கவியரசு கண்ணதாசன் மக்கள் நெஞ்சில் குடியிருக்கும் மாபெரும் கவிஞர்.
திரை இசைப் பாடல்கள் மூலம் ஒவ்வொருவரின் மனத்திரையிலும் இடம் பிடித்தவர்.
அவர் ஒரு சிறந்த புத்தகம் மட்டுமல்ல,திறந்த புத்தகம்.
ஒளிவு மறைவு இல்லாமல் எல்லாவற்றையும் சொல்லக்கூடியவர்.
பாசாங்கோ, பந்தாவோ, ஆடம்பரமோ, தான் என்று அகந்தையோ, தற்பெருமையோ, தலைக்கனமோ இருக்காது .உணர்ச்சி மிகுந்தவர்.
சிரிப்பிலும் மகிழ்ச்சியிலும் எல்லை காண முடியாத அளவுக்கு சிரிப்பு .
அழுதாலும் குலுங்கி குலுங்கி அழுவார். எளிமையும் தெளிவும் மிக்கவர்.
பிறர் துன்பப்படும் பொழுது தான் கஷ்டப்படுபவர் .
அவருடைய மேடைப்பேச்சுகளையும் உரையாடல்களையும் கேட்கிற வர்களுக்கு ஆனந்தமாக இருக்கும். சங்கீதம் போல அவருடைய உரை இருக்கும்.
அதிலே அனுபவம் மிளிரும். நகைச்சுவை கொட்டும். இலக்கிய மேற்கோள்கள் வந்து அலை அலையாக விழும். 5
4 ஆண்டுகளே வாழ்ந்த ஒப்பற்ற அந்த கவிஞர் பல பேட்டிகளை அளித்துள்ளார்.
அவைகளை எல்லாம் தொகுத்து ஆர் பி சங்கரன் கண்ணதாசன் பேட்டிகள் என்று ஒரு நூலை போட்டிருக்கிறார்.
1971 ஆம் ஆண்டு குமுதம் இதழ் நேர் எதிர் கருத்துக்களை உடையவர்களை உட்கார வைத்து பேட்டிகளை எடுத்து தொகுத்தது.
அதில் சோ கண்னதாசன் பேட்டி அருமையாக இருக்கும். அது ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி. அதில் எத்தனை புதுமையான தகவல்கள்.
எம்ஜிஆருக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு இருந்த காலம்.அவருடைய கண்ணதாசன் இதழில் ஜெயகாந்தனின் சினிமாவுக்கு போன சித்தாள்எழுதிய போது எம்ஜிஆர் ரசிகர்கள் கொதித்தனர். கண்ணதாசனுக்கும் எம்ஜிஆர்ருக்கும் உள்ள கருத்து வேற்றுமை அதிகரித்தது.ஆனால்
எம்ஜிஆர் தமிழகத்தின் முதலமைச்சராக ஆன பொழுது அரசவைக் கவிஞர் பதவியை ஏற்படுத்தி அதை தனக்கு நெருக்கமான வாலிக்கோ புலமைப்பித்தனுக்கோ தராமல் தனக்கு நேர் எதிர் மேடைகளில் அம்பு கோர்த்த கண்ணதாசனுக்கு தந்தார்.
அதை கண்ணதாசனும் ஏற்றுக் கொண்டார்.
அப்பொழுது ஒரு பேட்டியில் கண்ணதாசனிடம் அரசவைக் கவிஞர்கள் பதவி மற்றும் அவர்களுடைய பணிகள் பற்றிக் கேட்ட பொழுது அவர் திறந்த மனதோடு பதில் தந்தார்.
ஆஸ்தான கவிஞர் என்று அந்த காலத்தில் ராஜாக்கள் வைத்திருப்பார்கள்.
இதற்கு முன் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை இருந்திருக்கிறார்.
அவருக்கு என்ன பணிகள் வரையறுக்கப்பட்டன என்பது தெரியவில்லை. ஆஸ்தான கவிஞர்களுக்கு என்ன பணி என்று எனக்குத் தெரியாது” என்று வெளிப்படையாக பதில் சொன்னார் .அது ஒரு கௌரவ பதவி.
நல்ல இலக்கிய பாடல்களை, திரைப்படப் பாடல்கள் ஆக்கி ,எளிமையான மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்து மகிழவும் சிந்திக்கவும் வைத்த கவிஞர் அல்லவா அவர் .
ஒரு முறை அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்டார்கள்.
உங்கள் கொள்கைக்கு ஒவ்வாத திரைப்பட பாடல்களை எல்லாம் எப்படி எழுதுகிறீர்கள் என்று . தொழில்முறையில் எழுதப்படும் பாடல்கள் எல்லாம் எனக்கு உடன்பாடானது என்று சொல்ல முடியாது.
கடவுள் உண்டு என்று சில பாடல்களை எழுதி இருக்கிறேன். கடவுள் இல்லை என்று எழுதி இருக்கிறேன். அது அந்த சம்பவங்களுக்காக எழுதப்படும் பாடல்கள். அது கவிஞரின் கருத்து அல்ல.
சொன்னது போலவே கவிஞர் இறைவன் இருக்கின்றானா அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கின்றான் என்று கடவுள் இல்லை என்று எழுதி இருக்கிறார்.
தெய்வம் என்றால் அது தெய்வம் வெறும் சிலை என்றால் அது சிலை தான். உண்டு என்றால் அது உண்டு இல்லை என்றால் அது இல்லை என்று உடன்பாடாகவும் எழுதி இருக்கின்றார்.
பசி வர அங்கே மாத்திரைகள், பட்டினியாய் தினம் யாத்திரைகள்… இருவேறு உலகம் இதுவென்றால் இறைவன் என்பான் எதற்காக என்று கேள்வி கேட்ட
அதே கவிஞர், கேட்டதை கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கேள்வியின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா,என்றும் நம்பினார் கெடுவதில்லை நனவு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு ,பசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான் பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே என்றும் பாடி இருக்கிறார்.
என்ன முடிவுக்கு வருவது என்று கேட்கலாம்.
என்ன முடிவுக்கு வரவேண்டும் என்று சொன்னால் கவிஞர் தானே தன்னுடைய மனதில் இருந்து தனக்காகவே எந்தவித வற்புறுத்தரும் இல்லாமல் பாடிய கிருஷ்ண கானம் போன்ற பாடல்களைச் சொல்லலாம் அவர் கண்ணனுக்கு தாசன் என்று.
எதையும் வெளிப்படையாக பேசக் கூடியவர் கண்ணதாசன்.
ஒரு முறை அவர் தீபம் இதழுக்கு ஒரு பேட்டி அளித்தார். அதிலே நீங்கள் இலக்கணம் கற்றவரா? தமிழ் கற்றவரா? யாப்பிலக்கணம் கற்றுக் கொண்டுதான் பாடல்கள் எழுதுகிறீர்களா
எனக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை. தமிழ் இலக்கணத்தை கரைத்து குடித்துவிட்டு தான் பாடல்கள் எழுதி இருக்கிறேன் ,என்றெல்லாம் சொல்லவில்லை .எனக்கு யாப்பிலக்கணம் கற்க வேண்டும் என்று ஆசை தான். பழைய யாப்பு முறைகள் எல்லாவற்றையும் நான் விரும்புகின்றேன். ஆனால் எதையுமே ஐயம் திரிபற கற்றது இல்லை. கம்பரை படித்தேன். விருத்தத்தில் ஆசை கொண்டேன். வைத்த பேனா எடுக்காமல் எழுதுவதற்கு ஆசிரியப்பா கை கொடுத்தது. சுலபமாக ஆசிரியப்பா எழுதிவிடலாம். சதக பாடல்கள் பலவற்றைப் படித்து ஓசை நயம் உள்ள விருத்தங்கள் கற்றுக் கொண்டேன். ஆனால் வெண்பா யாப்பை நான் சரிவர கற்றது இல்லை. பொதுவாகவே வெண்பா எழுதுவது மிகவும் கடினமான செயல் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அவர் பாடல்கள் திட்டமிடாமல் வந்தவைதான் .ஆனால் ஒரு கவிஞன் உணர்ச்சியோடும் உள்ளத்தில் உண்மையோடும் இலக்கியத்தை படைக்கின்ற பொழுது அது போகிற போக்கில் படைக்கப்பட்ட இலக்கியமாக இருந்தாலும் ,மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.
ஒரு முறை அவர் அளவுக்கு அதிகமாக தூக்கிவிட்டார். பொதுவாக தூங்குவதில் அவருக்கு நிகரானவர்கள் யாருமே இல்லை .அதுவும் ஒருவருக்கு வாக்குறுதி தந்து விட்டு அந்த இடத்துக்கு செல்லாமல் தூங்கி விடுவது வழக்கம் .
ஒருமுறை ஒரு விழாவுக்கு மிக மிகத் தாமதமாக வந்தார். ஆனால் தன்னுடைய இனிமையான பேச்சினால் அந்தக் குறை ஏற்படாத அளவுக்கு அவர் பார்த்துக் கொண்டார். எடுத்த எடுப்பிலேயே ஆரம்பித்தார். சிலருக்கு இந்து மதம் பிடிக்கும். சிலருக்கு புத்த மதம் பிடிக்கும். ஆனால் எனக்கு தாமதம் பிடிக்கும் என்று தொடங்கிய பொழுது அவை கைதட்டி சிரித்தது. அவர் தாமதமாக வந்த அந்த குறையை மறந்தது.
அவ்வளவு ஏன் ஜனாதிபதி கையால் பரிசு வாங்க கண்ணதாசன் டெல்லிக்கு போய் ஓட்டலில் தூங்கிவிட்டு அந்த நேரத்தை தவறவிட்டார். மறுபடியும் அவருக்கு தமிழ்நாடு அரசு ஒரு பரிசு தந்தது. அவரிடம் கிண்டலாக கேட்டார்கள். இந்த முறையாவது தூங்காமல் போய் பரிசு வாங்கிக் கொள்வீர்களா என்று.
உடனே அவர் கோபப்படவில்லை.என்ன அப்படி கேட்டு விட்டீர்கள். இந்தத் தடவை பரிசு வாங்காமல் விடமாட்டேன். அப்பொழுது வெறும் பத்திரம் மட்டும் தான் தந்தார்கள். இப்பொழுது பணத்தை அல்லவா தருகிறார்கள்.
இதுதான் கண்ணதாசன்.
எம் ஆர் ராதா ஒரு முறை சொன்னார் .என்னுடைய நடிப்பு என்னுடைய வசனத்தின் சிறப்பு என்னுடைய ஆற்றல் இவர்களைப் பற்றி நீங்கள் மிக அதிகமாகப் போடுகிறீர்கள். அது மட்டும் அல்ல எம் ஆர் ராதா. எம் ஆர் ராதா நிறைய குறைகளை மிகுந்தவன். என்னுடைய பலவீனங்களையும் போடுங்கள்.
கண்ணதாசன் தன்னுடைய பலவீனங்கள், தன்னுடைய அறிவு குறைபாடான செயல்கள், தான் வழுக்கி விழுந்த இடங்கள், தன்னுடைய தோல்விகள், என எல்லாவற்றையும் மறைக்காமல் இந்த சமுதாயத்தின் முன் வைத்தவர். ஆனால் அவருடைய பலவீனங்கள் அவருடைய வாழ்க்கையை மட்டும் தான் பாதிக்கும். ஆனால் அந்த பலகீனங்களை மீறி அவருடைய பாடல்கள், அவருடைய உரைநடைகள் ,அவர் செய்த இலக்கிய சாதனைகள் ,அவர் மற்றவருக்கு உதவிய நன்மைகள் அவைகள் எல்லாவற்றையும் சமுதாயம் தலையில் வைத்து தூக்கி கொண்டாட கூடிய அளவில் அல்லவா இருக்கிறது. அதுதான் கண்ணதாசன்.
