சுவாமி வேதாந்த தேசிகர் பற்பல நூல்களை இயற்றியிருக்கிறார். வடமொழியிலும் தமிழ் மொழியிலும் அவர் இயற்றிய எண்ணற்ற நூல்கள் நம்முடைய உள்ளத்தில் பக்தியை வெள்ளமிடச் செய்து பரவாசமாக்குகின்றது. அதில் ஒரு மிக முக்கியமான நூல் ஸ்ரீ ரகுவீரகத்யம் .அது ஸ்ரீ ராமனின் புகழையும் குணத்தையும் கூறுகின்ற நூல்.
ஒரு மனிதனிடத்திலே ஒரு சில நல்ல குணங்கள் இருக்கும். ஒரு சில தீய குணங்கள் இருக்கும். இரண்டும் கலந்து தான் இருப்பான்.
ஆனால் சகல கல்யாண குணங்களும் ஒருவனிடத்தில் பொருந்தி இருக்கிறது என்று சொன்னால் அவன் யார் என்கிற கேள்வி எழுகிறது அல்லவா?
அப்படி ஒரு மனிதன் எல்லா குணங்களும் பொருந்தியவனாக இருக்க முடியுமா என்று சொன்னால் அவன் பகவானாக இருப்பான்.அவனைத்தான் நித்ய நிரதிசய கல்யாண குணகணாம் என்று சொல்லலாம். .அல்லது அவன் பக வானுடைய அவதார புருஷனாக இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட அவதார புருஷன் ஸ்ரீராமன் எல்லா குணங்களும் நிரம்பியவனாக கருதப்படுகிறான். அதனால் தான் கம்பன் ஸ்ரீ ராமரைச் சொல்லுகின்ற பொழுது “நடையின்நின்று உயர் நாயகன்”என்றார்.
“நடையின்நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய்நல்லூர்வயின் தந்ததே.
( நடையின் நின்று-நல்லொழுக்கத்தில் நின்று; உயர்-உயர்ந்த;நாயகன் – திருமாலின்; தோற்றத்தின் இடைநிகழ்ந்த-அவதாரங்களுக்குஇடையே ஒன்றாக நிகழ்ந்த; இராமாவதாரப்பேர்-இராமாவதாரத்தைக் குறித்தும் புகழ்மிக்கதுமான; தொடைநிரம்பிய தோம் அறு மாக் கதை-செய்யுள்கள் நிறைந்த குற்றமற்ற
சிறந்த இந்தக் காப்பியம்; சடையன் – வள்ளல் சடையப்பரது;வெண்ணெய் நல்லூர் வயின்-திருவெண்ணெய்நல்லூரில்;தந்தது-இயற்றப்பட்டது.”) என்று காட்டினார்.
இந்த குணங்களையும் குறிப்பாக அவனுடைய வீரத்தையும் கம்பீரத்தையும் சிறப்பாக முன்னிறுத்துகின்ற ஒரு நூல்தான் மகாவீர வைபவம் என்று சொல்லப்படுகின்ற ரகுவீர கத்யம்.
கத்யம் என்றால் என்ன பொருள் என்று பார்க்க வேண்டும். வடமொழியில் உரைநடை வடிவில் இயற்றப்படும் காவியம் கத்யம் எனப்படும்.
ஸ்ரீ ராமானுஜர் கூட மூன்று கத்யங்களை எழுதி இருக்கிறார் அவை கத்யத்ரையம் என்று வழங்கப்படும். அற்புதமாக இருக்கும். அதனை சேவிக்கும் பொழுது காதுகள் அற்புதமான அனுபவத்தைப் பெறும். கம்பன் சொல்வது போல “செவி நுகர் கனிகள் ” என்று இந்த கத்யங்களை சொல்லலாம்.
தமிழில் வசன கவிதை என்று ஒரு அமைப்பு இருக்கிறது அல்லவா, அந்த அமைப்பை இதற்கு நாம் ஒப்பிடலாம். இதை சேவிக்கின்ற பொழுது அந்த துள்ளல் ஓசையும் சந்தமும் நமக்கு ஒரு விதமான உற்சாகத்தையும் உணர்ச்சியையும் தட்டி எழுப்பும்.
இந்த அமைப்பில் உருவான நூல்தான் ரகுவீரகத்தியம். அதனுடைய தொடக் கமே ஸ்ரீ ராமனுடைய குணங்களை, அவனுடைய வீரத்தை, அவருடைய கம்பீரத்தை அடுக்கடுக்காக சொல்கின்றது.
ஜயத்யாஶ்ரித ஸன்த்ராஸ த்வான்த வித்வம்ஸனோத³ய: ।
ப்ரபவான் ஸீதயா தே³வ்யா பரமவ்யோம பாஸ்கர: ॥
ஜய ஜய மஹாவீர மஹாதீர தௌரேய,
தே³வாஸுர ஸமர ஸமய ஸமுதி³த
நிகி²ல நிர்ஜர நிர்தாரித நிரவதிக மாஹாத்ம்ய,
த³ஶவத³ன த³மித தை³வத
பரிஷத³ப்யர்தி²த தா³ஶரதி² பாவ,
தி³னகர குல கமல தி³வாகர,
தி³விஷத³திபதி ரண ஸஹசரண
சதுர த³ஶரத² சரம ருணவிமொசன,
கோஸல ஸுதா குமார பாவ
கஞ்சுகித காரணாகார,
என்று அடுக்கடுக்காக போகும் .கேட்க சுநாதமாக இருக்கும்.இந்த ரகுவீர கத்யத்தை ஒரு முறை சேவித்து விட்டால் முழு ராமாயணத்தையும் சேவித்தது போல ஆகும் அநேகமாக எல்லா இராமாயண நிகழ்ச்சிகளும் இதிலே நிரல் நிரையாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன.
அதில் ஒரு சுலோகம்.
ஸாகேத ஜனபத³ ஜனி தனிக ஜங்க³ம
ததி³தர ஜன்து ஜாத தி³வ்ய க³தி தா³ன
த³ர்ஶித நித்ய நிஸ்ஸீம வைபவ,
பவ தபன தாபித பக்தஜன பத்³ராராம,
ஶ்ரீ ராமபத்³ர, நமஸ்தே புனஸ்தே நம:
கோசல நாடு மிகச்சிறந்த நாடு அதில் அயோத்தியா பட்டினம் வைகுண்டத்துக்கு நிகரானது. அங்கே பிறந்ததையே மிகப்பெரிய பேறாக நினைக்கக்கூடிய சரப்பொருள்களும் அசரப் பொருள்களும் அதாவது ஜங்கமப் பொருள் ,வேறுபட்ட தாவரம் மற்றும் பல்வேறு உயிரினங்கள் மகிழ்ச்சியோடு இருந்தன. ஸ்ரீராமன் தன்னுடைய திருவடி ஜோதிக்கு(வைகுந்தத்துக்கு) எழுந்தருளும் போது புல்முதல் கொண்டு எறும்பு போன்ற சிற்றினங்களையும் விடாது வைகுந்ததுக்கு அழைத்துச் சென்றான். ஸ்ரீ ராமன் அப்படிப்பட்ட எல்லையற்ற பெருமை உடையவன். கர்ம வசத்தினால் இந்த உலகத்தில் பிறந்த நம்மைப் போன்ற சம்சாரிகள் சூரிய வெப்பத்தால் தகிக்கப்படுவதைப் போல படாத பாடு படுகிறோம் .சம்சார வெப்பம் நம்மை சுற்றி அனலாய் கொதிக்கிறது. இந்த வெப்பத்திலிருந்து தப்பிப்பதற்காக வாசனையும் அழகும் குளிர்ச்சியும் உடைய பசுஞ் சோலையாக ஸ்ரீ ராமபிரான் இருக்கின்றான். அப்படிப்பட்ட ஸ்ரீ ராமபிரானே, உனக்கு மறுபடியும் மறுபடியும் என்னுடைய வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.இது நம்மாழ்வாரின் பாசுரத்தை பிரதிபலிக்கிறது.
கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?,
புல்பா முதலா புல்எறும்புஆதி ஒன்றுஇன்றியே,
நல்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்,
நல்பாலுக்கு உய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே?
இதற்கு ஆறாயிரப்படி ஸ்ரீஸீக்தி காண்மின்;-“ப்ராக்ருத வஸ்துக்களே தாரக போஷக போக்யமாயிருக்கக்கடவ இப் ப்ரக்ருதிமண்டலத்திலே வைத்துக் கொண்டு திருவயோத்யையிலே வர்த்திக்கிற தூர்வாதி நிகில ஜந்துக்களையும் கர்மயோகாத்யு பாயம் பண்ணுதிருக்கச் செய்தேயும் திருநாட்டிலுள் ளாரைப் போலே தன் திருவடிகளே தாரக போஷக போக்யமாக்கியருளின் இம மஹா குணத்தை யுடையனாயிருந்த இராமபிரானையல்லாமல் மற்றுங் கற்பரோ வென்று அவனுடைய குணங்களை யநுபவிக்கிறார்.”
ரகுவீரகத்யத்தை முழுமையாகப் படிக்க முடியாவிட்டாலும் கூட, இந்த ஒரு சுலோகத்தையாவது தினசரி நாம் பாராயணம் செய்வதன் மூலமாக ஸ்ரீ ராமபிரானுடைய பூரணமான கருணைக்கு பாத்ரமாவோம்.
