அமாவாசை என்றது மிகப் புனிதமான முக்கியமான தினம் .அன்று தென்புலத்தார் என்று போற்றப்படுகின்ற முன்னோர்களுக்கு நாம் வழிபாடு நடத்துகின்றோம். அந்த வழிபாட்டு முறை எப்படி இருந்தாலும் கூட அவசியம் ஏதோ ஒரு வழியில் முன்னோர்களுக்கு வழிபாடு நடத்துகிறோம் . பன்னிரண்டு மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் கூட, உத்தராயண காலத்தில் வருகின்ற தை அமாவாசையும், தட்சிணா யண காலத்தில் வருகின்ற ஆடி அமாவாசையும் முக்கியமானது. தை அமா வாசை இந்த ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் அமாவாசை திதியானது அதிகாலை 4:30 மணி முதல் ஆரம்பிக்கிறது. 22.1.23 அதிகாலை வரை உள்ளது. .சனிக்கிழமை காலையிலேயே அமாவாசைத் திதி ஆரம்பித்து விடுவதால் முற்பகலில் பிதுர்க் காரியங்களை மேற்கொள்ளலாம்.
காலையில் வீட்டை தூய்மைப் படுத்தி, நீராடி , வெளியிலே வாசலுக்கு கோலம் போடாமல் ,உச்சிப் பொழுது வருவதற்குள் முன்னோர்கள் காரியத்தை நிறைவேற்றிவிடவேண்டும். உணவுக்காகவும் தாகத்திற் காகவும் எள்ளும் நீரும் அளித்து, பின் தூய்மையான உணவுகளைச் சமைத்து, தலைவாழை இலை போட்டுப் படைக்க வேண்டும். காகத்திற்கு உணவிட வேண்டும். பிற்பகலில் அதாவது உச்சிப் பொழுது கடந்த பிறகு இந்தப் பணிகளைச் செய்யக்கூடாது. இது மிகச்சிறப்பான அமாவாசை. இதன் மூலமாக முன்னோர்களுடைய ஆசிகள் முழுமையாகக் கிடைக் கும்.இன்று திருநாங்கூரில் சிறப்பான மஞ்சள் குளி உற்சவம் நடைபெறும். இந்த தை அமாவாசையில் தான் அபிராமி பட்டர் அபிராமி அந்தாதி பாடினார். இன்று மாலை அம்பாளுக்கு விளக்கு ஏற்றி வைத்து அபிராமி அந்தாதி பாராயணம் செய்யலாம்..
