By எஸ்.கோகுலாச்சாரி
வைணவ மரபிலே கருட சேவைக்கு தனி ஏற்றமுண்டு. வேதத்தின் மூலம், வேதம் காட்டும் பரம் பொருளை தரிசிப்பதே, கருட சேவையின் உட்பொருள்.
கருடன் வேதம்.
பகவான் ஸ்ரீமன் நாராயணன் -வேதம் காட்டும் பரம் பொருள்.
திருமாலும் கருடனும் ஒருவரே என்று மகாபாரதத்திலுள்ள அனுசாசன பர்வத்தில் காணப்படுகிறது.
காரணம் வேதம் கருடன்.வேதத்தின் பொருள் திருமால்.
திருவாய் மொழியை படிப்பதும் கருட சேவை காண்பதும் ஒன்றுதான்.
திருவாய்மொழி வேதம்.(அதாவது கருடன்). திருவாய்மொழியின் பொருள்.(திருமால்).
கருடனுக்கு கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி என்றும் ஓடும்புள் கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு.
திருமாலைப் போல அணிமா, மகிமா, லகிமா, கரிமா, ஈஸித்வம், வசித்வம், பிராபதி – பிராகாம்யம் ஆகிய எட்டு விதமான சம்பத்துக்களாக இருந்து கொண்டு, பக்தர்களுக்கு அவற்றைத் தருபவராக ஸ்ரீ கருடன் விளங்குகிறார்.
ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் கருடன் திகழ்கிறார்.
வேத ஸ்வரூபியான கருடன் திருமாலுக்கு வாகனமாக இருப்பதன் மூலம், வேதமே இறைவனை நம்மிடம் அழைத்து வரும் கருவியாக இருக்கிறது என்ற தத்துவத்தை நாம் உணரமுடிகிறது.
வேதம் தமிழ் செய்த அத்தனை ஆழ்வார்களும், கருடதரிசனத்தையும், கருடன் மீது ஆரோகணித்து வரும் கருட சேவையையும், பாடாமல் இருந்ததேயில்லை.
கருட ன் திருமாலின் இரண்டு திருவடிகளையும் தம் இரு கரங்களால் தாங்கி ஊர்வலமாக வரும் காட்சியே கருட சேவை எனப்படும்.
அப்போது பெருமான், கருடன் ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே கிடப்பதைப் பக்தர்கள் புனிதமாகக் கருதுகிறார்கள்.
வேண்டிய வேதங்கள் ஓதி பாண்டியன் அவையில் சந்தேகம் தீர்த்த பெரியாழ்வாருக்கு, பகவான் கருட வாஹனனாய்க் காட்சியளித்தான்.
அந்த கருட சேவை காட்சியின் மாட்சியில் தான், பெரியாழ்வார் ,”எம்பெருமானே! கருடனின் மீது ஆரோகணித்து வந்து ,எனக்கு காட்சி தந்த, உன் கருணையே கருணை !என்னை நீ காப்பாற்ற முடிவெடுத்த பிறகு, என்னுடைய பிறவித் துன்பம் நீங்கி விட்டது”
“பறவை ஏறும் பரம் புருடா நீ என்னை கைகொண்டபின் பிறவி என்னும் கடலும் வற்றி பெரும் பதம் ஆகின்றது” என்று பாசுரம் இடுகிறார்.
தன் பிரேம பாவனையால், கருடனை விழிப்போடு பெருமாள் பள்ளியறையை பார்த்துகொள்ளச் சொல்கிறார்.
இன்றளவும் திருக்கோயில்களிலும் திருமாளிகைகளிலும் இரவு நடை
சாற்றும் பொது இந்த பாசுரம் ஓதப்படுகிறது.
உறகல் உறகல் உறகல் ஒண்சுடராழியே! சங்கே!
அறவெறி நாந்தகவாளே! அழகியசார்ங்கமே! தண்டே!
இறவுபடாமல்இருந்த எண்மர் உலோகபாலீர்காள்!
பறவைஅரையா! உறகல் பள்ளியறைக்குறிக் கொண்மின்.
ஆண்டாளின் திருத்தப்பனார் பெரியாழ்வார், கருடனின் அம்சம்.இன்றும் ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெருமாளோடு ஏக ஆசனத்தில் இருப்பவர்.ஆண்டாளின் மனத்திரையில் கண்ணன் கருடன் மீது வரும் காட்சி ஓட அந்த காட்சியை அவள் வடநாடு திவ்ய தேசமான விருந்தாவனத்தில் காண்கிறாள்.
மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்க ளுரைப்பானை இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில்காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும்
மேலாப் பின்கீழ் வருவானை விருந்தா வனத்தே கண்டோமே
கருடனின் முகத்தில்அருள் ததும்பும். கம்பீரம் சுடர்விடும். தனது இரண்டு இறக்கைகளை விரித்து மண்டலமிட்டு வானத்தில் பறப்பவர்.சிறகுகளை விட உடல் பருத்திருக்கும். அழகான குண்டலங்களைக் காதுகளில் அணிந்தவர். வளைந்த புருவங்கள், உருண்டை கண்கள், நீண்ட மூக்கு, வெளுப்பான முகம் உடையவர். மூன்று கிளைகளாகப் பிரிந்திருக்கும் ஸ்ரீகருடனுடைய இறக்கைகள், மூன்று வேதங்களாகக் கருதப்படுகின்றன.
ஆண்டாள், இந்த கருடன் மீது ஆரோகணித்து வரும் பெருமானை விருந்தவனத்தில் கண்டேன் என்று பா டுகிறாள்.
அடியவர்களின் அப(பா)யக் குரல் கேட்கும் நேரங்களில், அவர்களுக்கு அபயம் அளிக்கத் திருமாலை அழைத்து வந்து சேர்ப்பவர் கருடன்.
நம்மாழ்வார் இந்த கருடசேவை குறித்துப் பாசுரமிடுகிறார்.
“ஓடும் புள் ஏறி, சூடும் தண்துழாய்,
நீடு நின்றவை ஆடும் ; அம்மானே.”
கருடனை ஓடும் புள் என்று அழைக்கிறார் நம்மாழ்வார்.
“ கருடன் மீது துளசி மாலை அணிந்து தோன்றும் திருமாலே எனக்கு தலைவன்” என்று போற்றும் நம்மாழ்வார், ஒரு பாசுரத்தில், கஜேந்திரன் என்கிற யானையைக் காப்பாற்ற கருட வாகனத்தில் மேல் ஏறி வந்த வேகத்தை வியக்கிறார்.
மழுங்காத வைந்நுதிய சக்கரநல் வலத்தையாய்த்
தொழுங்காதல் களிறுஅளிப்பான் புள்ஊர்ந்து தோன்றினையே!
மழுங்காத ஞானமே படையாக மலர்உலகில்
தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதே?
இந்தப் பாசுரத்தில் நம்மாழ்வார் கருட சேவையின் சிறப்பு பற்றிய அற்புதமான ஒரு தகவலைச் சொல்லுகின்றார்.
எம்பெருமான் கருடன் மீது ஆரோகணித்து வருவது ஏன் என்றால், தன்னுடைய பரத்துவத்தை காட்டுவதற்காக.
வெவ்வேறு சிறப்புகளைக் காட்டுவதற்காக பல்வேறு வாகனங்களில் வந்தாலும், தான் பரமாத்மா என்பதை உணர்த்துமுகத்தான், எம்பெருமான் கருடன் மீது ஆரோகணித்து வருகின்றான்.
இது முதல் செய்தி.
இரண்டாவதாக, ஒரு உயிரை காப்பாற்ற வேண்டும் என்கிற கருணையின் உச்சத்தில், எம்பெருமான் கருடன் மீது விரைவாக வருகின்றான்.
பறவைகளில் மிக வேகமாகப் பறக்க கூடியது கருடன். அதனால் கருடன் மீது ஆரோகணித்து வருகிறான் என்பது ஒரு தோற்றமாக இருந்தாலும், அந்தக் கருடனை வேகமாகச் செலுத்துபவர் பெருமாள் என்பதும் இந்த கருட சேவை சூட்சுமத்தின் உட்பொருளாகும்.
இதை பராசர பட்டரும் ஓரிடத்தில், “ரங்கநாதனே! நீ, இந்த கஜேந்திரன் என்ற யானையைக் காப்பாற்ற ஓடி வந்தாயே, அதற்காக மட்டுமல்ல, என்னுடைய நமஸ்காரம், நீ காப்பாற்ற ஓடி வந்த விரைவு, வேகம் இருக்கிறதே ,அது அடியேனை வியப்படைய வைத்தது. அந்த வேகத்திற்கு என்னுடைய நமஸ்காரத்தை சொல்லுகின்றேன் ” என்று பாடுகின்றார்.
நம்மாழ்வார் சக்கரத்தைத் தாங்கி ,கருடன் மீது ஆரோகணித்து வந்த கருட சேவையை போற்றிப் பாடும் பாசுரத்தில் ,சக்கரத்தை இருந்த இடத்திலே இருந்து பிரயோகம் செய்து யானையின் துன்பத்தை தீர்த்து இருக்கலா மே, இதற்கு எம்பெருமான் கருடன் மீது ஏறி நேரில் வர வேண்டுமா என்கிற ஒரு கேள்வியும் எழுகிறது.
கஜேந்திரன் என்ற யானையின் உயிரை மட்டுமே காப்பாற்றுவதாக இருந்தால், இருந்த இடத்தில் இருந்து கொண்டே எம்பெருமான் அதை தனது சங்கல்பத்தால் சாதித்திருக்க முடியும்.
ஆனால்,
இந்த கருடசேவை காட்சியை பார்க்க வேண்டும் என்று அந்த யானை விரும்பி, தினசரி மலர் இட்டு பூஜை செய்தது.
அதனால் அந்த தொழும் காதல் களிறு என்ற பதத்தை இட்டு நம்மாழ்வார் இந்தப் பாசுரத்தில் பாடுகிறார்.
தானே நேரில் கருடசேவை காட்சி அளித்தால் தான் ,கஜேந்திரன் என்ற யானையின் துயரம் தீரும்; உயிர் தப்பித்ததால் மட்டுமே தீர்ந்து விடாது என்பதை குறிப்பிடத்தான் தொழுங்காதல் களிறுஅளிப்பான் புள்ஊர்ந்து தோன்றினையே! என்று அந்த செய்தியை இதில் சொல்லுகின்றார் .
ஒவ்வொரு உயிரும் இந்த கருட சேவையைக் காணுகின்ற பொழுது ஆன்ம சந்தோஷம் அடைகிறது என்பதாலேயே, எல்லா கோயில்களிலும் பிரம்மோற்சவத்தில் கருடசேவை நடக்கிறது.
