(c)பாரதிநாதன்
சூடு கண்ட பூனை என்றொரு பழமொழி உண்டு. தினம் தோறும் பால் குடிக்கும் பூனை, ஒரு நாள் நன்கு காய்ச்சி சூடேறிய பாலைக் குடித்துவிட்டது.
அதற்குப் பிறகு, ஆறிய பால் வைத்தாலும், அது குடிக்க மறுத்தது .இதுவும் சுடுபாலாக இருக்குமோ என்று நினைத்தது. காரணம், ஏற்கனவே சூடு கண்ட பூனை அல்லவா.
இராமாயணத்தில் சுக்ரீவன் நிலையும் அப்படித் தான்.

சகோதரன் வாலியோடு நன்றாகவே கிஷ்கிந்தையில் இருந்தான். தன்னைச் சண்டைக்கு அழைத்த மாயாவியோடு வாலி ஒரு குகைக்குள் சண்டை செய்து கொண்டிருந்ததைக் கண்டு வாலியின் ஆணைப்படி வெளியே காவலுக்கு இருந்தான் .
திடீரென்று கூச்சலும் இரத்தமும் வருவதைக் கண்டு, தனது சகோதரன் வாலியை, மாயாவி கொன்று விட்டான் என்று நினைத்தான். மாயாவி வெளியிலே வந்தால் தன்னையும் கொன்று விடுவான் என்ற அச்சத்தோடு ஒரு பெரிய பாறையை எடுத்து அந்த குகையை அடைத்தான். திரும்ப அந்த குகைக்குப் போக வேண்டாம் என்று எல்லோரும் சொன்னதால், நாட்டுக்கு திரும்பி விட்டான்.
அரசன் இல்லாத நாடு இருக்கக் கூடாது என்று சொல்லி, எல்லோருமாகச் சேர்ந்து அவனுக்குப் பட்டம் சூட்டினார்கள் . கிஷ்கிந்தை நாட்டின் ராஜா வானான். எல்லாம் நல்லபடியாகப் போனது.
ஆனால் மாயாவியைக் கொன்று வீழ்த்திய வாலி, குகை மூடப்பட்டிருந் ததையும், வாசலில் காவலுக்கு நிற்கச் சொன்ன தம்பி சுக்ரீவன் இல்லா ததையும் கண்டு சினம் அடைந்தான்.
இங்கு அவன் கண்ட காட்சியே சாட்சியாகியது. எதையும் விசாரித்து அறியும் மனநிலையில் இல்லை. கொதித்தான்.
“தன் சாவை தம்பி விரும்பி இருக்கிறான் போலிருக்கிறது. அண்ணன் எப் போது சாவான், திண்ணை எப்போது கிடைக்கும்? என்ற திட்டமிட்டு முடி சூட்டி கொண்டிருக்கிறான்” என நினைத்து, தம்பியை வாலி அடித்து விரட்டி விட்டான்.
சுக்ரீவன் சொன்ன எந்த விளக்கத்தையும் வாலி கேட்கவில்லை. கேட்கும் மனநிலையிலும் இல்லை.
ஆறாத கோபத்தில் எந்த விளக்கமும் ஏறாது என்பதற்கு வாலி ஒரு அத்தாட்சி.
வாலியிடம் பலமுறை அடிவாங்கி, மனைவி மக்களை இழந்த சுக்ரீவன், அனுமன் முதலிய சில தேர்ந்தெடுத்த தோழர்களுடன் வாலி ஒரு சாபத்தால் நுழைய முடியாத இடத்தில் மறைத்து வாழ்ந்தான்.
***** ****** *****
சூடு கண்ட பூனையான சுக்ரீவன் வாழ்வே அச்சத்தின் பிடியில் இருந்தது. பலசாலிகள், ஆயுதம் தாங்கியவர்கள், என யாரைப் பார்த்தாலும் தன்னை அழிக்க வந்தவர்களோ என நினைத்தான்.
எல்லாவற்றுக்கும் பயம் தான் காரணம். அவன் அனுபவம் அப்படி.
வாலி கோபத்தால் நிலைமறந்தான் சுக்ரீவன் அச்சத்தால் நிம்மதி இழந் தான். அச்சமும் கோபமும் ஒருவனின் சிந்தனை, ஆற்றல், நிம்மதி எல்லா வற்றையும் சிதைத்து விடும்.
இந்த நிலையில்தான் ராம லஷ்மணர்களைப் பார்த்து அச்சப்பட்டான்.
தேவர்கள் அசுரர்கள் இணைந்து பாற்கடலைக் கடைந்த பொழுது, ஆலகால விஷம் வந்தது. “இனி அமுதமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்” என்று அலறி அடித்து, நாலா பக்கமும் ஓடிய பொழுது, நான் இருக்கிறேன் அஞ்ச வேண்டாம் என்று சிவபெருமான், சொன்னது போல அனுமன் நின்றான்.” அச்சம் வேண்டாம். நான் போய் விசாரித்து வரு கிறேன்” என்று அனுமன் விசாரித்து வந்து, ராம லக்ஷ்மணர்களைப் பற்றிச் சொல்லி அவர்களைத் தேற்றுகிறான்.
ராமனுக்கும் சுக்ரீவனுக்கும் நட்பு ஏற்படுத்துகிறான். இங்கேதான் சிக்கல் ஆரம்பிக்கிறது.
ராமன் சுக்ரீவனை முழுமையாக ஏற்றுக் கொள்ளுகிறான். சுக்ரீவன் ராமனுக்கு கை கொடுத்தாலும் மனம் கொடுக்கவில்லை.
அவன் மன தடுமாற்றத்தை உணர்கிறான் அனுமன். ராமனைப் பற்றி பல விஷயங்களைச் சொல்லி நட்பு கொள்ள அறிவுறுத்துகிறான்.
அப்போது கம்பன் அனுமனைப் பற்றி சொல்லும் வார்த்தை இது.
” மந்திரம் கெழுமு நூல் மரபு உணர்ந்து உதவுவான்” –
மந்திரி என்பவன் மன்னர் கூறிய நீதிய நூல்களை ஆராய்ந்து காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்ப, அனுசரித்து ஆலோசனை சொல்லி உதவ வேண்டும்.
ராமனைப் பற்றி சுக்ரீவனிடம் இரண்டு விஷயங்களை அனுமன் கூறு கின்றான்.
1.முனிவர்கள் தவம் செய்து தங்கள் இடத்திற்கு இராமன் வருவானா என்று ஏங்குகிறார்கள்.
2.அந்தத் தவமான ராமனே , உன் தவத்தின் சிறப்பினாலும், உன் தூய்மை யான உள்ளத்தினாலும், உன்னிடம் நட்பு கொள்ள வந்திருக்கிறான் .
“நீ ஐயா தவம் இழைத்து உடமையால்
நெடுமனம் தூயையா உடமையால்
உறவினைத் துணிகுவார்”
தூய மனத்தோடு ராமனை இறைவனை எண்ணுபவர்க்கு, இறைவனே அவர்கள் இடம் நாடி வந்து, அருள் செய்வான் என்பது இதனால் தேறு கிறது.
அது மட்டுமில்லை; ராமன் செய்த அறக்கருணையையும் மறக்கருணை யையும் எடுத்துக் கூறுகிறான்.
அனுமன் .மாரிசன் கவந்தன் இவர்களை அழித்தது மறக்கருணைக்கு எடுத் துக்காட்டு.
சபரி, குகன், முனிவர்கள் அகலிகை போன்றவர்க்கு அருளியது ராமனின் அறக்கருணைக்கு எடுத்துக்காட்டு.
இத்தனையும் சொல்லியபின், சுக்ரீவன் மனது சற்றுத் தெளிகிறது.
அனுமனைக் கொண்டாடுகிறான்.
ராமனோடு நட்புக்கரம் சேர புறப்படுகிறான்.
ராம லக்ஷ்மணர்களைப் பார்த்தவுடன் அவர்கள் வீரம் சுக்ரீவனுக்குத் தெரிகிறது. ராமன் மலர்ந்த முகத்தோடு வரவேற்று அமரச் செல்கிறான்.
இங்கே கம்பன் ஒரு நயம் சொல்லுகின்றார்.
ஆசையை வேரோடு போக்கிய ராமனும், குரங்கு மன்னன் சுக்ரீவனும் ஒன்று சேர்ந்தனர் என்கிறார். ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்?
அவா முதல் அறுத்த சிந்தை அனகனும்
அரியின் வேந்தும் என்பது கம்பர் வாக்கு.
காரணம், சுக்ரீவன் முழு மனதோடு ராமனிடம் நட்பு கொள்ளவில்லை. அவன் மனது இங்குமங்குமாக அலை பாய்கிறது. குரங்கு அரசன் என்று கம்பன் சொல்லிவிட்டான் அல்லவா . அது நிலைகெட்டு தாவுகிறது காரணம், அது குரங்கின் இயல்பு.
அவ்வப்போது வாலியின் நினைவு சுக்ரீவனுக்கு வந்துவிடுகிறது .ராமன் வீரன் தான். தாடகை, சுபாகு, கபந்தன், என முடித்தவன் தான். கர தூஷ ணர்களை அழித்தவன் தான்.
ஆனால், ராவணனை வாலால் கட்டி சுழற்சி ஆற்றல்மிக்க தன் அண்ணன் வாலியை வெல்லும் வலிமை இருக்குமா? என சந்தேகிக்கிறான். நட்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமுன் ஆறாயிரம் சிந்தனை சுக்ரீவன் மனத் திரையில் ஓடுகிறது.
தான் வாலியினால் பட்ட வேதனைகளைக் கூற ராமன் சமாதானப்படுத்தி தேறுதல் சொல்கிறான்.”இனி உனக்கு துன்பம் இல்லை. உனக்கு துன்பம் என்றால் எனக்கு துன்பம். அதனைத் தீர்ப்பேன்.” என்று உறுதி கூறுகிறான்.
“தீயரே எனினும் உன்னோடு உற்றவர்
எனக்கும் உற்றார்; உன் கிளை எனது;
என் காதல் சுற்றம் உன் சுற்றம்;
நீ இன் உயிர்த் துணைவன் என்றான்.
“என் உடலுக்கு நண்பன் அல்ல உயிருக்கு நண்பன்” என்கிறார் .
யுத்த காண்டத்தில் இதை நிரூபிக்கவும் செய்கிறான். ராமன் அனுமதியின்றி ராவணனோடு போய் மோதும் போதும் சரி ;சுக்ரீவனை கும்பகர்ணன்” உன்னால் முடிந்தால் மீட்டுச் செல்” என்று கொண்டு செல்லும் போதும் சரி, ராமன் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை .
இவ்வளவும் சொல்லியபிறகு இருவரும் விருந்து உண்ணுகிறார்கள். அப் பொழுதுதான் சுக்ரீவனோடு மனைவி இல்லாமல் இருப்பதும், தம்பி மனைவியான அவளை வாலி கவர்ந்து சுக்ரீவனை தனியே விரட்டி விட்டதும் தெரிகிறது .சுக்ரீவன் தலைகுனிந்து இருக்கிறான்.
அப்பொழுதுதான் வாலியின் பலத்தையும் சுக்ரீவனின் முழு கதையையும் அனுமன் சொல்லுகின்றான். இப்போது ஒரு கேள்வி எழும்.
வாலியின் முழு வரலாறு தெரியாமல் “தீயரே ஆயினும் உனக்கு உற்றார் எனக்கு உற்றார் “என்று எப்படி ராமன் வாக்குறுதி தந்தான்? தர்மத்தின் தலைவனான ராமன், ஒருவேளை சுக்ரீவன் அநீதி இழைத்திருந்து, தவறு செய்திருந்து, அவனுக்குத் துணை போகும் இக்கட்டுக்கு ஆளாகலாமா? என்ற கேள்வி வரும்.
இங்கே தான் ஒரு நுட்பம் இருக்கிறது. தெய்வத்தின் வாக்கும் நல்ல தூய மனதுடையவர் வாக்கும் உண்மையை ஒட்டியே இயங்கும் என்பது பொது விதி.
தீயரே ஆயினும் என்றால் தீயவராக இருக்க மாட்டார் என்று தான் பொருள் தேறும். சூரியன் மேற்கு உதித்தாலும் ,வானம் இடிந்து விழுந் தாலும், காளை கன்று போட்டாலும் என்று சொல்வதில்லையா? அது போல்தான்.
வாலியை ஒடுக்கும் வல்லமை இராமனுக்கு இருக்குமா என்று சுக்ரீ வனுக்கு ஐயம் வருகிறது. பயந்தவன் மனம் அப்படித்தான் சிந்திக்கும் . அது மட்டும் காரணம் அல்ல.
சுக்ரீவனை வைத்துக்கொண்டு வாலியின் சிறப்புகளைப் பற்றி மிக மிக விரிவாக அநுமன் சொல்லுகின்றான். அந்தச் சொற்களும் சுக்ரீவனுக்கு அடி மனதில் உள்ள அச்சத்தை அதிகப்படுத்துகிறது.
“மார்பு இடந்த மா எனினும்
மற்றவன் தார் கிடந்த தோள் தகையவல்லதோ”
அதாவது இரணியன் மார்பை பிய்த்து அழித்த நரசிம்மனே என்றாலும், வாலியின் தோள்களை அடக்கும் வலிமை உடையதோ ?என்பதில் சுக்ரீவன் அச்சம்.
100 டிகிரி ஜுரத்திலிருந்து 104 டிகிரிக்கு ஜுரம் ஏறுகிறது .ராம லக்ஷ்ம ணர்களை விட்டு, தனி இடத்தில் ஆலோசனை செய்கின்றான். அப்போது தான் வாலிபற்றி அதிகமாகச் சொல்லி, சுக்ரீவன் ரத்த அழுத்தத்தை ஏற்றி விட்டோமா” என்று அனுமன் நினைக்கிறான்.
சுக்ரீவனின் மன ஓட்டத்தை அவன் வாய்விட்டுச் சொல்லாமலேயே அனு மன் கண்டுபிடித்து விடுகிறான்.
அன்னவாலியைக் காலனுக்கு அளிப்பது
ஓர் ஆற்றல் இன்ன வீரர்பால் இல்லை என்று அயிர்த்தனை
என்கிறான் அனுமன்.
அப்போது சுக்ரீவனுக்கு இராமன் பற்றியும், ராமனுடைய வீரத்தைப் பற்றியும், ராமனுடைய அவதார ரகசியத்தைப் பற்றியும் சில விஷயங் களைக் கூறுகிறான்.
1.ராமன் கரங்களில் சங்கு சக்கர ரேகைகள் உள்ளதை தான் கவனித் ததையும் அது திருமாலிக்கே உரியது என்பதையும் சொல்லுகின்றான்.
2.இந்த ரேகை உலகில் வேறு யாருக்கும் இல்லை என்பதைச் சொல்லு கின்றான்.
3.திரிபுரம் எரித்தவனும், காலனை உதைத்த வலிமை பெற்றவனுமாகிய சிவன் கையில் ஏந்தி இருக்கும் வில்லை இவன் முறித்தான் என்றால் அந்த வலிமை திருமாலுக்கே உரியது. எனவே இவன் திருமால் என்று சொல்லுகின்றான். சிவாம்சம் பொருந்திய அனுமனால் மட்டுமே விஷ்ணு அம்சத்தின் ரகசியத்தை உணர முடியும்.
இதைவிட முக்கியமாக அனுமன் தன்னுடைய தந்தையான வாயுதேவன் சொன்னதை சுக்கிரீவனிடம் சொல்லுகின்றான்.
” என் தந்தை, என்னை திருமாலுக்கு அடிமை செய்” என்று கூறினார். அது தான் சிறந்த தவம். அப்படி நீ திருமாலுக்கு அடிமை செய்தால், உனக்கு மட்டுமல்ல, உன்னைப் பெற்ற எனக்கும் சிறந்த புகழும் பதவியும் கிடைக்கும்” என்று என் தந்தை சொன்னார்.
என்னை ஈன்றவன், இவ்வுலகு யாவையும் ஈன்றான்
தன்னை ஈன்றவற்கு அடிமை செய்; தவம் உனக்கு அஃதே
உன்னை ஈன்றனற்கு உறுபதம் உளது என உரைத்தான்” நட்பு-76) .
அப்போது என் தந்தையிடம் நான் கேட்டேன்.” அது சரி; நான் திரு மாலுக்கு தொண்டு செய்கிறேன் என்பது இருக்கட்டும். அவர் யார்? எப்போது வருவார்? அவரை எப்படி நான் அறிந்து கொள்வேன்?”
அப்பொழுது என்னுடைய தந்தை வாயு பகவான் சொன்னார்.
” மகனே யாரைக் கண்டவுடன் உனக்கு மனதில் இயல்பான அன்பு உண் டாகுமோ அவரே திருமால் .ராமனை முதன் முதலாகப் பார்த்தவுடன் எனக்கு எலும்பும் சதையும் உருகும்படியான உருக்கம் ஏற்பட்டது.
துன்பு தோன்றிய பொழுது, உடன் தோன்றுவன், எவர்க்கும்
முன்பு தோன்றலை அறிதற்கு முடிவுஎன் ? என்றியம்ப
அன்புசான்று’ என உரைத்தனன், ஐய! என் யாக்கை
என்பு தோன்றல, உருகின எனின்பிறிது எவனோ?” (நட்பு-77)
இந்த வார்த்தைகள் சுக்ரீவனை சற்று ஆசுவாசப்படுத்தினாலும் முற்றிலும் அவனுடைய ஐயத்தை நீக்கவில்லை. அப்பொழுது ஒரு உபாயத்தை அநுமன் சொல்லுகின்றான்.
“இதோ பார். அவனுடைய வீரத்தை சந்தேகிக்கிறாய். நான் சொன் னதையும் நீ ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும், எனக்கு ஒரு உபாயம் சொல்கின்றேன். நாம் போகும் வழியில் மிகச்சிறந்த மராமரங்கள் இருக் கின்றன. யுகங்கள் மாறினாலும் அவை நிலை மாறாதவை. எக்காலத்திலும் அழியாதவை. ஏழு மலைகள் ஒருசேர நின்றது போல் வலிமை உடையவை. அந்த மரங்களில் ஒன்றை வீழ்த்தினால் போதும், அவன் நிச்சயம் வாலியை அழித்து விடுவான் என்பதை நீ தெரிந்து கொள்ளலாம்”
ராமரிடம் செல்கிறான் சுக்ரீவன். அனுமன் சொன்னதை அப்படியே ஒப்பிக் கிறான்.
ஏக வேண்டும் இந் நெறி’ என, இனிது கொண்டு ஏகி,
‘மாகம் நீண்டன குறுகிட நிமிர்ந்தன மரங்கள்
ஆக ஐந்தினோடு இரண்டின் ஒன்று உருவ, நின் அம்பு
போகவே, என் தன் மனத்து இடர் போம்’ எனப் புகன்றான்
“உன் வலிமை மீது சந்தேகம் உள்ளது” என்று சொன்னவுடன் ராமனுக்கு கோபம் வந்திருக்க வேண்டும். ஆனால் சுக்ரீவன் சொல்லிய முறையும் , அவனுடைய பரிதாபமான முகமும், பார்த்த ராமனுக்கு முகத்தில் புன் சிரிப்பு தோன்றுகிறது .
“பாவம் சுக்ரீவன் நல்ல மனது. ஆனால் சந்தேகம் இருக்கிறது “என்று சிரித்துக் கொண்டே மரா மரத்தின் அருகே செல்கிறான்.
ஒரு அம்பை எடுக்கிறான். நீண்டண் இழுக்கிறான்.அந்த நான் ஓசையில் தேவர் உலகம் கிடுகிடுக்கிறது. திக்குகளில் உள்ள உயிர்கள் நடுங்கு கின்றன. காதுகள் செவிடுபடுகிறது. அமர உலகமும் அதிர்ச்சி அடைகிறது. இந்த ஓசையில் அதிர்ச்சி அடையாமல் நின்றவன் ஒருவன் தான் .அவன் தான் இலக்குவன்.
“பரிந்த தம்பியே பாங்கு நின்றான்” என்பார் கம்பர்.
சந்தேகப்பட்ட சுக்ரீவனும் சந்தேகத்தை தெளியவிட்ட அனுமனும் அடைந்த நிலையைச் சொல்ல கம்பர் விரும்பவில்லை.
அதே நேரம் அனுமன் சுக்ரீவரைப் பார்த்து, “வில்லின் நாண் ஒழியே நடுங்கச் செய்கிறதே, இன்னும் அம்பு செலுத்த வேண்டுமோ ?”என்கிறார்.
ஆனால் தொடுத்த அம்பு, தன் வேலையை முடிக்காமல் திரும்பாது .அது வும் கையாழி சக்கரமும் ஒன்றுதான். ஒரு மரத்தை மட்டுமே துளைக்கச் சொன்னான் சுக்ரீவன்.
ஆனால் அது ஏழு பராமரங்களையும் துளைத்து, கீழ் உலகம், மேல் உலகம், என்று ஏழு என்ற தொகை உடைய பொருள்களைத் தேடித் தேடி, அது இல்லாததால் ராமன் கைக்கு மீண்டது.
ஏழு மா மரம் உருவி, கீழ் உலகம் என்று இசைக்கும்
ஏழும் ஊடு புக்கு உருவி, பின் உடன் அடுத்து இயன்ற
ஏழ் இலாமையால் மீண்டது, அவ் இராகவன் பகழி;
என்பது கம்ப சித்திரம்.
வாலியால் துரத்தப்பட்டதிலிருந்து நிம்மதி இல்லாமல் தவித்த சுக்ரீவன், அந்தகார இருள் நீங்கி வெளிச்சம் கிடைத்தது போல் மகிழ்கிறான்.
இதற்குப் பிறகு அன்புடன் ராமன் “நீ எனக்கு சகோதரன்” என்கிறான்.
சுக்ரீவன்” இல்லை இல்லை உன்னுடைய தொண்டன். அடியாரில் ஒருவன்” என்கிறான்.
அன்னை ஒப்புடைய உன் அடியருக்கு அடியென் யான்;
மன்னவர்க்கு அரச!’ என்று உரைசெய்தான் – வசை இலான்.
உன் அடியார்க்கு அடியேன் யான் என்று சுக்ரீவன் வாக்குமூலம் கொடுக் கிறான்.
இராமனின் அன்பு சுக்கிரீவன் ஐயத்தை போக்க வில்லை.
அவன் விட்ட அம்புதான் போக்குகிறது.
