by பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி
மலையப்ப சுவாமிக்கு ஒரு விசேஷமான குணம் உண்டு. அவர் ஏன் வைகுந்தத்தை விட்டு திருமலைக்கு எழுந்தருளினார் என்பதற்கு எத் தனையோ காரணங்கள் இருக்கலாம். ஆனால், ஒரு அடியவனுக்காக என்பதை மறந்து விடக்கூடாது.
மச் சித்தா; மத் கத ப்ராணா; என்று கீதையில் சொன்னபடி தனக்கு பிராணன் போன்ற ஒரு அடியவன் கிடைக்க மாட்டானா என்று தேடுவதற்காகத்தான் அவன் திருமலையில் வந்து எழுந்தருளி இருக்கிறான்.
அர்ச்சாவதாரத்தின் நோக்கம் கூட அதுதானே.
“எல்லாம் எனக்கு கண்ணனே” என்று நினைக்கக்கூடிய ஒரு உத்தமன் கிடைத்துவிட்டால், அவனுடைய உள்ளம் தனக்கு ஏற்ற இடமாக இருக்கும் என்று எம்பெருமான் நம்புகின்றான்.காத்திருக்கிறான். அதனால் தான் திருமழிசை ஆழ்வார்,
காணல் உறுகின்றேன் கல்லருவி முத்துதிர
ஒண விழவில் ஒலி அதிர –பேணி
வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று
“நான் ஓணப் பெருவிழாவைக் காணுவதற்காகத் திருமலைக்குச் சென்றேன். ஆனால் அந்தத் திருமலை அப்பன் என்னுடைய உள்ளத்திலே வந்து நின்று விட்டான்” என்று பாடுகிறார் .”வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய்” என்ற வரியின் நயம் பாருங்கள்.
நம்மாழ்வாரும்,” நான் எந்த தகுதியும் இல்லாதவன். ஆனால் அந்தத் தகுதி இன்மையையே தகுதியாகக் கொண்டு, என் மீது பாசம் வைத்த பரஞ் சுடர் ஜோதியவன் என்று பாடுகின்றார்.
ஈசன் வானவர்க்கு என்பன்என் றால்அது
தேச மோதிரு வேங்கடத் தானுக்கு?
நீச னேன்நிறைவு ஒன்றுமி லேன்என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.
அதைப்போலவே திருநங்கை ஆழ்வாரும்,
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்–
நந்தாத கொழுஞ் சுடரே எங்கள் நம்பீ
சிந்தாமணியே திருவேங்கடம் மேய
எந்தாய்!-இனி யான் உனை என்றும் விடேனே
என்று பாடுகின்றார். இப்படி அடியார்கள் உள்ளத்தில் உறைவதையே ஒரு நோக்கமாகக் கொண்டவன் திருவேங்கடவன் என்பதை விளக்கும் மற்றொரு பாசுரம் இது.
பேயாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதியின் 72 ஆம் பாசுரம் .
வெற்பு என்று இருஞ்சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும்,
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மைபோல், – நிற்பென்று
உளங்கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன்,
வெள்ளத்து இளம் கோயில் கைவிடேல் என்று.
இதிலே முதல் செய்தி எம்பெருமான் எதற்காக அர்ச்சாவதாரத்தை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறான் என்பது.
எம்பெருமான் ஐந்து நிலைகளிலே காட்சி தருகின்றான்.
விண்மீதிருப்பாய் மலைமேல் நிற்பாய். கடல்சேர்ப்பாய்!
மண்மீதுழல்வாய் இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்!
எண்மீதியன்ற புறவண்டத்தாய் எனதாவி,
உண்மீதாடி உருக்காட்டாதே யொளிப்பாயோ?
ஒன்று வைகுந்தத்தில் இருக்கும் இருப்பு. இது நித்தியமானது. எல்லா உயிர்களுக்கும் நோக்கமானது. “த்ரிபாத் விபூதி” என்று இதனைச் சொல்லுகின்றார்கள். மோட்சம் என்று சொல்லுகின்றார்கள். பேரின்ப பெருவாழ்வு என்று சொல்லுகின்றார்கள். இங்கே ஸதா பச்யந்தி என்று இமைக்காத கண் கொண்டவர்களாய் நித்தியசூரிகளாய் உள்ளவர்கள் தொண்டு செய்ய, கருட விஷ் வக்சேனர்களோடு எம்பெருமான் காட்சி தருகின்றான்.
இதனை ஆழ்வாரே “திருமகளும் மண்மகளும் இருபாலும் திகழ நலம் அந்தமில் நாடு” என்கிறார் ஆழ்வார். பாட்டு கேட்கும் நிலை இது.
இதற்கு அடுத்த நிலை வியூகம் எனச் சொல்லப்படும் பாற்கடலில் ஆதிசேஷ சயனத்தில் பள்ளி கொண்ட நிலை. இந்த நிலையை உறங்குவான் போல் யோகு செய்யும் பெருமாள் என்று சொல்வார்கள். தேவர்கள் தங்கள் மனக்குறையை எம்பெருமானிடம் விண்ணப்பிப்பதற்காக சதா வந்து, பாற்கடல் கரையிலே நின்று ,அவனிடத்திலே கோரிக்கை வைப்பதால், இதற்கு கூப்பாடு கேட்கும் இடம் என்று சொல்லுகின்றார்கள். இது சகல அவதார நிலைகளுக்கும் விதை போன்ற இடம்.
மூன்றாவதாக அவன் ராமகிருஷ்ணாவதாரங்களை எடுத்து வந்த விபவ நிலை.
இதற்கு அடுத்த நிலை தான் அர்ச்சவதாரம்.
இப்படி அவன் விப நிலையை எடுத்தான் என்பதற்கு ஒரு சாட்சியாய் விளங்கும் அர்ச்சாவதாரம் நிலையை, “பின்னானார் வணங்கும் சோதி” என்று திரு மங்கையாழ்வார் தம்முடைய திருமடலிலே பாடுகின்றார். அசுரர்களை அழிக்க விபவ அவதாரங்களை எடுத்தான்.
சரி .அர்ச்சாவதாரம் ஏன் எடுத்தான் என்கிற கேள்வி எழுகிறது அல்லவா?
இந்த அர்ச்சாவதார நிலை என்கின்ற நான்காவது நிலையிலிருந்து ஐந்தாவது நிலைக்கு எம்பெருமான் வருவதற்கு விரும்புகின்றார். அந்த விருப்பத்தை தீர்த்துக் கொள்வதற்காக அவன் அர்ச்சாவதாரம் எடுத்துள்ளான் .
கோயில்களில் இரண்டு கோயில்கள் உண்டு.
1.உளம் கோயில்
2.இளம் கோயில்
உளம் கோயிலில் வருவதற்குத்தான் இளம் கோயில்.
வியூக நிலையில் அவன் சிந்திக்கின்றான். அந்த வியூக நிலையை “வெள்ளத்து இளங்கோயில்” என்று ஆழ்வார் பாசுரம் இடுகின்றார். அந்த இளம் கோயில் நிலையிலேயே இருந்து, பூலோகத்தில் உள்ள திருக் கோயிலிலே தானே விரும்பி வந்து திருக் காட்சி தருகின்றான். அப்படி அவன் மிகவும் விரும்புகின்ற திவ்ய தேசங்களில் இரண்டு.
திருமால் இருஞ் சோலை எனப்படும் தெற்குத் திருமலை. இன்னொன்று திருவேங்கடம் என்னும் வடக்குத் திருமலை.
உகந்து அருளிய திவ் தேசங்களிலே எம்பெருமான் மிக மிகத் திருவள்ளம் பற்றி இருக்கும் இரண்டு இடங்களை இதிலே ஆழ்வார் காட்டுகின்றார்.
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலையென்னும்
பொருப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர் அவைதம்மொடும் வந்து
இருப்பிடம் மாயன் இராமானுசன் மனத்து இன்று அவன் வந்து
இருப்பிடம் என் தனிதயத்துள்ளே தனக்கின்புறவே.”
என்ற இராமானுஜ நூற்றந்தாதிப் பாசுரமும் இதனை உணர்த்தும்.
இந்த பாசுரத்திலே அவர் சொல்ல வருவது.
“நீ திருவேங்கடத்திலும் திருமலையிலும் ஏன் எழுந்தருளி இருக்கிறாய் தெரியுமா? இளம் கோயிலாகிய அங்கே இருந்து உளம் கோயிலாகிய என் மனதிலே வந்து இருப்பதற்காகத்தான்”
கோயில்களிலே குடமுழுக்கு வைபவம் நடத்துவார்கள். அப்பொழுது அந்த அர்ச்சாவதார விக்கிரகத்தை பாலாலயம் செய்து வைப்பார்கள்.பலாலயம் என்பது இளங் கோயில்.(பால +ஆலயம்=பாலாலயம்)
அதற்குப் பிறகு கும்பத்தின் ஆவாஹனம் செய்து, மந்திர பூர்வமாக பிம்பத்தில் அந்த ஆவாகனத்தை மாற்றுவார்கள். மந்திர பூர்வமான அந்தப் புனித நீரால் கோயில் கோபுரங்களையும் கருவறை விமானத்தையும் பிரதிஷ்டை செய்யப் பட்ட விக்ரகங்களையும் நீராட்டுவார்கள். அதுவரையில் கருவறைக்கு பெரிய சிறப்பு ஒன்றும் இல்லை. பாலாலயத்தில் எம்பெருமான் அதிக நாட்கள் இருக்க கூடாது .அந்த பாலாலயம் வைப்பதற்குக் காரணமே கருவறையில் மூலப் பிரதிஷ்டை நடக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதைப்போல எம்பெருமான் அர்ச்சாவதார வியூக நிலையில், இளம் கோயில் போல இருந்து கொண்டு ஒரு பக்தனுடைய உள்ளமாகிய பெருங்கோயிலுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறான்.
ஆழ்வார் இப்பொழுது சொல்லுகின்றார்.
” நான் உன்னை பிரபத்தி செய்கின்றேன். நீ இளம் கோயிலையும் கைவிட வேண்டாம். உளம் கோயிலையும் கைவிட வேண்டாம். காரணம், இன்னும் பலர் உள்ளங்களுக்கும் எம்பெருமான் போக வேண்டும் அல்லவா”
பாசுரம் மறுபடி பாருங்கள். ஆழ்வாரின் உள்ளம் புரியும்.
வெற்பு என்று இருஞ்சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும்,
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மைபோல், – நிற்பென்று
உளங்கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன்,
வெள்ளத்து இளம் கோயில் கைவிடேல் என்று.
இப்பாசுரத்தில் எம்பெருமானுடைய ஆசையையும், அவருடைய நீர்மை குணத் தையும் (சௌலப்பிய விசேஷம் ) ஆழ்வார் சுட்டிக் காட்டுகின்றார்
ஆழ்வாரின் உள்ளம் கிடைத்தவுடன், எம்பெருமானுக்கு திருப்பாற்கடலை (இளம் கோயில்) விட்டு விடலாம் என்று ஒரு எண்ணம் வந்தது என்று ஆழ்வார் சொல்லி, அதை கைவிட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.
