காப்பியக் கதை மாந்தர்கள் குறித்த ஆய்வுக்கு சில நெறிகள்(வீடணனை ஆராய்வது எப்படி?)(வீடணன் வெற்றி-1)
காப்பியக் கதை மாந்தர்கள் குறித்த ஆய்வுக்கு சில நெறிகள் தேவை.மேல்நாட்டு காப்பிய திறனாய்வாளர்களும் இதைக் காட்டியிருக் கிறார்கள். ஒரு கதை மாந்தரின் பண்புநலன்களை ஆராயும்போது, காப்பி யத்தில் இடம் பெறும் பிற கதை மாந்தர்கள், அந்தக் கதைமாந்தர் பற்றிக் கொண்டுள்ள கருத்து என்ன என்பதைக் காண வேண்டும். இது காப்பிய திற னாய்வு நெறிகளில் ஒன்று.
இப்படிப்பட்ட நெறிகளின் அடிப்படையில் தான் வீடண பாத்திரத்தை ஆராய வேண்டும் .
இதை ஒரு எளிய வாழ்வியல் உதாரணத்தின் மூலமாக புரிந்து கொள்ளலாம்.நீதிமன்றத்தில் வழக்கு வருகின்றது. அதற்கு தீர்ப்பு வழங்குகின்றார் நீதிபதி.
அவர் தம்முடைய விருப்பத்துக்குத் தகுந்த மாதிரி தீர்ப்பு வழங்க முடியாது.
இந்திய தண்டனைச் சட்டம் இத்தனாவது பிரிவின்படி என்று கூறித் தான் தீர்ப்பு வழங்குவார். வழக்கை ஆராய்கின்ற பொழுது, இந்த சட்ட வரைவுகளை தள்ளிவைத்துவிட்டு அவரால் வழக்கினை ஆராய முடியாது
எனவே காப்பிய பாத்திரங்களை இலக்கிய ஆய்வின் வரைய ரையைக் கொண்டு ஆராய்வது மரபு. இராமாயணம் என்கிற காப்பியம் எதற்காக எழுந்தது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.. யார் குண வான் என்கிற கேள்விக்கு பதிலாக இராமாயணம் எழுந்தது. இராமாயணத்தை எழுதிய வால்மீகியோ, கபீர்தாசரோ , கம்பனோ பக்தி இலக்கியக் காப்பியமாகவே படைத்தனர்.அதில் உள்ள இலக்கியச் சுவைகளெல்லாமே, இந்த பக்தி காப்பியத்தை வேகமாக மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு அழகாகச் செய்யப்பட்ட அலங்காரங்களே தவிர, அடிப்படை நோக்கம் இலக்கியம் அல்ல.
இலக்கியமும் இருப்பதால், அதனை ஆராய்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.வாழைப் பழத்துக்குள் மருந்தை வைத்துத் தரு வார்கள். அல்லது, தேனில் மருந்தைக் குழைத்துத் தருவார்கள் அதன் நோக்கம் நோ க்கம், தேனையோ வாழைப்பழத்தையோ தருவதல்ல. அதற்குள் உள்ள மருந்தைத்தருவதே நோக்கம்.
அதுபோல் பக்தி இலக்கியத்தில் சுவையைச் சேர்ப்பதற்காகத்தான் இலக்கிய உத்திகள். இதைப் புரிந்துகொண்டு திறனாய்வு செய்தால் காப்பியத்தின் மூல நோக்கம் குறித்த எந்த குழப்பமும், சிக்கலும் வராது. இந்த நூல் முடிந்த பின்னும் சில கேள்விகள் எஞ்சி நிற்கின்றன. அதில் ஒன்று வீடணன், கும்பகர்ணன், கர்ணன் போல, ஏன் செஞ்சோற்றுக்கடன் கழிக்கவில்லை?
இது ஒரு நூதனமான கேள்வி. செஞ்சோற்றுக் கடன் என்றால் என்ன என்பது தெரியவில்லை.
இதில் மகாபாரத கர்ணன் விஷயத்தைப்பார்ப்போம்.
யாராலும் ஆதரிக்கப்படாது அவமானப்படுத்தப்பட்டவன் கர்ணன். அவனை அங்கதேசத்திற்கு அரசனாக் கினான் துரியோதனன். அனாதை போல், பலராலும் கேலி பேசப்பட்ட தனக்காக ஓர் அரசு கொடுத்த துரியோதனனிடம், அபரிமிதமான நட்பும் உபகாரம் செய்ய வேண்டிய கட்டாயமும் கர்ணனுக்கு இருந்தது என்பதை ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால், கும்பகருணனுக்கு அப்படி என்ன உதவியை இராவணன் செய்து தந்தான் என்பது தெரியவில்லை.
உண்மையில், கும்பகர்ணன் தான், பற்பல போரில் இராவணனுக்காக தன் ஆற்றலைப் பயன்படுத்தினான்.
சிறந்த வீரனான கும்பகர்ணனுக்கு, தனக்கு உரிய உணவைத் தானே தேடிக் கொள்ள முடியாதா என்ன?
தான் உண்ணும் சோற்றுக்கும், உறக்கத்திற்கும் கும்பகர்ணனைப் போன்றவீராதி வீரர்கள் வசிக்க இடமில்லாது இராவணனிடம் அடைக்கல மாகவா இருந்தார்கள்? உண்மையில் செஞ்சோற்றுக் கடன் பட்டவன் இராவணன்தான்.
இன்னொரு கோணத்திலேயும் நாம் ஆராயலாம்.
ஒருவன் உணவு தந்து விட்டான் என்பதற்காக அவனுடைய அத்தனைச் செயல்களிலும் பங்கு எடுத்துக் கொண்டே ஆக வேண்டும் என்பது எப்படிப் பொருந்தும்? இலங்கை தேசத்து அரசன் இராவணன். இலங்கை தேசத்தில் உள்ள பிரஜைகளை ஆள்பவன் அவன் . நாடு வேறு; நாட்டை ஆள்பவர்கள் வேறு. நாட்டை ஆள்பவர்களுக்கு விசுவா சமாக இருப்பது தான் நாட்டின் விசுவாசம்(தேச பக்தி) என்பதை இன்று கூட பலரும் ஏற்றுக்கொள்வதில்லை.
இராவணனுக்குப் பின்னும் நாடு இருந்தது.நாட்டு மக்கள் வீடணனை வெறுத்ததாகக் காப்பியத்தில் இல்லை என்பதை பலப்பல பக்கங்களில் அகச்சான்று கொண்டே நிறுவியிருக்கிறோம்.
ஒரு அடிதடி வழக்கு நடக்கிறது. அண்ணன் தான் நாயகன். இரண்டு தம்பிகள். ஒரு தம்பி வேறு வழியில்லாது அண்ணன் கூட சேர்ந்து மாட்டிக் கொண்டான். இன்னொரு தம்பி அண்ணன் செய்தது பிடிக்காமல் விலகி வந்து விட்டான். மாட்டிக்கொண்ட இருவரும் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறார்கள்.
ஊரார் எல்லாம் அண்ணனிடம் இருந்து விலகிய தம்பியைப் பார்த்து, “நன்றி மறந்தவனே ! நீயும் அந்த அடிதடி வழக்கில் சேர்ந்து போய், போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வேண்டியது தானே” என்று சொன்னால் எப்படி இருக்கும், அப்படி இருக்கிறது இந்த செய்நன்றி கொன்ற விஷயம்.
அண்ணனுக்கு எதிராகப் புறப்படுகிறோம் என்கிற சிந்தனை மின்னல் அடித்திருந்தால் தன்னை பலியாக்கிக் கொள்ளும் முடிவை எடுத்திருக்க முடியும் வீடணன் என்ற கூற்றுக்கு அடியேன் பதில் இதுதான்.
வீடணன் அண்ணனை எதிர்த்து விலகவில்லை. அதர்மத்தை எதிர்த்து விலகினான்.
செஞ்சோற்றுக்கடன் குறித்து நிறைய பேசியாயிற்று. இன்னும் ஒரு கோணத்திலும் பார்க்கலாம்.நானாகச் சொல்லவில்லை. கம்பனிலிருந்தே காட்டுகிறேன்.கும்பகர்ணன் போர் புரியும் காட்சி.
எல்லோரையும் எதிர்த்து வலிமை இழக்கச் செய்த கும்பகர்ணன், சுக்ரீவனைத் தோற்கடித்து, தோளில் போட்டுக் கொண்டு, இலங்கை நோக்கிச் செல்கிறான்.
அப்போது அவனைக் காப்பாற்ற இராமன் வருகிறான். இராமனைப் பார்த்து கும்பகர்ணன் உரத்த குரலில் கர்ஜிக்கிறான்.
“என் பிணையிலிருந்து சுக்ரீவனை நீ விடுவித்து விட்டால், இராமா! அதன்பின் சீதையைச் சிறையில் இருந்து விடுவிப்பது சாத்தியமானது ” என்று சவால் விடுகின்றான்.
“அப்படியா” என்று அம்புகளால், இராமன் கும்பகர்ணன் நெற்றியில் அடித்து, குருதி வழிய செய்து சுக்ரீவனை விடுவிக்கிறான்.பிறகு, இருவருக் கும் உக்கிரமான போர் நடக்கிறது. ஒரு கட்டத்தில் ஆயுதங்களை இழந்த கும்பகர்ணன், ஆயுதமின்றி போர் செய்து, தன் கால்களையும், கைகளையும் இழக்கின்றான்.
இப்போது, அவன் பேசுகின்ற வாக்குமூலம் முக்கியம். அவன் தன் எதிரியான இராமனிடம் கேட்கும் வரம் என்ன தெரியுமா?
உம்முடைய கைக்கு அடைந்தான் உயிர்காக்க கடவீர்
இதற்கு அவன் உவமையையும் சொல்லுகின்றான்.“இராமா! உன் மூதாதையர் ஒரு புறாவை கைவிடாதசிபிச்சக்கரவர்த்தி. அவனைப். போல உன்னை அடைக்கலமாக அடைந்த என் தம்பி வீடணனை கைவிடாதீர்”
அற்புதமான பாட்டு. வீடணனை குன்றிலிட்ட விளக்காக தூக்கி வைக்கும் பாட்டு.
நீதியால் வந்தது ஒரு நெடும் தரும நெறி அல்லால்
சாதியால் வந்த சிறு நெறி அறியான் என் தம்பி
இன்றைய உலகப் பிரச்சனைகளின் மூல காரணத்தை ஆராயும் பாட்டு.
நீதிநெறி …சாதிநெ(வெ)றி…
இரண்டில் எதைத் தேர்வு செய்வது..? நீதிநெறி உயர்வு என தெரிந்தும், சாதிநெறியை தேர்வு செய்தான் கும்பகர்ணன். அவன் சொல்லு கின்றான். “நீதிநெறி தவிர, வேறு அறியாதவன் என் தம்பி.அவனை கைவிடாதே ”
செஞ்சோற்றுக்கடன் கழிக்க, இராவணனுக்காக ,யாரை எதிர்த்து வந்தானோ, அவனிடமே கூறுவதை எப்படிப்பார்ப்பது?
எல்லோரும் சொல்லும் செஞ்சோற்றுக் கடன் கழிக்கும் முறையா இது?
இராவணனுக்காகச் செஞ்சோற்றுக் கடன் கழிக்க வந்த கும்பகர்ணன், அடுத்து ஒரு நுட்பமான கருத்து சொல்கின்றான். இது சாகும்போது கொடுத்த வாக்குமூலம். மரண வாக்குமூலம். அடிமனதில் இருந்து வருவது.
“ஐயனே… இவன், அதாவது என் தம்பி, வீடணன், இராவணன் கையில்அகப்பட்டால், அவ்வளவுதான். ஐயோ தம்பி ஆயிற்றே என்று கருத மாட்டான். கருணை காட்டமாட்டான். அவனுக்கு தம்பி, பிள்ளை, உறவு எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.கட்டாயம் இவனை இவனைக் கொன்று விடுவான். உன்னைத் தவிர வேறு யாராலும் இவனைக் காப்பாற்ற முடியாது.”
……இவன் என்னும் கறுவுடையான்
ஒல்லுமாறு இயலுமேல் உடன் பிறப்பின் பயன் ஓரான்
கொல்லுமால் இவன் இவனை குறிக்கோடி கோடாயாய்
மேலும் சொல்லுவான்.
தம்பி என நினைந்து இரங்கித் தவிரான் அத் தகவு இல்லான்
நம்பி இவன் தனைக்காணின் கொல்லும் இதை நல்கானால்
உம்பியைத்தான் உன்னைத்தான் அனுமனைத்தான் ஒருபொழுதும்
எம்பி பிரியாமல் அருளுதி யான் வேண்டினேன்
கும்பகர்ணனுக்கு இராவணன் மீது அன்போ , மரியாதையோ இல்லை என்பதே அவன் நிலை என்பதையும், துரோகி என்று கூறப்படும் வீடணன் மீது, அன்பும், மதிப்பும் வைத்திருந்தான் என்பதையும் காட்டும் கட்டம் இது.
இராவணன் மோசமானவன். நற்பண்புகள் அற்றவன். என்று தன் அண்ணனின் எதிரியிடம் பேசுவது, பாராட்டத்தக்க செயலா?
கும்பகர்ணன் ,இராவணனைக் காப்பாற்ற முயல்கின்றானா வீடணனைக் காப்பாற்ற முயல்கின்றானா?
அவன் வீடணனை துரோகியாகக் கருதியிருந்தால், முதலில் அவனை அல்லவா தேடி அழித்திருப்பான்?
இராவணன் வென்றால் வீடணன் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை. அவன் அழிந்தால் மட்டுமே வீடணன் பிழைப்பான்.
இப்போது செஞ்சோற்றுக் கடன் கழிக்கும் கும்பகர்ணன் வீடணனின் உயிருக்கு உறுதி கேட்கும் வரத்தால், யாருடைய வெற்றியை விரும்பு கின்றான். இராவணனின் வெற்றியையா? இராமனின் வெற்றியையா?
இராவணனின் தோல்வியை- இன்னும் சொல்லப்போனால் இராவணன் சாவை- விரும்பி, இராமனிடம் வரம் கேட்கும் கும்பகர்ணன், செஞ்சோற்றுக்கடன் கழித்தானா…?
பரதனையும், வீடணனையும் ஒப்பிட்டு பரதன் போலிருந்திருக் கலாமே என்ற கருத்தும் உண்டு.
இந்த ஒப்பீடு சரியானதா என்பதையும் ஆராய்ந்து இருக்கிறேன்.
இதில், இந்த இடத்திலும், சொல்லவேண்டியது ஒன்று. இராமனை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தவன் பரதன் என்று காட்டிய பல கதா பாத்திரங்களின் மூலமாக கம்பன் சொல்லியிருக்க, அப்படி ஒரு பெருமை வீடணனுக்கு இல்லையே? காரணத்தைச்சிந்திப்போம்.பரதனைப் புகழ்ந்த அதே நூலாசிரியர்கள்தான் (கம்பன் வான்மீகி) வீடணனைக் குன்றின்மேல் இட்ட விளக்காகக் காப்பியம் முழுதும் போற்றியிருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
காப்பிய நாயகனான இராமனைக் கூட சங்கடப்படுத்தும் காப்பிய நூல் ஆசிரியர்கள், வீடணனை மறந்தும்கூட, ஓரிடத்திலும், அவச் சொல்லோ , களங்கச்சொல்லோ ,வீசவில்லை என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
ஒரு துரோக பாத்திரமாக வீடணனை படைத்துவிட்டு, அவன் துரோகி தான் என்று சொல்வதற்கு நூலாசிரியர்களான வால்மீகிக்கும் கம்பனுக்கும் என்ன தயக்கம் இருக்க முடியும்?ஏன் சொல்ல வில்லை..துரோகியை துரோகி என்பதில் என்ன சங்கடம் அவர்களுக்கு?
இவர்கள் இருவரும் வீடணன் பாத்திரத்தைப் படைத்த லட்சணம் இதுதானா என்ற கேள்வி எழும்.
தான் படைத்த பாத்திரம், எதிர்காலத்தில் மக்களால் நிராகரிக்கப்படும்- கேவலமாக பேசப்படும் என்ற உளவியலை உணராத வான்மீகியும், கம்பனும் என்ன பெரிய கவிஞர்களாக இருந்துவிட முடியும்?
ஒன்று அவர்கள் வீடணனைத் துரோகி என்று சொல்லியிருக்க வேண்டும்.அல்லது வீடணனை சந்தேகப்படாத அளவுக்கு இராவணனுடன் இணைந்து அவனைக் கொன்று முடித்தோ அல்லது துறவியாக்கியோ வைத்திருக்க வேண்டும்.ஆயிரம் ஆயிரம் நுட்பத்தைச் சொன்ன மகா மேதையான கவிகளுக்கு, இது முடியாதா?வலியின் மனைவி தாரையின் பாத்திரத்தை, தலை கீழாக மாற்றிய கம்பனை, எது தடுத்தது?தப்பான பாத்திரத்தைப் படைத்து விட்டு, அதை உயர்ந்தது என்று சொல்லும் கம்பனுக்கு உயர் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்று ஏன் பாரதி பாராட்ட வேண்டும்?இதற்கு விடை காண வேண்டும்.
சரணாகதி என்கிற ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு தான் இவர்கள் இராமாயணத்தின் வீடண பாத்திரத்தை தூக்கிப் பிடிக்கிறார்கள் என்ற கருத்தையும் ஆராய்வோம்.
இக்கருத்து ஒருவகையில் உண்மைதான்.
இராமாயணம் அபயப்பிரதான சாரம். சரணாகதி சாஸ்திரம் என்று தான் புகழப்படுகிறது. அதனுடைய நோக்கமும் அதுதான். இரண்டு தர்மங்கள் உண்டு. ஒன்று மேலோட்டமான தர்மம். தூல தர்மம் என்று சொல்லுவார்கள். இன்னொன்று அதர்மம் போலவே தெரிகின்ற சில தர்மங்கள். இதனை சூக்கும(நுண்) தர்மங்கள் என்பார்கள்.
அதனால் தான் இராமாயணத்திற்கு கோவிந்தராஜர் போன்ற மகான் கள் பாஷ்யமிட்டார்கள்.(விளக்க உரை)
எளிய உதாரணத்தைக்கொண்டு இதனைப் புரிந்து கொள்ள முடியும்.
ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி எடுக்கிறது.
மருத்துவர் அந்தப் பெண்ணைச் சோதித்துப் பார்க்கிறார். சிக்கலாக இருக்கிறது.
அவர் கேட்கிறார்.
“அம்மா..குழந்தையின் நிலை சரியில்லை. இப்பொழுது ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. தாயையும் குழந்தையையும் காப்பாற்ற முடியாத ஒரு சூழல் இருக்கிறது. ஏதோ ஒருவரைத் தான் காப்பாற்ற முடியும்… என்ன செய்யலாம்?” என்று கேட்கின்றார்.
இப்பொழுது என்ன வழி?
குழந்தையைக்காப்பாற்றினால்- தாய் இறந்துவிடும் சூழலில் -என்ன செய்ய முடியும்?தாயைக் காப்பாற்றிக் கொடுங்கள் என்று சொல்வதுதான் வழி. அல்லவா?மருத்துவர் சிகிச்சையைத் தொடர்கிறார்.
குழந்தை இறந்துவிடுகிறது. தாய் கிடைத்துவிடுகின்றாள். இப்போது “குழந்தையை கொன்று விட்டீர்களே” என்று எந்தத் தாயும், அல்லது தாயைச் சேர்ந்தவர்களும், மருத்துவரைக் கடிந்து கொள்வது கிடையாது.
மருத்துவரின் இரண்டு கைகளையும் கண்ணில் ஒற்றிக் கொண்டு, எப்படியாவது பெண்ணைப் பிழைக்க வைத்தீர்களே என்று பாராட்டுவர். வீடணன் இலங்கையையும், இராவணனையும் காப்பாற்ற, முழு மனதுடன் முயன்றான். இலங்கையைக் காப்பாற்றுவதா? இலங்கைக்கே இடைஞ் சலான இராவணனைக் காப்பாற்றுவதா..?
வீடணன் இலங்கையைக் காப்பாற்றினான்.அறத்தைக்காப்பாற்றினான்.
சில நேரங்களிலேயே தர்மம் விசித்திரமாகத் தெரியும். அப்படிப்பட்ட விசித்திரமான ஒரு தர்மம் தான் வீடணன்.