திருமணத்தின் போதும், பெரியவர்களிடம் திருமணமான பெண்கள் ஆசிகள் பெரும்போதும், தீர்க்க சுமங்கலி பவ என்று ஆசீர்வாதம் வழங்குவார்கள். தீர்க்க சுமங்கலித்துவம் என்பது கணவன் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என்பதற்காக வழங்கப்படும் ஆசீர்வாதம்.
ஆனால் இது ஆயுள் சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல. வெறும் நீண்ட ஆயுள் மட்டும் இருந்து என்ன செய்வது? ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் இருக்க வேண்டும் அல்லவா. அதைவிட முக்கியம் தம்பதியர் இருவரும் மனமொத்து இருக்க வேண்டும்.
அப்படி இருப்பது தான் வாழ்க்கை.
மகாபாரதத்தில் ஒரு கட்டம்.
போர் நடப்பதற்கு முன்பு பிதாமகர் பீஷ்மர் பாசறையில் அமர்ந்திருக்கிறார். இந்தப் போரை தவிர்க்க முடியவில்லை என்று அவருக்கு வருத்தம்.
தான் வளர்த்த தன்னுடைய பேரக்குழந்தைகளையும் கொள்ளு பேரக் குழந் தைகளையும் தன் கையாலேயே சண்டையில் வதம் செய்ய வேண்டியி ருக்கிறதே என்கின்ற துக்கத்தோடு அமர்ந்திருக்கிறார். கௌரவ சேனைகளுக்கு அவர்தான் தலைமை பொறுப்பு ஏற்று இருக்கிறார்.
அப்பொழுது பாண்டவர்கள் பாசறையில் பாண்டவர்களோடு பகவான் கிருஷ் ணன் ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறார்.
அப்பொழுது த்ரௌபதி அங்கு வருகின்றாள். உடனே பகவான் கண்ணன் அவளை அழைத்து ஒரு யோசனை கூறுகின்றார்.
” இதோ பாரம்மா, நீ உடனே செல். அதோ அந்த பாசறையில் பிதாமகர் பீஷ்மர் தனியாக அமர்ந்திருக்கிறார். ஒரே ஒரு விளக்கை மட்டும் வைத்துவிட்டு எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு வெளியிலே இருக்கக்கூடிய இருள் தன் மனதிலேயும் சூழ்ந்து விட்டதே என்று தவித்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது நீ அங்கே செல். ஆனால் உன் முகத்தை வெளியில் காட்டாதே . புடவை தலைப்பை தலையில் சுற்றிக்கொண்டு முகம் தெரியாதவாறு சென்று அவரை வணங்கு” என்றார்.
த்ரௌபதி காரணத்தைக் கேட்கவில்லை. கண்ணன் எது சொன்னாலும் தங்கள் நன்மைக்காகவே சொல்வான் என்கிற நம்பிக்கை அவளிடம் இருந்தது . அதுதான் இறை நம்பிக்கை .
சேலைத்தலைப்பால் முகத்தை முக்காடிட்டுக் கொண்டு நேராக பீஷ்மரின் பாச றையில் நுழைந்தாள் .பீஷ்மருடைய திருவடிகளில் விழுந்து வணங்கினாள் .
யாரோ ஒரு பெண் தன்னுடைய காலில் விழுந்து வணங்குவதைக் கண்ட பீஷ்மர் அவளை வாழ்த்தினார்.” தீர்க்க சுமங்கலியாய் இருப்பாய்”( தீர்க்க சுமங்கலி பவ).
இப்படி வாழ்த்தி விட்டுப் பிறகு கேட்டார்.
” யார் அம்மா நீ ?எதற்காக என் பாசறைக்கு வந்திருக்கிறாய்?”
இப்பொழுது முக்காட்டை விலக்கிவிட்டு த்ரௌபதி பேசினாள் .
“தாத்தா, நான்தான் பாஞ்சாலி. உங்களைச் சந்தித்து ஆசி பெற வந்தேன்”
பீஷ்மரின் ஆசி மிக முக்கியமானது .அந்த ஆசியின் பலம் தான் பாண்டவர் களை பல ஆபத்துகளில் இருந்து காத்தது.
காஞ்சி மகா பெரியவர் ஒருமுறை சொன்னார்.
தீர்க்க சுமங்கலி பவ என்ற ஆசிக்கு எத்தனையோ பொருள் விளக்கம் உண்டு . அதில் ஒன்று மனைவி கணவனிடம் ஐந்து மாங்கல்யங்கள் பெற வேண்டும் என்பது.
மணிவிழா முதலிய விழாக்களில் மாங்கல்யம் தேவைதானா என்கின்ற கேள் விக்கு இந்த விளக்கம் பதில் அளிக்கிறது.
மாங்கல்யதாரணம் செய்கின்ற பொழுது ஒரு மந்திரம் ஒலிக்கும். அது மந்திரம் அல்ல சுலோகம்.
“மாங்கல்யம் தந்துனானேன
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ் சதம்”
என்னும் இந்த மந்திரம் தாலி கட்டும் சமயத்தில், கெட்டிமேளச் சத்தத்துடன் சொல்லப்படும்.
“மங்களம் நிறைந்தவளே! உன்னோடு இல்லற வாழ்வை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்று திருமாங்கல்யத்தை உன்னுடைய கழுத்தில் அணிவிக் கிறேன். என் வாழ்வில் ஏற்படும் சுக, துக்கங்களில் பங்கேற்கும் நீ, சுப போகங்களுடன் நூறாண்டு வாழ்வாயாக!” என்பது இதன் பொருள்.
இந்த மந்திரத்தின் பொருள் தம்பதிகள் நூறாண்டு காலம் ஒற்றுமையாய் வாழ்வது.!
இந்த மாங்கல்யம் மனைவியின் கழுத்தில் நீடித்திருக்க வேண்டும். இதன் அடிப்படையில் ஐந்து மாங்கல்யங்கள் சூட்டும்படியான நிறைவாழ்வு வாழ வேண்டும்.
அதில் முதல் மாங்கல்ய தாரணம் என்பது பிரதானமானது.
அது திருமணத்தில் சூட்டுவது.
இரண்டாவது மாங்கல்ய தாரணம் மணிவிழா என்று சொல்லப்படும் 60 வயது நிறைவு பெறுகின்ற பொழுது சூட்டுவது.
மூன்றாவது மாங்கல்யம் தாரணம் 70 வயது பீமரத சாந்தியில் அணிவிப்பது.
நான்காவது மாங்கல்ய காரணம் 80 வயது முத்து விழாவின்போது அதாவது சதாபிஷேகத்தின் போது சூட்டுவது. ஐந்தாவது மாங்கல்யம் 99 வயது கனகாபிஷேகத்தின் போது சூட்டுவது.
நமக்கெல்லாம் தெரியும், ராசி மண்டலத்தை சுற்ற, சூரியனுக்கு ஒரு ஆண்டும், செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும், சந்திரனுக்கு ஒரு மாதமும், புதனுக்கு ஒரு வருடமும், வியாழனுக்கு 12 வருடங்களும், வெள்ளிக்கு ஒரு வருடமும், சனி பகவானுக்கு 30 வருடங்களும், ராகுவுக்கும் கேதுவுக்கும் ஒன்றரை வருடங்களும் ஆகின்றன .
இந்த சுழற்சியை நாம் கவனித்துப் பார்த்தால், 60 வருடங்கள் நிறைவடைந்த தினத்திற்கு அடுத்த தினம், அவர் ஜனக ஜாதகத்தில் எப்படி கிரக அமைப்புகள் இருந்ததோ அதைப்போலவே அமைந்திருக்கும். தன்னுடைய 60 வயதில் ஆசைகளை வென்று, தன்னுடைய குடும்ப ஈடுபாட்டில் இருந்து மெல்ல விலகி பொறுப்பை தங்களுடைய குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் தந்துவிட்டு தான் வெறும் ஆலோசகராக மட்டும் இருந்து ஆன்ம வளர்ச்சியில் ஈடுபட வேண்டும் .
ஒரு ராக்கெட் மேலே பறக்கின்ற பொழுது, தேவையற்ற சுமைகளை எல்லாம் கழற்றி விடுவதைப் போல, ஒரு மனிதன் தன்னுடைய அனுபவத்தையும் ஆற்றலையும் மற்றவர்களுக்கு தந்து விட்டு, விலகி இருக்க வேண்டும். 70 வயதில் எல்லோரிடமும் அன்பு பாராட்ட வேண்டும். எண்பது வயதில் எல்லா இடமும் இறையருள் நிறைந்திருப்பதாகக் கருத வேண்டும். பிறரிடம் கோபமோ பொறாமையோ கொள்ளாமல் இருக்க வேண்டும். கனகாபிஷேகத் தின் போது இறைவனோடு இரண்டறக் கலக்கும் அந்த இன்ப நாளை(கூவிக்கொள்ளும் காலம் குறுகாதோ-நம்மாழ்வார் பாசுரம்) ,எந்த விதமான துக்கமும் இல்லாமல் எதிர்பார்த்து, இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும்.தீர்க்க சுமக்கலித்துவம் என்பதன் பொருள் இது தான்.
