ஒவ்வொரு தமிழ் மாதத்தின் அமாவாசையும், பௌர்ணமியும் வழிபாட்டுக்கும், விரதத்திற்கும், கோயில் உற்சவங்களுக்கும் உகந்த நாட்களாக இருக்கின்றன.. அந்த வகையில் மாசி மாதம் பௌர்ணமியை ஒட்டி, மக நட்சத்திரத்தில் நடைபெறும் நீராட்டம், “மாசி மகம்” என்று அழைக்கப்படுகிறது .

சூரிய கதிமுறையில், அதாவது சௌரமான முறையில், கும்ப ராசியில் சூரியன் பிரவேசிக்கும் காலம் மாசி மாதம் என்று வழங்கப்படுகிறது சாந் திரமான முறையில், அதாவது சந்திரகதியைக் கொண்டு, மாதங்களை நிர்ணயிக்கும் முறையில், மாசி மாதத்திற்கு “மாக மாதம்” என்று பெயர். பெரும்பாலும் பௌர்ணமியில் என்ன நட்சத்திரம் வருகிறதோ, அந்த நட்சத்திரத்தை ஒட்டி, மாதங்களின் பெயர்கள் சூட்டப்படுவதுண்டு. சித்திரை நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால், சித்திரை மாதம் என்றும், விசாக நட்சத்திரத்தை ஒட்டி பௌர்ணமி வருகின்ற பொழுது வைகாசி மாதம் என்றும், திருவோண நட்சத்திரத்தை ஒட்டி பௌர்ணமி வருவதால் ச்ரவணமாதம் அல்லது ஆவணி மாதம் என்றும் பெயர் சூட்டுவது போல, மக நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால் அந்த மாதத்தை மாக மாதம் என்று பெயர் சூட்டி அழைத்தனர். சாந்திரமான மாசத்துள் பதினொன்றாவது மாதம் என்று சேது புராணத்தில் உள்ளது. மாகம் என்பது பின் மகமாகியது .இந்த மாதத்தில் நீராடி அகத்தூய்மையும் புறத் தூய்மையும் பெற வேண்டும் என்பதால் மாசி மக நீராட்டத்தை சிறப்பாகச் சொன்னார்கள்.

பழங்காலம் தொட்டு மக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வின் ஒரு பகுதியாக மாசி மகத் திருவிழாவை நடத்தி வந்தனர். மாசிக் கடலாடுதல் என்று இந்த விழாவிற்கு பெயர். கடலும், நீர் நிலைகளும் இந்த புனித நாள்களில் சற்று மாறுபட்டே இருக்கும். எல்லா பௌர்ணமி நாள்களிலும் கடலில் நீராடலாம் என்றாலும் மாசி மகத்திலே நீராடுவது மிகவும் சிறப்பு.. ஆயிரக்கணக்கான மக்கள் அன்று இறைவழிபாடு செய்து நீராடுவதால், மாபெரும் கூட்டு வழிபாட்டின் சக்தியும் அன்றைக்குக் கிடைத்து விடுகிறது. மாசி மகத்தன்று நீராடுவதால் ஆபத்துக்கள் போகும். பாவங்கள் கழியும். புண்ணியங்கள் சேரும். காரணம் மக நட்சத்திரம் உள்ள ராசி சிம்ம ராசி. கால புருஷனுக்கு ஐந்தாவது ராசி, புண்ணியங்களைத் தரும். எனவே மக நட்சத்திரம் உள்ள பூர்வ புண்ணிய ராசியில் சந்திரன் இருக்க, கும்ப ராசியில் சூரியன் இருக்க, மாசி மகத்தில் நீராடுவது மகத்தான பூர்வ புண்ணியபலன்களைத் தரும்.
இவற்றையெல்லாம் விட பெரிய செய்தி மாசி மக விழா எல்லா சமூக மக் களையும் இணைக்கிறது. அன்றைய தினம் சென்னையில் இருந்து கன்னி யாகுமரி வரை, சென்னை ,மகாபலிபுரம், மரக்காணம், புதுச்சேரி, அரியாங் குப்பம், கடலூர், சாமியார்பேட்டை,பரங்கிப்பேட்டை, கிள்ளை, பூம்புகார், காரைக்கால், திருமலைராயன்பட்டினம், நாகப்பட்டினம் என வரிசையாக கிழக்குக் கடற்கரையில் அமைந்த அத்தனை சிறிய, பெரிய நகர கடற் கரைகளிலும் தீர்த்தவாரிக்கு உற்சவமூர்த்திகள் வருவார்கள். குறிப்பாக ஒவ்வொரு கிராமங்களில் இருந்தும் அந்தந்த ஊர் உற்சவமூர்த்திகளை அலங்கரித்து, டிராக்டர் முதலிய வாகனங்களில் வைத்து, ஊர் மக்கள் எல் லோரும் திரண்டு அந்த வாகனத்தில் ஏறி, மேளதாளங்களுடன் குதூகலமாக கடற்கரையில் வந்து, கடல் நீராடி, அன்னதானம் செய்து கொண்டாடுவது அற் புதமாக இருக்கும். ஒவ்வொரு கடற்கரையிலும் 15 முதல் 20 உற்சவ மூர்த்திகளும் 20, 30 கிராமத்தின் ஒட்டுமொத்த மக்களும் திரண்டு ஆன்மீகத் திருவிழாவாக இணைவது இந்த ஒரு உற்சவத்தில் தான்.
