காரண காரியங்களோடுதான் எல்லாம் நடைபெறுகின்றன என்கிறோம்.
நல்லவர்களுக்கு வரும் துன்பமும், கெட்டவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதும் எதனால் நடைபெறுகின்றன? இதற்கெல்லாம் கடவுளின் சம்மதம் உண்டா என்ன? என்று பலரும் கேட்கின்றனர்.
பீஷ்மர் அம்புப்படுக்கையில் அடிபட்டுக் கிடக்கிறார். மகாபுருஷர். ஞானி. தன் மரணத்திற்கான வழியைத்தானே சொன்னவர் மட்டுமல்ல; தான் விரும்பினால் மட்டுமே – விரும்பிய காலத்தில் மரணம் என்கிற வரத்தைப் பெற்றவர்.
மகாபாரதயுத்தத்தில் ஆயுதமே எடுக்கப் போவதில்லை என்கிற கொள்கையோடு இருந்த பகவானையே ஆயுதம் தரிக்க வைத்தவர். அம்புப்படுக்கையில் இருக்கும் பீஷ்மரிடம் சென்று அரச நீதிகளைக் கேட்கச்
சொல்கிறார் பகவான் கண்ணன்.
தரும புத்திரர் தயங்குகிறார். தாத்தாவாகிய பீஷ்மரின் இந்த நிலைக்குக் காரணம் தாங்கள்தானே என்ற தயக்கம் பாண்டவர்களுக்கு! இருந்தாலும் கண்ணன் ஏற்பாட்டில் பீஷ்மரைச் சந்திக்கிறார்கள்.
தருமபுத்திரர் உள்ளிட்ட பஞ்ச பாண்டவர்களுக்கு ஆசி வழங்குகிறார் பீஷ்மர்.
பகவான் கண்ணனையே கரம் கூப்பி வணங்குகிறார். அப்போது பீஷ்மரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது.பீஷ்மர் மகா ஞானி.
”கங்களையும் துக்கங்களையும் சமமாகக் கருதக்கூடிய அவரா அழுகிறார்?
தன்னுடைய மரணத்துக்கு அஞ்சி அழுகிறாரா! ஞானி என்றால் கூட மரணம் எவரையும் அச்சப்படுத்தும் ஆற்றல் வாய்ந்ததாயிற்றே ! பீஷ்மரையும் மரணம் அச்சப்படுத்துகிறதோ !
“பீஷ்மரே ! ஏன் கண்ணீர் விடுகிறீர்கள்?”
பீஷ்மர் சொல்கிறார்.
சாட்சாத் பகவான் ஸ்ரீமந் நாராயணன்தான் இப்போது எதிரிலே அமர்ந்திருக்கும் இந்தக் கண்ணன் என்பதை நான் அறிவேன். பஞ்ச பாண்டவர்கள் அந்த பகவானையே துணையாக சர்வசதாகாலமும் பெறும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார்கள். இப்படி பகவானே தாங்கும்படியான நிலையில் உள்ள இந்த பஞ்ச பாண்டவர்கள் – தர்மாத்மாக்கள் – மனதால் கூட நினைக்க முடியாத துன்பங்களை அடைந்தார்களே ….. என்ன காரணம் என்று சிந்தித்துப் பார்க்கிறேன். பகவானுடைய மாயையை அறிய முடியவில்லையே என்று எண்ணினேன். கண்ணீர் வந்தது….
பகவான்மாயையை யாரே அறிய வல்லார்!
காரணமில்லாமல் காரியங்கள் இல்லை. ஆனால் நம்முடைய வரையறைக்கு உட்பட்ட அறிவினால் அதன் காரணங்களை அறிய முடியாமல் சங்கடப்படுகிறோம். இது நம் போன்றவர்கள் விஷயத்தில் மட்டுமல்ல; ஞானிகள் விஷயத்திலும் அவர்களால் அறிய முடியவில்லை.
