ஒருவருடைய கலையும் திறமையும் பரி பூரணத்துவம் பெற குருவினுடைய திருவருள் மிக மிக அவசியம் இதை எம் எஸ் சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கையில் இருந்து அறியலாம்.
எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் 1916 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி மதுரையில் பிறந்த சுப்புலட்சுமி மிகச்சிறந்த பாடகியாக உலகப் புகழ்பெற்று 2006 டிசம்பர் 11-ஆம் தேதி மறைந்தார். மத்திய அரசாங்கத்தின் அத்தனை பத்ம விருதுகளையும் பெற்ற இவர் 1998இல் பாரத ரத்னா விருதையும் பெற்றார்.
இத்தனை ஏற்றத்திற்கும் காரணம் அவருடைய குருவின் ஆசிர்வாதம்.குருவிடம் கொண்ட பக்தி விசுவாசமும் ஆகும்.
1966 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி. அவர் நியூயார்க் ஐக்கிய நாட்டு சபையில் பாடுவதற்காக செல்கிறார்.
அதற்கு முன் குருவின் ஆசியை பெறுவதற்காகச் சென்றார். குருவிடம் தன் பயணம் குறித்துச் சொல்லுகின்றார். குரு பரிபூரணமாக ஆசி தந்து நீ பாடும் இடமெல்லாம் வெற்றிதான். வெற்றியைத் தவிர வேறு அறியாதபடிக்கு நம் நாட்டின் கலையையும் பண்பாட்டையும் அனைத்துலகும் தெரியும்படியாக செய்து விட்டு வரவேண்டும் என்று ஆசீர்வதித்தார்.
பிரத்தியேகமாக ஐநாவில் பாடுவதற்காக ஒரு பாடலையும் இயற்றித் தந்தார். மைத்ரீம் பஜதே என்ற ஒரு அருமையான பாடல் அது. எல்லாருக்கும் தெரியும் .
ஆனால் அதன் ஆழ்ந்த பொருளை யோசித்தால் எப்பேர்பட்ட ஒரு அபிப்பிராயத்தை அதில் காஞ்சி மகான் பாடியிருக்கிறார் என்பது விளங்கும்.
தொண்டும் நட்பும் இந்த உலக மக்களின் இதயங்களை வெல்லட்டும்
ஒவ்வொரு உயிரிலும் நீ உன்னைக் காண வேண்டும்
பதவி சண்டை வெறுப்பு மற்றவர்கள் பொருள்களின் மீது ஆசை ஆக்கிரமிப்பு எல்லாவற்றையும் தூக்கி எறியுங்கள்
இந்த உலகம் ஒரு தாயாக காமதேனுவை போல உங்களுக்கு எல்லாவற்றையும் தருவதற்கு தயாராக இருக்கிறது
எல்லோரிடமும் அன்பாக இருங்கள்
எல்லோரிடமும் உங்கள் செல்வத்தை நீங்கள் தத்தம் செய்யுங்கள்.
உலக மக்களே -ஸ்ரெயோ பூயாத் சகல ஜனானாம்- எல்லா மக்களும் மகிழ்ச்சியோடும் சௌக்கியம் வாழட்டும்
இது உலக மக்களுக்கு உன்னதச் செய்தி அல்லவா. உலக மக்களுக்கான ஆசிர்வாதம் அல்லவா.இதில் தெய் வத்தின் பெயர் இல்லை.ஆனால் தெய்வத்தின் பொருள் உண்டு.
உலகின் பல நாடுகளிலும் தன்னுடைய வெற்றிக்கொடியை தன்னுடைய குரலாலும் பாவமான இசையாலும் நாட்டிய எம்எஸ் அவர்கள் நியூயார்க்கில் இறங்கியவுடன் பெரும் சோதனையை எதிர்கொண்டார்.
பாட முடியாதபடிக்கு அவருடைய தொண்டை கட்டிக்கொண்டது.
எல்லா ஏற்பாடுகளும் நடந்து விட்டன. உலக நாட்டு பிரதிநிதிகள் அந்த அரங்கத்திற்கு வந்துவிட்டார்கள். வாயைத் திறக்க முடியாத ஒரு நிலை. யாரிடமும் சொல்ல முடியவில்லை. கணவரிடமும் சொல்லமுடியவில்லை. கூடப் பாடுகின்ற திருமதி ராதாவிடம் சொல்ல முடியவில்லை. வாத்தியக்காரர்கள் இடமும் சொல்ல முடியவில்லை. மனதில் அழுத்தம்.
எந்த குரு நீ எங்கே பாடினாலும் உனக்கு வெற்றி தான் என்று சொன்னாரோ அந்த குருவின் வார்த்தை பொ#யாகலாமா….
அந்த குருவின் படத்தை வைத்து அந்த வெளிநாட்டில் கிடைத்த ஏதோ பூக்களை வைத்து இனி எது நடந்தாலும் நீங்கள்தான் என்று சொல்லி கண்ணீரோடு வணங்கிவிட்டு நடப்பது நடக்கட்டும் என்று அரங்கத்துக்கு வந்துவிட்டார்.
வாத்தியக்காரர்கள் வந்து அமர்ந்துவிட்டார்கள்.
மிகப்பெரிய ஒரு முன்னுரையோடு இவரைப் பற்றிய அறிமுகம் செய்யப்பட்டு வரவேற்கிறார்.கால்கள் நடுங்குகின்றன.ஆயினும் கம்பீரமாக கூப்பிய கரங்களோடு வந்து கச்சேரியில் அமர்ந்துவிட்டார்.
அந்த நொடி வரை தொண்டை திறக்குமா பாட முடியுமா என்கிற பதட்டம் இருக்கிறது.
ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு இனி மானம் அவமானம் உன்னோடு என்று இரு கையையும் தூக்கி கோவிந்தா புண்டரீகாட்சன் துவாரகா நிலையா அச்சுதா நீயே சரணம் என்று திரௌபதி சரணாகதி செய்ததுபோல தன்னுடைய குருவிடம் சரணாகதி செய்கின்றார் இசையரசி. கண்களில் கண்ணீர் மல்கியது. எதிரிலே எண்ணற்ற நாட்டின் பிரதிநிதிகள் உட்கார்ந்து இருக்கிறார்கள்.
ஸ்ருதி கூட்டிக்கொண்டு வாத்தியக்காரர்கள் தயாராகிவிட்டார்கள். தம்புராவின் ஸ்ருதி அந்த சபையை நிறைக்கும் வண்ணம் ரீங்காரம் இடுகிறது.
கண்ணை மூடுகின்றார். இப்பொழுது அவருடைய தொண்டை@யா அவர் இருக்கின்ற நிலையோ தெரியவில்லை.
அவர் மனக்கண்ணில் ஜகத்குரு தான் இருக்கிறார். நீ பாடு என்பதுபோல் ஒரு கட்டளை பிறக்கிறது.
தம்புரா ஸ்ருதியோடு தன் குரலைக் கூட்டுவதற்காக ஓம் என்கிற பிரணவத்தை உச்சரிக்கிறார்.
மெல்லிய காற்றாக கிளம்பிய அந்த உச்சரிப்பு ஒரு கட்டத்தில் கணீரென்று தம்புராவின் சுருதியை மீறிக்கொண்டு நீண்டகார்வையோடு பளிச் öŒன்று ரீங்காரம் விடுகின்றது.
அவருக்குக் குரல் போனதும் தெரியவில்லை. குரல் வந்ததும் தெரியவில்லை.
கூப்பிய கைகளோடு பாடி முடிக்கின்றார். கைதட்டல் விண்ணைப் பிளக்கிறது. இசையால் நிரப்பப்பட்ட செவிகள் ஒரு தெய்வீக உணர்ச்சியால் இணைந்து கட்டப்பட்டு விடுபடாத மயக்க நிலையில் அமர்ந்திருக்கிறார்கள்
நன்றி சொல்ல வருகின்றார் ஐநாவின் பிரதிநிதி.
அப்பொழுது அவர் சொன்ன வார்த்தை.
எத்தனையோ சங்கீதத்தையும் இனிமையான குரலையும் நான் கேட்டிருக்கிறோம். ஆனால் இன்று நாம் கேட்டது இதுவரை கேட்காத ஒரு அற்புதமான சங்கீதம். extra ordinary music. நாமெல்லாம் அந்த சங்கீதத்தால் கட்டப்பட்டிருந்தோம். நாம் நம்மை மறந்து இருந்தோம்.
இப்படிப்பட்ட ஒரு அருமையான வாய்ப்பினை வழங்கிய இந்திய அரசாங்கத்திற்கு நன்றி. இந்த இசைக் குழுவினர் தங்களுடைய பயணத்தை மகிழ்ச்சியோடு அனுபவிக்க வேண்டும். அவர்களுக்கு நமது இதயங்கனிந்த நன்றிகள் எனச்சொல்ல…. நீ எங்கே சென்றாலும் உனக்கு வெற்றிதான் என்ற ஆசிகள் எம் எஸ் இதயத்தில் மீண்டும் ஒலிக்கிறது.
கீதை 18 வது அத்தியாயத்தில் கடைசி சுலோகம்.அது தான் கீதையின் சாரம்.
சஞ்சயன் ஒரு வார்த்தையைச் சொல்லி முடிப்பார்
இந்த போர் எப்படி முடியும் என்று கேட்க சஞ்சயன் சொல்லும் சுலோகம்.இது கண்ணனின் அபிப்ராயம் அல்ல.சஞ்சயன் அபிப்ராயம்.
எந்த இடத்தில் யோகேஸ்வரனான கிருஷ்ணன் இருப்பானோ எந்த இடத்தில் காண்டீவம் தாங்கிய பார்த்தன் இருக்கிறானோ அந்த இடத்திலே செல்வமும் வெற்றியும் நீதியும் நிலைத்திருக்கும் என்பது என் முடிவு என்று சொல்லி முடிக்கின்றார்.
ஆம்.எந்த இடத்தில் குருவின் ஆசிகள் இருக்கிறதோ எந்த இடத்தில் அந்த குருவை நம்பிய எம்எஸ் போன்றோரின் குரல் ஒலிக்கிறதோ அந்த இடத்திலேயே இசையும் தெய்வீகமும் சாந்தியும் சமாதானமும் நிலைத்து இருக்கவே செய்யும்.
எம்எஸ் என்பதற்கு எத்தனையோ பொருள் சொல்லலாம். எம் என்பதற்கு மியூசிக் இசை என்பதற்கு சோல்ஃபுல்(soulful) காரணம். எம் எஸ் பாடிய இசை தெய்வீக இசை ஆத்மாவை சென்று தொடுகின்ற இசை.
இன்று அவருடைய பிறந்த தினம்.
அவர் பாடிய அற்புதமான அப்பாடல் இதுதான்.
MaitrIm bhajata,
akhila hrit jaitrIm |
Atmavad Eva
parAnn api pashyata |
yudhham tyajata,
spardhAm tyajata |
tyajata parEShu akrama-AkramaNam ||
jananI prithivI kAma-dukhArtE |
janako dEvah sakala dayALuh |
‘dAmyata, datta, dayadhvam’ janatA |
shrEyO bhUyAt sakala janAnAnAm ||
shrEyO bhUyAt sakala janAnAnAm ||
shrEyO bhUyAt sakala janAnAnAm ||
