நலம் தரும் ராகுவும் கேதுவும் பலம் தரும் பரிகாரங்களும்-1
துர்வாசரின் கோபத்தால் பிறந்த சாபத்தால் இந்திரன் செல்வங்களை இழந்தான். அதனால் அவன் அவமானம் அடைந்தான். கண் காணாத இடத்தில் தன்னை மறைத்துக் கொண்டான்.தேவர்கள் இந்திரன் இல்லாததால் வலிமை இழந்தனர் .தோல்வியடைந்தனர்.
அப்பொழுது பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற்றால் மறுபடியும் இழந்த செல்வத்தையும் வலிமையையும் பெறலாம் என்று எண்ணினர். எப்படி பாற் கடலை கடைவது?
அதற்காக மகாவிஷ்ணுவை அவர்கள் சரணடைந்தனர். மகாவிஷ்ணு சொன் னார்.
“உங்களால் தனியாகப் பாற்கடலை கடைய முடியாது. எனவே அசுரர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.” அப்படியே அவர்கள் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்கலாம் என்று சொல்லி அசுரர்களையும் சேர்த்துக் கொண்டனர் .
அதை இரண்டு பக்கமும் இழுத்து கடைய வேண்டுமே? அதற்கு கயிறு வேண் டுமே ?
வலிமையுள்ள கயிறாக வாசுகிப் பாம்பை கட்டினார்கள். தேவர்களும் அசுரர்களும் ஆளுக்கு ஒரு பக்கம் நின்று பாற்கடலைக் கடைய ஆரம்பித்தனர். பாற்கடலைக் கடைந்த போது அதிலே அமிர்தம் மட்டும் வெளிப்படவில்லை. பல்வேறு பொருள்களும் வெளிப்பட்டன.
ரத்தினங்கள்:
சந்திரன் (சோம, நிலவு)
வாருணி ( கள், சுரா பானத்தின் அதிபதி)
உச்சைஸ்ரவஸ் என்னும் குதிரை
ஐராவதம் என்னும் யானை
காம தேனு என்னும் பசு/சுரபி
பாரிஜாதம் – மரம்
கற்பக விருக்ஷம் – மரம்
கௌஸ்துப மணி
குடை
காதுகளுக்கான தோடு
அப்சரஸ் – தேவலோக அழகிகள்
சங்கு
லெட்சுமி – செல்வத்தின் அதி தேவதை
ஜ்யேஷ்டா- மூதேவி; நித்திரை, சோம்பேறித்தனம் ஆகியவற்றின் கடவுள்
தன்வந்திரி – டாக்டர்
காலகூட விஷம்
அமிர்தம்
ஒரு நல்ல காரியத்தைச் செய்கின்ற பொழுது அதிலே பல சங்கடங்களும் வரும். அதையும் ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்பதை தெரிவிக்கிறது இந்த பாற்கடல் கடைகின்ற சம்பவம்.
உலகில் எப்பொழுதுமே நல்லதும் கெட்டதும் ( தேவ + அசுர) இருக்கும். இரு சக்திகளையும் ஒரு சேர அணைத்து பணிகளைச் செய்ய வேண்டும். அப்பொழுது நல்லதும் கெட்டதும் (அமிர்தம்+ விஷம்) – இரண்டும் வரும். கொள்ளுவன கொண்டு தள்ளுவன தள்ளினால் மனித முலம் செழிக்கும், தழைக்கும்.
அசுரர்கள் தேவர்களாக மாற அமிர்தம் ( நற்செயல்கள்) உதவும். ஆயினும் எப்போதுமே உலகில் பாஸிட்டிவ், நெகட்டிவ் – ஆக்கபூர்வ/ அழிவுமிக்க சக்திகள் இருக்கத்தான் செய்யும்.
கடைசியில் அமிர்தம் கிடைத்துவிட்டது. அதனை தேவர்களும் அசுரர்களும் சரி பாதியாகப் பங்கிட்டு கொள்வது என்பதுதான் ஒப்பந்தம். ஆனால் தேவர்கள் அசுரர்கள் இந்த அமுதத்தை உண்டால் அவர்களும் வலிமை அடைந்து விடுவார்கள். பிறகு தேவாசுர யுத்தம் தொடர்ந்து நடைபெறும். அதற்கு ஒரு முடிவே இல்லாமல் ஆகிவிடும் .
சில சக்திகள் கெட்டவர்களின் கையில் போய்விடக்கூடாது .இதிலே சுரர்கள் என்பவர்கள் பொதுவாக நல்லவர்களுக்கு பிரதிநிதிகளாகவும் ,அசுரர்கள் கெட்டவர்களுக்கு குறியீடாகவும் தான் சொல்லப்படுகிறது. தவிர தேவர்களும் அசுரர்களாகலாம். அசுரர்களும் தேவர்களாகலாம்.
விஷ்ணு பகவான் மோஹினி அவதாரம் எடுத்தார். அசுரர்களை மயக்கினார். அமிர்த கலசம் அப்போது தன்வந்திரியின் கையில் இருந்தது .அதனை மோகினி வாங்கிக் கொண்டார்.
அவரது அழகில் மயங்கிய அசுரர்கள், மோகினி அனைவருக்கும் பரிமாறட்டும் என்று கூறிவிட்டனர். தேவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இப்பொழுது யாருக்கு முதலில் அமிர்தத்தைத் தருவது என்ற பிரச்சனை எழுந்தது. முதலில் தேவர்களுக்குத் தான் வழங்கப்பட்டது.
நமக்கு கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்று அசுரர்கள் வரிசை யில் அமர்ந்திருந்த ஸ்வர்ணபானு என்பவன் இந்த உடன்பாட்டில் திருப்தி இல்லாமல் எழுந்தான்.
தங்களை எப்படியும் தேவர்கள் வஞ்சித்து விடுவார்கள் என்று கருதினான். எப்படியாவது அந்த அமிர்தத்தை குடித்தே ஆக வேண்டும் என்று உறுதி கொண் டான்.
அதற்காக உருவை மாற்றிக் கொண்டு தேவர்கள் வரிசையிலே வந்து அமர்ந் தான். சூரியனும் சந்திரனும் பார்த்துவிட்டனர்
இதற்குள் மகாவிஷ்ணு ஸ்வர்ணபானு தேவன் என்று நினைத்து அமிர்தம் அளித்துவிட்டார். அவனும் அதை அவசர அவசரமாகப் பருகி விட்டான். சந்திர சூரியர்கள் பகவானிடம் சென்று நடந்ததைக் கூறினார். மோகினி வடிவம் கொண்ட மகாவிஷ்ணுவுக்கு கடும் கோபம் உண்டாயிற்று .அவர் தன் கையில் இருந்த கரண்டியினால் ஸ்வர்ணபானு தலையில் தட்டினார். உடம்பு இரண் டாயிற்று.
ஆயினும் அமிர்தம் அருந்தி இருந்த காரணத்தால் உயிர் நீங்க வில்லை.
ஒப்பந்தத்தை மீறியதால் அசுரர்களுக்கு அமிர்தம் வழங்க முடியாது என்று மோகினி கூற அசுரர்கள் ஆவேசமாக வந்தனர் .
அதற்குள் வேகமாக அமிர்தம் அனைத்தும் தேவர்களுக்கு அளித்து விட்டார். இதனால் அசுரர்கள் ஏமாற்றம் அடைந்தனர் .தங்களுக்கு அமிர்தம் கிடைக் கவில்லை என அசுரர்கள் வருந்தினார்.ஸ்வர்ணப்னு தான் காரணம் என்று கருதினர்.
ஸ்வர்ணபானு தனக்கு நேர்ந்ததை பிரம்மனிடம் முறையிட்டான். பிரம்மன் விஷ்ணுவால்தான் உன் நிலைமை சரி செய்ய முடியும் எனவே அவரை பிரார்த்திக்கச் சொன்னார்.
அசுரனும் மகாவிஷ்ணுவை வணங்கி தனக்கு பிராயசித்தம் அளிக்கக் கேட்டுக் கொண்டார்.மஹாவிஷ்ணு கருணை கொண்டு ஓர் பாம்பு உடலை எடுத்து தலையுடன் பொருத்தினார் அதேபோல் பாம்பு தலையை எடுத்து மனித உடலோடு பொருத்தினார்.
இப்போது மனிதத் தலையும் பாம்பு உடலும் கூடிய அவனுக்கு ராகு என பெயரிட்டார். பாம்பு தலையும் மனித உடலும் கூடிய உருவத்துக்கு கேது என பெயரிட்டார்.
ராகுவும் கேதுவும் கிரக அந்தஸ்து பெற்றனர்.
இருவரும் நேர் எதிர் திசையில்(anti clock wise) நட்சத்திர மண்டலத்தில் சுற்றி வர அருள் புரிந்தார். இவர்கள் யார் கண்களுக்கும் தெரியாததால் சாயா கிரகங்கள் அல்லது நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்பட்டனர்.
இதற்குப் பிறகு ராகுவும் கேதுவும் தங்களை இந்த நிலைக்கு ஆளாக்கி காட்டிக் கொடுத்த சூரிய சந்திரர்கள் மீது கடுமையான கோபம் கொண்டனர் .
அவர்களை எப்படியாவது பழிவாங்க விட வேண்டும் என்று உறுதி கொண்டனர். .அதற்காக பிரமனை நோக்கி மிகப்பெரிய தவம் செய்தனர். பிரமன் அளித்த வரம் என்ன தெரியுமா?
ஒரு ஆண்டில் நான்கு முறை தங்களைக் காட்டிக் கொடுத்த சூரிய சந்திரர்களின் பார்வை பூமியில் விழாதபடி தடுக்கும் வல்லமையை ராகுவும் கேதுவும் பெறலாம் என்று வரம் கொடுத்தார்.
இந்த நிகழ்வு சூரிய கிரகணம் என்றும் சந்திர கிரகணம் என்றும் வழங்கப் படுகிறது. கிரகணம் என்றால் பிடித்துக் கொள்ளுதல் என்று அர்த்தம்.
சூரியனின் சந்திரனையும் மறைக்கும் வலிமையை பெற்றவர்கள் என்பதால் கிரகண நேரத்தில் ராகு கேதுவின் பலம் கூடும்.
கிரகணத்தின் போது கிரக தலைமை அந்தஸ்து பெற்ற சூரியனுக்கும் மனோ காரகன் மற்றும் ராசியை ஆளும் சந்திரனுக்கும் வலிமை குறைவதால் கிரகண காலத்தில் பலரும் சாந்தி செய்து கொண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் தருகின்றனர்.
