பாரதத்தின் இரண்டு முக்கியமான நூல்கள் ஸ்ரீ ராமாயணமும் மகாபாரதமும். ஸ்ரீ ராமாயணத்தை சகல வேத சாரம் என்று ஆன்றோர்கள் சொல்லுவார்கள். காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களின் விரிவு தான் இராமாயணம். ஒரு அட் சரத்திற்கு ஆயிரம் ஸ்லோகங்கள் வீதம் 24 ஆயிரம் சுலோகங்கள் கொண்டது ஸ்ரீ ராமாயணம் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். ஆத்மாவை பரமாத் மாவிடம் சரணடையச் செய்து விட்டால் அதற்குப் பிறகு அவனுக்கு எவ் விதமான துன்பங்களும் கிடையாது. அந்த ஆத்மாவுக்கு அடைக்கலமாக பெரு மானே விளங்குவார் என்பதுதான் வேத நூல்களின் சாரமான கருத்து. அந்தக் கருத்து எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பதற்காகத்தான் ஸ்ரீ ராமாயணம் இயற்றப்பட்டது. ஸ்ரீ ராமாயணத்தை,” சரணாகதி சாஸ்திரம்” என்று தான் பெரியவர்கள் கூறுகிறார்கள். ஸ்ரீ ராமநவமி கொண்டாடும் இந்த வேளையில் ஸ்ரீ ராமனோடு தொடர்புடைய பாத்திரங்கள் ஸ்ரீ ராமபிரானை எவ்வாறு அறிந்து வைத்திருந்தார்கள் என்பதை இந்த முப்பது முத்துக்கள் தொகுப்பில் ஆராய் வோம்.
தாயிற் சிறந்த கோயில் இல்லை
வேத இதிகாசங்களில் அடிப்படையான கருத்து “அன்னையும் தந்தையும் முன்னறி தெய்வம்” என்பதுதான். இது இந்திய நாட்டிற்கே உரிய அடிப்படையான விஷயம். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தமிழில் சொல்லப்பட்ட விஷயம், வடமொழியில் மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ ;ஆச்சார்ய தேவோ பவ ; என்று வருகிறது.தைத்ரிய உபநிஷத்தின் உயிர் வாக்கியம் இது. இந்த தர்மத்தின் முதல் சொல் மாதா தான் தெய்வம் என்பது.தாயில் சிறந்த கோயில் இல்லை என்ற வாக்கியத்தின் படி நடந்தவன் ஸ்ரீராமன்.\
பகவானைப் பெற்றெடுத்த கோசலை
ஸ்ரீ ராமபிரான் கோசலையின் மணிவயிற்றில் பன்னிரண்டு மாதம் கர்ப்பவாசம் செய்து, இந்த புண்ணிய பூமியிலே, சித்திரை மாதம், வளர்பிறை நவமி நன்னாளில் அவதரித்தான். இந்த அவதார வைபவத்தை கம்பன் மிக அற் புதமாகக் காட்டுவார். எல்லா நற்குணங்களையும் தன்னிடத்திலே பெற்றவள் கௌசல்யா தேவி. உலகம் முடியும் பிரளய காலத்தில் உலகங்களையும் உயிர் களையும் தன் வயிற்றில் அடக்கி வைத்திருந்தவனும், வேதங்களால் அறிவதற்கு அருமையானவனும், கருமேகம் போன்ற நிறமும் மின்னலைப் போன்ற ஒளியும் படைத்த பகவானை, எல்லா உலகங்களும் இம்மையிலும் மறுமையிலும் நன்மை பெறும்படியாக இந்த உலகத்தில் பெற்றெடுத்தாள் என்று பாடுகிறார்.
ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து
அரு மறைக்கு உணர்வு அரும் அவனை, அஞ்சனக்
கரு முகில் கொழுந்து எழில் காட்டும் சோதியைத்
திரு உறப் பயந்தனள் திறம் கொள் கோசலை
தெய்வத்தை பயந்த தெய்வம்
இதில் “திறன் கொள் கோசலை” என்கின்ற வார்த்தை மிக முக்கியமானது. ஒரு குழந்தையைப் பெற வேண்டுமானால் அதற்கான திடமான ஆரோக் கியமும் பலமும் ஒரு தாய்க்கு இருக்க வேண்டும் ஒரே ஒரு சாதாரண குழந்தையைப் பெறுவதற்கு இத்தனை திடகாத்திரம் தேவை என்று சொன் னால், இந்த உலகத்தை எல்லாம் தன்னுடைய உடலாகக் கொண்ட எம்பெருமானைப் பெற்றெடுப்பதற்கு எத்தனை திடகாத்திரம் வேண்டும். கோசலை ,சுமித்திரை,கைகேயி ஆகிய மூன்று தாய்மார்களில் இந்த திடம் கோசலைக்கு இருந்ததால் பகவான் கோசலையின் மணிவயிற்றை தான் பிறப்பதற்கு ஏற்ற கருவறையாகத் தேர்ந்தெடுத்தார். பகவானைப் பெற்றெடுத்த கருவறையாக திருவயிரை உடையவள் என்பதால் தேவர்கள் அனைவரும் கோசலையை தெய்வத்தை பயந்த தெய்வமாகப் போற்றினர்.
5.முதல்வனைப் பெற்றவள்
குகனிடம் கோசலையை அறிமுகப்படுத்தும் போது பரதன் சொல்வான். ” எல்லாஉலகங்களையும் யார் படைத்தவனோ, அப்படிப் படைத்தவனையே தன் வயிற்றின் மூலம் படைத்த பெருமை உடையவள் கோசலை”
சுற்றத் தார், தேவரொடும் தொழ நின்ற
கோசலையைத் தொழுது நோக்கி,
‘கொற்றத் தார்க் குரிசில்! இவர் ஆர்?’ என்று
குகன் வினவ, ‘கோக்கள் வைகும்
முற்றத்தான் முதல் தேவி; மூன்று
உலகும் ஈன்றானை முன் ஈன்றானைப்
பெற்றத்தால் பெறும் செல்வம், யான்
பிறத்தலால், துறந்த பெரியாள்’ என்றான்.
கோசலை பெயர் சொல்லி ராமனுக்குத் தாலாட்டு
கோசலையின் பெருமையை குலசேகர ஆழ்வார் மிக அற்புதமாகப் பாடுவார். கண்ணனுக்கு தாலாட்டு பாடல் உண்டு. ஆனால் இராமனுக்கு இல்லையே என்ற குறையைத் தீர்த்து வைத்தவர் குலசேகர ஆழ்வார்.
மன்னுபுகழ் கெளசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொஞ்சேர்
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ
என்று ராமனின் திருத்தாயாரான கோசலையின் பெருமையைக் கூறி திருக் கண்ணபுரம் பதிகத்தின் தாலாட்டைத் தொடங்குகிறார்.
கோசலையின் பெயரோடு சுப்ரபாதம்
தாலாட்டு பாடிய குழந்தையை திரும்பவும் திருப்பள்ளி எழுச்சி பாடி எழுப்ப வேண்டும். திருப்பள்ளி எழுச்சிக்கு சுப்ரபாதம் என்று பெயர் அந்த சுப்ரபாதமும் கோசலையின் பெயரில்தான் தொடங்குகிறது என்பது கோச லைக்கும் ராமனுக்கும் உள்ள தாய் மகன் பிணைப்பை, பக்தி உலகம் எவ்வாறு போற்றுகிறது என்பதைக் காட்டுகிறது.விசுவாமித்திர முனிவர் ராம லக்ஷ்மணர்களை எழுப்புவதற்காக திருப்பள்ளி எழுச்சி(சுப்ரபாதம்) பாடுகிறார். திருப்பள்ளி எழுச்சியின் முதல் வார்த்தையே கௌசல்யா சுப்ரஜா என்று தான் ஆரம்பிக்கிறது.
கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்
இன்றைக்கு பல்வேறு திருக்கோயில்களிலும் சுப்ரபாதங்கள் இசைக் கப்படுகிறது .அந்த சுப்ரபாதங்களின் முதல் சுலோகம் பெரும்பாலும் இந்த சுலோகமாகவே இருக்கும். “இன்று ஒருநாள், இந்த தெய்வக்குழந்தையை எழுப்பும் பேற்றினை நான் பெற்றேன் . ஆனால், தினமும் இவனை எழுப்பும் பேற்றினை ராமனை பெற்ற கோசலை (கௌசல்யா) எத்தனை அரிய பேற்றினை பெற்றவள்.
கோசலையிடம் மிகுந்த அன்போடு இருந்தான் ஸ்ரீராமன் கௌசல்யா தேவியோ ஸ்ரீ ராமனை தன் உயிராகவே கருதினாள் .
கோசலை ஒரு சிறந்த தாய்.
கோசலை ஒரு சிறந்த தாய். இறைவனே மகனாக அவதரித்தாலும் கூட, தாயின் கடமையாகிய தர்ம உபதேசத்தை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று உலகத் தாய்மார்களுக்கு காட்டியவள் கோசலை. ராமன் காட்டுக்கு புறப்படும் போது அவள் ஒரு வார்த்தையை சொல்லுகின்றாள் .அருமையான சுலோகம்.
யம் பாலயஸி தர்மம் த்வம் திருத்யா ச நியமேன ச |
ஸவை ராகவசார்துல தர்மஸ்த்வாம் அபிரக்ஷது ||
நீ தர்மத்தின் வழியில் நின்று, சத்தியத்தைக் காப்பதற்காக இந்தக் காரியத்தை செய்கிறாய்.மிகுந்த மகிழ்ச்சி. நீ எந்த தர்மத்தை காப்பாற்றுகிறாயோ, அந்த தர்மம் உன்னை காப்பாற்றும் (தர்மஸ்த்வாம் அபிரக்ஷது)என்று ஆசீர்வாதம் செய்து அனுப்புகின்றாள் . பட்டத்தைத் துறந்து ,தன்னுடைய மகன் காட்டுக்குச் செல்கின்றானே என்ற வேதனை ஒருபுறம் இருந்தாலும் கூட, அதனை வெளிக் காட்டாது ஆசீர்வதித்து அனுப்புகின்ற உறுதியான தாயின் கடமைக்கு அடை யாளமாக இங்கே கோசலையைப் பார்க்கிறோம்.
