By S.Gokulachari
நட்சத்திரங்களில் சில நட்சத்திரங்கள் தோஷம் இல்லாத நட்சத்திரங்கள். அப்படிபட்ட நட்சத்திரங்கள் உத்திரம், உத்திராடம் ,உத்திரட்டாதி, அஸ்தம், சுவாதி,மிருகசீரிஷம்,அனுஷம்.இதில் சுவாதி நட்சத்திரம் நரசிம்ம மூர்த்திக்கும் ,கருடபகவானுக்கும் உரிய நட்சத்திரங்கள்.ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம் கருட ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது.அதே மாதம் வரும் பஞ்சமி திதி கருட பஞ்சமி ,நாக பஞ்சமி ,விரத தினங்களாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
ஸ்ரீகருடன் மகாவிஷ்ணுவின் ‘சங்கர்சண’ அம்சமாகக் கருதுவதால் அவரை கண்டிப்பாக வணங்க வேண்டும்.
கருடனுக்கு கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி என்றும் ஓடும்புள் கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு.
வேதமும் கருடனும்
வேதங்கள் எம்பெருமானைதமது சாரமான பொருளாகப் போற்றுகின்றன . வேத ஸ்வரூபமாகவே கருடன் விளங்குகின்றார் .அவருடைய திருமேனியின் ஒவ்வொரு பாகமும் வேகமாகவே கருதப்படு கிறது .
அவருக்கு ஆத்ம ஸ்வரூபமாக இருப்பது ஸ்தோமம் என்கின்ற சாமவேதம் பாகம்.அவருடைய கண்களாக விளங்குவது காயத்ரம் என்ற சாமம் .அவருடைய தலையாய் விளங்குவது த்ரிவ்ருத்என்கிற சாமம் .
அவருடைய திருநாமங்கள் யஜுர் வேதங்கள் .
சந்தஸ்கள்அவருடைய கை முதலான அவயங்கள்.
வேத பிரதான ஆசிரியர் அமர்கின்ற தீட்சண்யம் என்கிற வேள்விமேடை கருடனுக்குக் குளம்புகளாக விளங்குகின்றன.
வாம தேவ்யம் என்னும் சாமம் அவருக்கு திருமேனி ஆகின்றது .
பிருகத், ரதன்தரம் என்னும் சாமங்கள் அவருடைய இரண்டு சிறகுகள் ஆக விரிகின்றன.
யஜ்ஜாயஞ்னியம் என்ற சாமம் அவருக்கு வாலாக விளங்குகின்றது .
கருட சேவை
வேதங்களை ஓதுவதன் மூலமாக நாம் சாட்சாத் பகவானையே தரிசிக்கிறோம்.
வேதங்களையே சேவிப்பதன் மூலமாக பகவானையே சேவிக்கின்றோம் . ‘திருமாலும் கருடனும் ஒருவரே’ என்று மகாபாரதத்திலுள்ள அனுசாசன பர்வத்தில் காணப்படுகிறது.
கருடனை பார்க்கும் போதுசாட்சாத் ஸ்ரீமன் நாராயணனை பார்ப்பதாகவே நாம் நினைக்கின்றோம் .எப்பொழுதும் பகவானுக்குத் தயார் நிலையில் இருக்கக் கூடிய கருடனை தரிசிப்பதன் பலனாக, ஒருவரை எந்த பாவங்களும் அணு காது . துன்பங்களும் தோஷங்களும் அணுகாது .
ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் கருடன் திகழ்கிறார். கருடனுக்கு சார்பர்ணன் என்றொரு பெயருண்டு. கருடனுடைய மனைவியர் ருத்ரா, சுகீர்த்தி.
கலைகளுக்கு தேவதை
ஆறு மாதகாலம் ஒருவன் கருடனை தியானம் செய்வதன் மூலமாக சகல கலைகளும் அவனுக்கு வசப்படும். சுவாமி வேதாந்த தேசிகர் கருட பஞ்சசத் ‘கருட தண்டகம்’ என்று கருடன் மீது அற்புதமான தோத்திரங்கள் செய்திருக்கிறார்.
அதில் ஒரு அற்புத சுலோகம்.தோத்திரங்கள்
ஏகோ விஷ்ணு த்விதீய த்ரி சதுர விதிதம்
பஞ்ச வர்ணீ ரஹஸ்யம்
ஷாட் குண்ய ஸ்மேர சப்த ஸ்வர
கதி அணிமா ஆதி யஷ்த சம்பத் நவாத்மா
தேவோ தர்வீ கராரி தச சத நயநாராதி –
சஹஸ்ர லஷே
விக்ரீதத் பக்ஷ கோடி விஹதயாது
பயம் வீத சங்க்யோ தயோ ந (5)
ஒன்று இரண்டு மூன்று என்ற எண்ணலங்காரத்தில் பாடப்பட்ட சுலோகம் இது.
இப்பொழுதும் கிராமப்பகுதிகளில் இருந்திருக்கக்கூடிய பல பெரியவர்கள் கருடப்பத்து என்கின்ற ஒரு தமிழ் மந்திரத்தை விடாமல் சொல்லி பற்பல நன்மைகளை அடைந்து வருவதைக் காணலாம் .
அதில் ஒரு பாட்டு இது.
மந்திரமோ அஷ்டசித்துமெட்டுஞ் சேரும்
வாழ்கிரகமொன்பதுமே வந்துசேரும்
கந்தர்வர் கணநாத ராசி வர்க்கம்
கலையான நூல் வேதங்கலந்து வாழும்
நந்தி முதல் தேவர்களுங் கவனயோகம்
நமஸ்கரித் துன்பாதம் நாளும் போற்ற
அந்தரமாய் நிறைந்திருக்கும் கருடன்மீதில்
அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே
கருட மந்திரம்
கருட மந்திரம் கை வந்தவர்களுக்கு எந்த விஷங்களும் தீண்டுவதில்லை. அது மட்டுமில்லை. அவர்கள் மிகப்பெரிய விஷ முறிவு வைத்தியராக விளங்கு வார்கள். கருட மந்திரத்தை காயத்ரியையும் சொல்லி ஒரு இடத்தில்
தேள் மற்றும் பாம்பு கடிக்கு விஷக்கடி நிவாரணம் தந்த வைத்தியர்கள் உண்டு .
கருட காயத்ரி மந்திரம்
‘ஓம் தத்புருஷாய வித்மஹே ஸூவர்ண பட்சாய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்’
பரம புருஷனை அறிந்து கொள்வோம். சொர்ணத்தைப் போல் ஒளிவீசும் அவன் மீது தியானம் செய்வோம். கருட பகவானான அவர் நம்மை காத்து அருள் செய்வார் என்பது இதன் பொருளாகும்.
ஸ்ரீகருடனுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து மல்லிகைப்பூ, மருக்கொழுந்து, கதிர்ப்பச்சை (தமனகம்), சம்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறந்தது.
சிவகங்கை மாவட்டத்தில் -காரைக்குடியை அடுத்துள்ள அரியக்குடி. இங்கு எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீநிவாசப் பெருமாள். இங்கு மூலைக் கருடன் வழிபாடு சிறப்பானது. நல்லது நடக்கவும். தீமைகள் மறையவும் இங்கு மூலைக் கருடனுக்கு சிதறுகாய் உடைப்பது வழக்கம்.
கருடனின் பார்வை
கருடனின் பார்வை ஆச்சரியமானது .
எத்தனை உயரத்தில் பறந்தாலும் ஒரு சிறு விஷயத்தையும் தவறவிடாமல் அது பார்த்து விடும் .
அதனுடைய பார்வைகளை எட்டு விதமாக சொல்லுகின்றனர் .
விசாலா என்பது மந்தகாசமான பார்வையைக் குறிக்கும்.
கல்யாணி என்பது மான் போல் சுழலும் பார்வையைக் குறிக்கும்.
தாரா என்ற பார்வை கருடனின் குறுக்கு பார்வை.
மதுரா என்கின்ற பார்வை அன்பையும் அருளையும் பொழிய வைக்கும். போகவதி என்பது சற்று தூக்க கலக்கம் நிறைந்த பார்வை.
விஜயா என்கின்ற பார்வை கணவன் மனைவி அன்னியோன்னியத்தை வளர்க்கக் கூடியது.அயோத்தியா என்கின்ற பார்வை ஆசைகளைத் தோற்று விப்பது. அவந்தீ என்கின்ற பார்வை பக்கமாகப் பார்க்க வைப்பது .
பதினெட்டு நாட்கள் நிகழ்ந்த மகாபாரதப் போரில் கடைசி நாள் போர் கருட வியூக யுத்தமாக நடந்தது. இதுவே பாண்டவர்களுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.
கருடாழ்வார் சன்னதிகள்
பற்பல திருத்தலங்களில்கருடாழ்வார் சன்னதிகள் இருக்கின்றன. கருடாழ்வார் சந்நிதி இல்லாத பெருமாள் கோயிலைக்காணவே முடியாது. அதைப்போலவே எத்தனை வாகன சேவை இருந்தாலும்,கருட சேவையைக் காண பல ஆயிரம் பேர் திரள்வர்.
கருட பெருமான் திருமாலின் இரண்டு திருவடிகளையும் தம் இரு கரங்களால் தாங்கி ஊர்வலமாக வரும் காட்சியே “கருட சேவை” எனப்படும்.
அப்போது பெருமான், கருடன் ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே கிடப்பதைப் பக்தர்கள் புனிதமாகக் கருதுகிறார்கள்.
குறிப்பாக,திருப்பதி பிரம்மோற்சவத்தில் நடக்கக்கூடிய கருட சேவையைப் பார்ப்பதற்காக ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவர்.
கல் கருடன்
பொதுவாக கருட வாகனங்கள் உலோகங்களினாலோ மரங்களினாலோ செய்து அதன்மீது பெருமாளை ஆரோகணம் செய்து ,கருட சேவையை நடத்து வது வழக்கம்.
.
ஆயினும் ஒரு தலத்தில்கல்லினால் ஆன கருடன் மீது பெருமாள் சேவை சாதிப்பார்.இந்தச்சிறப்பு வேறு எங்கும் இல்லை.
அந்த கல் கருட சேவை “திருநறையூர்” என்கின்ற திவ்யதேசத்தில் மட்டும் உண்டு.
.
கருடனால் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வைரமுடி என்கிற அணிகலன் தற்பொழுது கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரத்து பெருமாளுக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இன்றும் ஒவ்வொரு பங்குனி ஏகாதசியில் வைரமுடி சேவை என்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
பாண்டி நாட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தங்கல்லில் (திருத் தண்கால்) கோவிலில் கருடாழ்வார் சர்ப்பத்துடனும், அம்ருத கலசத்து டனும் காட்சியளிக்கிறார்.
திருமண் கட்டிகள்
வைணவர்கள் நெற்றியில் திருமண் இட்டுக் கொள்ளும் வெண்மை நிறமுடைய திருமண் கட்டிகளைக் கொண்டு வந்தது கருடன்தான்.
ஒருமுறைத் ஸ்வேதத்தீவில் இருந்த பாற்கடலின் கட்டிகளை தன் சிதறடித் ததால் அவை ஆங்காங்கே விழுந்து திருமண் கட்டிகளாக மாறியது .
செல்வங்களைத் தரக்கூடியவர்
அனைத்து வகையான செல்வங்களையும் தரக்கூடியவர். எட்டு வகையான சித்திகளும் அவருடைய அருளால் வசப்படும், என்பதற்காகவே கருட மந்தி ரத்தை தியானித்து சித்தி அடைந்தவர்கள் உண்டு.
கருடாழ்வார் அவதாரம் செய்த ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கருட வழிபாடு செய்தால் பில்லி, சூனியம், நாக தோஷம் மற்றும் அனைத்து தோஷங்களும் நீங்கும்.
கெட்ட சகுணங்கள் துர்சேட்டைகள், துர் குறிகள் போன்ற அசுபங்கள் அனைத் தும் கருட தரிசனத்தால் சூரியனைக் கண்ட பனிபோல் பறந்தோடிவிடும்!
கருடனுக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புனுகுச்சட்டம் ஆகியவற்றை வாழைச் சாற்றில் கலந்து அவரது திருமேனியில் சாற்றி வேண்டிக் கொண்டால் அனைத்து இஷ்ட சித்திகளையும் எளிதில் அடையலாம்.
மழுங்காத வைந்நுதிய சக்கரநல் வலத்தையாய்த்
தொழுங்காதல் களிறுஅளிப்பான் புள்ஊர்ந்து தோன்றினையே!
மழுங்காத ஞானமே படையாக மலர்உலகில்
தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதே?
என்ற நம்மாழ்வாரின் பாசுரத்தைச் சொல்லி கருடனைத் துதித்து கவலையற்ற வாழ்வு பெறுவோம்.