திருவரங்கத்திலே மார்கழி மாதம்.
பகல் பத்து இராப்பத்து என்று சொல்லுகின்ற திரு அத்யயன உத்சவம் நடந்து கொண்டிருக்கிறது.
அதிலே ஒரு நாள்… பகல் பத்து கடைசி நாள்… உலக உயிர்களுக்கெல்லாம் தான் தாயாக விளங்குபவன் என்பதையும், ஸ்ரீரங்கநாயகியின் அழகைப் பார்த்து அதைப் போன்றதொரு தோற்றத்திலே நாம் இருக்க வே ண்டும் என்று எண்ணியும் ஸ்ரீரங்க நாயகியார் வேடத்திலே – மோகினி அவதாரம்-நாச்சியார் கோலம் என்று சொ ல்வார்கள்- அந்த வேடத்திலே வீதி உலா வருகின்றார் நம்பெருமாள்.
அற்புதமான ஆபரணங்கள்.
அழகுக்கு அழகு சேர்க்கின்றன ஆடைகள். வண்ணப்பட்டாடைகள்…
எழிலார்ந்த கோலம்.
எவரையும் மயக்கிவிடும் தோற்றம்.
பெருமாள் பிரகாரத்திலே வலம் வந்து கொண்டிருக்கிறார். முகத்திலே மந்த காச புன்னகை.
பெண் வேடமிட்டு வந்த எம்பெருமான் நினைக்கிறாராம். “எனக்கு நிகராக யார் இருக்கிறார்கள். ஸ்ரீரங்க நாயகியார் பேரழகு என்று எல்லோரும் சொல்லுகிறார்களே ….. நான் ஏறிட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கோ லத்தை விடவா பேரழகு என்று கேட்பது போல அவருடைய தோற்றம் இருக்கிறது.
பராசர பட்டர் அந்த இடத்திலே மிக அற்புதமாக சொல்லுகின்றார்.
எம்பெருமானே ! உன்னுடைய நாச்சியார் கோலம் மிக அற்புதம். ஆனந்தம்.
இப்படிச் சொன்ன உடனே எம்பெருமானுக்கு இன்னும் பெருமிதம் ஏற்படுகிறது.
ஆனால் பராசர பட்டர் அடுத்து ஒரு வார்த்தையை சொல்லுகின்றார்.
ஆனால் எம்பெருமானே ….
எம்பெருமான் கேட்கின்றார். “என்ன ஆனால்? ”
பராசர பட்டர் புன்னகையோடு எம்பெருமானிடத்திலே விண்ணப்பிக்கின்றார்.
“எல்லாம் சரிதான். ஆடைகள் அற்புதம்… ஆபரணம் அழகு. கொஞ்சம் கூட சந்தேகமில்லை. நாச்சியார் கோ லம் கன கச்சிதமாக பொருந்துகிறது.ஆனால் எம்பெருமானே!உன்னுடைய கண்கள்… அந்தக் கண்கள் எங்களுடைய பிராட்டியை விட கருணையுள்ள கண்களாக தெரியவில்லையே !ஸ்ரீரங்கநாயகியினுடைய கண்களுக்கு இணையாக தேவரீரின் கண் அழகு விழிக்கவில்லையே …அந்தக் கண்ணழகு இந்த நாச்சியார் கோலத்தின் எழிலுக்கு கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது”என்றாராம்.
