(c)எஸ்.கோகுலாச்சாரி

“என்ன எழுதி ஓலையை அனுப்பியிருக்கிறார் மஹாபாஷ்ய பட்டர் அமைச்சரே?” என்று அரசன் கேட்டவுடன் ஓலையைப் படிக்க ஆரம்பித்தார் மந்திரி.
“அரசே, வணக்கம்! அரசவையில் உள்ள ஆக்கியாழ்வான் என்கின்ற பண்டி தரிடம் வாதம் செய்து வெல்ல வேண்டும். வாதம் செய்ய முடியா விட்டால் ஆக்கியாழ்வானுக்கு மாதம்தோறும் ஒரு தொகையைக் கப்பமாகச் செலுத்த வேண்டும். வாதம் செய்வதாக இருந்தால், எந்த நாளில் வாதம் செய்ய வருகிறீர்கள் என்று கேட்டு ஓலை அனுப்பி இருக்கிறீர்கள். ஒரு வித்வான் இன்னொரு வித்வானிடம் எதற்காக வாதம் செய்ய வேண்டும் என்பது எனக்கு விளங்கவில்லை. ஒருவன் தன்னுடைய ஆத்ம உஜ்ஜீவனத்துக்காகக் கல்வியைக் கற்கிறான். மற்றவர்களுக்கும் சொல்லித் தருகிறான். இதில் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியம் எங்கே வருகிறது என்று தெரியவில்லை.ஆயினும் அரசன் ஆணையை அடியேனால் மீற முடியாது. ஆக்கியாழ்வானுடன் வாதம் செய்துதான் தீரவேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அதற்குத் தயாராக என்னுடைய மாணவன் யமுனைத்துறைவன் இருக்கின்றான். உங்கள் ஆக்கியாழ்வானை எதிர் கொள்வதற்கு அவன் போதும் . ஒரு வித்வானுக்குரிய மரியாதையோடு சபைக்கு வருகின்ற வாய்ப்பினை நீங்கள் தரவேண்டும். பல்லக்கு முதலிய அரசு மரியாதை அனுப்பினால் என் சீடன் யமுனைத்துறைவன் உங்கள் சபைக்கு வருவான். தேதியைக் குறித்து அனுப்பவும்.”
இதை எதிர்பார்க்கவே இல்லை ஆக்கியாழ்வான்.
மகா பாஷ்ய பட்டரை அவமானப்படுத்தி, தன்னை விட ஒரு பெரிய வித்வான் இந்த சோழ தேசத்திலேயே இல்லை என்கிற நிலையை தோற்றுவித்து விடலாம் என்று எண்ணிய எண்ணத்தில் மண் விழுந்தது.
“என்ன ஆக்கியாழ்வான்? இப்படி ஓலை வந்திருக்கிறது… அவர் வாதுக்கு வரவில்லையாம். அவருடைய சீடன் தயாராக இருக்கிறாராம். அவரிடம் நீர் வாது செய்யத் தயார் தானே ?”எனக் கேட்க, ஆக்கியாழ்வான் தயக்கத்தோடு “ம்.. அரசு உத்தரவு படி நாள் குறித்து அனுப்பலாம்” என்றார்.
“அமைச்சரே! அப்படியானால் வருகிற வெள்ளிக்கிழமை பல்லக்கு பரிவாரம் அனுப்பி யமுனைத்துறைவரை நம் அவைக்கு அழைத்து வாருங்கள்..” என்று சொல்லிவிட்டு மன்னன் சென்றுவிட்டான்.
அன்று மாலை. மன்னனும் ராணியும் மாடத்திலே பேசிக் கொண்டிருந்தனர். மன்னன் எகத்தாளமாகச் சொன்னா ன்.
“ஆக்கியாழ்வானை வெல்வதற்கு இந்த உலகத்தில் இன்னொருவர் பிறந்துதான் வரவேண்டும்.. அவர் படிக்காத சாஸ்திரங்கள் இல்லை…செய்யாத தர்க்கங்கள் இல்லை… மகாபாஷ்ய பட்டராலேயே வெல்ல முடியாத ஆக்கியாழ்வானை அவர் சீடனால் வெல்ல முடியுமா? ஏதோ ஒரு தொகை கப்பமாகச் செலுத்தி விட்டு போக வேண்டியது தானே? இது என்ன விபரீதம்?”
ராணி சிரித்தாள்.
“அரசே! வல்லவனுக்கும் வல்லவன் உண்டு என்கிற பழமொழியை நீங்கள் அறியவில்லையா, என்ன ?”
“என்ன பேசுகிறாய் ராணி.? ஒரு வித்வானை எதிர்த்து வாதிட ,சின்னஞ்சிறு பாலகனை அனுப்பி வைப்பது விஷப்பரிட்சை இல்லையா?”
“யாருக்கு மன்னா ? விஷபரீட்சை ஆணவம் கொண்ட ஆக்கியாழ் வானுக்குக் கூட இருக்கலாமே..?”
“அப்படியானால், அந்த சிறுவன் வெல்வானா?”
“அவன் வெல்வானா என்பதைவிட, எனக்கு என்னமோ ஆக்கியாழ்வான் தோற்று விடுவார் என்றே தோன்றுகிறது”
“காரணம்..?”
“கல்வியை விஞ்சிய அவருடைய தலைக்கனம்…”
“நிச்சயமாக அது நடக்காது…”
“நடந்துவிட்டால்?”
“நடந்துவிட்டால் ,இந்த தேசத்தில் பாதியை அவனுக்குத் தந்து விடுகிறேன். ஆனால் சொன்னபடி நடக்காவிட்டால்…?”
பேச்சு சூடேறியது.
” நடக்காவிட்டால் என்ன செய்யலாம் என்று உத்தேசம்?”
“ராணி என்கிற அந்தஸ்தில் இருந்து நீக்கி வைக்கப்படுவாய்.பிறகு நீ இந்த அரண்மனையில் சாதாரண வேலைக்காரியாகவே காலத்தைக் கழிக்க வேண்டும் .”
மன்னன் ராணியிடம் கோபித்துக்கொண்டு வெளியேறினான்.
வெள்ளிக்கிழமை சபை கூறியது.
ஆக்கியாழ்வான் கம்பீரமாக தன்னுடைய ஆசனத்தில் அமர்ந்திருக்க, மன்னனும் அடிக்கடி ராணியைப் பார்த்துக்கொண்டிருந்தான்..
“ம்…இன்று ஒரு நாள் தான் நீ எனக்கு அரசியாக இருக்கப் போகிறாய்… தலையெழுத்து யாரை விட்டது?” என்று மெல்ல முணு முணுத்தான்.
ராணியும் விடவில்லை.
“நீங்கள் யார் தலையெழுத்தைச் சொல்லுகின்றீர்கள்? ஆக்கியாழ்வானின் தலையெழுத்தைச் சொல்லுகிறீர்களா?”
“பார்க்கலாம்..”
திடீரென்று மங்கள வாத்தியங்களோடு பல்லக்கு வந்தது.
பல்லக்கிலிருந்து பாலகன் யமுனைத்துறைவன் குதித்தான்.
இனம் புரியாத மகிழ்ச்சி ராணியின் இதயத்தில் வளர்ந்தது.
நிச்சயம் இறைவன் கைவிடமாட்டான்.
“இந்த முகத்தைப் பார்த்தால் ஆக்கியாழ்வான் இன்றோடு முடிந்தான் என்றே தெரிகிறது..”என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் .
யமுனைத்துறைவன் பார்வை சுற்றுமுற்றும் சென்றது..
“என்ன “என்று மன்னன் கேட்க,”அரசே…வாதப் பிரதிவாதம் செய்யும்போது ஆசனங்களும் சமமாக இருக்கவேண்டும்… ஆக்கியாழ்வான் உயர்ந்த ஆசனத்தில் இருக்கிறார்…”
மன்னன் உடனே கைதட்டி சேவகர்களை அழைத்து, ஆக்கியாழ்வானுக்கு நிகரான ஆசனத்தை இந்த பாலகனுக்கும் தாருங்கள்” என்று சொன்னவுடன், புதிய ஆசனத்தில் புன்னகையோடு பாலகனும் அமர்ந்துகொண்டார் .
ஆக்கியாழ்வான் பேசினார்.
“சீடனைக் காப்பாற்ற வேண்டியது குருவின் கடமை… ஆனால் இங்கே குருவைக் காப்பாற்ற நீ ஓடி வந்து இருக்கிறாய்…..ம்……நான் யானை..நீ சிறு எறும்பு ?”
“சிற்றெறும்பால் யானை சாவதுண்டு..பண்டிதரே .. தர்க்க விஷயத்துக்கு வாருங்கள்”
அடுத்த நிமிடம் முதல் அங்கே அற்புதமான விவாதம் நடை பெற்றது.
இது குறித்து குரு பரம்பரை நூல்களில் பல கதைகள் உள்ளன.அந்த வாத பிரதி வாதங்களால் நமக்கு ஒரு பலனும் இல்லை.
வித்வத்துவம் இருந்தாலும் ஆணவம் தோற்கும் என்பதே அந்த வாதத்தின் சாரமான செய்தி.ஞானத்திற்கும் வயதிற்கும் தொடர்பு இல்லை என்பது அடுத்த செய்தி ..”
விவாத முடிவில் யமுனை துறைவர் வென்றார்.ராணி மிக மகிழ்ச்சி அடைந்தாள்.அவள் உள்ளுணர்வு வெற்றி பெற்றது.ஓடி வந்து எம்மை “ஆளவந்தாரே ” என்று சொல்லி கட்டிக்கொண்டாள்.
ஆளவந்தார் பாதி ராஜ்யம் பெற்றார்.
இந்த ஆளவந்தார் யார் தெரியுமா?
நாதமுனிகளின் மகன் வயிற்றுப் பேரன்.
யமுனைத்துறைவன் என்கிற பெயரே முதலில் நாதமுனிகளால் வைக்கப்பட்டது.
நாதமுனிகள் தம் பிரதான சீடர்களான உய்யக்கொண்டார் மணக்கால் நம்பி ஆகியோரிடம், அந்திம காலத்தில் ,தன்னுடைய பேரனிடம் வைணவத்தை காக்கும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். அவன் இந்த சமய தத்துவங்களை உலகத்தில் பிரகாசப் படுத்த வேண்டும் என்று சொல்லிவிட்டு திருநாடு அடைந்தார்.
உய்யக்கொண்டாரும் மணக்கால் நம்பியிடம் இந்தப் பொறுப்பை ஒப்ப டைத்து விட்டு திருநாடு அடைந்தார்.
சாதாரண மனிதராக இல்லாது, அரச வாழ்க்கையில் ஈடுபட்டு ஆடம்பர வாழ்வு வாழும் ஆளவந்தாரை எப்படிச் சந்தித்துப்பது என்று மணக்கால் நம்பி தவித்துக்கொண்டிருந்தார்.
எப்படியாவது அரண்மனைக்குச் சென்று அவரைச் சந்திக்க வேண்டும் . ஆனால் அது எளிதான செயலாக இல்லை. அதற்காக ஒரு காரியம் செய்தார். தினசரி பசுமையான தூதுவளைக் கீரையைப் பறித்து அரண்மனை சமையல்காரர் மூலம் அரசருக்கு உணவில் சேர்க்கச் செய்தார்.
அந்த கீரை தூது சென்று ஆளவந்தாரை வளைக்கும் என்று நம்பினார்.
தூதுவளைக் கீரையை தினசரி சமைத்து ஆளவந்தாருக்கு அளித்துக் கொண்டிருந்தார் சமையல்காரர்.
“கீரை எங்கே கிடைக்கிறது? சுவையாக இருக்கிறதே” என்று ஒரு நாள் கேட்கும் போது சமையல்காரர் சொன்னார்
.”யாரோ ஒரு வயதானவர் உங்கள் மீது அன்பு கொண்டு , அரண்மனைக்கு வந்து தந்து விட்டுச் செல்கின்றார் ”
கீரைச் சுவை ஆளவந்தார் நாக்கிற்கு ஏறியது.
ஒரு நாள் மணக்கால் நம்பி கீரையைக் கொடுப்பதை நிறுத்தினார். ஆளவந்தார் தம்முடைய உணவில் “ஏன் கீரை இல்லை? என்ன காரணம்?” என்று கேட்க,”அரசே..வழக்கமாகக் கீரை தரும் அவர் என்ன காரணமோ வரவில்லை” என்று சொன்னவுடன்,ஆளவந்தார் சற்று யோசித்துச் சொன்னார்.
“ம்.. ஏதோவொரு காரியமாகத்தான் அவர் தினசரி இந்த கீரையைக் கொடுக்கிறார் என்று நினைக்கிறேன். நாளை வந்தால் அவரை என்னிடம் அழைத்து வா ”
மணக்கால் நம்பி அடுத்த நாள் கொஞ்சம் முன்னதாகவே தூதுவளைக் கீரையைக் கொண்டு போய் அரண்மனையில் சேர்த்தார். எதிர்பார்த்தது போலவே ,சமையல்காரர்,”பெரியவரே… உம்மை அரசர் பார்க்கவேண்டும் என்றார். அடுத்த நாள் ஆளவந்தாரைச் சந்தித்தார்.
ஆளவந்தார் நேரடியாகவே கேட்டார்.
“உம் அன்புக்கு நன்றி.எதை எதிர்பார்த்து நீங்கள் கீரை கொடுத்தீர்கள்?.நான் அதற்கு என்ன தர வேண்டும்?”
மணக்கால் நம்பி சொன்னார்.
“உம்மிடம் பெறுவதற்கு வரவில்லை.தருவதற்கு வந்தேன்..”
“நான் அரசன்..எனக்கு என்ன நீர் தரமுடியும்…?”
“உம்மிடம் எல்லாம் இருக்கிறது..ஆனால் இல்லாத ஒன்று அடியேனால் தர முடியும்?”
“அப்படியா..யார் தந்தது..?”
உங்கள் பிதாமகர் தந்தது..அதை உம்மிடம் ஒப்படைத்தால் என் கடமை முடியும்..?”
“சரி..தாருங்கள்..”
“அது இங்கு இ ல்லை.இருக்குமிடம் வந்தால் ஒப்படைப்பேன்..”
“சரி அரண்மனை வீரர்கள் வருவார்கள்..அவர்களிடம் தாருங்கள்”
“உடையவரே நேரில் வந்து பெற்றுக்கொள்ள வேண்டியது..வேறு ஒருவரிடம் ஒப்படைக்க முடியாது ”
“சரி புறப்படுங்கள்..”
அடுத்த நிமிடம் ஆளவந்தார் புறப்பட்டார். மணக்கால் நம்பியும் ஆளவந்தாரும் காவிரிக்கரை ஓரமாகவே நடந்தனர்.வழியெங்கும் கீதை உபதேசம்..நாதமுனிகள் நாலாயிரம் பாசுரங்களைப் பெறப் பட்ட பாடு..அனைத்தையும் கதை கதையாகச் சொல்லிச் சென்றார்.
ஆளவந்தாருக்கு மேல் பூச்சு ஆடம்பர வாழ்வின் நாட்டம் மெல்ல மெல்ல மாறியது. கடைசியில் மணக்கால் நம்பி, திருவரங்கக் கருவறையின் முன்னே கொண்டு போய் நிறுத்தி,” இதோ இருக்கிறானே… இந்த அரங்கன் தான் உம் பிதாமகர் உம்மிடம் ஒப்படைக்க சொன்னச் சொத்து.நன்றாகப் பார்.இனி நீர் எதை ஆளப் போகிறீர் என்று தீர்மானம் செய்து கொள் ..என் கடமை முடிந்தது.”
அடுத்த நிமிடம் ஆளவந்தார் தன் ராஜ்ஜியத்தை கை விட்டார்.ரங்க ராஜ்யத்தைக் கரம் பிடித்தார்.வைஷ்ணவ சாம்ராஜ்யத்தைக் கட்டி ஆச்சாரியராய் உயர்ந்தார்.
இவர் திருவரங்கத்தில் வைணவ தரிசனத்தைப் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது ,தனக்குப் பின்னர் இத் தரிசனத்தை யாரிடம் ஒப்படைப்பது.என்று கவலைபட்டுக் கொண்டிருக்கும் போதுதான் இராமானுசர் பற்றி அறிந்தார்.காஞ்சிபுரம் சென்று அவருக்குத் தெரியாமல் அவரைப் பார்த்து மகிழ்ந்தார். திருவரங்கம் திரும்பித் தொண்டாற்றும் காலத்தில் தமது முடிவு நாள் நெருங்கியதை உணர்ந்து, தமது சீடர் பெரிய நம்பியை அனுப்பி இராமானுசரை அழைத்துவரச் சொன்னார். ஆனால், இராமானுசர் வருவதற்கு முன் ஆளவந்தார் திருநாடு எழுந்தருளினார்.
ஆளவந்தாருக்கு மூன்று குறைகள் இருந்தன.
1.பிரம்ம சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைதத்தை ஒட்டிய ஒரு உரை நூல் (பாஷ்யம்)எழுதுவது;
2.விஷ்ணுபுராணம் இயற்றிய பராசரர், பாகவதம் இயற்றிய வேதவியாசர் ஆகியோரின் அழியாத புகழுக்கு வழி கோலுவது;
3.வேதத்தை தமிழ் செய்த நம்மாழ்வாரின் பெயர், உலகில் என்றென்றும் வாழும்படிச் செய்வது.
இந்த மூன்றையும் தம் காலத்தில் ராமானுஜர் தீர்த்து வைத்தார்
ஸ்வாமி ஆளவந்தார் திருநக்ஷத்திரம் : ஆடி உத்திராடம்
திருநக்ஷத்ர தனியன் :
ஸூசௌ மாஸ்யுத்தாராஷாடாஜாதம் யாமுநதேஸிகம் |
ஸ்ரீராமமிஸ்ரசரண ஸரோஜாஸ்ரீத மாஸ்ரயே ||
விளக்கம்:
ஆடி உத்திராடத்தில் அவதரித்தவரும், மணக்கால் நம்பியாகிற ஸ்ரீராமமிஸ்ரரின்திருவடித் தாமரைகளை ஆச்ரயித்தவருமான ஆளவந்தார் என்னும் யாமுனாசார்யரை ஆச்ரயிக்கிறேன்.
ஸ்ரீ ஆளவந்தார் வாழித்திருநாமம் :
மச்சணியும் மதிளரங்கம் வாழ்வித்த்தான் வாழியே
மறைநான்கும் ஓருருவில் மகிழ்ந்து கற்றான் வாழியே
பச்சையிட்ட ராமர்பதம் பகருமவன் வாழியே
பாடியத்தோன் ஈடேறப் பார்வை செய்தோன் வாழி
கச்சிநகர் மாயன் இருகழல் பணிந்தோன் வாழியே
கடக உத்தராடத்துக்குக் காலுதித்தான் வாழியே
அச்சமர மனமகிழ்ச்சி அணைந்திட்டான் வாழியே
ஆளவந்தார் தாளிணைகள் அனவரதம் வாழியே!
