திருக்குறள் ஆய்வரங்கம் – Prof.S. Gokulachari
– பேராசிரியர். எஸ் கோகுலாச்சாரி
திருக்குறள் முதல் அதிகாரம் இரண்டாவது குறள்.
கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
Katradhanal aaya payanenkol Valarivan
Natraal Thozha at Enin. – Meaning
இக்குறள் சொல்லும் பொருள் என்ன?
வள்ளுவர் கேள்வியாகவே எழுப்புகிறார். நீ கற்றவனாயிருந்தாலும் என்ன பயன் ?
அப்படியானால் கற்றவனுக்கு என்ன பயன். அதையும் அவரே சொல்லிவிடுகிறார்.
வாலறிவனின் நல்ல தாள்களைத் தொழாத போது நீ படித்தும் பயன் இல்லை.
படித்தோம். பட்டம் வாங்கினோம். வேலைக்குப் போகிறோம். அதற்கு அந்த பட்டம் உதவுகிறது. இது தானே பயன்.
கல்லூரி சென்று விதம் விதமாகப் படித்து, பட்டம் வாங்கி, அந்தப் பயனை அடைந்தவர்கள் இருக்கும் போது, அதெல்லாம் இல்லை என்று வள்ளுவர் சொல்வது சரிதானா? நடைமுறைக்கு பொருந்துவதுதானா? என்ற கேள்வி எழும்.
முதலில் வாலறிவன் காலில் விழவேண்டும் என்கிறாரே அவர் யார்?
வாலறிவன் என்றால் தூய்மையான, இளமையான, மிகுதியான, நன்மை செய்யும், பெருமை மிக்க அறிவுடையவன் என்றெல்லாம் அகராதி பொருள் சுட்டுகிறது.
நம் கல்வி, நமக்கு சாந்தியை, சந்தோஷத்தை, குணத்தை, இனிமையை, வாழ்வின் உன்மையை அறியும் ஆற்றலை, நாம் யார் என்று உணர்த்தும் உணர்வைத் தந்திருக்க வேண்டும்.
கல்வி என்பது ஆன்மாவின் உண்மைத்தன்மையை உணர வைப்பது. உள் நோக்கிய பயணம் என்றெல்லாம் விளக்கம் கொடுக்கிறார்கள்.
நம் கல்வி புகழ், பணம், பதவி தந்தாலும் பல நேரங்களில் வாழ்வின் மேம்போக்கான நிரந்தரமற்ற நிலையைத் தருகிறது. பல நேரங்களில் அடுத்தவன் துன்பத்திற்கும் காரணமாகிவிடுகிறது.
பாரதி சொல்வார்.
படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான் என்கிறார்.
படித்தவன் அதிகம் சூது செய்வான். குற்றம், ஊழல் எல்லாம் செய்வான். அதை எப்படிச் செயலாம் என்று, தான் கற்ற கல்வியைப் பயன்படுத்துவதை, நடைமுறையில் தினம் தினம் பார்க்கிறோமே.
இந்தக் கல்வியால் அவன் நல்லவனாகவில்லையே.
அப்படியானால் அவனை ஒருவிதத்தில் பாவம் செய்ய வைத்து படுகுழியில் தள்ளிய கல்வியால் அவனுக்கோ சமுதாயத்துக்கோ என்ன பயன் இருக்க முடியும்.
இராவணனை விட கற்றவர்கள் யார்? அவன் அறியாத வேதம் இல்லை. கற்காத அஸ்திர சாத்திர வித்தைகள் இல்லை.

அடுத்தவன் மனைவியை கொண்டு வந்து தன் வீட்டில் வைத்தது தவறு என்று தெரியவில்லையே.
நல்லது கெட்டது பிரித்தறிவது அறிவு.
அந்த அறிவைத்தருவது கல்வி.
ஒருவன் ஆத்ம நாசத்திற்குக் காரணமானால் அது கல்வியல்ல.
அறிவு ஒரு குறிப்பிட்ட துறையில் புகழைக் கொடுத்தால், உடனே கர்வத்தையும் தந்து விடுகிறது. சர்வத்தையும் தரும் புகழ் கர்வத்தையும் தந்து விடுகிறது. அந்த கர்வம் நம்மை வீழ்ச்சியடையச் செய்கிறது. ஆக, நமக்கிருக்கும் அறிவு நம் வீழ்ச்சிக்கும் காரணமாகிறது. எனவே அந்தக் கல்வி நமக்குப் பயன் தரவில்லை. பாரதியார் மாரியம்மாவிடம் இப்படிப் பாடுகிறார் –
பலகற்றும் பலகேட்டும், – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பயனொன்று மில்லையடி, – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
துணிவெளுக்க மண்ணுண்டு, – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
தோல்வெளுக்கச் சாம்பருண்டு, – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மணிவெளுக்கச் சாணையுண்டு, – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மனம்வெளுக்க வழியில்லை, – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி “ என்பார்.
சாஸ்திரத்தில் அதிகப் படிப்பும் ஆபத்துதான் என்பார்கள். நன்கு படித்தவர்கள் சில நேரங்களில் சில்லறை பிரச்சினைகளைக் கூட எதிர் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

உயர்ந்த படிப்பு! என்ன பயன்? What is the uses of High Education?
இப்படிப் பல கோணங்களில் ஆராயும் போது தான் உண்மையான கல்வி என்ன? வள்ளுவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
கல்விக்கு ஒரு விளக்கம் கொடுத்தார் திருமூலர்.
குறிப்பறிந் தேன்உடலோடுயிர் கூடிச்
செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை
மறிப்பறி யாதுவந் துள்ளம் புகுந்தான்
கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே.
திருமூலர் எதைக் கற்றேன். கற்றதால் என்ன பெற்றேன் என்பதை விளக்குகிறார்.
மாசில்லாத, உயர்ந்த கல்வியை யான் கற்றேன்; அதனால் உயிர் உடலோடு கூடிநின்றேனா, அறியத்தக்க பொருளை அறிந்தேன்; அதன் பயனாக இறைவனை உள்ளத்திலே இருத்தத் தெரிந்தேன். அதனால், அவனும் மீண்டு போகாதவனா என் உள்ளத்திலே வந்து புகுந்து நின்றான். இது தான் கல்வியின் பயன். இந்தப் பாடலை மனதில் கொண்டு மேலும் ஆராவோம்.
– தொடரும்.
Thirukkural Meaning Research Forum – திருக்குறள் ஆய்வரங்கம் பகுதி – 1 படிக்க இங்கு கிளிக் செய்யவும்.
- திருச்சித்ரகூட ராமாயணம் தமிழில் பதம் பிரித்து

- ஸ்ரீமாந் வேங்கட ரமண பாகவதரின் 244வது ஜெயந்தி விழா – புவனகிரி

- மதுரகவி சுவாமிகள் – Madhurakavi Swamigal – Srirangam

- புவனகிரி அழகிய மணவாள ஏகாங்கி சுவாமிகளின் ஜெயந்தி விழா

- நமக்கான நல்ல நேரம் நாம் ஏன் அமைத்துக்கொள்ளக்கூடாது?(Dec 3,2022)

- தெளிவு பெறுவோம் (1.6.2025)


