Thirukkoshtiyur Sri Arulmigu Sowmiya Narayana Perumal Temple Kumbabhishegam 2023
மகா குடமுழுக்கு 27.3.2023 திங்கள்கிழமை)
திருக்கோட்டியூரில் அருள் புரிகின்ற பெருமாளை, பெரியாழ்வார் “நரகநாசன்” என்று அழைக்கின்றார்.இதோ பாசுரம்.
உரக மெல்லணையான் கையில் உறை சங்கம் போல் மடவன்னங்கள்
நிரை கணம் பரந்தேறும் செங்கமல வயல் திருக்கோட்டியூர்
நரக நாசனை நாவில் கொண்டு அழையாத மானிட சாதியர்
பருகு நீரும் உடுக்கும் கூறையும் பாவம் செய்தனதாம் கொலோ.
யாரெல்லாம் இந்தப் பெருமாளை வணங்குகின்றார்களோ அவர்களுக்கு நரக வாசம் இல்லாமல் செய்பவன் என்ற பொருளில் இப் பெருமானை அழைக்கின்றார் ஆழ்வார்.
திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள்(Sowmiya Narayana Perumal) கோயில்,சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வட்டத்தில் திருகோஷ்டியூர் தலத்தில் அமைந்த 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று.
மதுரையிலிருந்து 65 கி.மீ. தொலைவிலும், சிவகங்கை – திருப்பத்தூர் சாலையில், திருப்பத்தூருக்கு தெற்கில் 8 கி.மீ. தொலைவிலும், சிவகங் கைக்கு வடக்கில் 24 கி.மீ. தொலைவில் உள்ள தலம் இது.
போக்குவரத்து வசதிகள் உண்டு.
இத்திருக்கோவில் அஷ்டாங்க விமானத்தோடு கூடிய அற்புதமான கோயில் வேறு எந்த கோயிலிலும் இல்லாத சிறப்பு இந்த கோயிலில் உண்டு
அஷ்டாங்க விமானத்தின் கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்), முதல் தளத்தில் ஆதிசேஷன் மீது சயனகோலத்தில் சவுமிய நாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்), இரண்டாவது அடுக்கில் நின்ற கோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்), மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்) என சுவாமி நான்கு நிலைகளில் அருளுகிறார்.இங்குள்ள மகாமக கிணறு அவசியம் தரிசிக்க வேண்டியது.
புருரூப சக்கரவர்த்தி இத்தலத்தை திருப்பணி செய்தபோது மகாமகம் பண்டிகை வந்தது. அப்போது பெருமாளை தரிசிக்க விரும்பினார் புருரூவன். அவருக்காக இத்தலத்தில் ஈசான்ய (வடகிழக்கு) திசையில் உள்ள கிணற்றில் கங்கை பொங்க, அதன் மத்தியில் பெருமாள் காட்சி தந்தார். பிரகாரத்தில் உள்ள இந்தக் கிணற்றை “மகாமக கிணறு’ என்றே அழைக்கிறார்கள். மகாமக விழாவின்போது, சௌமியநாராயணர் கருடன் மீது எழுந்தருளி இங்கு தீர்த்தவாரி செய்கிறார்.
கருவறையில், ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை சௌமியநாராயணருடன் காட்சியளிக்கிறார்.உரக உரக மெல்லணையான் என்று அருமையான தமிழ் பெயர். உரகம் என்றால் பாம்பு என்று அர்த்தம். மென்மையான பாம்பு படுக்கையில் துயில் கொண்டு அருள்பவர் .மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர். அருகில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் உள்ளார். இவருக்கு பிரார்த்தனை கண்ணன் என்று பெயர். மகாலெட்சுமி தாயாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது.
சயன கோலத்தில் பெருமாள் இருந்தாலும் வலது கையால் ஆதி சேஷனுக்கு அபயம் அளிப்பார். மேல் மாடிக்கு குறுகலான பாதையில் சென்றால் அங்கே (Swami Ramanujar)ஸ்ரீ ராமானுஜர் “ஆசையுடையவர்களை எல்லாம் அழைத்து” திருமந்திர ரகசியத்தை வெளியிட்ட இடத்தை தரிசனம் செய்யலாம்.
ஸ்ரீ ராமானுஜரின் ஐந்து குருமார்களில் ஒருவரான திருக்கோஷ்டியூர் நம்பி யின் அவதாரத்தலம் இது.
அசுரர்கள் இந்த உலகத்தை ஆக்கிரமித்து தேவர்களை விரட்டினர். அவர்களிடம் போரிட முடியாமல் தேவர்களெல்லாம் பல்வேறு இடங்களில் ஒளிந்து இருந்தனர். அசுரர்களை எப்படி அழிப்பது என்பதை ஆலோசிப் பதற்காக, அசுரர்கள் ஒரு சாபத்தால் வர முடியாத இடத்தை தேர்ந் தெடுத்துக் கூடி எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனை பிரார்த்தனை செய்தனர்.அப்படி தேவர்கள் எல்லோரும் ஒன்றாக கூடிய இடம் என்பதால் இதற்கு கோஷ்டியூர் என்று பெயர்.
இந்த இடத்தின் சிறப்பை தெரிவிக்க வேண்டும் என்று சொன்னால், ஒரு சம்பவத்தைச் சொன்னால் போதும்.
இங்கே செல்வநம்பி என்று ஒருவர் இருந்தார். அவரை பெரியாழ்வாரின் குரு என்று சொல்வார்கள். மிகச்சிறந்த பைணவர். எல்லோரிடமும் அன்பு கொண்டவர்.அடியார்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு அன்புடன் விருந்தோம்பல் செய்வதில் அவருக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை. அவருடைய மனைவி அவரைவிட சிறப்பாக விருந்தோம்பல் செய்வார்.
ஒருமுறை செல்வநம்பி வெளியூர் சென்று விட்டார். அப்பொழுது சில வைணவ அடியார்கள் திவ்ய தேச யாத்திரையாக திருக்கோஷ்டியூர் வந்தனர். அப்பொழுதெல்லாம் விலைக்கு உணவு தரும் உணவுக் கடைகள் இல்லை. யாராவது அவர்களுக்கு உணவு அளித்தால் தான் உண்டு.
செல்வநம்பியின் வீட்டைத் தேடி பசியோடு வந்தனர். செல்வ நம்பி ஊரில் இல்லாததால் அவருடைய மனைவிக்கு என்ன செய்வது என்று தெரிய வில்லை. வீட்டில் அரிசி இல்லை. ஆனால் விதைப்பதற்காக விதை நெல் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது . விதை நெல்லை எடுத்து சில ஆட்களை வைத்து குத்தி அரிசி எடுத்து அந்த அரிசியை உணவாகப் பக்குவப்படுத்தி எல்லா அடியார்களுக்கும் மகிழ்வோடு பரிமாறினார்.
அவர்களும் மனமும் வயிறும் நிறைந்து வாழ்ந்து விட்டுச் சென்றனர். அடுத்த நாள் செல்வ நம்பி வந்தார். வெளியில் அடுக்கி வைத்திருந்த விதை நெல் மூட்டைகளைக் காணவில்லை. மனைவியிடம் கேட்டார்.
” விதை நெல்லைக் காணவில்லையே, என்ன செய்தாய்?” .
அந்த அம்மையார் மென்மையான புன்னகையுடன்,
” எல்லாவற்றையும் விதைத்து விட்டேன்” என்றார்.
” விதைத்து விட்டாயா? எங்கே? ஆட்கள் கிடைத்தார்களா ? எப்படி நீ தனி ஆளாக விதைத்தாய் ?”
அந்த அம்மையார் சொன்னார்,
“அதை நம்முடைய நிலங்களில் விதைக்கவில்லை?”
“பின் எங்கே விதைத்தாய்?” என்று செல்வ நம்பி கேட்க,” பரமபதத்தில் விதைத்தேன்” என்று அந்த அம்மையார் பதில் சொன்னார்.
விருந்தோம்பலிலும், வேதம் ஓதுவதிலும், பக்தியிலும் சிறந்தவர்கள் தொண்டு புரியும் அந்த திருக்கோட்டியூர் பெருமானுக்கு மகா குட முழுக்கு வைபவம் 27.3.2023 திங்கட்கிழமை காலை 9. 38 மணி முதல் 10.32 க்குள் நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொண்டு எம்பெருமானின் திருவருளைப் பெறுவோம்.
- சிறுநீரகநோய்கள் – சில உண்மைகள் மற்றும் சில கட்டுக்கதைகள்
- Thirukkural Meaning Research Forum – திருக்குறள் ஆய்வரங்கம் – Prof. S.Gokulachari
- அகிலம் ஆளும் நாயகியே ஆண்டாள் தாயாரே! Andal Thayar Thiruvadipooram Song
- Bhuvanagiri Sri Azhagiya manavala Egangi Swamigal
- திருவெள்ளக்குளம் அண்ணன் கோயில் வைணவ கருத்தரங்கு
- Thirukkural Meaning Research Forum – திருக்குறள் ஆய்வரங்கம்