741 ## அங்கண் நெடு மதிள் புடை சூழ் அயோத்தி என்னும் *
அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி *
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி *
விண் முழுதும் உயக் கொண்ட வீரன் தன்னை **
செங்கண் நெடுங்கரு முகிலை இராமன் தன்னைத் *
தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை *
என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே (1)
742 வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தைக் கீறி *
வரு குருதி பொழி தர வன்கணை ஒன்று ஏவி *
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து *
வல்லரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின் **
செந்தளிர்வாய் மலர் நகை சேர் செழுந்தண் சோலைத் *
தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த *
அணிமணி ஆசனத்து இருந்த அம்மான் தானே (2)
743 செவ்வரி நற்கரு நெடுங்கண் சீதைக்கு ஆகிச் *
சினவிடையோன் சிலை இறுத்து மழுவாள் ஏந்தி *
வெவ்வரி நற்சிலை வாங்கி வென்றி கொண்டு *
வேல்வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை **
தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை உயர்ந்த பாங்கர்த் *
தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை இராமன் தன்னை *
இறைஞ்சுவார் இணையடியே இறைஞ்சினேனே (3)

744 தொத்து அலர் பூஞ் சுரிகுழல் கைகேசி சொல்லால் *
தொல் நகரம் துறந்து துறைக் கங்கை தன்னை *
பத்தி உடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்குப் *
பரதனுக்குப் பாதுகமும் அரசும் ஈந்து **
சித்திரகூடத்து இருந்தான் தன்னை *
இன்று தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற *
இருநிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே (4)
745 வலி வணக்கு வரை நெடுந்தோள் விராதைக் கொன்று *
வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி *
கலை வணக்கு நோக்கு அரக்கி மூக்கை நீக்கி *
கரனோடு தூடணன் தன் உயிரை வாங்கி **
சிலை வணக்கி மான் மறிய எய்தான் தன்னைத் *
தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
தலை வணக்கிக் கைகூப்பி ஏத்த வல்லார் *
திரிதலால் தவமுடைத்துத் தரணி தானே (5)
746 தனம் மருவு வைதேகி பிரியல் உற்று *
தளர்வு எய்திச் சடாயுவை வைகுந்தத்து ஏற்றி *
வனம் மருவு கவியரசன் காதல் கொண்டு *
வாலியைக் கொன்று இலங்கைநகர் அரக்கர் கோமான் **
சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானைத் *
தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
இனிது அமர்ந்த அம்மானை இராமன் தன்னை *
ஏத்துவார் இணையடியே ஏத்தினேனே (6)
747 குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து *
குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி *
எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன் *
இன்னுயிர் கொண்டு அவன் தம்பிக்கு அரசும் ஈந்து **
திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னைத் *
தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் *
அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே (7)
748 அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி *
அரசு எய்தி அகத்தியன் வாய்த் தான் முன் கொன்றான் *
தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி *
உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள் **
செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான் *
தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் *
இன்னமுதம் மதியோமின்றே (8)

749 செறி தவச் சம்புகன் தன்னைச் சென்று கொன்று *
செழு மறையோன் உயிர் மீட்டுத் தவத்தோன் ஈந்த *
நிறை மணிப் பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னைத் *
தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்ட **
திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான் தன்னைத் *
தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
உறைவானை மறவாத உள்ளம் தன்னை உடையோம் *
மற்று உறு துயரம் அடையோம் இன்றே (9)
750 ## அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி *
அடல் அரவப் பகையேறி அசுரர் தம்மை
வென்று * இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற *
விண் முழுதும் எதிர் வரத் தன் தாமம் மேவி **
சென்று இனிது வீற்றிருந்த அம்மான் தன்னைத் *
தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி *
நாளும் இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே (10)
751 ## தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை *
எல்லை இல் சீர்த் தயரதன் தன் மகனாய்த் தோன்றிற்று அது முதலாத் *
தன் உலகம் புக்கது ஈறா **
கொல் இயலும் படைத்தானைக் கொற்ற ஒள்வாள் *
கோழியர் கோன் குடைக் குலசேகரன் சொற்செய்த *
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் *
நலம் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே (11)
