(24.12.2022 – சனிக் கிழமை) சாக்கிய நாயனார் குருபூஜை
சிவனுடைய அடியார்கள் பலருடைய வாழ்க்கை வரலாறுகளைத் தொகுத்து திருத்தொண்டர் புராணம் என்று அளித்தார் சேக்கிழார் பெருமான். அதில் அறுபத்தி மூன்று நாயன்மார்களின் வரலாறு சொல்லப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாயன்மாருக்கும் ஒவ்வொருவிதமான சிறப்பு உண்டு .
சாக்கியநாயனார் தன்னை மறந்த நிலையில் சிவனை வழிபட்டவர். கற்களைக் கொண்டு கற்றளி சமைத்து பல திருப்பணிகளைச் செய்த வர்கள் உண்டு. சொற்களைக் கொண்டு பல கவிதைகளைச் சமைத்து திருப்பணிகளைச் செய்த மகான்களும் உண்டு .ஆனால் கற்களை வீசி பூஜை செய்த ஒரு பத்தரை நீங்கள் பார்க்கவேண்டும் என்று சொன்னால் அவர் தான் சாக்கிய நாயனார்.
மகாபாரதத்தில் ஒரு அற்புதமான சம்பவம் .விதுரன் மாளிகைக்கு வந்த கிருஷ்ண பரமாத்மாவை வரவேற்று உபசரிப்பார் விதுரர். அவருக்கு பல் வேறு விதமான கனி வகைகளை பரிமாறுவார். தானே தன் கையால் பழங் களை உரித்து அவருடைய கையில் தருவார்.
ஆனால் என்ன ஒரு வியப்பு பாருங்கள். கண்ணன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த விதுரர் தான் செய்கின்ற செயலை மறந்து ஒரு வாழைப் பழத்தை உரித்து பழத்தை கீழே போட்டு விட்டு தோலை கண்ணபிரா னுக்கு தந்தாரம். அவருக்கு பழத்தைப் போட்டுவிட்டு தோலைத் தரு கிறோம் என்கிற உணர்வு இல்லை. பழத்தைத்தான் தருகிறோம் என்கிற உணர்வில் இருந்தார்.
இப்படிப்பட்ட தன்னை மறந்த உணர்வு நிலையில் இருக்கின்ற பக்தர்கள் பலர் நம்முடைய ஆன்மீக சரித்திரத்தில் உண்டு.
அதைப் போலவேதான் வீசுவது கற்கள்தான் ,இதை வீசினால் சிவபெருமா னுக்கு வலிக்குமே என்கின்ற எண்ணத்தை மறந்து, அதை பூக்களாகவே பாவித்து அவர் போடுகின்றார். எந்த பாவனை மனதில் வருகிறதோ அதுதான் அந்த இடத்தில் நிகழும். நாம் பாவனை இல்லாமல் வெறும் பூக்களை எடுத்து வீசினால் அது கற்களாகத் தான் படும். ஆனால் சாக்கிய நாயனார் கற்களை பூக்களாக நினைத்து வீசியதால் பூக்களாகவே மாறி சிவனின் திருவடியில் விழுந்தன. இனி இவர் வரலாறு சுருக்கமாகப் பார்ப்போம்.
சங்கமங்கை வரும்வேளாண் தலைவர் காஞ்சிச்
சாக்கியரோ டியைந்தவர்தந் தவறுஞ் சைவத்
துங்கமலி பொருளுமுணர்ந்து அந்த வேடம்
துறவாதே சிவலிங்கந் தொழுவோர் கண்டோர்
அங்கல் மலர் திருமேனி அழுந்தச் சாத்தி
அமருநாள் மறந்தொருநாள் அருந்தா தோடிச்
செங்கலெறிந் திடுமளவில் மகிழ்ந்த நாதன்
திருவருளால் அமருலகஞ் சேர்ந்து ளாரே.
இவர் திருச்சங்கமங்கையில் வேளாளர் குடியில் தோன்றினார்.[சமய உண்மைகளை அறிய காஞ்சிநகரத்தை அடைந்து புத்தசமயத்தை மேற் கொண்டிருந்தார். ஆயினும் அதில் மன நிறைவு இல்லை. சிவபெருமான் திருவருள் கை கூட சிவநன்நெறியே பொருள் எனும் நல்லுணர்வு கை வரப்பெற்றார்.
இறைவனுக்குத் திருமேனியாகிய சிவலிங்கத்தின் பெருமையுணர்ந்து நாள் தோறும் இறைவனை வழிபட்ட பின்னரே உண்ணுதல் வேண்டும் என உறுதி கொண்டார்.. தாம் இருக்கும் இடத்திற்கு வெளியிலே அமைந்துள்ள சிவலிங்கத்தினைச் சென்று கண்டு பெருமகிழ்ச்சி கொண்டவராய்,, அருகிற் கிடந்த செங்கற்சல்லியை பூவாக எடுத்து அர்ச்சனை செய்தார்.. சாக்கியர் செய்த இச் செயல் சிவபெருமானுக்கு உவப்பாயிற்று. அவர் அன்பினால் எறிந்த கற்களை நறுமலர்களாகவே ஏற்றுக்கொண்டார். மறுநாள் அங்கு வந்தபொழுது முதல்நாள் தாம் சிவலிங்கத் திருமேனியின் மேல் செங்கல் எறிந்த குறிப்பினை எண்ணி, ‘நேற்று இந்த எண்ணம் நிகழ்ந்தது இறைவன் திருவருளே’ என்று துணிந்து அதனையே தாம் செய்யும் வழிபாடாகக் கருதி எப்பொழுதும் அப்படியே செய்து வந்தார்.
ஒருநாள் சாக்கியர் அச்செயலை மறந்து உணவு உண்ண ஆயத்தமான போது ‘இன்று எம் பெருமானைக் கல்லால் அர்ச்சனை செய்ய மறந்து விட்டேனே என்று விரைந்தோடிச் சிவலிங்கத்தின் முன்சென்று ஆராத காதலால் கண்ணீர் வழிய ஒரு கல்லை எடுத்து எறிந்தார்.
சிவபெருமான் விடைமீது உமையம்மையாருடன் தோன்றி அருளினார். அத் தெய்வக்காட்சியைக் கண்ட சாக்கிய நாயனார், தலைமேல் இருகைக ளையும் குவித்து நிலமிசை வீழ்ந்திறைஞ்சினார். அவர் குரு பூஜை மார்கழி பூராடம் (இன்று)
