்மம் அர்த்தம் காமம் மோட்சம் என்று சொல்வார்கள். இதில் திருக்குறளில் சொல்லப் பட்டது அறம் பொருள் இன்பம் மட்டுமே.
——————————————————————————————————————–
கேள்வி : திருக்குறளில் ஏன் வீடுபேறு சொல்லப் படவில்லை?
பதில்: வீடுபேறு என்பது முயற்சியால் மட்டும் பெறுவது அல்ல என்பது சமய நூல்கள் காட்டும் உண்மை. ஆனால் அதைப் பெறுவதற்கானத் தகுதிகள் இந்த மூன்றும் (அறம், பொருள், இன்பம்)
——————————————————————————————————————–
கேள்வி : திருக்குறள் அறநூல் என்றுதானே சொல்லுகின்றார்கள். பின் அது பொருளைப் பற்றியும் இன்பத்தைப் பற்றியும் ஏன் பேசுகிறது?
பதில்:மனிதவாழ்வின் மங்காத பெரும் பயனை இவ்வுலகம் பெற்று உய்ய வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தில் இயற்றப்பட்ட நூல் திருக்குறள். திருக்குறளுக்கு இணையான ஒரு நூலை காணவே முடியாது. உலகத்தின் பல்வேறுவிதமான அறநூல்களில் சொல்லப்பட்ட அத்தனை கருத்துக்களும் திருக்குறள் என்கிற நூலில் உண்டு. ஆனால் திருக்குறளில் சொல்லப்பட்ட அத்தனை விஷயங்களும் பிற நூல்களில் முழுமையாக உண்டு என்று சொல்ல முடியாது. எனவேதான் பல மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது. திருக்குறளில் பொருளும் இன்பமும் சொல்லப்பட்டிருந்தாலும் கூட அவை இரண்டும் அறத்தின் பாற்பட்டதாகவே இருக்க வேண்டும் என்பதை முதன்மை நோக்கமாக வலியுறுத்துவதால், திருக்குறள் அறநூல் என்றே நாம் முடிவு செகிறோம். அறத்துக்கு உட்பட்டு, பொருளைச் சம்பாதித்து, அப்பொருளைச் செலவழித்துப் பெறுகின்ற இன்பமே உயர்ந்த இன்பம்.உதாரணமாக நேர்மையாக ஒரு பணம் வருகிறது. அப்பணத்தைப் பகிரங்கமாக நாம் மகிழ்ச்சியோடு கொண்டு செல்லலாம். காரணம் அது அறத்தின் முறையோடு வந்த பொருள்.உழைத்து வந்த பொருள். அதேசமயம் லஞ்சமாக ஒருவன் பணம் தருகிறான் என்று சொன்னால் அதை மறைத்து ஒருவன் பெறுகின்றான். (இப்பொழுது லஞ்சத்தைக் கூட கம்பீரமாக பெறுகின்ற அளவுக்கு காலம் கெட்டுக் கிடக்கிறது என்பது வேறு விஷயம்) ஆனால் அது அறமற்ற முறையில் வந்த செல்வம். அதனால் பழியும் பாவமும் வருமே தவிர மனநிறைவும் மகிழ்ச்சியும் வராது.
அதைப்போலத்தான் இன்பமும். அறத்திற்கு உட்பட்டு பெறுகின்ற இன்பம் மகிழ்ச்சியைத் தரும்.தமிழர் பண்பாட்டில் எல்லாவற்றிலும் அறம் இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். வாழ்க்கையைக் கூட அவர்கள் இல்லறம் துறவறம் என்று இரண்டு நிலையாக வைத்தார்கள். இல்வாழ்க்கை, துறவு வாழ்க்கை என்று சொன்னால் போதாதா? அது ஏன் இல்லறம் துறவறம் என்று சொல்லவேண்டும் என்று சிந்தித்தால் இரண்டும் அறத்தோடு இணைந்து இருக்க வேண்டும் என்பது நமக்குத் தெரியவரும். அறமில்லாத இல்வாழ்க்கை பயன்தராது. அதைப்போலவே ஒருவன் துறவு பெற்றுவிட்டால் போதாது. அதில் அறம் இருக்க வேண்டும். (காரணம் பல துறவிகள் போலித் துறவிகளாக இருப்பதையும் நாம் காண்கிறோம்) இவற்றையெல்லாம் ஆராய்கின்ற பொழுது திருக்குறள் என்கிற நூலை ஒருவன் முழுமையாக கற்று அதன்படி தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், அவன் ஒருவன் மட்டுமல்ல, இவ்வுலகமே அதனால் பயன்பெறும்.
——————————————————————————————————————–
கேள்வி:முதல் அதிகாரத்தில் இரண்டாவது குறள்?
பதில்: கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் .திருக்குறளை ஏன் அதிகாரம் என்று பெயரிட்டுப் பிரித்திருக்கிறார்கள் என்றுகூடக் கேட்கலாம். திருக்குறள் என்பது தமிழ்மறை என்று சொல்வார்கள். அதாவது வடமொழியில் வேதம் எப்படி இருக்கிறதோ அதைப் போல தமிழில் வேதமாக இருக்கிறது திருக்குறள் என்றும் வைத்துக் கொள்ளலாம். வேதம் ஒரு மனிதனுக்கு எதைச் செயலாம் எதைச் செய்யக்கூடாது எப்படிச் செய்யவேண்டும் என்றெல்லாம் முகத்தில் அடித்தது போல் கட்டளை இடுமே தவிர, பல இடங்களில் அது இனிமையாகப் பேசாது. திருக்குறளும் வேதம் என்பதால் ஒரு மனிதனுக்கான நன்மையை, அழுத்தமாக, ஆணித்தரமாகக் கட்டளையைப் போல் பேசுவதால், அதை அதிகாரமாகப் பெயர் தந்து பிரித்து வைத்திருக்கலாம் என்பது ஒரு நயம்.
——————————————————————————————————————–
கேள்வி : பேறுகள் நான்கு என்று சொல்கிறார்களே?
பதில்: ஆம். அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்று நான்கு வகை பேறுகளைச் சொல்வது மரபு இதை வடமொழியில் தர்மம் அர்த்தம் காமம் மோட்சம் என்று சொல்வார்கள். இதில் திருக்குறளில் சொல்லப் பட்டது அறம் பொருள் இன்பம் மட்டுமே.
——————————————————————————————————————–
கேள்வி : திருக்குறளில் ஏன் வீடுபேறு சொல்லப் படவில்லை?
பதில்: வீடுபேறு என்பது முயற்சியால் மட்டும் பெறுவது அல்ல என்பது சமய நூல்கள் காட்டும் உண்மை. ஆனால் அதைப் பெறுவதற்கானத் தகுதிகள் இந்த மூன்றும் (அறம், பொருள், இன்பம்)
——————————————————————————————————————–
கேள்வி : திருக்குறள் அறநூல் என்றுதானே சொல்லுகின்றார்கள். பின் அது பொருளைப் பற்றியும் இன்பத்தைப் பற்றியும் ஏன் பேசுகிறது?
பதில்:மனிதவாழ்வின் மங்காத பெரும் பயனை இவ்வுலகம் பெற்று உய்ய வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தில் இயற்றப்பட்ட நூல் திருக்குறள். திருக்குறளுக்கு இணையான ஒரு நூலைக் காணவே முடியாது. உலகத்தின் பல்வேறுவிதமான அறநூல்களில் சொல்லப்பட்ட அத்தனைக் கருத்துக்களும் திருக்குறள் என்கிற நூலில் உண்டு. ஆனால் திருக்குறளில் சொல்லப்பட்ட அத்தனை விஷயங்களும் பிற நூல்களில் முழுமையாக உண்டு என்று சொல்ல முடியாது. எனவேதான் பல மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது. திருக்குறளில் பொருளும் இன்பமும் சொல்லப்பட்டிருந்தாலும் கூட, அவை இரண்டும் அறத்தின் பாற்பட்டதாகவே இருக்க வேண்டும் என்பதை முதன்மை நோக்கமாக வலியுறுத் துவதால், திருக்குறள் அறநூல் என்றே நாம் முடிவு செய்கிறோம். அறத்துக்கு உட்பட்டு, பொருளைச் சம்பாதித்து, அப்பொருளைச் செலவழித்துப் பெறுகின்ற இன்பமே உயர்ந்த இன்பம்.
உதாரணமாக நேர்மையாக ஒரு பணம் வருகிறது. அப்பணத்தைப் பகிரங்கமாக நாம் மகிழ்ச்சியோடு கொண்டு செல்லலாம். காரணம் அது அறத்தின் முறையோடு வந்த பொருள்.உழைத்து வந்த பொருள். அதேசமயம் லஞ்சமாக ஒருவன் பணம் தருகிறான் என்று சொன்னால், அதை மறைத்து ஒருவன் பெறுகின்றான். (இப்பொழுது லஞ்சத்தைக் கூட கம்பீரமாக பெறுகின்ற அளவுக்கு காலம் கெட்டுக் கிடக்கிறது என்பது வேறு விஷயம்) ஆனால் அது அறமற்ற முறையில் வந்த செல்வம். அதனால் பழியும் பாவமும் வருமே தவிர,மனநிறைவும் மகிழ்ச்சியும் வராது.
அதைப்போலத்தான் இன்பமும். அறத்திற்கு உட்பட்டு பெறுகின்ற இன்பம் மகிழ்ச்சியைத் தரும்.
தமிழர் பண்பாட்டில் எல்லாவற்றிலும் அறம் இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். வாழ்க்கையைக் கூட அவர்கள் இல்லறம், துறவறம் என்று இரண்டு நிலையாக வைத்தார்கள். இல்வாழ்க்கை, துறவு வாழ்க்கை என்று சொன்னால் போதாதா? அது ஏன் இல்லறம் துறவறம் என்று சொல்லவேண்டும் என்று சிந்தித்தால் இரண்டும் அறத்தோடு இணைந்து இருக்க வேண்டும் என்பது நமக்குத் தெரியவரும். அறமில்லாத இல்வாழ்க்கை பயன்தராது. அதைப்போலவே ஒருவன் துறவு பெற்றுவிட்டால் போதாது. அதில் அறம் இருக்க வேண்டும். (காரணம் பல துறவிகள் போலித் துறவிகளாக இருப்பதையும் நாம் காண்கிறோம்) இவற்றையெல்லாம் ஆராய்கின்ற பொழுது திருக்குறள் என்கிற நூலை ஒருவன் முழுமையாக கற்று அதன்படி தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அவன் ஒருவன் மட்டுமல்ல இவ்வுலகமே அதனால் பயன்பெறும்.
——————————————————————————————————————–
கேள்வி:முதல் அதிகாரத்தில் இரண்டாவது குறள்?
பதில்: கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் .திருக்குறளை ஏன் அதிகாரம் என்று பெயரிட்டுப் பிரித்திருக்கிறார்கள் என்றுகூடக் கேட்கலாம். திருக்குறள் என்பது தமிழ்மறை என்று சொல்வார்கள். அதாவது வடமொழியில் வேதம் எப்படி இருக்கிறதோ, அதைப் போல தமிழில் வேதமாக இருக்கிறது திருக்குறள் என்றும் வைத்துக் கொள்ளலாம். வேதம் ஒரு மனிதனுக்கு எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது எப்படி செய்யவேண்டும் என்றெல்லாம் முகத்தில் அடித்தது போல் கட்டளை இடுமே தவிர, பல இடங்களில் அது இனிமையாகப் பேசாது. திருக்குறளும் வேதம் என்பதால் ஒரு மனிதனுக்கான நன்மையை, அழுத்தமாக, ஆணித்தரமாகக் கட்டளையைப் போல் பேசுவதால், அதை அதிகாரமாகப் பெயர் தந்து பிரித்து வைத்திருக்கலாம் என்பது ஒரு நயம்.
– தொடரும்.
