ஜோதிடம் கற்றுக் கொள்ள எளிமையான நூல் ஏதாவது இருக்கிறதா என்று அடிக்கடி என்னிடம் கேட்பது உண்டு. இன்றைக்கு ஆயிரக்கணக்கான நூல்கள் ஜோதிடத் துறையில் வந்திருக்கின்றன. அதில் தங்கள் கை சரக்கு சேர்த்து நிறைய நூல்கள் இயற்றிய வித்வான்களும் உண்டு.
பழமையான நூல்கள் எல்லாம் இப்போதைக்குப் பயன்படாது என்று புதுமையான சில கருத்துக்களை வைத்து எழுதிய நூல்கள் உண்டு.
அதில் ஒரு நூலின் கருத்தை மற்ற நூல்கள் மறுக்கும். சரியல்ல என்று சொல்லும். இது ஜோதிட கலையை துவக்க நிலையில் படிப்பவர்களுக்கு மிகப் பெரிய குழப்பத்தை உண்டாக்கும் .
ஆனால் ஒருவர் ஜோதிடக் கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், அதற்கு முதலில் அடிப்படையான சில விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும்..
அப்படிப் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு நல்ல நூல் தான் குடும்ப ஜோதிடம் லிப்கோ வெளியிட்ட நூல்.
1978 இல், முதன் முதலில் எனக்கு ஜோதிடக் கலையில் ஆர்வம் வந்த போது, இந்த புத்தகத்தைத் தான் நான் வாங்கினேன்.
அது இன்றைக்கும் என்னிடத்தில் இருக்கிறது.
அப்பொழுது அந்த நிறுவனத்தார் பத்திரமாக இருக்க வேண்டும் என் பதற்காக பிளாஸ்டிக் கவர் எல்லாம் போட்டுக் கொடுத்தார்கள்.
240 பக்கம் உள்ள அந்த நூல், 1978 இல் நான் வாங்கிய பொழுது 7 ரூபாய் 20 காசுகள். இதிலுள்ள பல குறிப்புகள் இன்றைக்கும் ஆய்வுக்கு பயன் படுகிறது.
எத்தனை புதிய முயற்சிகள் வந்தாலும், அதற்கு அடித்தளமாக இந்த நூலில் உள்ள பல விஷயங்கள் தான் நமக்கு கைகொடுக்கின்றன.
இதை ஜோதிட வித்வான்கள் பொத்தேரி ராம ஐயங்கார் கீழாத்தூர் ஸ்ரீனிவாஸாச்சாரியார் எழுதி இருக்கிறார்கள்.
ஜோதிடம் என்பது வேதத்தில் இருந்து மாறுபட்டதாக ஒரு பிரச்சாரம் நடக்கிறது.
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் கிரக நம்பிக்கையோடு இருக்கின்றார்கள் என்று அவர்களிடம் இதை சேர்க்கும் முயற்சி அது.
அது எப்படியோ போகட்டும்.
ஆனால், வேதத்தின் அங்கங்களில் ஒன்று இந்த கலை . பருவகாலங்கள், கிரகணங்கள் போன்ற பல்வேறு வானியல் நிகழ்வுகளை விஞ்ஞானக் கருவிகளின் உதவி இன்றி மெய்ஞானத்தால் வெளிப்படுத்தியவர்கள் அக்காலத்து ரிஷிகளும் சித்தர்களும்.
அந்த அடிப்படை தான் இன்றைக்கும் நமக்குக் கைகொடுக்கிறது. இந்தப் புத்தகத்தில் நிறைய விஷயங்கள் உண்டு. அதிலே அகத்தியரை பற்றிய ஒரு அற்புதமான செய்தி உண்டு. அகத்தியரை தமிழ்மொழி செய்தவர் என்று சொல்வார்கள். 18 சித்தர்களில் ஒருவர் அவர். ஜோதிடம், மாந்திரீகம், நாடி சோசியம் பற்றிய நூல்களையும் இயற்றி இருக்கிறார் என்கிற குறிப்பு இந்த நூலில் இருக்கிறது. இன்னொரு செய்தியும் இதில் நாம் பார்க்கவேண்டும்.ஒளவையார் என்கிற பெயரில் பல பேர் இருப்பது போல அகஸ்தியர் என்கிற பெயரில் நான்கைந்து பேர் இருக்கலாம்.
அப்பொழுது வைத்திய சாஸ்திரமும், ஜோதிட சாஸ்திரமும், ஆன்மிக சாஸ்திரமும் ஒன்றுக்கொன்று இணைந்து துணையாக ஒரு மனிதனின் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் வழியை அறிவுறுத்தினர் என்பதை மறந்துவிட முடியாது.
இந்த நூலில் அனேகமாக தொடாத விஷயங்களே இல்லை என்று சொல்லலாம்.
ஜாதகம் கணிப்பதில் ஆரம்பித்து, தசைகளை எப்படி நிர்ணயம் செய்வது என்பது குறித்த பல தகவல்கள் உள்ளன.
திருமணப் பொருத்தங்களைப் பார்க்க வேண்டிய முறை ,நல்ல நாளை எப்படித் தேர்ந்தெடுப்பது என்கின்ற வழிகள், என பல விஷயங்கள் இந்த நூலில் இருக்கின்றன.
இதில் மிக மிக முக்கியமானது,
ஒரு ஜாதகனுடைய பலனை எப்படிக் கண்டு கொள்ள வேண்டும் என்கின்ற விதிகளை ரத்தின சுருக்கமாக குடுத்த வரிகள் தான்.
இன்றைக்கு நட்சத்திர சார ஜோதிடம் என்பது மிகப் பிரபலமாக இருக்கிறது. கிரகங்களின் வீரியத்தையும் பலத்தையும் நிர்ணயம் செய்வதற்கு அது வாங்கிய நட்சத்திர சாரம் மிக முக்கியம்.
அதைத்தான் இன்னும் விஸ்தரித்து கிருஷ்ணமூர்த்தி பத்ததி என்று ஒரு அமைப்பும் பெரிய அளவில் பிரச்சாரம் ஆனது.
ஆனால் இதிலே(குடும்ப ஜோதிடத்தில்) நட்சத்திர சாரம் மிக முக்கியம் என்பதை மிக அழகாகக் கொடுத்து இருப்பார்கள்.
என்னதான் கிரக பலனை தீர்மானித்தால் கூட அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகச் செயல்படும் என்பதை இந்த நூல் சுட்டிக்காட்டும் .
எனவே ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு நடந்த நிகழ்ச்சிகளையும் வைத்துக் கொண்டு, எந்தெந்த கிரகங்கள் எல்லாம் அவர்களுக்கு மைத்திரமாக இருக்கிறது என்பதையும் தீர்மானித்துக் கொண்டு பலன் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற சூட்சும விதியை, இதில் நூலாசிரியர்கள் தந்திருப்பார்கள். இன்றைக்கும் எல்லாருக்கும் பயன்படக் கூடிய ஒரு அற்புதமான என்சைக்ளோபீடியாவாக இருப்பது இந்த குடும்ப ஜோதிடம் நூல்தான்.
